

தனித்துவம் கொண்ட புனைவு மொழிக் கதையாளர் ரமேஷ் பிரேதன். விவரிப்பு மொழி வழிக் கவித்துவத்தையும் விநோதமான கதையுலகையும் துலங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவர் ரமேஷ் பிரேதன். ‘நல்லபாம்பு’, ‘அவன் பெயர் சொல்’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். அவருக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் விருது அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
சுப்பிரமணி இரமேஷுக்குப் பஞ்சுப் பரிசில்!
கவிஞரும் கட்டுரையாளருமான தமிழ்ப் பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷின் ‘தமிழில் தலித்தியம்’ நூலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான ‘பஞ்சுப் பரிசில்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆண் காக்கை’ என்கிற தலைப்பில் கவிதைத் தொகுப்பு இவரது பங்களிப்பாக வெளிவந்துள்ளது. ‘தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்’, ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். சமகாலத் தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து கவனித்து வரக்கூடியவர். அதனடிப்படையில் சிறந்த எழுத்தாளர்களையும் நூல்களையும் அறிமுகப்படுத்திவருகிறார். இந்த விருது ரூ.10,000 பரிசுத் தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது.
பாலை நிலவனுக்குத் தன்னறம் விருது
தமிழ்க் கவிதையின் இரண்டாம் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் புதிய சொற்களையும் உருவகங்களையும் எடுத்துக்கொண்டு கவிதை எழுத வந்தவர் கவிஞர் பாலை நிலவன். ‘பறவையிடம் இருக்கிறது வீடு’, ‘மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி’ உள்ளிட்ட தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பாலை நிலவனுக்கு ‘தன்னறம்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பரிசுத் தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது.