

1972 ஜூன் 17. அமெரிக்க அரசியலைப் புரட்டிப்போட்ட நாள். அன்று நள்ளிரவு, தலைநகர் வாஷிங்டனில் உள்ள வாட்டர்கேட் வளாகக் கட்டிடத்தில் செயல்பட்டுவந்த ஜனநாயகக் கட்சித் தலைமை அலுவலகத்தின் அறைக் கதவுகளை உடைத்துக்கொண்டு ஐந்து பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அந்த கும்பல் அளித்த வாக்குமூலம், அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தீட்டிய சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியது.
ஜனநாயகக் கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒலிப்பதிவுக் கருவிகளைப் பொருத்த அதிபர் நிக்சன் உத்தரவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் களத்தில் இறங்கின. இரண்டு ஆண்டுகள் வீசிய அரசியல் சூறாவளிக்குப் பின்னர், 1974-ல் இதே நாளில் பதவி விலகினார் நிக்சன். பின்னர், தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கலிஃபோர்னியாவில் உள்ள கிளமெண்ட் நகருக்குச் சென்றார். அதே நாளில், துணை அதிபர் ஜெரால்டு ஃபோர்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
பதவியேற்ற பின்னர், தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜெரால்டு ஃபோர்டு, “சக அமெரிக்கர்களே, நீண்ட காலம் நீடித்த அந்தக் கெட்ட கனவு இன்றுடன் முடிவுற்றது” என்றார். அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் பதவியிலிருந்து விலகியவர் என்ற பெயர் நிக்சனுக்கு நிலைத்துவிட்டது.
- சரித்திரன்