

இன்று காற்றில் ஒலிக்கும் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், முதன் முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல், காற்றில் ஒலித்த நாளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்தர் சல்லவன் இசையமைத்த ‘தி லாஸ்ட் கார்டு' என்ற பாடல் தான் அது. அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனால், 1877-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒலிப்பதிவு கருவி ‘போனோகிராப்'. அந்தக் கருவியில் ஒலியைப் பதிவுசெய்வதுடன், அதை ஒலிக்க வைக்கவும் முடியும். லண்டனில் வசித்த அமெரிக்க அறிவியல் ஆர்வலர் ஜார்ஜ் கோராடுக்கு அதை அனுப்பிவைத்தார் எடிசன்.
அந்தக் கருவியைப் பயன்படுத்தி, ஆர்தர் சல்லவனின் ‘தி லாஸ்ட் கார்டு' பாடலைப் பதிவுசெய்திருந்தார் ஜார்ஜ் கோராட். அந்தப் பாடலை 1888-ல் இதே நாளில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒலிக்கச்செய்தார் ஜார்ஜ் கோராட். மகிழ்ச்சியடைந்த ஆர்தர் சல்லவன், எடிசனுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பேச்சும் இதே கருவியில் பதிவுசெய்யப்பட்டது. “ஒலியைப் பதிவு செய்யும் உங்கள் கருவி அற்புதமானது. எனினும், இதில் மோசமான இசையையும் பதிவுசெய்ய முடியும் என்பது சற்று கிலியூட்டுகிறது” என்று சல்லவன் குறிப்பிட்டார். அவரது அச்சம் நியாயமானதுதான் என்பதை இன்றைக்குப் பெரும் பாலான பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன!