

இந்தியப் பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங் தனது பொருளாதார நிபுணத்துவத்தை, பிரதமர் நரசிம்ம ராவின் கீழ்தான் பெற்ற நிதித்துறை அனுபவத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்த முயன்றார். குறிப்பாக அரசு கொண்டு வரும் திட்டங்களின் பலன்கள் கடை கோடி குடிமகனுக்கும் சேர வேண்டும் என்று விரும்பினார். இந்த நல்லெண்ணம் அவரது பேச்சுகளில் முக்கிய இடம் பிடித்தது.
இதிலிருந்து மாறாத தனது உள்ளுணர்வை வெளிப்படுத்தி டாக்டர் மன்மோகன் சிங் 2009 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து ஆற்றிய, அவரது ஆறாவது சுதந்திர தின உரை இதோ: அன்பார்ந்த நாட்டு மக்களே சகோதரர்களை சகோதரிகளே, இந்த புனிதமான ஆகஸ்ட் 15 நாளன்று மீண்டும் உங்களுடன் உரையாடக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நற்பேறாகக் கருதுகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்!
இந்த தினம், மிக நிச்சயமாக, மகிழ்ச்சியான பெருமை கொள்ளக் கூடிய தினமாகும். நமது விடுதலை குறித்து நாம் பெருமை கொள்கிறோம். நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். நமது விழுமமியங்கள் கோட்பாடுகள் குறித்துப் பெருமைப்படுகிறோம். இன்று நாம் உள்ள இந்த நிலைமைக்கு நம்மைக் கொண்டு வந்த பல லட்சம் இந்தியர்களின் தியாகங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது நல்வாழ்வும் வளர்ச்சியும் நமது விடுதலைப் போராட்ட வீரர்கள், நமது துணிச்சல் மிக்க படை வீரர்கள், நமது விவசாயிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் தியாகம் மற்றும் கடின உழைப்பு என்கிற அடித்தளத்தின் மேல் எழுப்பப்பட்டது.
நமது நாட்டின் விடுதலை மற்றும் பாதுகாப்புக்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகிகள் அனைவரையும் இன்று நாம் நினைவில் கொள்வோம். நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் உறுதியாய் இருப்போம் என்று தீர்மானித்துக் கொள்வதே நமது நாட்டின் துணிச்சல் மிக்க புதல்வர்களுக்கு நாம் செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாகும். இந்தியாவை மகத்தான உயரத்துக்கு கொண்டு செல்வதில் முழுமுயற்சி எடுப்போம் என்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்வோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தல், நமது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் வலுப்படுத்தி உள்ளது. இந்தத் தேர்தலில் நமது நாட்டை, சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் அரசியலை இந்திய மக்கள் ஆதரித்து இருக்கிறார்கள். பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கிய சமய சார்பற்ற அரசியல் ஏற்பாட்டை நீங்கள் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். விவாதம் மற்றும் உரையாடல் மூலம் வேற்றுமைகளுக்குத் தீர்வு காணும் ஜனநாயக வாழ்க்கை முறைக்கு நீங்கள் வாக்கு அளித்து இருக்கிறீர்கள். நமது தேசிய வாழ்க்கையில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய யுகத்தை தொடங்குவதற்கு உங்களின் ஆதரவை நாங்கள் பெற்றிருப்பதாகப் பார்க்கிறேன்.
எங்களுக்கு நீங்கள் தந்துள்ள மகத்தான பொறுப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற நேர்மையாய் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோம் என்று இந்தப் புனித நாளில் உறுதி கூறுகிறேன். ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் வளமாய் பாதுகாப்பாய் கண்ணியம் சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்வதே நமது முயற்சியாக இருக்கும். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி நமக்கு போதித்த சேவை மற்றும் தியாகக் கோட்பாடுகள் நமது பணியில் நமக்கு உத்வேகமாய் இருக்கும். பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் நாட்டின் பிற மகத்தான தலைவர்கள் காட்டிய பாதையை நமது அரசு பின்பற்றும். கருத்தொற்றுமை மற்றும் ஒத்துழைப்பான சூழலை உருவாக்கி வளர்ச்சி பாதையில் இந்த நாட்டையும் ஒவ்வொருவரையும் கொண்டு செல்வதே நமது பணியாகும்.
நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயன்பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி உண்மையாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த நாட்டின் இயற்கை வளங்களின் மீது உரிமை இருக்கிறது. இந்தக் கோட்பாட்டின் மீது தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. நமது நாட்டின் எல்லா மண்டலங்கள் சமுதாயத்தின் எல்லா பிரிவுகள் எல்லா குடிமகன்களையும் வளர்ச்சியின் பயன்கள் சேர்வதை உறுதி செய்வதே நமது பணியாகும். நமது முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. நமது பணி இன்னும் நிறைவடையவில்லை. நேர்மை, வைராக்கியத்துடன் இப்பணியை உறுதியாய் மேற்கொள்வோம்.
நீங்கள் அறிவீர்கள் - 2004 - 05 முதல் 2007 - 08 வரை நமது பொருளாதாரம் 7 சதவீதம் அளவுக்கு வளர்ந்தது. உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக 2008 - 09 இல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக ஆகக் குறைந்தது. நம்முடைய கொள்கைகளின் விளைவாக, உலக நெருக்கடி மற்ற பல நாடுகளை விடக் குறைவாகவே நம்மை பாதித்து உள்ளது. வளர்ச்சி விகிதத்தை மீண்டும் 9 சதவீதம் அளவுக்குக் கொண்டு வருவதே நாம் எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள, நாட்டுக்குள் வரும் முதலீடுகளை அதிகரித்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், பொது முதலீடு மற்றும் செலவை அதிகரித்தல் உள்ளிட்ட, தேவையான எல்லா முயற்சிகளும் எடுப்போம்.
இந்த ஆண்டு இறுதிவாக்கில் நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை, உலக பொருளாதார மந்தநிலையின் பாதக விளைவுகளை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்த இக்கட்டான சூழலை சமாளிக்கும் நமது முயற்சியில், தமது சமூகக் கடப்பாடுகளை முழுவதுமாக நிறைவேற்றும் வகையில், எல்லா வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களை எம்மோடு சேர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நமது விவசாயிகள் வளம் பெறாமல் நமது நாடு வளம் பெறுவது சாத்தியம் இல்லை என்று நான் எப்போதுமே நம்புகிறேன். இந்தக் காரணத்தால் தான், லட்சக் கணக்கான விவசாயிகளின் வங்கிக் கடன்களை இந்த அரசு ரத்து செய்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவசாயப் பொருட்களுக்கான ஆதரவு விலையை உயர்த்தி இருக்கிறோம். இந்த ஆண்டு பருவமழைப் பொழிவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக இது விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த நிலைமையை நம்மால் நன்றாக சந்திக்க முடியும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
வறட்சிப் பிரச்சினையை சமாளிக்க விவசாயிகளுக்கு சாத்தியமாகும் எல்லா உதவிகளும் வழங்குவோம். பருவமழை பற்றாக்குறை காரணமாக, நமது விவசாயிகள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் தேதியை தள்ளிப் போட்டுள்ளோம். குறுகியகால பயிர் கடன் வட்டியை திருப்பிச் செலுத்த விவசாயிகளுக்குக் கூடுதல் ஆதரவு தருகிறோம்.
