

வேர்களை இழந்த பழங்குடிகள்:
தெற்கு கொலம்பியாவின் அமேசான் வனப் பகுதியிலிருந்து, கிழக்குப் பகுதியின் சமவெளி நிலத்துக்குக் குடிபெயர்ந்து வாழும் உயிடோட்டோ பழங்குடி மக்களின் கதை பரிதாபத்துக்குரியது.
10 ஆண்டுகளுக்கு முன்னர், அமேசான் பகுதியில் உள்ள லா கோரெராவில் வாழ்ந்த ஆறு உயிடோட்டோ குடும்பங்கள், தங்கள் வாழிடத்திலிருந்து வெளியேறும் சூழல் உருவானது. காரணம், அப்பகுதியில் அதிகரித்த கெரில்லா தாக்குதல்கள். 6,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த அம்மக்கள், லாஸ் லோனாஸ் பகுதியில் அரசு ஒதுக்கிய நிலத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்று அந்தக் குடும்பங்கள் பிளாஸ்டிக் சுவர்களால் கட்டப்பட்ட சின்னக் குடில்களில், முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்கின்றனர்.
விலங்குகளை வேட்டையாடி, மரங்களைப் பயன்படுத்தி வீடுகள் அமைத்து, இயற்கையுடன் இயைந்து ஆத்மார்த்தமாக வாழ்ந்தவர்கள் உயிடோட்டோ மக்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் அதிவேகமாக இயங்கும் உலகில் வாழ்கின்றனர். உணவுப் பயிர்களைத் தாங்களே பயிரிட்டுக்கொள்ளும் அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருந்த அம்மக்கள், தற்போது பணம் சம்பாதிப்பதற்காக வேலைக்குச் செல்லவும், தொழில் செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். உயிடோட்டோ மக்களின் ஒரே நோக்கம், அமைதி மட்டும்தான். சாந்தமான வாழ்க்கை, தங்கள் பாரம்பரிய வழக்கங்களைத் தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது, சுற்றுச்சூழலைப் பேணுவது இவைதான் அம்மக்களின் பெருவிருப்பம்.
பெரிய நிறுவனங்களால் நிலம் மாசுபடுத்தப்படுவது அவர்களுக்கு வேதனை தருவதாக உள்ளது. ‘மாசுபடாத நம் சுற்றுச்சூழல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும்' என்றே விரும்புகிறார்கள். ‘ஆற்றில் மீன்பிடிக்கவோ துணி துவைக்கவோ எங்களால் முடியவில்லை. இதற்கெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்திய மாசுதான் காரணம்' என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொலம்பியா ரிபோர்ட்ஸ்- கொலம்பிய இணைய இதழ்
ஹாரெட்ஸ்: கொள்கை வடிவிலான நாளிதழ்
இஸ்ரேலின் இடதுசாரி சார்பு கொண்ட நாளிதழான ‘ஹாரெட்ஸ்' இதழின் ஆசிரியர்கள், அதன் இணையப் பதிப்பின் வாசகர்களின் எண்ணிக்கையைச் சமீபத்தில் கணக்கெடுத்தனர். அப்போது அவர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியம் காத்திருந்தது. அந்த நாளிதழின் ஹீப்ரூ மொழி இணையப் பதிப்புக்கு, எகிப்தில் ஆயிரக் கணக்கான வாசகர்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. எகிப்தின் உளவுத் துறை அதிகாரிகளில் பலர், பள்ளிப் படிப்பிலேயே ஹீப்ரூ மொழியைக் கற்றிருப்பவர்கள். ஹாரெட்ஸ் அவர்களைக் கவர்ந்துவிட்டது. ஹாரெட்ஸின் ஆங்கிலப் பதிப்பை வாசிக்கும் உலக வாசகர்களுக்கும் இது சற்று ஆச்சரியம் தரும் விஷயம்தான்.
புதிய கணக்கெடுப்பின்படி, பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் மத்தியில் ஹாரெட்ஸ் இதழ் நம்பகத்துக்குரிய நாளிதழாக உள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேலியர்களின் குடியேற்றங்கள் தரும் பாதிப்புகுறித்த செய்திகளை வெளியிடுவதால், இஸ்ரேலில் ஹாரெட்ஸுக்குக் கடும் எதிர்ப்பும் உண்டு. காஸா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலைக் கண்டித்து, ஹாரெட்ஸ் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜிடியான் லெவி எழுதிய கட்டுரைகளால் ஆத்திரமடைந்த இஸ்ரேலியர்களில் பலர், அந்த நாளிதழுக்கான சந்தாவைத் திரும்பப் பெற்றனர்.
எனினும், ஹாரெட்ஸ் எதற்கும் பணியாமல் தொடர்ந்து நடுநிலையான கட்டுரைகளை எழுதிவருகிறது. ஒரு நாட்டின் மீதான சிறந்த பற்று என்பது, அந்த நாட்டின் உயர்ந்த கொள்கை வடிவிலானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஹாரெட்ஸ் பணியாற்றுகிறது. சுதந்திரமான நாளிதழ் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஹாரெட்ஸ்தான்.
தி கார்டியன்- பிரிட்டன் நாளிதழ்