

தமிழக அரசின் சார்பில் 2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’ ப.சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ப.சரவணன், ‘அருட்பா × மருட்பா’ போராட்டத்தின் நூலாசிரியரும் அதன் ஆவணங்களின் தொகுப்பாசிரியரும் ஆவார். ‘நவீன நோக்கில் வள்ளலார்’, ‘வாழையடி வாழையென...’ முதலிய அவரது ஆய்வு நூல்கள் சன்மார்க்க உலகின் கவனத்தை ஈர்த்தவை. இவர் வள்ளலாரிய ஆய்வில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தமிழக அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்விருது, ஆண்டுதோறும் சன்மார்க்க அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருது ஊரன் அடிகளாருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான விருது ரா.சஞ்சீவராயருக்கும் வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.2 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.
எழுச்சித் தமிழர் விருதுகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கியப் பிரிவு ஆண்டுதோறும் வழங்கிவரும் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதை நூலுக்கான விருது பூவிதழ் உமேஷுக்கும் சிறந்த நாவலுக்கான விருது முத்துராசா குமாருக்கும் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது சாரோனுக்கும் சிறார் இலக்கிய விருது உதயசங்கருக்கும் சிறந்த பெண் எழுத்தாளர் விருது சு.தமிழ்ச்செல்விக்கும் சிறந்த பெளத்த இலக்கிய விருது மு.ரமேஷுக்கும் எழுச்சித் தமிழர் இலக்கிய விருது அரச முருகுபாண்டியனுக்கும் சிறந்த திடைப்படத்துக்கான விருது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொ.மு.சி.ரகுநாதன் கருத்தரங்கு
எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்புக் கருத்தரங்கை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை ஒருங்கிணைக்க உள்ளது. நாளை (26.02.24) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கெளசானல் அரங்கில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. பேரா. வீ.அரசு, இரா.காமராசு, நா.இராமச்சந்திரன், அரவிந்தன், ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.
அரிய நூல்களின் கண்காட்சி
அரிய நூல்களின் மூலப் பிரதிகள், கைப்பிரதிகள், மறு ஆக்கம் செய்யப்பட்ட அரிய ஒளிப்படங்கள் ஆகியவற்றின் கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றுவருகிறது. மார்ச் 3 வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.