Published : 06 Feb 2024 06:14 PM
Last Updated : 06 Feb 2024 06:14 PM

செங்கோட்டை முழக்கங்கள் 61 - ‘அனைவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ | 2007

ஒரு பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணிபுரிந்தவர், உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத அறிவுஜீவி, சுயநலம் அறியாத நல்ல தலைவர் - டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவின் நிதி அமைச்சராக, பிறகு பிரதமராக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் மிகச் சிறப்பானவை. எல்லாரையும் உள்ளடக்கிய, நிரந்தர வளர்ச்சி நோக்கி திட்டமிட்டு செயலாற்றிய டாக்டர் மன்மோகன் சிங், 2007 ஆகஸ்ட் 15 அன்று நான்காவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ:

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, சகோதரர்களே சகோதரிகளே, அன்பான குழந்தைகளே.. இன்று நாம் நமது சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். தேசக் கொண்டாட்டத்தின் இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இன்று நமது நேசத்துக்குரிய மூவண்ணக் கொடியை வணங்குவதில் சிறப்பு பெருமை கொள்கிறோம். நமக்கு விடுதலை பெற்றுத்தந்த இந்தியாவின் மீது தணியாத அன்பு கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தை பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், புதிய இந்தியாவை கட்டமைப்பதில் கடந்த 60 ஆண்டுகளாகத் தமது கடுமையான உழைப்பால் உதவி வருகிற குடிமக்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதில் என்னோடு இணைந்து கொள்ளுங்கள். நமது ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சிக்காக தமது இன்னுயிரை ஈந்த துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் மற்றும் துணிச்சல் மிக்க நமது குடிமக்களின் நினைவாக தலைவணங்குவோம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தியின் போதனையால், தொலைநோக்கால் உந்தப்பட்டு விடுதலை பெற்ற தேசமாக இந்தியா ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியது. ஆனால் நம்மிடையே உள்ள வறுமையை முற்றிலுமாக ஒழிக்கும் போதுதான் காந்திஜி கனவு கண்ட சுதந்திர இந்தியா முழுதுமாக மெய்யாகும்.

நான் இங்கே நின்று கொண்டு நமது மூவண்ணக் கொடி உயரே கம்பீரமாய் பறப்பதைக் காண்கிற போது, இந்தக் கொத்தளத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் நான் என்ன கூறினேன் என்பதில் எனது சிந்தை செல்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் நான் அக்கறை கொண்ட இந்தியாவின் புதிய தொலைநோக்கை வெளிக்கோடிட்டுக் காட்டி உள்ளேன்.

பல வேற்றுமைகள் இருந்தாலும் ஒன்றுபட்ட இந்தியா. சாதி இனம் பாலினத்தால் பிளவுபடாத இந்தியா. ஒவ்வொரு குடிமகனின் படைப்பாற்றல் மற்றும் ஊக்கம், சுதந்திரமாக முழுமையாய் வெளிப்படுகிற இந்தியா. பலவீனமான அடித்தட்டு மக்கள் அதிகாரம் கொண்ட, இயலாதவர்கள் ஆதரவு பெறுகிற, ஆதரவற்றோர் ஆறுதல் காண்கிற, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கரங்கள் ஒவ்வொரு குடிமகனையும் தழுவுகிற இந்தியா. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பயணத்தில் எந்த நபரும் எந்த மண்டலமும் விட்டுப்போகாத இந்தியா. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமான வாழ்க்கை சுயமரியாதை நாகரிகம் மற்றும் நம்பிக்கையுடன் வாழ்கிற இந்தியா; ஒவ்வோர் இந்தியனும் பெருமையை உணர்ந்து 'நான் இந்தியன்' என்று கூறுகிற இந்தியா. தனது அண்டை நாடுகள் மற்றும் எல்லா நாடுகளோடும் அமைதியுடன் வாழ்கிற இந்தியா. உலக நாடுகள் மத்தியில் தனக்கு உரித்தான இடத்தை மீட்டெடுத்த இந்தியா.

இந்தியாவின் இந்தத் தொலைநோக்கு, நமது தேசிய இயக்கத்தில் இருந்து பெருமையுடன் நாம் பெற்றது. இதை முழுமையாக மெய்யாக்குவதில் நாம் உறுதி கொண்டுள்ளோம். சட்டபூர்வ நடவடிக்கை, புதிய திட்டங்கள், புதிய கொள்கைகள் மூலமாக இந்தக் கனவை மெய்யாக்குவதில் நாம் கடுமையாக உழைத்து இருக்கிறோம்.. இதை நிறைவேற்றும் நோக்கில் சமூக மற்றும் மனித முன்னேற்றத்தில் நமது நிதி ஆதரவைக் கணிசமாக உயர்த்தி உள்ளோம்.

