

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு கி.ரா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் பகுதி வாழ்க்கையை, அந்தப் பகுதி மனிதர்களின் இடப்பெயர்வை, மொழியை, பண்பாட்டைத் தன் கதைகள்வழி பதிவுசெய்தவர் நாஞ்சில்நாடன். ‘எட்டுத் திக்கும் மதயானைகள்’, ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘மிதவை’ ஆகியவை இவரது சிறந்த நாவல்கள். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வழியாகவும் பங்களிப்புச் செய்துள்ளார். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என்கிற பெயரில் தங்கர் பச்சான் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும் விருதுக் கேடயமும் உள்ளடக்கியது கி.ரா. விருது. கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.
படைப்புக் குழும விருதுகள்
படைப்புக் குழுமத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் கலாப்ரியாவுக்கும், படைப்புச் சுடர் விருது கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கும் மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனுக்கும், இலக்கியச் சுடர் விருது ஷைலஜா ரவீந்திரனுக்கும் முகிலுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை விருது பாலைவன லாந்தருக்கும் பாரீசாகரனுக்கும், கட்டுரை விருது என்.குமாருக்கும் நிவேதிதா சுரேஷ்வரனுக்கும், நாவல் விருது ராம் தங்கத்துக்கும் எஸ்.தேவிக்கும் வானவனுக்கும், சிறார் இலக்கிய விருது சரிதா ஜோவுக்கும், சிறுகதை விருது ஆமினா முஹம்மத்துக்கும் ரிஸ்வான் ராஜாவுக்கும், மொழிபெயர்ப்பு விருது கே.வி.ஜெயஸ்ரீக்கும் பல்லவி குமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூத்துப்பட்டறையில் நாடக நிகழ்வு
பிரசன்னா ராம்குமார் இயக்கத்தில் ‘நம் அருமை முத்துசாமி’ நாடகம் இன்று (25.08.24) மாலை 7 மணிக்கு சென்னை விருகம்பாக்கத்தில் கூத்துப்பட்டறை அரங்கில் நிகழ்த்தப்பட உள்ளது. தொடர்புக்கு: 80155 82246
நரேந்திர தபோல்கர் நூல் வெளியீடு
மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர் நரேந்திர தபோல்கர். அவரது இந்தச் செயல்பாட்டால் மதவாத அமைப்புகளால் 2013இல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆகஸ்ட் 20இல் அவரை நினைவுகூரும் பொருட்டும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளை ஒட்டியும் ‘நரேந்திர தபோல்கர்: மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி’ என்கிற நூல் (நூலாசிரியர்: எஸ்.மோசஸ் பிரபு) திங்கள் கிழமை (26.08.24) காலை 10 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடப்படவுள்ளது. செயல்பாட்டாளர்கள் நரேந்திர நாயக், எஸ்.கிருஷ்ணசாமி, நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். ஆயிஷா இரா.நடராசனின் ‘அறிவியலின் குழந்தைகள்’ நூலும் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.