

புலம்பெயர்வு வாழ்க்கை குறித்த ‘நாடு விட்டு நாடு’ (தமிழினி பதிப்பக வெளியீடு) என்கிற தன் வரலாற்று நூல் வழித் தமிழ் இலக்கியத்தில் தனிக் கவனம் பெற்றவர் முத்தம்மாள் பழனிசாமி. மலேசிய வாழ்க்கைச் சூழல் வழிப் புலம்பெயர் தமிழ் வாழ்க்கையை அந்நூலில் முத்தம்மாள் இயல்பாகச் சித்தரித்திருப்பார். தந்தை, தாய் என நெருக்கமானவர்களைப் பற்றிய சித்தரிப்புகளையும் உணர்வுப்பெருக்காக அல்லாமல் அவர்களின் பலவீனங்களுடன் விவரித்திருப்பார். மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளையும் உணர்வுவயப்படுதலையும் பகடி செய்திருப்பார். இதன் வழி மலேசியாவில் அரசியல், வரலாற்று நிகழ்வுகளையும் முத்தம்மாள் பதிவு செய்திருப்பார். மலேசியாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்த நூலை முதலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 10.04.24 அன்று அவர் காலமானார்.
முன்மாதிரிப் பள்ளி இதழ்
திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் இதழ் வெளிவந்துள்ளது. ஒரு பள்ளி இதழுக்கான முன்மாதிரியுடன் இந்த இதழ் பல்சுவை அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மலையாளச் சிறார் எழுத்தாளர் எஸ்.சிவதாஸின் நேர்காணல், ஆசிரியர்களுக்கான பயிலரங்கு குறித்த கட்டுரை, முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உரை, தேவதேவன் கவிதை எனப் பல்வேறு அம்சங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் பங்களிப்பும் அதிக அளவில் உள்ளது சிறப்புக்குரியது.
காலச்சுவடுக்கு விருது
காலச்சுவடு பதிப்பகத்துக்குச் சிறந்த பதிப்பகத்துக்கான ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த பதிப்பகத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் விருது இது. நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்தப் பதிப்பகம் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலரது ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம். இந்த விருது 2018இல் காலச்சுவடு ஏற்கெனவே பெற்றிருப்பது கவனத்துக்கு உரியது.