இன்று நான் திரும்பிப் பார்க்கிற போது சற்று மனநிறைவுடன் என்னால் சொல்ல முடியும் - ஐயத்துக்கு இடமின்றி நாம் சரியான திசையில் முன்நோக்கி நகர்ந்து வருகிறோம். சில நடவடிக்கைகளை எடுப்பதில் மெதுவாக இருந்துள்ளோம், சில சமயங்களில் சிதைந்து போய் உள்ளோம், சில நேரங்களில் தடுமாறி உள்ளோம். சில முனைகளில் வெற்றி கண்டு உள்ளோம்; சிலவற்றில் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். ஆனால் நமது தீர்மானத்தில் நாம் உறுதியாக உள்ளோம், சாமானிய மனிதனின் நல்வாழ்வில் உறுதி கொண்டு உள்ளோம் என்பதில் ஐயமில்லை.

பல முனைகளில் நாம் நன்றாக பணியாற்றி உள்ளோம் என்பதில் நிறைவாக உணர்கிறேன். இருந்தாலும், இன்னமும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். வறுமை, அறியாமை, நோய்களுக்கு எதிரான பல போர்க் களங்களில் நாம் முன்னேறி உள்ளோம். ஆனால் இந்தப் போர்களில் நாம் (முழுமையாக) வெற்றி பெற்றோம் என்று சொல்ல முடியுமா? வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடிந்தது. ஆனால் இந்த வேகம் நமக்கு மனநிறைவு தருவதாக சொல்ல முடியுமா? இத்தனை ஆண்டு வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வளர்ச்சி விகிதத்துக்குப் பிறகும் வறுமையை ஒழித்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு நல்க நம்மால் ஏன் முடியவில்லை? நாட்டின் சில மண்டலங்கள் ஏன், தொடர்ந்து பின் தங்கியே உள்ளன?

நமது சாதனைகளை சிறுமைப்படுத்துவதற்காக இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை; ஆனால் மேலும் மகத்தான முயற்சிக்கு நம்மை உந்துவதற்காகக் கேட்கிறேன். உங்களைச் சோர்வடையச் செய்ய அல்ல; மேலும் முன்னேற உற்சாகப்படுத்தவே கேட்கிறேன். சுதந்திரம் பெற்றதில் இருந்து, நமது முன்னேற்ற நடவடிக்கை, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு (அதிக) அதிகாரம் வழங்குகிறது; நமது மக்களைத் திறமை, சக்தி கொண்டவர்களாய் மாற்றியுள்ளது; வர்த்தகப் பிரிவினரை செயல் ஊக்கம் கொண்டவர்களாய் ஆக்கியுள்ளது. தமது படைப்பாற்றல் மற்றும் ஊக்கத்தால் இவர்கள் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகிறார்கள். வரலாற்றில் முன்பு இல்லாத அளவுக்கு நமது பொருளாதாரம் வேகமான விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, எல்லாருக்கும் கல்வி, சுகாதார வசதி வழங்க, வறுமையை ஒழிக்கத் தேவையான வளங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. வறுமை ஒழிப்பு என்பது இப்போது சாத்தியமாகக் கூடிய இலக்கு ஆகியுள்ளது.

இந்த இலக்கை நாம் எப்படி மெய்யாக்கப் போகிறோம்? நீடித்த தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மூலமாக மட்டுமே நம்மிடையே உள்ள வறுமையை நீக்க முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது தவிர்த்து வேறு 'மேஜிக்' இல்லை. படைப்பாற்றலும் உற்சாகமும் பெருகும் போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன; உழைக்கும் மக்களின் புதிய தலைமுறைக்கு புதிய வருமானங்கள் தோன்றுகின்றன.

வருமானம் உயர்கிற போது, அரசு வருவாயும் உயர்கிறது. இதன் பயனாக, அடிப்படைக் கட்டுமானம், விவசாயம், நீர்ப்பாசனம், எல்லாருக்கும் கல்வி சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கான பொதுச் செலவுகளில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய உதவுகிறது. இத்தகைய முதலீடுகள் தான் வறுமையை ஒழிக்க உதவுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், சமூகத் துறைகளில் பொதுச் செலவுத் தொகையை நாம் வெகுவாக உயர்த்தி உள்ளோம். சாமானிய மனிதனின் நல்வாழ்வில் நாம் கொண்டுள்ள உறுதிக்கு ஏற்ப இது உள்ளது. கல்வி மீதான மத்திய அரசின் செலவு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்தில் செலவுகளை இரட்டிப்பாக்கி உள்ளோம்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமூகத்துறை செலவுகளில் செய்யப்பட்டுள்ள விரிவாக்கம் நமது மக்களின் நல்வாழ்வை விரிவாக்கி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் மூலம், நூறு நாட்களுக்கு அடிப்படை வேலை வாய்ப்பு வசதியை சட்ட உரிமை ஆக்கியுள்ளோம். இதன் விளைவாக ஏழைகளும் ஏழைகளாக உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச குடும்ப வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நாட்டின் ஒரு பாதி இந்த திட்டத்தின் கீழ் வந்துள்ளது. நாடு முழுதிலும் இதனை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளோம். இந்தச் சமூக பாதுகாப்பு வலை, காந்திஜி கனவு கண்ட 'அந்த்யோதயா' - ஏழைகளை கண்ணீரைத் துடைக்கும் நமது பணிவான முயற்சி மூலம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

