

சர்வதேச வானொலி தினம் இன்று (பிப்ரவரி 13) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி வானொலி ஊடகத்தில் 47 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆர்.ஸ்ரீதர், ரேடியோ குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்று காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டன. ஆனாலும், ஒளியைவிட ஒலியின் சக்தி ஊடகத்தில் அதிகம் என்கிறார் ஸ்ரீதர். வானொலியில் 'ஏன்' என்ற பெயரில் அவர் தொடங்கிய கேள்வி பதில் நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் அறிவியலை எடுத்துச் செல்வதற்கு பெரிதும் துணையாக இருந்தது. மக்கள் அனுப்பும் அறிவியல் தொடர்புடைய கேள்விகளுக்கு அவர் நிபுணர்களிடம் விளக்கம் பெற்று அதை வானொலியில் தெரிவிப்பார். அந்த நிகழ்ச்சிக்கு அக்காலத்தில் பெரும் வரவேற்பு இருந்தது.
தமிழில்தான் அவரது பணி தொடங்கியது ஆனால், பின்நாளில் 'ஏன்' நிகழ்ச்சி இந்தியா முழுவதும் 18 மொழிகளில் ஒலிபரப்பப்பட்டது. அகில இந்திய வானொலி மற்றும் துார்தர்ஷன் தொலைக்காட்சியில், இயக்குநர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த, ஸ்ரீதரின் வாழ்க்கை வரலாறு, 'ஊடகத்தேனீ ஸ்ரீதர்' என்ற பெயரில், ராணி மைந்தன் எழுதி புத்தகமாக அண்மையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதரின் முதல் வானொலி நிகழ்ச்சி 1970-ல் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. அன்றைய காலகட்டத்தில் அகில இந்திய வானொலி நிலையம்தான் ஒரே ஒரு வானொலி. அப்போது, ஸ்ரீதர் வானொலியை கல்வி பயிற்றுவிக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக பயன்படுத்தினார். வினாடி வினா, நாடகங்கள், இசை மூலம் அறிவியலை ஆர்வமுடையதாக மாற்ற முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.
முதன்முதலில் புழக்கத்தில் இருந்த ரேடியோப்பெட்டியை நினைவுகூர்ந்த ஸ்ரீதர், அந்தக்கால வால்வ் ரேடியோப் பெட்டியை அவ்வப்போது தலையில் தட்டினால் மட்டுமே ஒழுங்காகப் பாடும். அதன்பின்னர் குறைந்தபண்பலை வானொலி அதனைத் தொடர்ந்து டிரான்ஸிஸ்டர்களும் புழகத்துக்கு வந்தன என்று அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறினார். ஸ்ரீதர் அண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 94% மக்களுக்கு ரேடியோ என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவர்கள் ரேடியோ என நினைத்துக் கொண்டிருப்பது எல்லாம் மொபைல் போனில் இருக்கும் எஃப்.எம். அப்ளிகேஷனையே என்பது சற்றே அதிர்ச்சிகரமானதாக இருந்திருக்கிறது. வெகுசிலரே ரேடியோப் பெட்டியைப் பார்த்திருப்பதாகத் தெரிவித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.
ரேடியோப் பெட்டி வழக்கொழிந்துவிட்டாலும் வானொலி டிஜிட்டல்மயமாகிவருகிறது என்பதில் பெருமகிழ்ச்சி எனக் கூறும் ஸ்ரீதர் இனிமேல், ரேடியோப் பெட்டியை ஒவ்வொருவரும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதை எல்லோருமே கிரவுட் சோர்ஸ் செய்து கொள்ளலாம் என்றார்.
"ரேடியோப் பெட்டி இல்லாவிட்டாலும், வானொலி ஊடகம் என்பது மனிதன் இருக்கும்வரை நிலைத்து நிற்கும். அதன் சக்தி அத்தகையது. ஒரு காந்தக் குரலின் உரையை கண்மூடி நீங்கள் சிலாகித்துப் பாருங்கள் அதை அப்படியே காட்சியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.. ஒலி அதிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் உணர்வீர்கள்" என ஆணித்தரமாக கூறுகிறார் ஸ்ரீதர்.