Last Updated : 05 Jun, 2018 09:04 PM

 

Published : 05 Jun 2018 09:04 PM
Last Updated : 05 Jun 2018 09:04 PM

தாழ்ந்த தமிழகம்

மத்திய காலத்தைச் சேர்ந்த ஒரு யூதக் கதை:

கிராமம் ஒன்றில் குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடந்தது. உடனே, அக்குழந்தையை நரபலியாகக் கொடுத்து பயங்கர பூசை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு ஒரு யூதர் சிறையில் அடைக்கப்பட்டார். தான் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதையும், எதிர்வரும் விசாரணையில் தனக்குஎவ்வகையிலும் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்து அந்த யூதர் சிறையில் மனம் நொந்து கிடந்தார். சாகப் போவதற்கு முன் தன் மத குருக்களில் ஒருவரை சந்திக்க அனுமதி கேட்டார். அனுமதி அளிக்கப்பட்டது.

அவரைச் சந்திக்க வந்த யூத மத குரு, அவரது நிலைமையைப் புரிந்து, அவருக்கு ஆறுதல் கூறினார். “தப்பிக்க வழி ஏதும் இல்லை என்று நினைத்துவிடாதே. தீமையின் உருவேயான அந்த சைத்தான் மட்டுமே உன்னை அவ்வாறு தூண்டிவிடுவான்,“ என்றார்.

“ஆனால், இப்போது நான் என்ன செய்ய?” என்று வினவினார் அந்த யூதர்.

“முயற்சியைக் கைவிடாதே. ஏதேனும் ஒரு வழி பிறக்கும்,” என்றார் குரு.

விசாரணை நடக்கும் நாளும் வந்தது. விசாரணை நியாயமாகத்தான் நடந்தது என்று காட்ட விரும்பிய நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவரை நோக்கி,“யூதர்களாகிய நீங்கள் உமது கடவுள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்பதால், முடிவை அவர் தீர்மானத்திற்கே விட்டுவிடுகிறேன். இங்கே ஒரு காகிதச் சுருளில் நிரபராதி என்றும் மற்றொரு காகிதச் சுருளில் குற்றவாளி என்றும் எழுதி வைத்திருக்கிறேன். இவற்றில் நீயே ஒன்றைதேர்வு செய்யலாம். உமது கடவுள் உன் தலைவிதியை தீர்மானிப்பாராக,” என்று அறிவித்தார்.

யூதருக்கு சட்டென்று விஷயம் விளங்கிவிட்டது. நீதிபதி இரண்டு காகிதச் சுருள்களிலும் குற்றவாளி என்று எழுதி வைத்திருக்கிறார். எதை எடுத்தாலும் தனக்கு மரணம் நிச்சயம். ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானமாக யோசித்தார். பளீரென்று ஒரு யோசனை உதித்தது. சட்டென்று தன் முன் இருந்த இரண்டு காகிதச் சுருள்களில் ஒன்றை எடுத்து மென்று விழுங்கிவிட்டார்.

கூடியிருந்தோரும் நீதீபதியும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, ஏன் அப்படிச் செய்தாய்? உன் தலைவிதியை இப்போது எப்படி தீர்மானிப்பது என்று கேட்க, அந்த யூதர், “மிச்சமிருக்கும் அந்தக் காகிதச் சுருளை எடுத்து வாசியுங்கள். அதற்கு எதிரான முடிவைத்தான் தேர்வு செய்திருக்கிறேன்,”என்று புன்னகைத்தார்.

உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற தருவாயில் நின்றவர், நிலைமையை அப்படியே தலைகீழாக்கி, தன் உயிரை நூறு சதவீதம் உறுதிசெய்கொண்டார்.