கிராமப்புற இந்தியா மீதான நமது கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டுள்ளோம். விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை இரட்டிப்பாக்கி, செலவுகளை குறைத்து, இன்னல்படும் விவசாயிகளின் கடன்களின் காலஅளவை மாற்றி பணியாற்றி வருகிறோம். கோதுமை மற்றும் அரிசி போன்றவைகளின் ஆதார விலையைக் கணிசமாக உயர்த்தி விவசாயிகளின் வருமானம் பெருக உதவி உள்ளோம். பாரத் நிர்மாண் மூலமாக, சாலை, மின்சாரம், தொலைபேசித் தொடர்பு வசதிகளில் முதலீடு செய்து வருகிறோம். நகரம் - கிராமம் பிரிவை இணைக்கும் முயற்சியாக பாரத் நிர்மாண் உள்ளது.

இதனை நமது மொத்த முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது; இன்னும் நிறைய செய்யப்படும். வரும் ஆண்டுகளில் நமது முக்கிய கவனம் விவசாய மேம்பாட்டில் இருக்கும். நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உணவு உற்பத்தியை அதிகரிக்க வேளாண்துறையில் ரூ. 25,000 கோடி முதலீட்டில் ஒரு சிறப்பு திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கிறோம். வறண்ட மண்டலங்களில் உள்ள விவசாயிகளின் தேவைகளிலும் நாம் கவனம் செலுத்துவோம். நாட்டின் சில மாநிலங்களில் நான் தனிப்பட்ட முறையில் பயணம் செய்து வேளாண்நிலைமையை மீள்பார்வை (review) செய்ய உள்ளேன்.

நமது வளரும் பொருளாதாரம், மக்கள் தொகைக்கு இன்னும் அதிக உணவுப் பொருள் தேவைப்படுகிறது. நமது லட்சியமிக்க விவசாய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் போது, நாட்டின் எல்லா பாகங்களிலும் குறிப்பாக முதல் பசுமைப் புரட்சி தொட்டுப் பார்க்காத இடங்களில், உணவுப் பொருள் உற்பத்தியில் முன்னேற்றத்தைக் காண்போம். விவசாயிகளே நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் வளம் பெற்றால் அன்றி, இந்த தேசம் வளம் பெற முடியாது. விவசாயிகளின் நல்வாழ்வில் நம் அனைவருக்கும் அக்கறை உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன்.

விவசாய உற்பத்தியைப் பெருக்காமல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்காமல் ஊரக இந்தியாவில் நல்மாற்றம், நாம் விரும்பும் வளர்ச்சி சாத்தியமே இல்லை. ஆனால் குறைந்த அளவு விவசாய நிலம், விவசாயத்தை நம்பும் மிகப் பெரிய மக்கள் தொகை அடிப்படையில், எந்த அளவு விவசாய வருமானத்தை பெருக்க முடியும் என்பதில் வரையறைகள் உள்ளன.

உயர்ந்த வளர்ச்சி பெற்ற சில 'தீவுகள்', வளர்ச்சி தொட்டுப் பார்க்காத பரந்த நிலங்கள் என்ற வேறுபாட்டோடு இந்தியா இருக்க முடியாது. ஒரு சிலருக்கு மட்டுமே வளர்ச்சியின் பயன்கள் கிடைப்பது நமது சமுதாயம், நமது அரசியல் அமைப்புக்கு நல்லதல்ல. ஆகவே விவசாயத்துக்கு வெளியிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் அத்தியாவசியம் ஆகும். தொழில்துறை பொருளாதாரம் இல்லாத, வளர்ந்த நாடு உலகிலேயே இல்லை. தொழில் மயமாக்கம் - வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் தான் வறுமைக்கு எதிரான மிகச் சிறந்த ஆயுதம் எனில், தொழில்மயமாக்கல்தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மிகப் பயனுள்ள வழி. கடந்த 60 ஆண்டுகளில், நமது நாட்டின் பல பகுதிகள் தொழில் வளர்ச்சியால் பயன் அடைந்துள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இதேபோன்று நாட்டின் ஒவ்வொரு மண்டலமும் நவீன தொழில் வளர்ச்சியின் பயனைப் பெறுவதைக் காண விரும்புகிறேன். நமது நாட்டில் விரைந்த தொழில்மயமாக்கலுக்கு உதவும் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவோம்.

