Published : 02 Apr 2018 07:56 AM
Last Updated : 02 Apr 2018 07:56 AM

‘தி இந்து’ சார்பில் திண்டுக்கல்லில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி:கடின உழைப்பு, திட்டமிடலே ஐஏஎஸ் வெற்றிக்கு அடிப்படை- பழநி சார்-ஆட்சியர் அருண்ராஜன் அறிவுரை

ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வெற்றிக்குப் பின்னால் கடினமான உழைப்பு, திட்டமிடல் மட்டுமே இருக்கிறது என ஐஏஎஸ் அதிகாரியும் பழநி சார்-ஆட்சியருமான எஸ்.அருண்ராஜன் தெரிவித்தார்.

‘தி இந்து’ நாளிதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி ஆகியன இணைந்து ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற உத்வேகம் ஊட்டும் நிகழ்ச்சி திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் சத்யஸ்ரீ பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

இதில் பழநி சார்-ஆட்சியர் எஸ். அருண்ராஜன் பேசியதாவது:

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற குடும்பப் பின்னணி முக்கியம் அல்ல. அரசுப் பள்ளிகளில் படித்தவராக இருந்தாலும், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றாலும் ஐஏஎஸ் ஆகலாம். ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரியின் வெற்றிக்குப் பின்னால் கடினமான உழைப்பு, திட்டமிடல் மட்டுமே இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் தாக்கம், உங்களிடம் 3 வாரங்கள்தான் இருக்கும். அதற்குள் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும். இப்போது தொடக்கம் முதல் கடைசிவரை தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வை முழுவதும் எழுதி தேர்ச்சி பெற முடியும். தற்போது தகவல்கள் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐஏஎஸ் தேர்வு பெரிய தேர்வு என அச்சமடைய வேண்டாம்.

‘தி இந்து’ நாளிதழை படித்துதான் எனது ஐஏஎஸ் தேர்வுக்கான முயற்சியைத் தொடங்கினேன். இதழில் தொடர்ந்துவரும் நடுப்பக்கக் கட்டுரைகள், நாட்டில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள், பொருளாதார நிலைமைகள், கொள்கைகள் பற்றி வாசித்து அறிய வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி தெரிந்துகொண்டவர்கள் அனைவரும் தேர்வுக்குத் தயாராகலாம்.

குறிப்புகள் எடுக்கவேண்டும்

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். மனப்பாடம் செய்து தேர்வை எழுதுவதால் பள்ளிப் படிப்பை மறந்துவிடுகிறோம். ஆனால் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள சிபிஎஸ்இ பாடங்களை படித்தாலே நமக்கு அதிக தகவல்கள் கிடைக்கும். படிக்கும்போதே குறிப்புகள் எடுக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் படித்தவற்றை திருப்பிப் பார்க்க எளிதாக இருக்கும்.

ஆளுமைத் தேர்வில், தெரியாத கேள்விக்கு தெரியாது என பதில் சொல்லுங்கள். தெரியும் என்றுசொன்னால், அது சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, பதில் சொல்ல முடியாமல் தோல்வி அடைய நேரிடலாம். நாட்டுக்காகப் பணிசெய்ய சிறந்த வாய்ப்பை தருகிறது ஐஏஎஸ் பணி. இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி வளாக இயக்குநர் சந்திரன், கல்லூரி முதல்வர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x