

முதல் உலகப் போர் தொடங்கி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. பிரிட்டனின் ஆண்கள் பலர் போரில் கலந்துகொண்டு தங்கள் வீரத்தைக் காட்ட, ராணுவத்தில் சேர்ந்துகொண்டிருந்த சமயம்.
1914-ல் இதே நாளில் பிரிட்டன் ‘பெண்கள் பாதுகாப்பு நிவாரணப் படை’ என்ற பெயரில் ஓர் அமைப்பைப் பெண்கள் தொடங்கினர். போரில் பிரிட்டனுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்தப் படையில், பல பெண்கள் ஆர்வமுடன் சேர்ந்தனர். இதற்கு முன்னர், போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காகப் பெண்கள் அமைப்புகள் இரண்டு செயல்பட்டுவந்தன. ஆனால், பெண்கள் பாதுகாப்பு நிவாரணப் படையில் இருந்த பெண்களின் பணி சற்றே வித்தியாசமானது.
அவர்களுக்கு இரண்டு விதமான பணிகள் உருவாக்கப்பட்டன. ஒன்று, ஆண்கள் வேலை செய்துவந்த நிறுவனங்களில் அவர்களுக்குப் பதிலாக வேலை செய்ய, இந்தப் படையிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர். மற்ற பெண்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களின் முக்கியப் பணி, ஒருவேளை எதிரிகள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களிடமிருந்து தங்களையும் மற்றவர்களையும் காப்பதற்காகப் போரிடுவது.
தொடக்கத்தில், பெண்கள் உரிமை அமைப்புகள், போரில் பிரிட்டன் கலந்துகொள்வதை ஆதரிக்கவில்லை. எனினும், குறுகிய காலத்திலேயே தங்கள் நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக்கொண்டனர்.
அதேபோல், 1917-ல் பெண்கள் ராணுவத் துணைப் படை தொடங்கப்பட்டது. அந்தப் படையில் இருந்த பெண்கள், வீரர்களுக்கான சமையல் முதல் அலுவலகப் பணிகள் வரை செய்தனர். பின்னர், பெண்கள் போர்முனைக்கும் அனுப்பப்பட்டனர். முதல் உலகப் போர் முடிவுற்ற சமயத்தில், மொத்தம் 80,000 பெண்கள் போர் தொடர்பான பணிகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.