விவசாய சமூகத்தில் இருந்து தொழில் பொருளாதாரத்துக்கு மாறுவது எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், வேளாண்துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் கிராமப் பகுதிகளில் இடம்பெயர நேரிடும் மக்களுக்கு, தொழில் மயமாக்கம் புதிய நம்பிக்கையை புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. இடம் பெயர்தல், வறுமைக்கு இட்டுச் செல்லாது; நிலத்தை இழந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க மாட்டார்கள்; வேலை இழந்தவர்கள் இன்னும் சிறப்பான வாய்ப்புகளை பெறுவார்கள் நிலத்தை இழந்தவர்கள் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆகையால், பெரும் திட்டங்களால் இடம் பெயர்க்கப்பட்ட மக்களுக்காக மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தேசியக் கொள்கை உருவாக்கி வருகிறோம். வளர்ச்சி நடவடிக்கைகள் ஒருவரை மேம்படுத்தும், யாரையும் பாதிக்காது என்பதை உறுதி செய்வது நமது சமூகக் கடமை ஆகும்.

தொழில் மயமாக்கம் என்றால் நகரமயமாக்கல் என்றும் பொருள். மென்மேலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் நகரப் பகுதியில் வாழ்வதால், மேலும் படைப்பாற்றல் கொண்ட நகரமயமாக்கல் தேவை. நகரத் திட்டமிடல் மற்றும் முன்னேற்றத்தில் தொலைநோக்குப் பார்வை தேவைப்படுகிறது. இடம் பெயர்ந்தவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும், மாநகரப் பகுதிகள் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பெருமழையின் போது மாநகரங்களில் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகாமல் இருக்க போதுமான வடிகால் வசதிகள் செய்யப்பட வேண்டும். மாநகரங்களில் 50 கோடி மக்கள் வாழும் நாள் வெகு தூரத்தில் இல்லை; இந்த நாளுக்காக நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் - முதல்தர கட்டுமானத்துக்கான தேவையை ஏற்படுத்துகிறது. நமது நெடுஞ்சாலைகள், தெருக்கள், ரயில்வே மற்றும் விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தல், இந்த தேவையை எதிர்கொள்வதற்கான நமது முயற்சியின் வெளிப்படையான நிரூபணமாமாகக் கொள்ளலாம். இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது; செய்யப்படும்.

இன்னமும் திறம்பட இன்னமும் அதிக மின் சக்தியை உற்பத்தி செய்து பகிர வேண்டி உள்ளது. ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற விலையில் நல்ல தரமான மின்சக்தி பெற வேண்டும். இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், பலவீனமான மின்சக்தி நிலைமை, தொழில் மயமாக்கலில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் தடையாக மாறிவிடும்.

பொருளாதாரம் உருவாக்கும் புதிய வேலை வாய்ப்புகள் நமது மக்கள் எல்லாருக்கும் பயனளிக்க, ஒவ்வொரு இந்தியரும் படித்தவராய் திறன் பெற்றவராய் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தமது மக்கள் படித்தவர்களாக இருந்தாலன்றி ஒரு நாடு வளர முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வியின் மீதான செலவுகளை மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதன் மூலம் இந்த அரசு கொண்டுள்ள உறுதியை வெளிக்காட்டி உள்ளோம். மாநிலங்களும் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் முன்னோக்கிய வளமான சமுதாயத்தை, கல்வி என்கிற அடித்தளத்தின் மீதுதான் கட்ட முடியும். பெருகிவரும் வருவாய் காரணமாக மாநிலங்களின் நிதித்திறன் மேம்பட்டு உள்ளது. மாநிலங்கள் இப்போது கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

இதை நோக்கியே இந்த அரசாங்கம் நாடு முழுதும் நல்ல தரமான பள்ளிகளின் நிறுவுவதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒன்று - 6,000 புதிய உயர்தர பள்ளிகளுக்கு ஆதரவு நல்குவோம். இதுபோன்ற ஒவ்வொரு பள்ளியும் அந்தப் பகுதியில் உள்ள பிற பள்ளிகளுக்கு சிறப்பான தரத்தை முன்வைக்கும் .

நமது தொடக்கக் கல்வித் திட்டங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்வதால், இடைநிலை (செகன்டரி) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இடைநிலை (செகன்டரி) கல்வியைப் பொதுமைப்படுத்த உறுதி கொண்டுள்ளோம். (We are committed to universalizing secondary education) இதற்கான விரிவான திட்டம், முடிவு செய்யப் பட்டு வருகிறது.

நாடு முழுதும், குறிப்பாக மாணவர் சேர்ப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில், தேவையான அளவு கல்லூரிகள் நிறுவப் படுவதை உறுதி செய்வோம். இதுபோன்று 370 மாவட்டங்களில் கல்லூரிகளை நிறுவ மாநிலங்களுக்கு உதவுவோம். சமீப காலமாக உதாசீனப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக அமைப்பு முறை, நமது சீர்திருத்தம் மற்றும் முன்னேற்ற திட்டமிடலில் கவனத்துக்கு உள்ளாகி உள்ளது. 30 புதிய மத்திய பல்கலைக் கழகங்களை ஏற்படுத்துவோம். மத்திய பல்கலைக்கழகம் இல்லாத மாநிலங்களில் இனி அது இருக்கும்.

