அறம் பழகு எதிரொலி: சங்கீதாவுக்கு கைகொடுத்த ’பயணம்’ தன்னார்வ அமைப்பு

அறம் பழகு எதிரொலி: சங்கீதாவுக்கு கைகொடுத்த ’பயணம்’ தன்னார்வ அமைப்பு
Updated on
1 min read

திறமைகள் இருந்து வறுமை காரணமாக தங்களது கனவுகளை தள்ளிவைக்கும் மாணவர்களை வாசகர்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி, அவர்களின் கனவுகள் உயரப் பறக்க உதவி செய்தவதுதான் 'அறம் பழகு’ தொடரின் முக்கிய நோக்கம்.

அந்த வகையில், கடந்த மே 30 ஆம் தேதி  சென்னை வால்டாக்ஸ் சாலையின் தெருவோரங்களில் வசிக்கும் சங்கீதாவை அறிமுகம் செய்திருந்தோம்.

பல லட்சியங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு அவரது கல்வி மற்றும் கால்பந்து விளையாட்டில் அடுத்த கட்டத்தை அடைய வறுமை பெரும் தடையாக இருந்து வருவதால், கல்விக் கட்டணம்  போக்குவரத்துச் செலவு மற்றும் கால்பந்து உபகரணங்கள் வாங்க போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் சங்கீதாவுக்கு வாசகர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இதனைத் தொடர்ந்து வாசகர்கள் பலர் சங்கீதாவின் வங்கிக் கணக்கு தங்களால் இயன்ற உதவித் தொகையைச் செலுத்தி வருகிறார்கள். இதுவரை சங்கீதாவுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர் 2,600 ரூபாயும், வேலுகுமார் 1,500 ரூபாயும் அளித்து உதவியுள்ளனர்.

அத்துடன் ’பயணம்’ தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பாஸ்கர் சங்கீதாவின் கல்வி மற்றும் விளையாட்டுக்கான ஒட்டுமொத்த உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

இதுகுறித்து பாஸ்கர் கூறும்போது,  "நான் 'எண்ணங்கள் சங்கமம்' அமைப்பில் உறுப்பினராக இருக்கிறேன். அதன் தலைவர் ஜே. பிரபாகர் 'தி இந்து'வில் வெளிவந்த சங்கீதா குறித்த கட்டுரையை அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு சங்கீதாவுக்கு உதவ முடிவு செய்தேன். அதுமட்டுமில்லாது நானும் எனது நண்பர்களும் இணைந்து ’பயணம்’ என்ற தன்னாரவ அமைப்பை கடந்த ஐந்து வருடங்களாக திருநீர் மலையிலுள்ள வழுதலபேடில்  நடத்தி வருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறோம்.  

நாங்கள் அனைவருமே ஐடி துறையைச் சேர்ந்தவர்கள். இந்தப் ’பயணம்’ தன்னார்வ அமைப்பின் மூலம் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் சங்கீதாவைத் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் சங்கீதாவின் கல்லூரிச் செலவை ஏற்றுக் கொள்வதாகக் கூறினேன். அவர்கள் கல்லுரியில் இணையும்போது எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கூறி இருக்கிறோம். கால்பந்து விளையாட்டு மற்றும் கல்விக்கு எதிர்காலத்தில் சங்கீதாவுக்கு உதவுவது குறித்து நேரில் சந்தித்து அவரிடம் கலந்து பேச உள்ளேன்" என்று கூறினார்.

இதனை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் 'தி இந்து'  பெருமிதம் கொள்வதுடன், சங்கீதாவுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in