

இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையிலான எல்லை நாளுக்கு நாள் மாறிவரும் அளவுக்குக் குடியேற்றங்கள், தாக்குதல்கள் என்று கடுமையாக நடந்துகொள்கிறது இஸ்ரேல்.
இதே இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு அவ்வப்போது கொஞ்சம் கருணை காட்டுவதும் உண்டு. அப்படியான ஒரு சந்தர்ப்பமும் வந்தது. காஸா இஸ்ரேல் - எகிப்து இடையிலான கெரம் ஷாலோம் எல்லையை 2004 ஜூலை 18 முதல் மூடியிருந்தது இஸ்ரேல். இதனால், எகிப்து சென்றிருந்த பாலஸ்தீனர்கள் பலர் காஸாவுக்குள் நுழைய முடியாமல் பரிதவித்தனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் எங்கும் செல்ல முடியாமல் எல்லையிலேயே திரிந்துகொண்டிருந்தனர். அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் உத்தரவுப்படி, ஆகஸ்ட் 6-ம் தேதி, கெரம் ஷாலோம் எல்லையை அந்நாட்டின் ராணுவத்தினர் திறந்துவிட்டனர். இதையடுத்து, 2,000 பாலஸ்தீனர்களும் தங்கள் வீடுதிரும்பினர். அதெல்லாம் பழைய கதை!
கடந்த ஒரு மாதமாக, இஸ்ரேல் நடத்திவரும் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பிச்செல்ல முடியாமல் தவித்துவரும் பாலஸ்தீனர்கள், ரஃபா எல்லையைத் திறந்துவிடும்படி எகிப்துக்குக் கோரிக்கை விடுத்தனர். ஹமாஸுடன் மோதல் போக்கில் இருக்கும் எகிப்து அரசு முதலில் மறுத்துவந்தாலும், சில நாட்களுக்கு முன் ரஃபா எல்லையைத் திறக்கச் சம்மதித்தது. காயமடைந்த பாலஸ்தீனர்களுக்குத் தங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதாகவும் எகிப்து உறுதியளித்தது.
- சரித்திரன்