அறிவியல் மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்தப் புதிதாக, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்- 5, இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் - 8, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் - 20 ஏற்படுத்துகிறோம். இது நமது இளைஞர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும். நாம் இணைந்து பணியாற்றினால் நம்மில் ஐந்தில் ஒரு குழந்தை, தற்போது பத்தில் ஒன்றாக உள்ளது, கல்லூரிக்கு செல்வதை உறுதி செய்ய முடியும்.

நமது இளைஞர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கல்விக்குப் பிறகு, திறன்சார் வேலை (skilled employment) நாடுகிறார்கள். கடந்த ஆண்டு நான், தொழிற்கல்வி இயக்கத் தேவை குறித்துப் பேசினேன். இத்தகைய இயக்கம் விரைவில் தொடங்க தயாராக இருக்கிறது. தொழில்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு இயக்கம் - விரைவில் தொடங்க இருக்கிறோம். இதன் மூலம், 1,600 புதிய ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 10,000 புதிய தொழிற்கல்விப் பள்ளிகள், 50,000 புதிய தொழில் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படும். இன்றுள்ள அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக, ஆண்டுதோறும் 100 லட்சத்துக்கு மேலான மாணவர்கள் தொழில்கல்வி பயிற்சி பெறுவதை உறுதி செய்வோம். (We will ensure that annually, over 100 lakh students get vocational training - which is a four-fold increase from today's level.) இந்த முயற்சியில் தனியார்துறையின் தீவிர உதவியை நாடுவோம். இதனால், பயிற்சி தருவதில் உதவி மட்டுமல்ல; வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் அவர்கள் கைகொடுப்பார்கள். (We will seek the active help of the private sector in this initiative so that they not only assist in the training but also lend a hand in providing employment opportunities.)

பணிபுரியும் கல்வி மட்டுமல்ல; ஏற்பான அணுகக் கூடிய சமநிலையான நல்ல தரமான கல்வி, படிக்க நினைக்கும் ஒவ்வொரு சிறுவன் சிறுமிக்கும் கிடைக்கவும் முயல்கிறோம். தேவைப்படுவோருக்கு மேலும் அதிக நிதியுதவி வழங்குவோம். அடுத்த சில ஆண்டுகளில் நவீன கல்வித் துறையில் புரட்சியைக் காண விரும்புகிறேன். முற்றும் படித்த நவீன வளர்ச்சி நோக்கிய தேசமாக இந்தியா மாற வேண்டும் என்பது எனது தணியாத ஆசை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோட்டைத் தளத்தில் இருந்து நான், இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் இந்தச் செய்தி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் - கற்ற மக்கள், திறன்வாய்ந்த மக்கள், படைப்பாற்றல் கொண்ட மக்களின் தேசமாக இந்தியாவை உருவாக்குவோம்.

வளர்ச்சியின் கரங்கள் தொடாத மக்களுக்கு ஜனநாயகம் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான், நமது சாசனத்தின் சிற்பிகள், பட்டியல் வகுப்புகள், பழங்குடியினர் மற்றும் சமுதாயத்தின் பிறநலிந்த பிரிவு மக்கள் அதிகாரம் பெறுவதை வலியுறுத்தினர். 60 ஆண்டுகளில், வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு ஏணியில் மிகப் பலர் மேலே வருவதைக் காண்கிறோம். இருந்த போதும் இன்னமும் நமது ஆதரவு மற்றும் உதவி, மேலும் பல லட்சம் மக்களுக்குத் தேவைப்படுகிறது.

எஸ் சி, எஸ் டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மக்கள், பொருளாதார, சமூக, அரசியல் கல்வி அதிகாரம் பெறுவதில் நாம் உறுதி கொண்டுள்ளோம். தற்போதுள்ள அவர்களுக்கான ஒதுக்கீடுகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதோடு, அவர்களின் நன்மைக்காக நிதியுதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்துள்ளோம். சமூகத்தின் இந்தப் பிரிவினர் தொழில் மற்றும் வணிகத்தில் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்ய, தனியார் துறையும் ஓரளவுக்கு நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது பழங்குடி சகோதரர்கள் பல தலைமுறைகளாக வனப்பகுதிகளில் பயிரிட்டு வந்த நிலங்களின் மீதான அவர்களின் உரிமையை உறுதி செய்துள்ளோம். இது அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்கும். வளர்ச்சித் திட்டங்களில் சிறுபான்மை மக்கள் விடுபட்டுப் போகாததை, தம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்குத் தேவையான வளங்களை அவர்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பிரதம மந்திரியின் 15 அம்ச திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

வெவ்வேறு வகை மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு நமது இதயத்திலும் சிந்தனையிலும் தனி இடம் உண்டு. இவர்களின் நல்வாழ்வுக்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். குழந்தைகளின் பாதுகாப்பை, அவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights) அமைத்துள்ளோம்.

