கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி

கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
Updated on
1 min read

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் 2-ல் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

திட்டம் 1-ல் உள்ள நிபந்தனைகள், திட்டம் 2-க்கும் பொருந்தும். அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன் அளிக்க வேண்டும். திருமண நாள் அல்லது திருமணம் முடிந்த பின்பு அளிக்கக்கூடாது.

கல்வி மாற்றுச்சான்றிதழ் நகல், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு சான்று நகல், வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாக ஆணையர் அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர் ஆகியோரிடம் வழங்க வேண்டும். திட்டம் 1, திட்டம் 2 ஆகிய இரண்டிலும் உதவித் தொகை தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில் மணமக்களிடம் வழங்கப்படும்.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு கணவரை இழந்தோர் மகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் போல் இத்திட்டத்தில் நிதியுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற யாரை அணுக வேண்டும்?

அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரை அணுகி உதவித் தொகை பெற விண்ணப்பம் செய்யலாம். வட்டாட்சியர் மட்டத்தில் பெறப்பட்ட விதவைச் சான்று மற்றும் வருமானச் சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கவேண்டும். விதவை உதவித் தொகை பெறுபவராக இருந்தால் விதவை மற்றும் வருமானச் சான்று தேவையில்லை. உதவித் தொகைக்கான காசோலை மணப்பெண் தாயாரிடம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், அவரது மகளான மணமகளிடம் வழங்கப்படும்.

ஆதரவற்ற பெண்களுக்கு அரசின் திருமண நிதியுதவி திட்டம் ஏதேனும் உள்ளதா?

ஆம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அதுபோல் வயது உச்சவரம்பும் இல்லை. விண்ணப்பங்களை திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் ஆகியோரிடம் வழங்க வேண்டும்.

ஆதரவற்றோர் என்பதை உறுதிசெய்ய தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும். தவிர, அந்தந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். உதவித்தொகைக்கான காசோலை விண்ணப்பிக்கும் நபரிடம் வழங்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in