எத்திசையும்... கிராமத்தோடு மாப்பிள்ளையாக வேண்டுமா?

எத்திசையும்... கிராமத்தோடு மாப்பிள்ளையாக வேண்டுமா?
Updated on
2 min read

ராட்சத சுனாமி அபாயம்

2004-ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழித்தாண்டவத்துக்குப் பின்னர்தான் ‘சுனாமி’ என்றால் என்ன என்றே பலருக்குத் தெரிய வந்தது. 2011-ல் ஜப்பானில் சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாகவே கண்டு அதிர்ந்தது உலகம். தற்போது சுனாமி பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்றை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது. ஜப்பான் கடலில் 6.8 முதல் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் 23.4 மீட்டர் (சுமார் 77 அடி!) உயரத்துக்கு சுனாமி அலை தாக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபுகுஷிமாவில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவைப் பற்றிய நினைவுகள் அடங்குவதற்குள் இப்படியொரு ஆபத்தா?

கரடி விட்ட கரடி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் உள்ள பாண்டா வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தில் உள்ள பெண் பாண்டா கரடி ஐ ஹின். கடந்த மாதம் இந்தக் கரடி கர்ப்பமாக இருப்பதாக ஆய்வு மைய ஊழியர்களுக்குத் தெரியவந்தது. அதாவது, அப்படியான அறிகுறிகள் ஐ ஹினிடம் தென்பட்டன. ஒரு குட்டிப் பாண்டா பிறக்கப்போகிறது என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். உண்மையில், கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளை மட்டும்தான் அந்தக் கரடி வெளிப்படுத்தியதாம். அருகிவரும் உயிரினமான பாண்டாக்கள் கர்ப்பமடைந்தால் அவற்றுக்குக் குளுகுளு அறை, கூடுதல் உணவு என்று சிறப்பு உபசரிப்புகள் உண்டாம். அதைக் குறிவைத்துதான் ஐ ஹின் அப்படி நடித்தது என்று பின்னர் தெரியவந்திருக்கிறது. என்னா வில்லத்தனம்!

மீண்டும் தட் தட்... தட தட!

தட்டச்சு இயந்திரங்களின் காலம் மலையேறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் மடிக்கணினி மற்றும் கைபேசியிலேயே பலர் தட்டச்சு செய்துவிடுகின்றனர். பத்திரிகை அலுவலகங்களிலும் இதே நிலைதான். அப்படியான சூழலில் லண்டனில் உள்ள ‘டைம்ஸ்’ நாளிதழ் அலுவலகத்தில் மீண்டும் தட்டச்சு இயந்திரங்களின் ‘தட தட’ ஓசை மீண்டும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. உடனே, கணினியை விட்டுவிட்டுத் தட்டச்சுக்குச் சென்றுவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். நாளிதழ் அலுவலகத்துக்குள் தட்டச்சு ஒலி கேட்டால் வேலை பரபரப்பாக நடக்கும் என்ற எண்ணத்தில், தட்டச்சு சத்தம் ஒலிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாட்டை அந்நிறுவனம் செய்திருக்கிறது. தட்டச்சு சத்தம் தரும் பழைய நினைவில் ‘ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்’ என்று செய்தி எழுதாமல் இருந்தால் சரிதான்!

நாஜி காதுகளுக்கு நல்லிசை!

ஹிட்லரின் நாஜிப் படையினர் நடத்திய படுகொலைகளின் வடு இன்றும் மறைந்துவிடவில்லை. இன்றும் அந்தப் படைக்கு ஆதரவானவர்கள் உண்டு. கிழக்கு ஸ்வீடனின் நார்காப்பிங் நகரில் ‘நியோ நாஜிஸ்’ (புதிய நாஜிக்கள்) என்ற பெயரில் ஒரு கட்சி செயல்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை வெறுக்கும் அந்தக் கட்சி, மேற்கத்திய மரபிலிருந்தும் மரபணுவிலிருந்தும் வந்தவர்களுக்கு மட்டும்தான் ஸ்வீடனில் இடம் உண்டு என்ற ‘உயரிய கொள்கை’ கொண்டது. சமீபத்தில் அந்தக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்துக்கு முன்னர், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் நிகழ்த்திய கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படத்தின் பாடலை ஒலிக்கவிட்டிருக்கின்றனர் நகர நிர்வாகிகள். ‘நாஜி ஆதரவாளர்களுக்குக் கொஞ்சமாவது இரக்க புத்தி வரட்டும்’ என்ற நோக்கத்தில்தான். புத்தி வந்ததா இல்லையா என்று மேலதிகத் தகவல் இல்லை

கிராமத்தோடு மாப்பிள்ளையாக வேண்டுமா?

பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள அழகிய கிராமம் நொய்வா டி கோடிரோ. அந்தக் கிராமம் முழுவதும் அழகிய பெண்கள். கடும் உழைப்பாளிகளான அந்தப் பெண்களுக்கு இருக்கும் ஒரே குறை, திருமணம் செய்துகொள்வதற்குப் போதுமான ஆண்கள் இல்லை. அந்தக் கிராமத்தில் இருக்கும் ஆண்களில் பலர் திருமணமானவர்கள். இருக்கும் ஒரு சில இளைஞர்களும் உறவு முறையில் சகோதரர்கள். ‘வாழ்க்கையில் யாரையாவது காதலிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது’ என்று செல்லமாகச் சலித்துக்கொள்கிறார்கள் அவர்கள். எனினும், திருமணம் செய்துகொண்டு வேற்றிடங்களுக்குச் செல்ல அந்தப் பெண்களுக்கு விருப்பம் இல்லை. “எங்கள் கிராமத்திலேயே தங்க சம்மதிக்கும் ஆண்கள் வந்தால் திருமணம் செய்துகொள்ளத் தயார்” என்கிறார்கள் புன்னகை யுடன். ‘கிராமத்தோடு மாப்பிள்ளை’யாக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in