Last Updated : 19 Feb, 2018 07:16 PM

 

Published : 19 Feb 2018 07:16 PM
Last Updated : 19 Feb 2018 07:16 PM

புத்தருடன் ஒரு காலை நடை: 4- ஒளி நெசவு செய்த புத்தர்

ஜீப்ரா கிராஸிங்:

கைதவறிய

புத்தர் சிலை

கூட்டி அள்ளும் மனிதன்!

- நாணற்காடன்

**** *** ***

ஜீப்ரா கிராஸிங்:

புத்தரின் பாதையை அறிவதென்பது வாழ்க்கையை அறிவதே. சுயத்தை அறிவதென்பது சுயத்தை மறப்பதுவே. அது எண்ணற்ற வழிகளினூடே அடைய வேண்டிய ஒன்று. அவ்வாறு நேரிடுகையில் ஒருவரது உடல் மற்றும் பிறரது உடல்களும் மனங்களும் உதிர்ந்து விழுகின்றன. ஞானமடைந்ததின் தடயங்களேதும் இருப்பது மில்லை. பின்னந்தத் தடயமற்ற தன்மை முடிவற்றதாய்த் தொடரும்!

- போகன் (2016 பாஷோ இதழில்)

-------------------------

ஜீப்ரா கிராஸிங்:

செதுக்கிய பின் புத்தன்

அதற்கு முன்பு கல்

ஒரே அமைதி!

- ஐய்யப்ப மாதவன்

----------

ஜீப்ரா கிராஸிங்:

காற்றில் அழகிய தோகைகள் அசைந்தாடும் கரும்பு வயல். பக்கத்தில் நளின நடைப் பழகும் நன்னீர் வாய்க்கால். கரையில் நின்று இயற்கையின் நன்கொடையாய் விரிந்து பரந்திருக்கும் பேரெழிலைக் கண்கொண்டு ரசித்துக் கொண்டிருந்தார் புத்தர்.

அன்பின் பெருவெளியில் நடந்து வந்த பயணக் களைப்பு. அந்த வாய்க்கால் கரையில் ஒரு நாவல் மரம். அந்த மரம் தன்னைத் தாங்கும் மண்ணுக்கு நிழல் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில் சற்றே அமர்ந்தார் புத்தர்.

அப்போது அந்த இடத்துக்கு வந்த ஒரு விவசாயி புத்தரை நோக்கி, தலை சீவப்பட்ட ஓர் இளநீரை நீட்டி, ''அய்யா வெய்யிலுக்கு இதமாக இருக்கும் அருந்துங்கள்...'' என்று வேண்டிக்கொண்டார்.

அந்த விவசாயிடம் ''எனக்கு இளநீர் தரவேண்டும் என்கிற எண்ணம், எப்படி உங்களுக்கு உண்டானது...?'' என்றார் புத்தர்.

''நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், யாருக்கும் கெடுதல் நினைக்காத முகம் உங்களுடையது. அதுமட்டுமல்ல; எங்கள் ஊருக்கு நீங்கள் அதிதி. உங்களை உபசரிக்கச் சொல்லி என் மனம் சொல்லியது... செய்தேன். அவ்வளவுதான்!'' என்றார்.

''மிகச் சரியாகச் சொன்னீர்கள்., இதுபோன்றே எப்போதும் உங்கள் மனம் உங்களுக்கு நல்லதையே சொல்ல வேண்டும் என்பது என்னுடைய பெருவிருப்பம்!'' என்றார் புத்தர்.

அந்த விவசாயி புத்தரை அன்புடன் பார்த்தவாறு ''உங்கள் வார்த்தைகள் சத்திய மொழியாக இருக்கிறது. எனக்கே எனக்கென்று ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன். அதை மனசில் பத்திரப்படுத்தி வைப்பேன்.'' என்று கேட்டுக்கொண்டார்.

மெல்ல புன்னகைத்தவாறே புத்தர் அந்த மனிதரைப் பார்த்து சொன்னார்:

''தாகம் தோன்றும் முன்...

கிணறு தோண்டு!''

''அய்யா... எனக்கே எனக்கென்று சொல்லுங்கள் என்றேன். நீங்கள் உலகத்துக்கு உரிய வார்த்தைகளை சொல்லிவிட்டீர்கள். எனக்கு மட்டும் உரித்தானத்தை நீங்கள் சொல்லியிருந்தால், என்னைப் புதைத்த மண்ணோடு மண்ணாக அதுவும் புதைந்துவிடும். உலகத்துக்கே சொன்னதால் அந்த வார்த்தைகள் வானம் போல வாழ்ந்துகொண்டே இருக்கும்'' என்று சொல்லி வணங்கி விடைபெற்றார் அந்த விவசாயி.

புத்தர் புன்னகைத்தார்.

*** *** ***

ஜீப்ரா கிராஸிங்:

புத்தர் ஒரு நாள் தனது சீடர்களை அழைத்தார்.

''உங்களில் ஒருவர் ஓராண்டுக்கு முன்னால் என்னிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நான் அப்போது பதிலேதும் சொல்ல வில்லை.

சீராளன் என்கிற ஒரு சீடன் புத்தன் அருகில் வந்து, ''நான் தான் அன்றைக்கு உங்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்டவன். ஆனால், அன்றைக்கு நீங்கள் பதிலேதும் சொல்லவில்லை...''என்றார்.

''சீராளா, அந்தக் கேள்வியை இப்போது மீண்டும் கேள்... எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும்''

''நேர்மறையான சிந்தனைதான் மனிதனை உயர்த்தும் என்கிறீர்களே... அப்படியானால் உடலளவில், மனஅளவில் பாதிக்கப்பட்ட ஒருவனால் எப்படி நேர்மறையாக சிந்திக்க முடியும்?''

''சீராளன் கேட்ட கேள்விக்கு நான் அப்போது பதில் சொல்லாததற்குக் காரணம் உண்டு. சில விஷயங்களை நேரடி நிரூபணம் மூலம்தான் விளக்க வேண்டும். அதற்காக காத்திருந்தேன்.

அதோ... ஒரு இளைஞர், தான் இழந்துவிட்ட ஒரு கையைப் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி... இன்னோரு கையால் வேக வேகமாக தறியில் துணி நெய்துகொண்டிருக்கிறார் அல்லவா, அவரிடம் உங்களில் யாராவது ஒருவர் சென்று, 'ஒரு கையால் வேக வேகமாக தறியில் துணி நெய்கிறீர்களே... உங்களுக்கு கை வலிக்கவில்லையா' என்று கேளுங்கள்'' என்றார் புத்தர்.

''நானே செல்கிறேன்...'' என்று சொல்லி சீராளனே சென்றான்.

அந்த நெசவாளியிடம் சென்ற சீராளன், ''ஒரு கையால் வேக வேகமாக இப்படி தறியில் துணி நெய்கிறீர்களே... உங்களுக்கு கை வலிக்கவில்லையா... சகோதரரே?'' என்று கேட்டான் வாஞ்சையுடன்.

அதற்கு அந்த நெசவாளி: ''எனக்கு பரவாயில்லை... ஒரு கை மட்டும்தான் வலிக்கும். மற்றவர்கள் பாவம் அவர் களுக்கெல்லாம் இரண்டு கைகளும் வலிக்குமில்லையா..!'' என்றான்.

நெசவாளியின் பதிலைக் கேட்ட சீடர்கள்... புத்தரை பணிவுடன் பார்த்தார்கள்.

புத்தர், தனது மவுனத்தால் சீடர்கள் நெஞ்சில் ஒளி நெசவு செய்தார்.

*** *** ***

ஜீப்ரா கிராஸிங்:

'அணில் சேமியா' விளம்பரத்திலிருந்து

என் உள்ளங்கையில் குதித்த அணில்

அணில் மச்சான்

அணில் எம்.ஆர்.ராதா

அணில் பூவே பூச்சூட வா

அணில் பைபிள்

அணில் செல்ஃபி

அணில் 1330

அணில் லீ கூப்பர் சட்டை

அணில் ஜிமிக்கி கம்மல் ஷெரில் என

தா வித்... தா விப்... போய்

கடைசியில்

புத்தரின் முன்னால் போய்

குந்திக்கொண்டு

அணில் புத்தர் ஆனது -

எதுவோடு சேர்ந்தாலும்

அதுவாகிவிடுகிற

வாலில் தூரிகை வைத்திருக்கும் அணில்!

