

1806 வேலூர்ப் புரட்சி: 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் எழுச்சிக்கு முன்பு, 1806ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த வேலூர்ப் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.
1919 ஜலியான் வாலாபாக் படுகொலை: ஆங்கிலேயேர் ஆட்சியின் ரௌலட் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, 1919, ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலத்தின் ஜலியான் வாலாபாக்கில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த மோசமான நிகழ்வு ஒத்துழையாமை இயக்கத்துக்கு வழிவகுத்தது. அந்நியப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என ‘ஒத்துழையாமை’ இயக்கத்தில் ஈடுபட்டார் காந்தி. இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேய அரசைக் கதிகலங்க வைத்தது.
1930 உப்புச் சத்தியாகிரகம்: உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய அரசை எதிர்த்து 1930, மார்ச் மாதம் குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தி லிருந்து 390 கி.மீ. தொலைவுக்கு தண்டி யாத்திரையை மேற்கொண்டார் காந்தி. இந்தப் போராட்டத்தின் முடிவில் உப்பு வரி ரத்து செய்யப்பட்டது.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம்: 1942, ஆகஸ்ட் 8 அன்று பம்பாயில் கூடிய லட்சக் கணக்கானோர் முன் ‘செய் அல்லது செத்து மடி’ என்று உரையாற்றிய காந்தி, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதுவே, இந்தியாவை விட்டு வெளியேற ஆங்கிலேயர்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாகவும் சுதந்திரப் போராட்டத்தின் இறுதி முழக்கமாகவும் மாறியது.
1946 கடற்படை எழுச்சி: ‘பம்பாய் கலகம்’ அல்லது ‘கடற்படை எழுச்சி’ எனக் குறிப்பிடப்படும் இந்நிகழ்வு 1946, பிப்ரவரி 18 முதல் 20 வரை மூன்று நாள்களுக்கு நடைபெற்றது. எழுச்சியின் காரணமாக இனி இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது என ஆங்கிலேயர் உணர்ந்ததால் சுதந்திரப் போராட்டத்தில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.