Published : 02 Feb 2018 11:12 AM
Last Updated : 02 Feb 2018 11:12 AM

ரஜினி அரசியல்: 18 - கோவை குண்டுவெடிப்பு எதிர்வினை

1996 மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடந்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணியும், திமுக-தமாகா அணியும் இரண்டு பெரும் பிரிவுகளாக போட்டிக் களத்தில் இருந்தன.

நரசிம்மராவை 2 முறை சந்தித்துப் பேசியும், அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததில் அதிருப்தியுற்று, திரும்ப ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் படைத்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற கமெண்ட்டை உதிர்த்து விட்டு, இமயமலைக்குச் சென்றுவிட்டார் ரஜினி. அதன்பிறகு சென்னை திரும்பியவர், 'தன்னுடைய படங்களை எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது; என் ரசிகர்கள் வரவிருக்கும் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தேர்தலுக்கு முன் அறிவிப்பேன்!' என்று அறிக்கை விட்டார்.

பிறகு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்காவில் இருந்த ரஜினியுடன் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள். திமுக தலைவர் கருணாநிதியும், தமாகா தலைவர் மூப்பனாரும் பல முறை பேசியதாக செய்தி வெளியானது. தொடர்ந்து இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினி.

அன்றைய தேர்தலில் முக்கிய ஹீரோவாக சன் டிவி இடம் பிடித்தது. 1977களில் எப்படி எம்ஜிஆரின் வெற்றிக்கு அகண்ட திரை முன்னின்றதோ, அதேபோல் 1996 தேர்தலுக்கு சின்னத்திரை பிரச்சாரம் குறிப்பாக சன்டிவியின் தேர்தல் பிரச்சாரம் பெரிய அளவில் திமுக-தமாகா கூட்டணிக்கு பயனானது.

திமுக -தமாகா ஆதரவையும், கருணாநிதி-மூப்பனார் ஆகிய இரண்டு தலைவர்களின் அனுபவம், அவர்களின் அரசியல் சாதுர்யம், அது எந்த அளவுக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பது குறித்தெல்லாம் தொலைக்காட்சியிலேயே பேசினார் ரஜினி. அதற்காக திமுக-தமாகா கூட்டணியை ஆதரிக்குமாறு பகிரங்கமாகவே மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்தத் தேர்தலில் திமுக 167 இடங்களிலும், தமிழ்மாநில காங்கிரஸ் 39 இடங்களையும் கைப்பற்றியது. பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வெற்றிக்கு மூலகாரணம் ரஜினிதான் என்று பரவலாக பேச்சு எழுந்தாலும், ரஜினி வாய்ஸ் கொடுக்காவிட்டாலும் ஜெயலலிதாவின் மீது இருந்த எதிர்ப்பலை திமுகவை ஜெயிக்க வைத்திருக்கும் என்றும் சர்ச்சைகளை சில அரசியல் நோக்கர்கள் கிளப்பினர்.

அதே சமயம் ரஜினியின் ஆதரவு தமாகாவை முன்வைத்தே திமுகவுக்கும் இருந்தது. ரஜினியின் அசலான தலைவர் மூப்பனார். அசலான கட்சி தமாகா, அவரின் அசலான சின்னம் சைக்கிள், அண்ணாமலை சைக்கிள் என்றும் பேசினர் தமாகாவினர். ரஜினியை சொந்தம் கொண்டாடுவதில் அப்போதைய தமாகா இளம் தலைவர்கள் விடியல் சேகர், டாக்டர் செல்லக்குமார், திருச்சி அடைக்கல்ராஜ் போன்றோர் முதன்மை வகித்தனர்.

இந்த அணிக்கு ஆதரவாக ரஜினியை இழுப்பதில் முக்கிய பங்கு வகித்த மூப்பனார், ப.சிதம்பரம் ஆகியோர் இந்த விஷயத்தில் அமைதி காத்தாலும், இவர்கள் பிரிந்து வந்த காங்கிரஸ் தரப்பில் ரஜினி குறித்த ஒருவித பதற்றமும் இருந்து வந்ததைக் காண முடிந்தது. காங்கிரஸ் அணியில் இருந்த தங்கபாலு, ஆர்.பிரபு போன்றவர்கள் 1996 தேர்தலுக்குப் பிறகு ரஜினி குறித்த எந்த கேள்வி கேட்டாலும் போதும், 'நோ கமெண்ட்ஸ், ரஜினி என் நெருங்கிய நண்பர்!' என்றே பேட்டிகளில் சொல்லத் தொடங்கிய அரசியல் காலமாக அது இருந்தது.

