Published : 13 Dec 2013 02:00 PM
Last Updated : 13 Dec 2013 02:00 PM

மனம் நெகிழ வைத்த திரைப்பட விழா

சென்ற வருடம் 'சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்' கொடுத்த தாக்கத்திலிருந்து மனமது மீளவில்லை. கதாநாயகனுக்கும், மாஸ் மசாலா ஆக்ஷன் காட்சிகளுக்கும் ஆரவாரமிடும் கூட்டத்திற்கு நேர் முரணாக கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும், இயக்குனருக்கும், படைப்பிற்கும் சிகப்புக் கம்பளம் விரிக்கும் தூய சினிமா பித்தர்களின் கூட்டம். ஆலயம் திரையரங்கமாக, பக்தன் ரசிகனாக, போற்றும் கடவுள் சினிமாவாக உருமாற்றம் கண்ட ஆடுகளம். ஒரு வாரத்திற்கு சினிமாவை கொண்டாடும் திரைத் திருவிழா.

இரானியன், இடாலியன், ரஷ்யன், ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு இப்படி சர்வேதச படங்கள் சரவாரியாக திரையிடப்பட்டது. மற்றொரு புறத்தில் கிரீஷ் காசரவள்ளியின் த்வீபா, மோகன் லால் நடித்த வனப்பிரஸ்தம், எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா, சிவாஜி கர்ஜிக்கும் கர்ணன், சத்யஜித்ரே'வின் பதேர் பாஞ்சாலி இப்படி பல கிளாசிக் படங்களின் திரையிடல். இதைத் தவிர 2011'ஆம் ஆண்டில் வெளிவந்த சமகால படங்கள்.

பக்கத்தில் சுமார் அறுபது வயது உள்ள ஒருவர் தன் தோழருடன் “நேற்றைக்கு ஸ்ரீநிவாசன் நடித்த 'shutter' படம் பார்த்தீங்களா.. அத போய் மிஸ் பண்ணிடேளே” என பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட படங்கள்.. எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று ஒரே குழப்பம். 'தேன் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் தேனீயைப் போல்' இங்கு தூய சினிமாவை நாடிச் செல்லும் ரசிகர் கூட்டம்.

2011 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிறந்த படங்கள் பிரிவில் பன்னிரண்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. படம் முடிந்த பின் இயக்குனருடன் நேர் உரையாடல். பார்வையாளர் படைப்பாளியை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பார்வையாளரின் பார்வையை படைப்பாளி நேராக உணர்வதற்கும், படைப்பின் சாராம்சங்களை அலசி ஆராய்வதற்கும் அம்மேடை பாலம் வகுத்துக் கொடுத்தது.

அரங்கம் முழுதும் உங்களைப் போன்ற பலர், அனைவரையும் இணைக்கும் கயிறாய் ரசனை. முன்பின் அறியாத நபர்களிடம் கூட நட்பை அமைத்துத் தந்தது இந்தத் திருவிழா.

இந்த படம் பார்த்தீங்களா சார்? நீங்க வேணும்னா பாருங்க இந்த முறை 'ஹோலி மோட்டார்ஸ்' தான் ஆஸ்கார் அடிக்கும். நீங்க வேற, அந்த படம் செலக்ட் ஆகவே இல்லை 'amour' தான் ஜெயிக்கும்ன்னு imdb, rotten tomatoes - விமர்சக இணையதளங்களில் பிரபல விமரசகர்கள் சொல்கிறார்கள். இன்னிக்கு மதியம் காசினோ'ல amour போலாமா! வாங்க பார்ப்போம். இப்படிப் பலர் ஒரே உரையாடலில் நண்பர்களாகி தோழமை கொண்டதை எல்லாம் நேரில் காண முடிந்தது.

சிவாஜியை நாயகனாக வெள்ளித்திரையில் காணாத தொண்ணூறுகளில் பிறந்தவனுக்கு 'கர்ணனை' திரையில் காணக் கிடைத்த வாய்ப்பு அபூர்வமான ஒன்று தான். அதுவும் அறுபது வயதிற்கும் மேற்பட்ட இளைஞர் இருக்கையிலிருந்து எழுந்து நின்று விசில் அடித்த காட்சியை, என்னவென்று வர்ணிக்க!

“தம்பி சிவாஜியை பாருப்பா.. இப்போ இருக்குற யாராவது நடிகர் திலகத்துக்கு இணையா வர முடியுமா!” என்ற அம்மனிதரிடம் ஒரே பூரிப்பு. மற்றொருவர் இருக்கை இருக்கையாய் வந்து இனிப்பு வழங்கிவிட்டு சென்றார். கேட்டால், இது சிவாஜியை பார்க்க வந்த ரசிகருக்கு அவர் தரும் அன்புப் பரிசாம். ரசிகர் ரசிகருக்கு பரிசளிப்பதை கண்டதுண்டா கேட்டதுண்டா? கர்ணன் படம் முடிகையில் ஒரு foreigner அழுவதைக் கண்டேன். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் வாழ்வில் எப்போதும் அமையாது. 'Toronto film festival'லுக்கு சென்று படம் பார்த்தாலும் நம்மூர் தருகின்ற அனுபவம் கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறி தான்.

