‘தி இந்து’ லிட்ஃபெஸ்ட் 2024: களிப்பும் கருத்தும்!

‘தி இந்து’ லிட்ஃபெஸ்ட் 2024: களிப்பும் கருத்தும்!
Updated on
1 min read

கடந்த பத்தாண்டுகளில், இலக்கியச் சங்கமங்களின் மையப் புள்ளியாகச் சென்னை மாநகரம் மாறியிருக்கிறது. இந்தப் பின்னணியில், ஒவ்வோர் ஆண்டுத் தொடக்கத்திலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இலக்கியக் கூடுகைகளில் முதன்மையானதாக, ‘தி இந்து’வின் லிட்ஃபெஸ்ட் விளங்குகிறது. தி இந்து குழுமத்தின் இயக்குநர் நிர்மலா லக்‌ஷ்மணின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட ‘தி இந்து’ லிட்ஃபெஸ்ட், இந்த ஆண்டு ஜனவரி 26, 27 தேதிகளில் சேத்துப்பட்டு சர் முத்தா வெங்கடசுப்பாராவ் கச்சேரி அரங்கில் நடைபெற்றது.

12ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள லிட்ஃபெஸ்ட் நிகழ்வில் புனைவு, அல்புனைவு, அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம், பிராந்திய இலக்கியம் எனப் பல தளங்களில் விரிந்த தலைப்புகளில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்த எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். புத்தகங்கள் சார்ந்த உரை/ கலந்துரையாடலுக்குப் பிறகு, வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடையை ஆக்கிரமித்த வாசகர்கள், நூல்களை வாங்கி நீண்ட வரிசையில் நின்று ஆசிரியரிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர்.
எழுத்தாளர்கள் பெருமாள்முருகன் (கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுடனான உரையாடல்), அழகிய பெரியவன், சாரு நிவேதிதா (மொழிபெயர்ப்பாளர் நந்தினி கிருஷ்ணனுடனான உரையாடல்), ஆய்வாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், ஞா.குருசாமி ஆகியோர் பங்கேற்ற தமிழ்-ஆங்கிலம் என இருமொழிகளில் அமைந்த அமர்வுகள் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன.

திருவான்மியூர் கடற்கரையில் (லைகா புரொடெக்‌ஷன்ஸ்-மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து) ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ திரையிடல், நகரின் பல பகுதிகளில் உள்ள வாசகர்களுக்கு நூல்களைக் கொண்டு செல்லும் நடமாடும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை இந்த இரண்டு நாள் நிகழ்வுகளுக்கு வெளியே லிட்ஃபெஸ்ட் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
‘இந்தியாவின் கூர்மையான இலக்கியத் திருவிழா’வான ‘தி இந்து’ லிட்ஃபெஸ்ட்டின் இரண்டு நாள் நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்ற வாசகர்கள், தங்கள் சிந்தனையைக் கூர்தீட்டிக் கொள்ளும் கருத்துகளை அள்ளக் குறையாமல் எடுத்துச் சென்றனர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in