சத்து குறைவான உணவு, ஒரு தேசிய அவமானப் பிரச்சினையாகும். பெரிய அளவில் அங்கன்வாடி முறையை விரிவுபடுத்தி, மதிய உணவு திட்டத்தை எல்லாருக்குமாக மாற்றி இந்த பிரச்சினையைத் தீர்க்க முயன்று உள்ளோம். ஆனாலும் இதன் வெற்றிக்கு அடிமட்டத்தில் இடையறாத முயற்சி தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட வேண்டும், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார கவனிப்பு வேண்டும். நமது செலவுத் தொகைகள் குழந்தைகளை சென்று சேர்வதை உறுதி செய்ய சமூகம் மற்றும் பஞ்சாயத்துகளின் தீவிர பங்களிப்பு வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சத்துக்குறைபாட்டை நீக்கக் கடுமையாக உழைப்பதற்கு நமது தேசம் உறுதி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

பல முனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் முன்னோக்கி நகர்ந்திருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் இன்னமும் கணிசமாகப் பணியாற்ற வேண்டி உள்ளது. பல லட்சக்கணக்கான சககுடிமக்கள் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் முறையான வேலையில் இல்லை. இவர்கள் சிறிய வர்த்தக நிறுவனங்களில் அல்லது தமக்கு சொந்தமான சிறிய கடைகளில் தினக்கூலி அடிப்படையில் தமது சேவைகளை வழங்குகிறார்கள். இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் இல்லை; பொருளாதாரப் பாதுகாப்பு உணர்வும் இல்லை. உடல் நலிவுற்றாலோ அல்லது விபத்துகளால் துன்பப்பட்டாலோ இவர்கள் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள் அல்லது ஆதரவற்றோர் ஆகி விடுகிறார்கள். இவர்களின் நல்வாழ்வுக்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். இவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை நல்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, மற்றும் 65 வயதுக்கு மேலான எல்லா குடிமக்களுக்கும் முதிய வயது ஓய்வூதியம் வழங்குவோம். எல்லா வறிய குடும்பங்களின் தலைவர்கள் அல்லது ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினருக்கு வாழ்வு மற்றும் இயலாமை காப்பீடு வழங்குவோம். இதனால் இவர்கள் காயம் மற்றும் மரணத்தின் விளைவுகளில் இருந்து வெளியே வர முடியும். சுகாதார காப்பீடுக்கும் திட்டமிட்டு வருகிறோம்; இதன் மூலம் ஏழைகள் மருத்துவத்துகாக அதிகம் செலவு சுமையைத் தாங்க வேண்டி இராது. இந்தத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும்.

நாட்டில் சில மண்டலங்கள் குறைந்த வளர்ச்சி பெற்று உள்ளன. முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் இவர்களையும் அடைய வேண்டும். முன்னேற்றத்தில் மண்டல சமநிலையை மேம்படுத்த பிற்பட்ட பகுதிகளில் முதலீடுகளை அதிகரித்தல் அவசியமாகும். இதை நோக்கி, 250 மாவட்டங்களை உள்ளடக்கிய பின்தங்கிய மண்டலங்கள் மானிய நிதியம் உருவாக்கி உள்ளோம். வரும் காலங்களில் இந்த நிதியம் மற்றும் பிற முயற்சிகள் காரணமாக நாட்டின் பிற பகுதிகளைப் போலவே இவையும் வளர்ச்சி பெறும். ஒவ்வொரு மாநிலம் ஒவ்வொரு மாவட்டம் ஒவ்வொரு கிராமம் ஒவ்வொரு மனிதனையும் வளர்ச்சியின் கரங்கள் சேர வேண்டும்.

நவீனமயமாக்கல் மற்றும் முன்னேற்றத்திற்கான பந்தயத்தில் நமது வளங்களில் சிக்கனத்துக்கான மதிப்பை நாம் மறந்து விடக்கூடாது. தண்ணீர் இத்தகைய பற்றாக்குறை உள்ள வளமாகும். தண்ணீர் சிக்கனத்தில் எவ்வாறு சேமித்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் ஒவ்வொரு குடிமகனும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீரை தேசிய சொத்தாகக் கருதி, நீர்ப்பங்கட்டில் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் கொடுக்கல் வாங்கல் மனப்பான்மையுடன் தீர்வு காணுமாறு மாநிலங்களை வேண்டுகிறேன். வெள்ளம், வளர்ச்சி போன்ற தொடர் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பான அணுகுமுறை மூலம் மட்டுமே நீண்ட காலத் தீர்வு காண முடியும். வெள்ளம் போன்ற இயற்கையின் பெரும் சேதங்களைத் தடுக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நாம் காந்திஜியின் அறிவார்ந்த சொற்களை நினைவு கூர்வோம்: நம் ஒவ்வொருவரின் தேவைக்கும் போதுமான அளவுக்கு இயற்கை வழங்கி உள்ளது; ஒவ்வொருவரின் பேராசைக்கும் அல்ல. இமயமலை - நாம் சுவீகரித்து உள்ளோம். நம்முடைய பல ஆறுகள் அங்கிருந்து முளைத்து வருகின்றன. நமது பனி மலைகளை நாம் பாதுகாக்க வேண்டும்; நமது ஆறுகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்; நமது வனப்பகுதிகளை நாம் அதிகரிக்க வேண்டும். நமது காட்டு விலங்குகளை குறிப்பாக புலி,,சிங்கம், யானை போன்ற அரிய வகை விலங்குகளை நாம் எதிர்காலத் தலைமுறைகளின் நன்மைக்காகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவை தூய்மையாக பசுமையாக வைத்திருத்தல் இந்த தேசத்தின் ஒவ்வொரு தனிக்குடிமகனின் வேட்கையாக இருத்தல் வேண்டும்.

