இன்று ஆகஸ்ட் 11: சோவியத் ஒன்றியத்தின் மீது குண்டு வீசப்போவதாக ரொனால்ட் ரீகன் ‘மிரட்டிய’ நாள்

இன்று ஆகஸ்ட் 11: சோவியத் ஒன்றியத்தின் மீது குண்டு வீசப்போவதாக ரொனால்ட் ரீகன் ‘மிரட்டிய’ நாள்
Updated on
1 min read

மேடைப் பேச்சின்போது அரசியல் தலைவர்கள், முக்கிய விஷயங்கள் பற்றி கிண்டலாகக் கருத்துத் தெரிவிப்பது உண்டு. கிண்டல் எல்லை மீறினால், கடும் கண்டனம் எழுவதும் உண்டு. அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும் அப்படியான கண்டனத்தைச் சந்திக்க நேர்ந்தது.

1984-ல் இதே நாளில், அமெரிக்க வானொலியில் தனது வாராந்திர உரையை வழங்கச் சென்றிருந்தார் ரீகன். அப்போது, ஒலிப்பதிவு சோதனைக்காக எதையேனும் பேசுமாறு வானொலி நிலையத்தின் ஊழியர்கள் அவரிடம் கேட்டனர். அவரும் விளையாட்டாக, “சக அமெரிக்கர்களே! சோவியத் ரஷ்யா ஒரு சட்டவிரோத நாடு என்று அறிவிக்கும் சட்டத்தில் இன்று கையெழுத்திட்டேன். இன்னும் ஐந்தே நிமிடங்களில் ரஷ்யா மீது குண்டு வீசப்படும்” என்றார். ஒத்திகைக்காகச் சொன்னதுதான். அந்தப் பேச்சு ஒலிபரப்பாகவில்லை. எனினும், அவர் அப்படிப் பேசினார் என்ற தகவல் எப்படியோ கசிந்துவிட்டது.

இதையடுத்து, அமெரிக்க ஆதரவு நாடுகள்கூட அதிர்ச்சியடைந்தன. பல ஐரோப்பியப் பத்திரிகைகளும் ரீகனின் நகைச்சுவைப் பேச்சைக் கடுமையாக விமர்சித்தன. பதவிக்கு ஏற்ற மதிப்பை இழந்து உளறுகிறார் என்றெல்லாம் கண்டனக் குரல்கள் எழுந்தன. 'நகைச்சுவையாகவே இருந்தாலும், மனதில் இருக்கும் விஷயம்தானே பேச்சில் வெளிப்படும்' என்று ரஷ்யாவிலும் கொதிப்பு எழுந்தது. பின்னாட்களில், இதே ரீகன் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் மிகைல் கோர்பச்சேவுடன் நட்பு பாராட்டியது வரலாறு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in