Last Updated : 01 Jun, 2024 06:07 AM

 

Published : 01 Jun 2024 06:07 AM
Last Updated : 01 Jun 2024 06:07 AM

இலங்கையில் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் நூலகம் தற்போது எப்படி இருக்கிறது?

யாழ்ப்பாணத்தில் தற்போது இயங்கிவரும் நூலக கட்டடம். (அடுத்த படம்) 43 ஆண்டுகளுக்கு முன்பு எரிக்கப்பட்ட பழைய நூலக கட்டடம்.

ஏறத்தாழ 91 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த கனகசபை முதலித்தம்பி செல்லப்பாவால், அவரது வீட்டில் தொடங்கப்பட்ட நூலகம் தற்போது 3.50 லட்சம்புத்தகங்களுடன் கம்பீரமாய் நிற்கிறது.

1953-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1959-ல் கட்டிமுடிக்கப்பட்ட, சர்வதேச அளவில் புகழ்பெற்றஇந்த நூலக மாதிரியை இந்திய நூலகர் எஸ்.ஆர்.ரங்கநாதன் வழங்கினார். அவர் உருவாக்கித் தந்த நூலகத் திட்டம் தான் இன்றும் யாழ் நூலகத்தில் பின் பற்றப்படுகிறது.

யாழ்ப்பாணம் கோட்டை சாலையில், இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த நூலக வாயிலில், தூய தமிழில் நூலகம் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் பழமை யான பொருட்கள் நம்மை வரவேற்கின்றன.

1817-ல் லண்டனில் அச்சான History of Ceylon, முதலியார் ராஜநாயகம் எழுதிய பண்டைய யாழ்ப்பாணம், ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை உள்ளிட்ட ஏராளமான அரிய நூல்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.

இந்தியா கார்னர்: இந்தியப் பிரதமர் மோடி இந்த நூலகத் துக்கு வருகை தந்த பின்னர் India Corner எனும் பிரிவு உருவாக்கப்பட்டு, ஆயிரக் கணக்கான தமிழ் நூல்களுடன் புதிய பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இளையோரின் லட்சிய நாயகர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் இங்கு சிலையாக வீற்றிருக்கிறார்.

ஜவகர்லால் நேருவின் நூல்களில் தொடங்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோக மித்ரன், வண்ணதாசன், வண்ண நிலவன், ஜெயமோகன் போன்ற தமிழக எழுத்தாளர்களின் தொகுப்புகள் ‘இந்தியா கார்னரில்’ அழகாக அடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிறுவர் நூலகம் அருகே குழந்தைகளுக்கு கதை சொல்வதற்காக ஒரு கதை சொல்லியும் தயாராக இருந்தார். பார்வை யற்ற மாற்றுத் திறனாளிகள் வாசிக்க பிரெய்லி நூல் பகுதியும், இ-புத்தகக் குரல் பிரிவும் செயல்படுகின்றன.

சௌந்தர மகாதேவன்

சுவடிப் பிரிவு: குளிரூட்டப்பட்ட சுவடிப் பாதுகாப்புப் பிரிவில், 200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சுவடிகளைச் சேகரித்து, பாதுகாத்து வைத்துள்ளனர். அதேபோல, பழைய நூல்களை கேமராவில் படமெடுத்து, அவற்றைகணினியில் சேமிக்கின்றனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான நூல்களை மின் படியெடுத்து, யாழ் நூலக Koha தரவுதளத்தில் பதிவேற்றி உள்ளனர். 1930-லிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழ் முதல் அனைத்து நாளிதழ்களின் பக்கங்களும் தேதிவாரியாக அடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன.

1981-ல் நூலகம் தீ வைத்து கொளுத்தப்பட்ட பின்னர் 1999-ல் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, 2004-ல் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்த நூலகம் பீனிக்ஸ் பறவையாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இலங்கை உறவுகள் தமிழினத்தின் தொப்புள்கொடி உறவுகள் என்று சொல்லி வரும் நாம்,தமிழ்நாட்டில் எந்த நூல் வெளிவந்தாலும், அதன் ஒரு பிரதியை யாழ்ப்பாணம் நூலகத்துக்கு அனுப்ப வேண்டும். Jaffna Public Library, Jaffna, Srilanka எனும் முகவரிக்கு நம் நூல்களை அனுப்பினால், நன்றி தெரிவித்து மின்னஞ்சல் வரும். நூல்களைத் தின்று பற்றி எரிந்த நெருப்பை, இன வெறுப்பை, நம் அன்பால் அணைப்போம்.

- கட்டுரையாளர்: பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை. | mahabarathi1974@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x