- மானா பாஸ்கரன்

*** *** ***

புத்தர் வரலாறு -4

மகா மாயாதேவியின் உறக்கத்தில்... அந்தக் கனவு வந்தது.

அந்தக் கனவுக்குள் இந்த உலகுக்கான ஒரு ஞானச் செய்தி இருந்தது.

ஆம்... உண்மையில் அது உலகுக்கான ஞானச்செய்திதான்.

மறுநாள் சுத்தோதனரிடம் செல்லப் போகிறோம் என்கிற மன மகிழ்ச்சியுடனேயே உறங்கச் சென்ற மகா மாயாதேவிக்கு... ஏதோ ஒரு செய்தி சொல்லும் விதமாகத்தான் அந்தக் கனவு வந்தது.

''ஆகாயத்துக்கு அல்லி மலர்கள் தங்கள் வண்ணத்தை கடனாகக் கொடுத்திருந்தன. அல்லி மலர் வண்ண ஆகாயம் பார்க்க வசீகரமாக இருந்தது.

அதற்கிடையே - சிரிக்கும் ஜிமிக்கிகளாய் நட்சத்திரங்கள்.

வானம் பூமிக்கு மவுன ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருக்கும் அந்த இரவு நேரத்தில் கிழக்கில் இருந்து மின்னட்டான் பறவை தனது நீல வண்ணச் சிறகை அகல விரித்து படபடத்தபடி மேற்கை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. காற்றில் அப்பறவை பறந்து சென்ற தடமாக... ஒரு நீண்ட புன்னகைக் கோடு வானில் தெரிந்தது.

எத்திசை என சரியாக தீர்மானிக்க முடியாத அளவுக்கு - எங்கிருந்தோ அந்த மணியோசை சிணுங்கியது. ஆரம்பத்தில் மெலிதான சிறு ஒளிப்புள்ளியாய் தொடங்கிய அந்த மணியோசை... வர வர அடர் வண்ணம் மாதிரி... அதிகரித்தது.

மணியோசையைத் தொடர்ந்து, வந்தது ஒரு யானை. அதுவும் வெள்ளை நிறத்தொலொரு யானை. அதன் முதுகில் அலரி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கு.

அந்த வெள்ளையானை தனது அழகான தும்பிக்கையை நீட்டியது மகா மாயாதேவியை நோக்கி. தனது இரு கரங்களையும் சேர்த்து தும்பிக்கையின் முன்னால் நீட்டினாள் மகா மாயா. அவளது இரு கரங்களிலும் தும்பிக்கையால் முத்தமிட்ட... வெள்ளை யானை, அவளை மெல்ல தனது தும்பிக்கையால் வளைத்து பிடித்து... தூக்கி தனது முதுகின் மேல் இருந்த முத்துப் பல்லக்கில் உட்கார்த்தி வைத்துக்கொண்டது.

யானையின் பிடறியில் முத்துப் பல்லக்கில் உட்கார்ந்துகொண்ட மகா மாயாதேவிக்கு தொட்டுவிடும் தூரத்தில் மேகங்கள் மிதந்தன. மனசுக்குள் மகிழ்ச்சி வானவில் குடை பிடித்தது. அந்தக் குடைக்குள்ளேயே வந்த பெய்தது வண்ண மழை.

இப்போது அந்த வெள்ளை யானை அடிமேல் அடி வைத்து அசைந்து அசைந்து நகர்ந்தது. அப்படியே நகர்ந்து இமயச் சமயவெளிக்குச் சென்றது. அங்கே வேர் பெருத்து சடை சடையாய் இலைகள் தொங்கும் சால் மரத்தின் அருகே போய் அந்த வெள்ளை யானை நின்றது.