நமது இயற்கை மற்றும் பருவ நிலையின் மீது நாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்று குறித்து ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு வேண்டும். புவி வெப்பமயமாதல் குறித்து உலகம் முழுதும் மக்கள், மென்மேலும் கவலை கொள்கின்றனர். நாமும்தான். எரிபொருள் மற்றும் எரிசக்தியின் நுகர்வில் நாம் சிக்கனமாய் இருத்தல் வேண்டும். இதற்கு நாம் மனித இனத்துக்கு, வரும் தலைமுறைகளுக்குக் கடமைப்பட்டுள்ளோம். முதன் முதலில் உலகத்துக்கு இந்த நிலத்திலிருந்து தான் இந்தச்செய்தி சென்றது: உலகம் முழுதும் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம் - Vasudaiva Kutumbakam) உலகப் பிரச்சினைகளுக்கு எல்லாரும் சேர்ந்த தீர்வைக் காண்பதில் உலகத்துக்கு நாம் வழி காட்ட வேண்டும்.

நமது அண்டைப் பகுதிகளில், பொது இடங்களில் சந்தைகளில் கிராமங்களில் குடிசைகளில், தேசிய தூய்மை இயக்கத்தில் நமது இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். தூய்மையான சுகாதாரமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதை உறுதி செய்ய நாம் எல்லோரும் ஒரு கூடுதல் அடி எடுத்து வைப்போம். நாம் என்ன சொல்கிறோமோ அதையே பின்பற்றி, நாம் ஒவ்வொருவரும் தனித்து நிற்கலாம். காந்திஜி சொன்னது போல, நாம் விரும்பும் மாற்றம் நாமாக இருக்க வேண்டும்.

எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில், மாநில அரசுகள் பஞ்சாயத்து அமைப்புகள் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. வளர்ச்சிக்காக மனிதர்களையும் வளங்களையும் திரட்டுவதில் இவர்கள், தீவிரப் பங்களிப்பு நல்க வேண்டும். ராஜீவ் காந்தி சொன்னது போல, அடிமட்டத்தில் சமூக முன்னேற்றத்தில் பஞ்சாயத்துகள் தீவிரமாக ஈடுபட வேண்டும். வளர்ச்சி திட்டங்களில் மற்றும் பள்ளிகள் மருத்துவமனைகளின் முறையான செயல்பாடுகளில் பொது மக்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

எல்லா நிலைகளிலும் அரசு மேலும் பொறுப்புள்ளதாய் மேலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட, ஊழல் என்னும் புற்று நோய்க்கு எதிராகப் போராட, தகவல் உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். அரசாங்கம் முறையாக நேர்மையாக பணிபுரிவதை உறுதி செய்ய ஒவ்வொரு குடிமகனும் இந்தச் சட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

அக்கறை கொண்ட, எல்லாரையும் உள்ளடக்கிய சமுதாயத்துக்கான தேடலில் சாதி, இனம் மொழிகளை கடந்து, எல்லா மக்களோடும் நல்ல நட்புணர்வை நாம் வளர்க்க வேண்டும். வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்தை போதிப்போர், மதவாத நோய்க்கிருமியைப் பரப்புவோர், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டோர் ஆகியோருக்கு இந்த சமுதாயத்தில் இடம் இல்லை. நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கே உரித்தான முறையில் இந்த ஜனநாயக விரோத சமூகவிராத, தேச விரோத சக்திகளை நாம் அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எல்லா வடிவங்களிலும் எதிர்த்துப் போராட இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதில் யாருடைய மனதிலும் ஐயம் வேண்டாம்.

நாட்டின் குறைந்த வளர்ச்சி பெற்ற மண்டலங்களில் குறிப்பாக வடகிழக்கு மண்டலம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேலும் அதிக வளமை கொண்டு வர விரும்புகிறோம். இது ஓர் உன்னதமான கடப்பாடு. முதலீடுகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துவதில் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் மேம்பட்ட கட்டுமானம் தொடர்பு வசதிகளில் முதலீடு செய்கிறோம். ஜம்மு காஷ்மீரில் நம்ம நீண்ட கால வளர்ச்சித் திட்டம் இந்த மாநிலத்தின் மூன்று மண்டலங்களிலும் புதிய முதலீடுகளைக் கொண்டு வருகிறது. மாநிலத்தில் அடிமட்ட ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. வட்டமேசை பேச்சுவார்த்தைகளால் சமாதானம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறந்துள்ளன.

