

அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வந்த பூர்விகக் குடிகளான செவ்விந்தியர்கள், அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் தங்கள் பெருமளவு நிலத்தை இழந்தனர். இன்று மிகக் குறுகிய நிலப்பரப்பில் அரசின் நிதியுதவியுடன் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், அவர்களது சமூகத்தில் நெடுங்காலமாக நிலவிய கதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. டிரிஸ்ட்ரம் பி. காஃபின் என்கிற அமெரிக்க நாட்டுப்புறவியலாளர் பதிவுசெய்த அம்மாதிரியான கதைகளின் தொகுப்பு இது. வானதி என்கிற புனைபெயரில் எழுதிவரும் முத்துபிரகாஷ் இவற்றை மொழிபெயர்த்துள்ளார்.
செவ்விந்தியர்களிடையே அவர்கள் வசிக்கும் பகுதி சார்ந்து ஹோப்பி, டஹ்லடன், சாஸ்தா, வைண்டாட், ஷையன் உள்படப் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு பிரிவினரின் பண்பாடு வெளிப்படுகின்றது. இயற்கையுடன் செவ்விந்தியர்களுக்கு இருந்த உறவு, நன்மை தீமை குறித்த அவர்களது புரிதல், வாழ்க்கையை எந்த முன்முடிவுகளும் இன்றிச் செவ்விந்தியர்கள் அணுகிய பாங்கு போன்றவை இக்கதைகளின்வழியே புலப்படுகின்றன.
ஒரு முதிய தம்பதிக்குக் காட்டெருமை மூலம் அடையாளம் காட்டப்படும் ஒரு ரத்தக்கட்டி, ஆண் குழந்தையாக மாறுவதையும் அவன் வேட்டையில் சிறந்து விளங்குவதையும் கூறும் ‘ரத்தக்கட்டு’ என்கிற கதை, காட்டெருமை வேட்டையின்போது அவனது வார்த்தைக்கு மாறாக அவனது மனைவி ‘கன்றுக்குட்டியைக் கொல்லுங்கள்’ எனக் கூற, அவன் காட்டெருமைகளில் ஒன்றாகவே மாறி மறைந்துபோவதுடன் முடிவடைகிறது. இக்கதையின் நீதி என்ன என்று இன்றைய நாகரிகச் சமூகத்தினர் தம் சிந்தனையை ஓடவிடலாம்.
ஆனால் கொலராடோ, பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் குறைந்தபட்சம் 500 பேர் கொண்ட கூட்டமாக வாழ்ந்து வரும் செவ்விந்தியர்களுக்கு இக்கதை, அவர்களது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையின் ரத்தமும் சதையுமான ஒரு பகுதி. உலகில் உள்ள மற்ற பழங்குடியினரைப் போலவே, செவ்விந்தியர்களும் பாலுறவு குறித்துப் பேசுவதில் போலியான மதிப்பீடுகள் இன்றி வாழ்பவர்கள். அதற்குச் சான்றாக இதில் பல கதைகள் உள்ளன.
- ஆனந்தன் செல்லையா
சொற்களின் கடன்காரர்கள் ஆண்கள்!
காலாதி காலமாகச் செல்லும் தொன்ம வேரின் குரலை இக்கதைகள் கொண்டுள்ளன. மனத்தின் ஆழத்தில் சென்று கனவுகளிலிருந்தும் பெண்ணுக்கான சொற்களைக் கதைகள் ஏந்திவருகின்றன. இந்த எட்டுக் கதைகளை வாசித்த பிறகு, மீபுனைவு என்பதுகூட வாசிப்பாளனுக்கு இயல்பாகிவிடலாம். ஒவ்வோர் உணர்வின் வேரையும் தேடிச் சென்று காட்சிப்படுத்துதல் வழி பெறும் அனுபவம் அலாதியானது. இத்தொகுப்பில் முதலில் இடம்பெற்றுள்ள ‘கபாலம்’ சிறுகதையில் ‘இந்த பூமியே ஒரு முதுமக்கள் தாழிதான்’ என்கிறார் சிறுகதையாளர் குட்டி ரேவதி. முதுமக்கள் தாழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கபாலங்கள், இரவையே உலகமாக வரித்துக்கொள்ளும் பெண், உடலை நீர்நிலையாக்கிக் கொண்டு அதில் மீன்களை மிதக்கவிடுபவள், வனத்தின் கலைநயமிக்க உயிர்ப்பு என இக்கதைகள் ஒவ்வொன்றும் பேசும் தளங்கள் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
சிறுகண்டன், நங்கேலி கதையை நவீனமாக அதன் வேர்கள் சிதையாமல் ‘குகை’ என்னும் சிறுகதையில் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். ‘ததும்பி நிற்கும் கண்ணீர்த் துளிகள்’ என்று தன் கவிதையில் மார்பகத்தை உருவகப்படுத்திய குட்டி ரேவதி, ‘குகை’ சிறுகதையில் முலைகளையே முதன்மைப் பாத்திரமாக வைத்து, ஒரு வரலாற்றை உடல் அரசியலோடு பேசியுள்ளார். விசாலமான கற்பனையோடு ஆழமான பயணத்தில் செல்கின்ற கதைகள், அதன் பொருண்மை, வடிவ நேர்த்தியில் சமரசம் செய்துகொள்ளாமல் செல்கின்றன.
‘கண்ணாடியுள்ளிருந்து’ கதையில் அம்மா, மகள், சிற்றன்னை ஆகிய மூன்று கதாபாத்திரங்களாகப் பெண்கள் வருகிறார்கள். மூவருக்குள்ளிருந்தும் வெளிப்படும் பிம்பங்களில் பெரிய முரண்களில்லை. இந்தப் பூமியில் இருக்கும் எல்லாப் பெண்களும் தனித்தன்மை மிக்க ஒற்றைப் பிரதிகளாகவே இருக்கின்றனரோ என்றுகூட யோசிக்கத் தோன்றுகிறது. அக்கதையில், கண்ணாடியில் உற்றுப் பார்த்தால் இறந்துபோன அம்மாவின் முகம் தெரிகிறது. அதைக் கொஞ்சம் சாய்த்தும், திருப்பியும் பார்த்தால் எல்லாப் பெண்களும் அவரவர் மூதாதைப் பெண்களின் முகங்களைப் பார்த்துக் கொள்ளலாம். கவித்துவமான நடை, எல்லையற்ற கற்பனை ஆகியவற்றைக் கொண்டு சிறுகதையிலிருந்து ஓர் அந்நியத் தன்மையை உருவாக்கிவிடலாம். ஆனால், தொகுப்பில் இருக்கும் எட்டுக் கதைகளும் அந்த ஆபத்தைச் சந்திக்கவே இல்லை. முழுமையான வாசிப்பிற்குப் பிறகு பெண் எனும் பிம்பம் மண்ணிலிருந்து வானளந்து நிற்கிறது. ஆதித்தாய் அவள்தான். அவளிலிருந்து எல்லாம் தோன்றின, அவளை வணங்கு என்று இந்தத் தொகுப்பு ஆண்களின் பிடரியைப் பிடித்து உரிமையோடு தள்ளுகிறது.
- ஸ்டாலின் சரவணன்