நம்மிடம் போதுமான அளவு உணவுப் பொருள் கையிருப்பு உள்ளது. உணவுப் பொருட்கள் பருப்புகள் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கான பிற பொருள்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் பதுக்கள் மட்டும் கள்ளச் சந்தையைத் தடுப்பதற்கான அனைத்து சட்டபூர்வ அதிகாரங்களையும் பயன்படுத்துமாறு எல்லா மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயத்தை வெற்றிகரமாக நடத்த நவீன யுக்திகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமது நிலப்பற்றாக்குறை மற்றும் தண்ணீர் வளங்களை இன்னும் திறம்பட பயன்படுத்த வேண்டும். நமது சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை நமது விஞ்ஞானிகள் வடிவமைக்க வேண்டும். நீர்ப்பாசன வசதி இல்லாத விவசாயிகளின் தேவைகளுக்கு மேலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். நமது நாட்டுக்கு மற்றும் ஒரு பசுமைப் புரட்சி தேவைப்படுகிறது; இதனை சாத்தியமாக்க இயன்ற வரை முயற்சிப்போம். விவசாயத்தில் ஆண்டு வளர்ச்சி 4 சதவீதம் எட்டுவதே நமது இலக்கு. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட முடியும் என்று நம்புகிறேன்.
ஒரு இந்திய குடிமகனும் பசியால் வாடக் கூடாது என்பதே நமது ஆழமான ஆசையாகும். இந்த காரணத்தால் தான் உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு நாம் உறுதி தந்துள்ளோம். இதன்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதமும் சலுகை விலையில் குறிப்பிட்ட அளவு உணவுப் பொருள் கிடைக்கும். நமது நாட்டிலிருந்து சத்துக் குறைபாட்டை நீக்க வேண்டும் என்பதே நமது முயற்சி. இந்தப் பணியில், கண்கள் மட்டும் குழந்தைகளின் தேவைகளில் சிறப்பு அக்கறை எடுக்கப்படும். இதன் பயன், 2012 மார்ச் வாக்கில், இந்த நாட்டில் ஆறு வயதுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நீட்டிப்பதே நமது லட்சியம்.
முதல் யுபிஏ அரசு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் மூலம் கிராமத்துக் குடும்பம் ஒவ்வொன்றும் ஓராண்டுக்கு 100 நாள் வேலைக்கு உரிமை வழங்கியது. கடந்த 4 ஆண்டுகளில், இந்தத் திட்டம் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி இருக்கிறது. 2008 - 09 இல் சுமார் 4 கோடி குடும்பங்களுக்கு இது பயன் அளித்துள்ளது. கிராம கட்டுமான மேம்பாட்டுக்கு இது பங்களித்து உள்ளது. வரும் நாட்களில் இந்தத் திட்டத்துக்குள் மேலும் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு கொண்டு வருவோம். இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் மேலும் புதுவகைப் பணிகள் சேர்க்கப்படும்.
நல்ல கல்வி என்பது தன்னளவில் விரும்பத்தக்கது மட்டுமல்ல; நமது மக்கள் அதிகாரம் பெறவும் அது அவசியமாகும். சமீபத்தில் நாம் கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளோம். நம் நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்விக்கான உரிமையை இச்சட்டம் வழங்குகிறது. கல்வியைப் பொருத்தவரை நிதி (ஒதுக்கீடு) என்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன். மாற்றுத்திறன் குழந்தைகளின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் தருவோம். கடந்த சில ஆண்டுகளில் நாம் எடுத்த முயற்சிகளின் விளைவாக, இன்று நம் நாட்டில் ஒவ்வொரு குழந்தையையும் தொடக்கக் கல்வி எட்டி இருக்கிறது. செகண்டரி கல்விக்கும் கூடுதல் கவனம் தர வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் அதன் பயனைப் பெறுவதை உறுதி செய்கிற வகையில் ஒரு திட்டம் செகண்டரி கல்விக்கும் விரிவு படுத்தப்படும்.
கல்விக்கு ஆதரவு தரும் வகையில் மிக அதிகபட்ச எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வங்கிக் கடன்களும் மானியங்களும் வழங்க முயற்சி செய்வோம். சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் மாணவர்களுக்கு உதவுவதற்காக குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். இது சுமார் 5 லட்சம் மாணவர்கள் தொழில்நுட்ப, பணிசார் கல்வி பெற உதவும்.
நல்ல ஆரோக்கியம் - நமது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. நாம் தொடங்கியுள்ள தேசிய ஊரக சுகாதார இயக்கம், ஊரக பொது சுகாதார சேவைகள் கட்டமைப்பை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்காகவும், ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்துவோம். வளர்ச்சிப் பாதையில் நமது பயணத்தில், நம்முடைய மாற்றுத்திறன் சகோதர சகோதரிகளின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவோம். அவர்களுக்கு கிட்டும் வசதிகளை அதிகப்படுத்துவோம்.
சுகாதாரம் பற்றிய பிரச்சினைகளைப் பேசும் போது, H1N1 கிருமி மூலம் பரவும் ஃப்ளூ காய்ச்சல் பற்றி நான் குறிப்பிட வேண்டும். நீங்கள் அறிந்துள்ளது போல, நம் நாட்டின் சில பகுதிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொற்று நோயின் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் இணைந்து எடுக்கும். அச்சம் அல்லது பதட்டம் காரணமாக நமது அன்றாட வாழ்க்கையில் இடையூறு நேராது என்பதை உறுதியாய் கூறுகிறேன்.
நமது அரசாங்கம் தொடங்கியுள்ள ஊரக மற்றும் நகர வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். பாரத் நிர்மாண் மூலம் கிராமப்புற பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதில் நாம் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம். இதற்காக, பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னமும் ஊரகப் பகுதிகள் மற்றும் நகர் பகுதி வளர்ச்சியில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. கிராம பகுதிகளில் வீடு கட்டுமானம் மற்றும் தொலைதொடர்பு திட்டங்களில் மேலும் உயர்ந்த இலக்குகளை நிர்ணயிப்போம்.
நமது நாட்டின் கட்டுமானங்களை மேம்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்துவோம். நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலையில் 20 கிலோ மீட்டர் கட்டமைக்க சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதேபோன்று, அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு தடங்களில் ரயில்வே துறை பணியைத் தொடங்கியுள்ளது. ஏர்இந்தியாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மிகுந்த அக்கறையுடன் கவனம் செலுத்துகிறோம். ஜம்மு காஷ்மீரில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சாலைகள் ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து தொடர்பான பணிகள் நிறைவேற்றப்படுவதை மிகவும் குறிப்பாகக் கண்காணிக்கப்படும்.
நகரப் பகுதிகளுக்காக, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புதுப்பித்தல் இயக்கம் தொடங்கி உள்ளோம். இன்று, அடிப்படை வசதிகள் அற்ற குடிசைப் பகுதிகளில் பல லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். எத்தனை விரைவில் இயலுமோ, நமது நாட்டை குடிசைப் பகுதிகளற்றதாய்ச் செய்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், ராஜீவ் ஆவாஸ் யோஜனா என்கிற திட்டத்தின் கீழ், குடிசை வாழ் மக்களுக்கு மேம்பட்ட வீட்டு வசதிகளை வழங்குவோம்.
சமீப ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் உலகப் பிரச்சினை ஆகியுள்ளது. நேரத்தே சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், பனிக் கட்டிகள் உருகி விடும்; நமது ஆறுகள் வற்றிப்போகும். வறட்சி, வெள்ள பிரச்சினைகள் மிகத் தீவிரமாய் வளர்ந்து விடும். காற்று மாசையும் நாம் தடுத்தாக வேண்டும். உலகின் மற்ற நாடுகளுடன் சேர்ந்து பருவநிலை மாற்ற பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறோம். எட்டு தேசிய இயக்கங்களை நிறுவ முடிவு எடுத்துள்ளோம். ஏற்கத்தக்க வகையில் சூரிய மின்சக்திப் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய மின்சக்தி இயக்கம் தொடங்க இருக்கிறோம்.
புனிதமான கங்கை நதி பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரமாகும். மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும் தேசிய கங்கா அதாரிட்டி நிறுவியிருக்கிறோம். இந்த முயற்சியில் பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. நமது இயற்கை வளங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. இவற்றை நாம் திறன்பட பயன்படுத்த வேண்டும். மின்சக்தி சிக்கனத்தில் ஒரு புதிய கலாசாரம் வேண்டும். தண்ணீரின் தவறான பயன்பாடு தடுக்கப்பட வேண்டும். தமிழ் சேகரிப்பு மற்றும் சேமிப்பு திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம். தண்ணீரை சேமிப்போம் என்பது நமது தேசிய முழக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நாம் இணைந்து பணியாற்றினால், நம்மை எதிர்நோக்கி உள்ள எல்லா பிரச்சினைகளையும் நம்மால் சந்திக்க முடியும். தமது எதிர்ப்பை கோபத்தை வெளிக்காட்ட நமது குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. மக்களின் புகார்கள் மற்றும் அதிருப்திக்கு ஒவ்வொரு அரசும் பதில் சொல்ல வேண்டும் என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். பொதுச் சொத்தை அழிப்பதன் மூலமோ சககுடிமக்களுக்கு எதிரான வன்முறை மூலமோ எதையும் சாதிக்க முடியாது. தமது எதிர்ப்பைக் காட்ட வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இத்தகைய மனிதர்களை அரசு மிக உறுதியுடன் கையாளும்.
உலகின் எல்லா பகுதிகளிலும் பயங்கரவாதம் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாகத் தோன்றியுள்ளது. கடந்த நவம்பரில் மும்பையில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிராக இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுக்க, நமது பாதுகாப்பு படைகளும் உளவு அமைப்புகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நமது சமூகத்தின் எல்லா தரப்பினரின் ஒத்துழைப்புடனும் நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நமது நாட்டின் சில பகுதிகள் தொடர்ந்து நக்சலைட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருகிறது. நமது குடிமக்களின் வாழ்க்கையை, சுதந்திரத்தைப் பாதுகாத்தல் அரசாங்கத்தின் சாசனக் கடமையாகும். துப்பாக்கி முனையால் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று நினைப்போர், ஜனநாயகத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளாதவர்கள். நக்சலைட் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தனது முயற்சிகளை இரு மடங்காக்கும். தமது காவல்துறையை மேலும் திறன் உள்ளதாகச் செய்ய மாநில அரசுகளுக்கு நாங்கள் எல்லா உதவிகளும் நல்குவோம். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ மத்திய படைகள் வழங்கப்படும். மாநிலங்களுக்கு இடையே இன்னும் மேம்பட்ட ஒருங்கிணைப்பை உறுதி செய்வோம்.
நக்சலிசம் போன்ற பிரச்சினைகள் எழுவதற்கு காரணமாக இருக்கும் சமூக பொருளாதார அதிருப்தியை நீக்குவதே நமது லட்சியமாகும். வருமானம், சொத்துகளில் பாகுபாடு, வேலையின்மை, பிற்படுத்தப்பட்ட நிலைமை ஆகியவற்றை நீக்குவதற்கான வளர்ச்சி திட்டங்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது வளர்ச்சிப் பணிகளில் பட்டியல் பிரிவினர், பழங்குடி இன சகோதர சகோதரிகள் பங்கு கொள்ள அழைக்கிறோம்.
சமுதாயத்தின் மறுக்கப்பட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காக இவர்கள் மீது சிறப்பு அக்கறை செலுத்துகிறோம் என்கிற கருத்தை நான் ஏற்கவில்லை. உண்மையில், இதைச் செய்ய வேண்டியது புனிதமான கடமை என்று நம்புகிறேன். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் நலனில் நமது அரசு முழுகவனம் செலுத்தும். சிறுபான்மையினர் நலனுக்காக நாம் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களுக்கான நிதியை இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தி உள்ளோம். இதேபோன்று, நமது முந்தைய யு.பி.ஏ. அரசாங்கம் தொடங்கிய சிறுபான்மை மக்களுக்கான நிதி உதவி திட்டங்களுக்கு ஒதுக்கீடுகளை அதிகரித்து உள்ளோம். மத வன்முறையை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதனை சட்டம் ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நமது சமுதாயத்தில் பெண் சிசுக் கொலை இன்னமும் தொடர்கிறது என்பது வருத்தத்துக்கு உரியது. இது நம் அனைவருக்குமே அவமானம். கூடிய விரைவில் இதனை ஒழிப்போம். நமது நாட்டின் வளர்ச்சியிலும், நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெண்கள் சமபங்குதாரராகும் வரையில் நமது வளர்ச்சி முழுமை பெற்றது ஆகாது. மகளிர் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற இந்த அரசு உறுதி கொண்டுள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும். கிராம மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் எல்லா ஜனநாயக அமைப்புகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நாம் வழிகாண வேண்டும். பெண்களின் சமூக பொருளாதார அதிகாரத்துக்கு நமது அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும். தேசிய பெண் கல்வி இயக்கம் தொடங்க முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் மகளிர் கல்வியறிவின்மை பாதியாகக் குறையும்.
நமது துணிச்சல் மிக்க வீரர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். முன்னாள் ராணுவத்தினர் வசதியான வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்வது நமது கடமையாகும். முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதிய பிரச்சினை குறித்த ஆணையத்தின் பரிந்துரைகளை நாம் ஏற்றுக்கொண்டோம். இதன் மூலம் ஓய்வு பெற்ற ஜவான்கள் மற்றும் இடைநிலை அலுவலர்கள் 12 லட்சம் பேரின் ஓய்வூதியம் உயரும்.
வளர்ச்சிக்கான நமது பயணத்தில், சமுதாயத்தின் சில பிரிவுகளுக்கு மட்டுமே சிறப்பு கவனம் செலுத்துதல் கூடாது. நாட்டின் பிற்படுத்தப்பட்ட மண்டலங்களின் சிறப்பு தேவைகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும். வளர்ச்சி அளவில் மண்டல சமமின்மையை நீக்க நமது முயற்சிகளை இரட்டிப்பு ஆக்குவோம். வடகிழக்கு மாநிலங்கள் பற்றி இங்கே சிறப்பாக குறிப்பிட விரும்புகிறேன். நாட்டு வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் சமமான பங்குதாரராய் செய்வது நமது அரசின் தொடர் இலட்சியம் ஆகும். இம்பால் அல்லது கொஹிமா, டெல்லியில் இருந்து தொலைவில் இருக்கலாம்; ஆனால் வடகிழக்கில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நல்வாழ்வு எப்போதும் நமது இதயத்துக்கு அருகில் உள்ளது. இவர்களின் நல்வாழ்வு இல்லாமல் இந்த நாடு முன்னேற முடியாது என்பது நமக்குத் தெரியும்.
கடந்த சுதந்திர தினம் அன்று உங்களுடன் பேசியதற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டு தேர்தல்கள் நடந்துள்ளன. முதலாவது மாநில சட்டசபைக்கு, இரண்டாவது மக்களவைக்கு. இரண்டு தேர்தல்களிலும் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றார்கள். ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத எண்ணத்துக்கு இடமில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தி எல்லாப் பகுதிகளிலும் அரசு செயல்பாட்டை மேம்படுத்துவதில் மாநில அரசுக்கு, நமது அரசு தொடர்ந்து உதவி வரும். மாநிலத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன; பாதுகாப்பான சூழலில் அமைதியான கண்ணியமிக்க வாழ்க்கையை எல்லா மக்களும் வாழ்கின்றனர் என்பதை உறுதி செய்வதே நமது லட்சியம். சாசனத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உறுதிகள் மற்றும் சலுகைகளை நாம் மதிக்கிறோம். இந்தச் சிறப்பு பிரிவுகளை நாம் தொடர்ந்து மதித்து வருவோம்.
பல அம்சங்களில் இன்றைய உலகம் சிறிதாகி கொண்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் எதுவாக இருந்தாலும், உலகின் ஒரு பகுதியில் நிகழ்வது பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேசப் பொருளாதார அரசியல் முறைமை மாறிக் கொண்டு இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பல்முனை நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் தொடர்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மாறி வரும் சூழலில், நமது அயல் உறவு கொள்கை இந்தியாவின் நலனுக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். இதைச் செய்வதில் பெரிய அளவுக்கு நாம் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுடன் நாம் நல்ல உறவு வைத்துள்ளோம். தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்தியாவுக்கு என்று மிகுந்த நற்பெயர் இருக்கிறது. ஆப்பிரிக்காவுடன் மரபு ரீதியான உறவை வலுப்படுத்தி இருக்கிறோம். லத்தின் அமெரிக்காவில் புதிய வாய்ப்புகளை முயற்சிக்கிறோம். நமது அண்டை நாடுகளைப் பொருத்த மட்டில், அவர்களோடு நாம் அமைதியாய் ஒற்றுமையாய் வாழ விரும்புகிறோம். தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவான சூழலை உருவாக்க நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளும் எடுப்போம்.
நமது திட்டங்கள் எவ்வளவு தான் நல்லதாக இருந்தாலும், நமது அரசு இயந்திரம் ஊழல் இல்லாது, திறம்பட செயல்படுத்தினால் அன்றி, அவற்றின் பயன்கள் மக்களை சென்று சேராது. நமது பொதுநிர்வாகம் மேலும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலம் பொதுநலனுக்கான திட்டங்களை இன்னும் விரைவாக செயல்படுத்தமுடியும். நம் குடிமக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதில் நமது அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டி உள்ளது. அரசின் செயல்பாடுகளை வலுப்படுத்த நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்போம்.
மக்களின் மேலான பங்களிப்பை உறுதி செய்ய, பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களின் மூலம் பொது நிர்வாகத்தின் அதிகாரங்களைப் பரவலாக்க புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் எடுக்கப்படும். வரி செலுத்துவோரின் பணம் மேலும் நல்ல முறையில் செலவிடும் வகையில், அரசுக்கும் சிவில் சமூகத்துக்கும் இடையே புதிய உறவுக்கான முனைவுகள் மேற்கொள்ளப்படும். பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையில் தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றி உள்ளோம். மேலும் திறன் வாய்ந்த வகையில் இந்த சட்டம் மேம்படுத்தப் படும்.
கிராமப்புற திட்டங்களுக்கான அரசு இயந்திரத்தை வலுப்படுத்த சிறப்பு முயற்சிகளை நாம் அடுத்தாக வேண்டும். நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிகராக கிராமப்புற, வளர்ந்து வரும் நகர்ப்புற மக்களும் சேவைகளைப் பெற வேண்டும். இந்தக் குறிக்கோளை எட்டுவதற்கு, தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். சமீபத்தில் நாம் Unique Identification of India - தனித்த அடையாளத்துக்கான அமைப்பை நிறுவியுள்ளோம். உயர்தர நிர்வாக ஏற்பாடு மூலம் நாடு முழுதையும் இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை இது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தனித்துவ எண்களின் முதல் தொகுதியை எதிர்பார்க்கிறோம்.
இன்று நான் உங்கள் முன் நிற்கும்போது, வளர்ச்சியை நோக்கி நடைபெறும் 100 மேலான இந்தியர்களின் சக்தியை என்னால் உணர முடிகிறது. இந்தியாவால் தனது முழுத் திறனையும் எட்ட முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் விரைந்து முன்னேறி வருகிறோம். நம்மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறது. உலகம் முழுமைக்கும் நமது ஜனநாயகம் - ஓர் உதாரணம். பொருளாதார வலிமையில் ஆதாயம் அடைந்து வருகிறோம். மிக முக்கியமாக, நமது இளைஞர்கள் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் தாம் நமது எதிர்காலம். அவர்கள் நமது நாட்டை ஒரு புதிய புகழுக்கு இட்டுச் செல்வார்கள் என்பது உறுதி.
ஒளிமயமான எதிர்காலத்துக்கு உழைக்க இன்று நாம் உறுதி கொள்வோம். இந்த புனிதமான தருணத்தில், தேச கட்டமைப்பை நமது மிக உயரிய கடமை என்று தீர்மானித்துக் கொள்வோம். ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்...)