சிறந்த சமுதாயம், சிறந்த பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் எழுப்பி உள்ளோம். இது, கடந்த 60 ஆண்டுகளில் நமது ஆகப் பெரும் சாதனை. பல்கலாசார சமய சார்பற்ற ஜனநாயகமாக, உலகின் மகத்தான சமயங்களின் (பிறந்த) வீடாக, இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம். இதனை உலகம் மிகுந்த மரியாதையுடன் பார்க்கத் தொடங்கியுள்ளது.

இத்தகைய பன்முகத்தன்மையுடன் 100 கோடி மக்களை கொண்ட நாட்டில் சமய சார்பற்ற ஜனநாயகத்தின் வெற்றி, வியப்புடன் நோக்கப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் இந்தியாவில் இந்த மகத்தான தத்துவம், மேன்மேலும் மரியாதை, மதிப்புடன் பார்க்கப்படுகிறது. நமது சகிப்புத்தன்மை, ஒருங்கிணைக்கும் திறன், சமரசப்படுத்த இயலாததை சமரசப்படுத்தும் திறன்... வியப்பாகப் பார்க்கப்படுகின்றன. நாம் நன்றாக செயல்பட வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. நம்ம சவால்கள் உள்நாட்டில் தான் உள்ளன.

உலகின் எல்லா நாடுகளோடும், கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு பெரிய சிறிய நாடுகளோடும் இந்தியா நல்லுறவை விரும்புகிறது. இன்று நாம் எல்லா பெரிய நாடுகளோடும் எல்லா வளரும் நாடுகளோடும் நல்ல உறவு கொண்டுள்ளோம். உலகின் இது தீவிர முனைகளுக்கு இடையே நாம் பாலமாக உள்ளோம். நமது ஒட்டு மொத்த கலாசாரம், நாகரிகங்களின் கலவைக்கு உதாரணமாகத் திகழ்கிறது. உலகின் பல பிளவுகளை இணைக்கும் தேசமாக இந்தியா எப்போதும் இருக்கும்.

வளமான அமைதியான அண்டை நாட்டு உறவை இந்தியா விரும்புகிறது. எல்லாரோடும் அமைதி மற்றும் மிக நல்ல உறவுகளையே இந்தியா விரும்புகிறது என்பதை எல்லா அண்டை நாடுகளுக்கும் நான் உறுதி கூறுகிறேன். நமது அண்டை நாடுகளின் வளமை மற்றும் நல்வாழ்வுதான் நமது சொந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியமாகும்.

நாம் ஓர் இளைய தேசம். மிக முக்கியமாக, நாம் இளைஞர்களின் தேசம். கட்டவிழ்த்து விடப்பட்டால், நமது இளைஞர்களின் சக்தி இந்தியாவை புதிய வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும். இந்த நாட்டுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த எதிர்காலம் இனி வர இருக்கிறது என்பதற்கு உறுதி கூறுகிறேன்.

ஆனாலும் நாம் அதீத நம்பிக்கையுடன் இருந்து விடக்கூடாது. நாம் நீண்ட தூரம் நடைபோட வேண்டி உள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. ஆனாலும் நாம் அனைவரும் முதலில் முடிவில் இந்தியர்கள் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து கொள்ள வேண்டும். அற்ப விஷயங்களில் அர்த்தமற்ற தனிப்பட்டவேற்றுமைகளில் நமது காலத்தை வீணடிக்கிறோம். குறுகிய பிரிவினை வழியில் மக்களைப் பிரிக்கத் தூண்டும் எண்ணத்தை எதிர்த்து நிற்குமாறு எல்லா அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்களை வேண்டுகிறேன். வேற்றுமை இருந்த போதும் ஒற்றுமை என்பதே நமது வலிமை. இந்த ஒற்றுமை தான் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. இந்த ஒற்றுமை தான் ஒரு தேசமாக நமக்கு வலிமை சேர்க்கிறது.

இதுவே இந்த தேசத்தை கட்டமைத்த தந்தைகளின் கனவு. இதுவே நமது சாசனத்தின் பார்வை. இந்தப் பார்வையில் இருந்து நாம் விலகிச் செல்லக் கூடாது. எதிர்காலத்தை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே கொத்தளத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு கூறினார்: சட்டங்கள், சாசனங்கள் மட்டுமே ஒரு நாட்டை மகத்தானதாக மாற்றி விடாது. மக்களில் உற்சாகம் சக்தி தொடர் முயற்சி மட்டுமே ஒரு நாட்டை மகத்தானதாக மாற்றும்.

நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு, நமது மக்களின் நல்வாழ்வுக்கு, நாம் அனைவரும் ஒன்று சேர்வோம், உறுதியாய் உழைப்போம். ஜெய்ஹிந்த்!

(தொடருவோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x