பிலிம் பெஸ்டிவலுக்கு வந்த எவராலும் 'ஆரண்ய காண்டம்' படத்தின் திரையிடலை மறக்க முடியாது. ராணி சீதை ஹாலில் காலை பத்தரை மணிக்கு ஓர் சுமாரான படம் திரையிடப்பட்டது. அதையடுத்து 12.30 மணிக்கு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' பார்ப்பதற்காகவே முதற் காட்சிக்கு வந்து அமர்ந்து விட்டனர். முதற்படம் முடிய அரங்கிலிருந்து ஒருவர் கூட எழுந்து கொள்ளவில்லை. அரங்கிற்கு வெளியே வழிகின்ற கூட்டம் ஒருபுறம், நின்றாவது படம் பார்க்கிறேன் எனக் கூறி அரங்கிற்குள் ஒரு நூறு பேர் நிற்கவும் தொடங்கி விட்டனர். இதற்கு நடுவே ஆரண்ய காண்டத்தின் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. மாலைக்குள் பிலிம் பெஸ்டிவல் அரங்கேறும் அனைத்துத் திரையரங்கிற்கும் அறிவிப்பு வரும், ஆரண்ய காண்டம் பெரிய அரங்கில் திரையிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டு கூட்டம் விலகியது.

மதியம் மூன்று மணி அளவில் அனைத்து திரையரங்கிலும் ஆரண்ய காண்டம் திரையிடல் பற்றிய நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஏழு மணிக்கு Woodlands Symphony-யில் ஆரண்ய காண்டம். ஐந்தரை மணிக்கு கூட்டம் நிரம்பி வழிய, கூடத்திற்கு ஈடுகொடுக்க காட்சி woodlands'ற்கு மாற்றப் பட்டது. மாலை 6.15க்கு woodlands ஆயிரத்திற்கு மேற்பட்டவரை அமர வைக்கும் திரையரங்கம் ஹவுஸ் ஃபுல்.

இதைப் பார்க்கும் போது படம் வெளியான முதல் நாளில் உதயம் தியேட்டரில் பார்த்த அனுபவம் தான் ஞாபகம் வந்தது. அரங்கில் எண்ணி ஐம்பது பேர் கூட கிடையாது. இளைப்பாற அரங்கிற்கு வந்தவர் சிலர் பாதி படத்திலே அரங்கை விட்டு வெளியேறினர். பிலிம் பெஸ்டிவலிலோ, ஆரண்ய காண்டம், ஆரண்ய காண்டம் என்று அலைந்து வந்தது தேனிக் கூட்டம். கொடுக்காப் புளிக்கும், சப்பைக்கும், ஜமீன்தாருக்கும், சிங்கபெருமாளுக்கும், பசுபதிக்கும் ஏகபோக கைத்தட்டல். கதாப்பாத்திரத்தின் பெயரை மனதில் பசை போட்டு ஒட்டிய 'நியூ வேவ்' சினிமா அது. வசனத்திற்கும், திரைக்கதைக்கும், காட்சியமைப்பிற்கும் கைதட்டிய ஒரு கூட்டத்தை நான் இந்த அளவுக்கு பார்த்ததில்லை. முதன் முறை ஆரண்ய காண்டம் பார்த்த போது பிடித்ததை விட, இம்முறை பல மடங்கு பிடித்துப் போனது. இயக்குனர் பெயர் திரையில் வர ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டிய அத்தருணத்தை எப்போது நினைத்தாலும் சிலிர்க்கும்.

இந்த வருடத்தின் பட்டியலைப் பார்க்கையில் என் மனம் கவர்ந்த lucia, ship of thesus, lincoln, பரதேசி போன்ற அற்புத படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச திரைப்படங்களிலிருந்தும் அற்புதப் படைப்புகள் பல இடம் பெற்றுள்ளன.

பாப்கார்னை வைத்துக் கொண்டு, மொபைல் நோண்டிக் கொண்டு படம் பார்க்கும் சில கூட்டத்திற்கிடையே திரைப்படத் திருவிழாக்களில் பசி, பட்டினியை மறந்து சினிமா பசி போக்கிக் கொள்ள வந்த அக்கூட்டம் புதுமையாக தோன்றியது.

இதைப் போன்ற ஓர் ரசிகப் பேரலையில் மீண்டும் கலந்திட துடிக்கின்ற மனம் நெகிழ்ச்சியால் மகிழ்ச்சியடையப் பார்க்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x