அங்கே பட்டாடை உடுத்தி நான்கு நங்கையர்கள் தயாராக நின்றிருந்தனர். எல்லோரது கையிலும் வெள்ளித் தாம்பாலம். அதில் நறுமணம் வீசும் பூவிதழ்கள் குவிந்திருந்தன. அந்த யானை... தனது தும்பிக்கையை உயர்த்தி... மகா மாயாதேவியை மெல்ல சுற்றி வளைத்து பிடித்து தூக்கி... தரையில் இறக்கியது.

தரைக்கு வந்த மகா மாயாதேவியின் பொற்பாதங்களில்... அந்த நான்கு நங்கைகளும் பூவிதழ்களை அள்ளித் தெளித்தனர். அங்கே புன்னகையின் தோரணம் அசைந்தது. பகல் சாயுங்காலத்தை உடுத்திக்கொண்டது.

மகா மாயாதேவி தனது விளக்கு விழிகளைத் திறந்து அச்சூழலை ரசித்தாள்.

அந்த நான்கு நங்கையர்களும் மகா மாயாதேவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் அவளை அழைத்துச் சென்ற இடம் - மானசரோவர் ஏரி. அந்த ஏரி முழுக்க தாமரைகள் பூத்துக் கிடந்தன.

அந்த ஏரியின் நன்னீரில் மகா மாயாதேவியை அவர்கள் நீராட்டினர். நீராடும் தருணங்களில் பாடப்படும் வைப்ராலி பாடலை அவர்கள் பாடினர்.

அதற்கேற்றவாறு காற்றும் தனது ஊதற்காற்றால் பின்னணி இசைத்து மகிழ்ந்தது.

கரையேறிய மகா மாயா தேவியை அந்த நங்கைகள் அலங்கரித்தனர். கூடவே வெட்கத்தையும் சூடிக்கொண்டாள் மாயா. அதன் அடையாளமாக கன்னமேடுகள் சிவந்திருந்தன.

வெட்கத்தில் சிவந்த தனது கன்னங்களை... யாரோ மயிலிறகு கொண்டு வருடுவது போன்றிருந்தது. தானறியாமல் தன்னை ஸ்பரிசிப்பது யார் என்று இமை விரிய நோக்கினாள்... அங்கே அழகு மிகுந்த ஜொல்லிக்கும் ஆடையில் நின்றிருந்தார் சுத்தோதனர்.''

தன் மணாளனைக் கண்ட அந்த நொடியில் அவளது கனவு கலைந்தது.

யோசித்து யோசித்துப் பார்த்தாள் மகா மாயாதேவி.

இந்தக் கனவு ஏன் வந்தது. கனவில் வெள்ளை யானை வந்தாள் அதற்கு என்ன பலன்? யாரிடம் கேட்பது? சின்னதாய் குழப்பம் வந்தது மாயாவுக்கு.

அருகில் தனது கணவர் சுத்தோதனர் இருந்தாலாவது அவரிடம் கேட்கலாம். யாரிடம் கேட்பது?

அப்போது தனது தந்தையிடம் கணக்காளராக இருக்கும் விபிந்திரன், மாயாவின் ஞாபகத்தில் தோன்றினார்.

கொல்லைப்புறத்தில் பயிரிடப்பட்ட கருணைக் கிழங்குகளைத் தோண்டிப் பறித்துக்கொண்டிருந்த விபிந்திரனை சந்தித்தாள் மாயா. அவரிடம் தனது கனவு பற்றி எடுத்துச் சொல்லி, அந்தக் கனவு வந்ததற்கு காரணமென்னவென்று கேட்டாள்.

''உன் அன்பான கணவனின் ஆறுதலான அரவணைப்பிலேயே இருந்துவிட்டு...இப்போது சில நாட்கள் உனது கணவனை விட்டுப் பிரிந்து இருக்கிறாய் அல்லவா. உன்னுடைய நினைப்பு அனைத்தும் உனது கணவரிடமே இருக்கிறதல்லவா... அதன் அடையாளம்தான் இந்தக் கனவு.

அம்மா... கனவுகளுக்கு எந்த பலனுமே உலகில் கிடையாதம்மா. அதெல்லாம் மூடர்கள் சொல்லும் கட்டுக்கதை. வெள்ளை யானை உன் கனவில் வந்தது உனது கற்பனை ஆற்றலைக் காட்டுகிறது.

எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதே. கனவு கண்டால்தான் மனிதன். உறக்கத்தில் கண்ட கனவுக்கு விழிப்பில் காரணம் தேடுவது பிழையாகும். எப்போதும் புத்தியை தெளிவாக வைத்திருப்பவர்கள் இது போன்ற கற்பனைகளுக்கோ, கனவுக்களுக்கோ காரண காரியங்களைத் தேட மாட்டார்கள். நீயும் தேடாதே!;; என்றார் வபிந்திரன்.

விபிந்திரனின் பேச்சு...மகா மாயாதேவியின் உள்ளத்தில் சிறு வெளிச்சக் கோடு கிழித்தது. அக்கோட்டில் நேர்மையின் நிழல் தெரிந்தது.

கண்ட கனவை உதறி எழுந்தாள் மகா மாயாதேவி.

அப்போது... அவள் வாய் திடீரென கசந்தது. வாய்க்குள் உமிழ்நீர் திரண்டது. கண்கள் மெல்ல மேலே செருகின. அடிவயிறு கொஞ்சமாய் சுருண்டது. தனது இரு கரங்களால் அடி வயிற்றை அழுத்திக்கொண்டாள். தாடைகள் துடித்தன. வயிற்றுக்குள் இருந்து மேலெழுந்து தேவையற்ற ஏதோ ஒன்று தொண்டையை நோக்கிப் பீறிட்டு வருவதை உணர்ந்தாள் மகா மாயாதேவி.

அப்படியே தலையை பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்துகொண்டாள் மாயா. அவளுக்கு புரிந்துவிட்டது. தன்னுள் என்னமோ ஜீவிக்கிறது என்று.

அவளுடைய தாய் - சுலக்‌ஷனாவும், தந்தை - அஞ்சனரும் மகா மாயாதேவியைச் சூழ்ந்துகொண்டனர். ஊருக்கே வைத்தியம் பார்க்கும் மின்சிரா என்கிற மூதாட்டி வரவழைக்கப்பட்டார்.

மின்சிரா வந்தார். அவர் மகா மாயா தேவியின் கண் மடல்களை விரித்துப் பார்த்தார். அடி வயிற்றைத் தொட்டு அழுத்திப் பார்த்தாள். மாயாவின் கையைப் பிடித்து மணிக்கட்டில் தனது கை விரல்களை வைத்து அழுத்தி நாடியைப் பரிசோதித்தாள்.

மின்சிராவின் நடுவிரலில் பித்த நாடி தெரிந்தது. மோதிர விரலில் கப நாடியும் சுண்டு விரலில் ஆத்ம நாடியும் தெரிந்தது. பூத நாடி கட்டை விரலில் தெரிந்தது .

மகா மாயாதேவியின் தாய் - சுலக்‌ஷனாவையும், தந்தை - அஞ்சனரையும் நிமிர்ந்து பார்த்தார் அந்த மூதாட்டி.. தனது பொக்கை வாய் முழுக்கச் சிரிப்பு நிரம்பியிருக்க... மின்சிரா சொன்ன செய்தி, சாதாரணமானது அல்ல; இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கான அன்பின் நற்செய்தி அது.

''மகா மாயாதேவி தாயாகிவிட்டாள்'' என்பதுதான் அது!

அப்போது தெரியாது மகா மாயாதேவிக்கு... தன்னில் சூல் கொண்ட இந்தக் கரு - இந்த உலகின் பாதைகளில் புதிய விருட்சத்தை நடப் போகிறதென்று.

அப்போது தெரியாது மகா மாயாதேவிக்கு... தன்னில் சூல் கொண்ட இந்தக் கரு - இது வரையில் நடந்தவர்களின் காலடிச் சுவடுகளை எல்லாம் அழித்தெறிந்துவிட்டு... புதிய சுவடுகளை பதிக்கப் போகிறதென்று.

அப்போது தெரியாது மகா மாயாதேவிக்கு... தன்னில் சூல் கொண்ட இந்தக் கரு - உலகின் உதடுகள் இதுவரை உச்சரித்துக்கொண்டிருக்கும் சில புனிதங்களை நோக்கி கேள்வி பந்தெறியப் போகிறதென்று!

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x