Last Updated : 27 Jan, 2024 02:11 PM

 

Published : 27 Jan 2024 02:11 PM
Last Updated : 27 Jan 2024 02:11 PM

கல்வி கண் திறந்த சுவாமி சகஜானந்தர் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

தமிழக பட்டியலின வரலாற்றுக்கு பன்முகங்கள் இருக்கின்றன. பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.ராஜா, தந்தை என்.சிவராஜ், சுவாமி சகஜானந்தர் என பரந்த தளத்தில் இயங்கிய‌ ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு அடையாளத்தோடு செயல்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரிடையே இந்து மத எதிர்ப்பு நிலைப்பாடு இருந்த அதேவேளையில், இந்து மத ஆதரவு நிலைப்பாடும் இருந்திருக்கிறது.

அன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு அவர்களை நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும், தங்கள் சமூக முன்னேற்றத்தையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுவாமி சகஜானந்தர். அவர் ஒரு ஆன்மீகவாதி மட்டுமல்ல. அரசியல் தலைவர், கல்வியாளர், பத்திரிகையாளர், தமிழறிஞர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகங்களை கொண்டவர். சமயப் பணியில் இருந்துக்கொண்டே சமூகப் பணியிலும் ஈடுபட முடியும் என்பதற்கு முன்னுதாரணமானவர்.

இளமை காலம்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதியினருக்கு 1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி என்பதாகும். அவர் தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். அதன் பிறகு உயர்நிலைக் கல்விக்காகத் திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் கல்வியில் சிறந்துவிளங்கியதால் 'சிகாமணி' என்ற பட்டம் தேடிவந்தது.

ஆன்மிக ஈடுபாடு: படித்து முடித்த நிலையில், சுவாமி சகஜானந்தரின் குடும்பம் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தது. கோலார் தங்கவயலில் வைணவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அவருக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. தனது 17வது வயதில், தான் சந்நியாசியாகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் ஊர் ஊராய் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளைச் சந்தித்து அவர்களிடம் சமயம் சம்பந்தமான கல்வியை கற்றார். அதில் நீலமேக சுவாமிகள், யோகி தட்சணா சுவாமிகள், கைலாச சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகவர்கள்.

சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளை சந்தித்தது சகஜானந்தரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் தான் சகஜானந்தரின் மெய்யான ஈடுபாட்டை கண்டுணர்ந்து, ''சிதம்பரத்தில் நந்தனின் வாரிசுகளாய் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்''என அறிவுரை வழங்கினார்.

கல்வி கண் திறந்த சுவாமி: இதையடுத்து சிதம்பரம் சென்ற சகஜானந்தர் பட்டியலின மக்கள் கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனால் தானே முன்வந்து, 1916 ம் ஆண்டு ஜூலை 7‍ம் தேதி நந்தனார் கல்வி கழகத்தை தொடங்கினார். மேலும் சகஜானந்தர் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு சென்ற பட்டியலினத்தாரின் உதவியைப் பெற்று, உள்ளூரில் கஷ்டப்படும் பட்டியலின மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ தொடங்கினார்.

பட்டியலின மக்களுக்காக நிலம் வாங்குவது, பள்ளிகளை திறப்பது, இரவு பாடசாலைகளை அமைப்பது, திண்ணைப் பள்ளிகளை திறப்பது, விடுதிகளை நடத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான‌ பணிகளை மேற்கொண்டார். இவ்வாறு சிதம்பரத்தை சுற்றியுள்ள ப‌குதிகளில் மட்டும் 7க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தார். அவ்வாறு திறக்கப்பட்ட பள்ளிகள் இன்றும் வடமூர், பண்ணப்பட்டு, ஆட்கொண்டநத்தம் ஆகிய‌ கிராமங்களில் இயங்கிவருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் கல்வி அறிவை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சகஜானந்தரின் இந்த செயல்பாட்டால் அந்த பகுதியில் பட்டியலின மக்கள் கல்வி, அரசியல், பொருளாதார தளங்களில் முன்னேற்றம் அடைந்தனர். 1938ல் சகஜானந்தர் ஆதிதிராவிட வளர்ச்சி சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அந்த சமூகத்தின் மிராசுதாரர்களை ஒருங்கிணைத்தார். இந்த அமைப்பின் மூலம் பட்டியலின மக்களுக்கு நிலம் சார்ந்த பிரச்சினைகள் எழும்போது தீர்த்து வைப்பது, வேளாண் குடிகளாக மற்றவர்களையும் உயர்த்துவது, நந்தனார் பள்ளி விடுதியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அரிசியை வழங்குவது போன்றவற்றை மேற்கொண்டார்.

மகேசன் பணி: சமய துறவியாக இருந்த சுவாமி சகஜானந்தர், 'மக்கள் பணியே மகேசன் பணி' என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை முன்னேற்ற ஒவ்வொரு கணமும் சிந்தித்து செயல்பட்டார். அவர்களை உயர்த்துவதற்காக அரசியலில் நுழைந்த சகஜானந்த‌ர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அவையில் ஒடுக்கப்பட்டோர் கல்வி, பொருளாதார முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்காக குரல்கொடுத்தார்.

அரசு கவனிக்க வேண்டும்: சிதம்பரத்தில் இயங்கிய மீனாட்சி கல்லூரியை அண்ணாமலை பல்கலைக்கழகமாக மாற்ற பெரிதும் உதவியவர் சுவாமி சகஜானந்தர். அதனால் அண்ணாமலை செட்டியார் அவர் இறக்கும் வரை சகஜானந்தரை பல்கலைக்கழக‌த்தின் சிண்டிகேட் உறுப்பினராக பணியாற்ற அனுமதித்தார். இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சகஜானந்தர் பெயரில் ஓர் இருக்கை தொடங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தனர். அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

சகஜானந்த‌ரின் பெயரில் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர் முன்னெடுத்த‌ கல்வி சேவையை விரிவாக்க அவர் பெயரில் பல்கலைக்கழகத்தையும் அரசு தொடங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்களுக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் படத்தை தமிழகச் சட்டப்பேரவையில் திறக்க வேண்டும் என்பதும் நந்தனார் பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஜனவரி 27 - சுவாமி சகஜானந்தரின் பிறந்தநாள்

- அருள் முத்துக்குமரன்

ஆய்வாளர், தொடர்புக்கு: helloarulmuthu@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x