யூதத் தலை என்று பொருள்படும் Yiddishe Kop (Yiddishe Kop – Creative Problem Solving in Jewish Learning,

Lore & Humor, Rabbi Nilton Bonder, 1999) என்ற நூலில் வாசித்த குறுங்கதைகளில் இது ஒன்று. அடுத்த அடி எடுத்து வைக்க

ஒரு வாய்ப்பும் இல்லை என்று தோன்றும் சந்தர்ப்பங்களில், மனம் சோர்ந்து வாடி வதங்கிக் கிடக்கையில், மீண்டும் மீண்டும் வாசிக்கும் புத்தகங்களில் இது ஒன்று.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சென்ற இடங்களில் எல்லாம் ஒடுக்குமுறையைச் சந்தித்த யூதச் சமூகம், தனக்கு விதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று, அவற்றை வெற்றி கொள்ளத் தருவித்துக்கொண்ட மனநிலை, மேற்சொன்னது போன்ற ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கதைகளிலும், சமய நெறிக் கதைகளிலும் காணக்கிடைக்கின்றன. தம் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் தீராப் பழிகளையும் எதிர்கொண்டு, தாக்குப்பிடித்து துளிர்த்து எழ யூதச் சமூகம் கைக்கொண்ட மனநிலைகளில் பிரதானமானவை இரண்டு – விடாமுயற்சி, நகைச்சுவை, குறிப்பாக, தமது நிலை பற்றிய கடுமையான சுயஎள்ளல்.

யூதச் சமூகம் போலவே நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள தமிழ் சமூகம் யூதர்களைப்போல இரண்டாயிரம் ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட ஒதுக்குதலையோ ஒடுக்குமுறையையோ அனுபவித்ததில்லை. தமிழ் சமூகம் வரித்துக்கொண்டுள்ள கூட்டு மனநிலையும் வித்தியாசமானது.

தமிழ் சமூத்தினராகிய நாம் வரித்துக்கொண்டுள்ள மனநிலையைச் சுட்டும் ஒரு தொன்மக் கதையும் உண்டு. கோடம்பாக்கத்து திரையுலகத்தின் “புண்ணியத்தில்” ஓரிரு தலைமுறை சலிக்காது கேட்டு ரசித்த, திருவிளையாடல் தருமி கதைக்குப் பின்னர் நிகழ்ந்ததாக் கருதப்படும் ஒரு தொன்மக் கதை.

தருமிக்கு பாட்டெழுதிக் கொடுத்து, நக்கீரனை எரித்து, உயிர்ப்பித்த பிறகு இறைவன் சோமசுந்தரக் கடவுளார் ஆடிய மற்றொரு திருவிளையாடலாகவும் இருக்கலாம். அத்திருவிளையாடல் பின்வருமாறு.

பாண்டிய மன்னன் வேண்டுதலுக்கு இணங்கி சோமசுந்தரக் கடவுள் அகப்பொருளுரை என்னும் இலக்கண நூலை எழுதிக் கொடுக்கிறார். அந்த நூலுக்கு உரை எழுதித் தருமாறு பாண்டிய மன்னன் தன் புலவர்களிடம் கேட்கிறான். புலவர்களும் எழுதிக் கொடுக்க, அதில் சிறந்த உரை எது என்ற கேள்வி எழுகிறது. அப்போது, இறைவன் அசரீரியாக ஒரு செய்தியை சொல்கிறார்.

காது கேட்காத, வாய் பேசாத உருத்திரசன்மன் என்ற சிறுவனாக குமரக் கடவுள் ஒரு சாபத்தினால் அவ்வூரில் பிறந்திருக்கிறார். அவன் முன்பாக ஒவ்வொரு புலவரும் தமது உரையை வாசிக்கட்டும். யாருடைய உரை வாசிக்கப்படும்போது அவன் மெய்சிலிர்த்து கண்ணீர் உகுக்கிறானோ அதுவே சிறந்த உரை என்கிறார்.

புலவர்களும் அவ்வாறே செய்ய, நக்கீரனார் தமது உரையை வாசிக்கும்போது, காது கேளாத அந்த ஊமைச் சிறுவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் மெய் சிலிர்த்து கண்ணீர் உகுக்கிறான். நக்கீரர் உரையே தலைசிறந்த உரை என்று மன்னனும் புலவர்களும் முடிவு செய்கிறார்கள்.

சங்க/சமணர் காலத்து தமிழ் இலக்கண உரை எழுதும் மரபை – சங்கத் தமிழர் மரபையும் - சோழர் காலத்து சைவம் வெற்றி கொண்டதற்கு அடையாளமாக இத்தொன்மத்தைக் கருத இடமுண்டு.

சங்க காலத்து மரபுகளாகக் கருதப்பட்ட விருந்தோம்பல், நட்பின் பொருட்டு வடக்கிருத்தல், கொடை, திரைகடலோடி திரவியம் தேடல், கேள்வி எனும் கல்வி, குடி உயர கோல் உயரும் ஆகிய மாண்புகள் அனைத்தும் இச்சோழர் காலம் தொட்டு படிப்படியாக மறைந்து போயின. சங்ககால தமிழ் சமூகத்தின் அனைத்து மாண்புகளையும் இழந்து, காது கேளாத ஊமைத் தெய்வத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அடிமையாகிப் போனது தமிழ் சமூகம்.

திரைகடலோடி திரவியம் தேடல், திரைகடல் மேவி படையெடுத்தலானது. நட்புக்கு வடக்கிருத்தல் மன்னருக்கு நவகண்டம் ஈவது ஆனது. கேள்வியெனும் கல்வி வேதபாராயணமானது. ஆடல் மகளிர் தேவரடியார் ஆயினர். சாதி வேரூன்றியது. தீண்டாமை முளைத்தது. கொடை கோயில் கொள்ளையானது. நந்தன் பலி தொடர்கதையானது.

திசை மொழி, வட மொழி என்று இலக்கணம் வகுத்த சங்கம் அழிந்து, தென்னாடு கொண்ட சிவனது புலமானது தமிழகம். அரசனை இடித்துரைத்த புலவர் மறைந்து, (கலிங்கத்துப்) பரணி பாடும் புலவர் கூடி, சீட்டுக் கவி பாடும் சிட்டாய் பறந்தனர்.

தரணி வென்ற சோழச் சபை, மன்னர் புகழுக்கு சீழ்க்கையடிக்கும் கவிஞர் கூடாரமானது. எளியோரை வதைக்கும் நரகமுமானது.

சங்க மரபு தொலைந்து சோழர் மரபு அரியணை ஏறியதில் தமிழர் நாம் பெற்ற பெரும் சாபங்கள் இவை. இன்றும் தொடர்பவை.

நம் சட்டசபை ஆள்வோரின் வார்த்தை அலங்கார அரங்கானது. உலகச் செல்வந்தரின் நாசகார ஆலையை மூட நரபலி கேட்கிறது நிர்வாகம். நம் எளியோர் உள்ளூரில் வேலையற்றிருக்க, வட மாநிலங்களில் வலைவீசித் தம் ஆலைகளில் வாட்டி வதைக்க ஆள்பிடித்து வருகின்றனர் நம் செல்வந்தர். சீமான் – சீமாட்டியரின் பிள்ளைகள் கடலோடி கல்வி கற்க, நம் எளியோரின் பிள்ளைகள் நந்தன் வழி உயிர் பலியாகின்றனர்.

தமிழராகிய நம் முன் இப்போது வைக்கப்பட்டிருப்பவை இரண்டே இரண்டு தேர்வுகள்தாம். இரண்டு காகிதச் சுருள்களிலும் எழுதப்பட்டிருப்பது தோல்வி அல்லது மரணம்.

வெட்டி வீரமோ, வாய்ச்சொல் ஜாலமோ இதை வெல்லப்போவதில்லை. புரட்சிகரப் புளகாங்கிதமும் கவைக்கும் உதவப்போவதில்லை.

புதியன புனைதல். எவரும் எதிர்பார்த்திரா புதியன புனைதல். அவை மட்டுமே நம் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் புதிய பாதைகளை வகுத்துத் தரும்.

தொடர்புக்கு: mathi2006@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x