

திரைப்படத்துக்கான கதையை உருவாக்குவது என்பது ஒரு கலை. எனில், கதைக் கேற்ற திரைக்கதையை நெய்வது என்பது நுண்கலை. இப்படி ஒரு ஒன்லைனை நான் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
விபத்தில் பார்வை இழந்த ஒரு பெண், கொடூரமான சீரியல் கில்லரை எப்படிக் கண்டுபிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறாள். சுவாரஸ்யமான ஒன் லைன்தான். ஆனால், கதை நடக்கும் இடம் தமிழ்நாடு என்றால், கதைக்கான லாஜிக்கை நம்பகத் தன்மையுடன் அமைப்பது கடினம். குறிப்பாக, கதையின் லாஜிக்குக்கு ஏற்ற சூழல் தமிழ்நாட்டில் ஏன், இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் உண்மை.
உதாரணத்துக்கு ஒரு காட்சி. யாருமில்லாத ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண்ணை, கொலையாளி துரத்துகிறான். அலைபேசியில் தனக்குச் சொல்லப்படும் கட்டளைகளை வைத்துப் அந்தப் பெண் தப்பி ஒட வேண்டும். இப்படியான காட்சி இங்கே சாத்தியமா? வளர்ச்சி அடைந்த நாடுகளில், ரயில்நிலைய நடைமேடையில், பார்வையற்றவர்கள் நடந்து செல்ல சிறப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சியை, சென்னையில், அவ்வளவு ஏன் இந்தியாவில் படமாக்குவது இயலாத ஒன்று.
ஏனெனில், பார்வையற்றவர்களுக்காக அப்படி ஒரு சிறப்புப் பாதை இருக்கிறதா என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. உண்மையில், சென்னையிலும் பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பாதை இருக்கிறது. ‘ஏதோ டிசைன் போல' என்ற அளவில் நம்மில் பலர் அதைக் கடந்திருப்போம். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் நடைபாதையில் இந்த சிறப்புப் பாதையைக் காண முடியும்.
(படத்தில் இருப்பது பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நடை பாதை. சிறு மேடுகளுடன் கூடிய மஞ்சள் பாதையில் யாருடைய உதவியும் இன்றி அவர்களால் நடந்து செல்ல முடியும்.) இதுபோல சென்னையின் சாலையோர நடைபாதையில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், நிறைய இடங்களில் நடைபாதையே இல்லை... அப்புறம் எங்கே பார்வையற்றோருக்கான சிறப்பு நடைபாதை சாலைகளை அமைப்பது!
ஹங்காங் படமான ‘பிளைன்ட் டிடெக்ட்டிவ்' மற்றும் கொரியத் திரைப்படமான ‘பிளைன்ட்' போன்ற படங்கள் வெற்றி பெற்றன என்றால், அங்கே சூழல் அப்படி.
நாம் இருக்கும் சூழலில் இப்படி ஒரு படம் சாத்தியம் இப்போதைக்குக் குறைவு. முதலில் எல்லா இடங்களிலும் நடைபாதை அமைக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் ‘ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடல் லெவலில்தான் நாம் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்!
வலைப்பூ முகவரி: >http://www.jackiesekar.com/