திமுக-தமாகா வெற்றியை எந்த இடத்திலும் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை ரஜினி. மாறாக இந்த வெற்றியின் பிரார்த்தனையோ என்னவோ ஏழைப்பெண்கள் 20 பேருக்கு தன் சொந்த செலவில் 1997-ல் திருமணம் நடத்தி வைத்தார். அவர்களுக்கு மூன்று பவுன் தங்கம், சீர் வரிசைகள் வழங்கியதோடு, தனிக்குடித்தன செலவுக்கு ஜோடிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கினார். இது எல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு 'அரசியல் டானிக்' போலானது.

'எந்த நேரத்திலும் தலைவர் புதுக்கட்சி ஆரம்பிப்பார். அதில் நிச்சயம் தங்களுக்கான இடமும் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் தமாகா உருவாக்கம், தேர்தல் சின்னமான 'அண்ணாமலை' சைக்கிள் என பெரிதும் நம்பினார். அதனால் பல கட்சிகளிலிருந்தும் தமாகாவிற்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. அதிலும் அதிமுகவிலிருந்த ரஜினி ரசிகர்கள் கூட இக்கட்சியை நாக்கி வர ஆரம்பித்தனர். அல்லது அதிலிருந்து விலகி திமுக-தமாகா கட்சிகளின் அனுதாபியாகவும் மாறினர். என்றாலும் ரஜினி சைடில் நோ ரியாக்ஷன்.

குறிப்பாக 1996 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து அடுத்த மக்களவைத் தேர்தல் 1998 பிப்ரவரியில் நடந்தது வரையிலான கால இடைவெளியில் அரசியலில் ரஜினி என்ற கதைகள் நிறைய பேசப்பட்டன. என்றாலும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரஜினி அரசியலுக்காக வாய் திறந்தார். அதையொட்டி சில ஆச்சர்ய, அதிர்ச்சிகர சம்பவங்களும் மற்ற அரசியல் முகாம்களில் நடந்தன.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் கோவையில் நிகழ்ந்தது. 1998 பிப்ரவரியில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து பிரச்சாரத்தில் இறங்கியிருந்தது. அதற்கு முன்னோட்டமாக அதிமுக ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஒரு அதிமுக பிரமுகர் ஜெயலலிதா முன்னிலையிலேயே ரஜினி குறித்து இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அவர் அந்நிகழ்வில் ரஜினிக்கு எதிராக கண்டன கவிதை ஒன்றையும் வாசித்தார். அதற்கு எதிர்நிலை எடுத்து ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் ஜெயலலிதாவுக்கு எதிரான போஸ்டர்களை ஒட்டினர். கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்., கூட்டங்களும் நடத்தினர்.

இந்த நேரத்தில் 08.01.1998 அன்று வியாழன் இரவு 12.30 மணி வாக்கில் கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை ஒட்டி அப்போதைய எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ஜி.ரவீந்திரனின் கார் ஒன்றும் எரிந்தது. இதே காலகட்டத்தில் கோவை மாநகர வீதிகளில் ஜெயலலிதாவுக்கு எதிரான கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக ரஜினியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு போஸ்டர் இந்த அதிமுக அலுவலக வாசலின் எதிர்புற சுவற்றிலும் ஒட்டப்பட்டிருந்ததுதான் கூடுதல் சுவாரஸ்யம். அதில் 'எச்சரிக்கை. எச்சரிக்கை. எம் தலைவன் வாய் திறந்தால் வையகமே கொதித்தெழும். ஜெயலலிதாவே மன்னிப்புக் கேள்!' இவண் தனிக்காட்டு ராஜா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், நீங்காத இதயம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படி ஒட்டப்பட்ட ரஜினி ரசிகர் போஸ்டரையும், வீசப்பட்ட பெட்ரோல் குண்டையும் இணைத்துத்தான் போலீஸ் தன் விசாரணையை தொடங்கியிருந்தது.

அப்போது நான் கல்கி நிருபராக இருந்தேன். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து அதிமுகவின் அப்போதைய கோவை மாநகரச் செயலாளர் மலரவனிடம் பேசினேன். 'இது ரஜினி ரசிகர்கள் செய்தது அல்ல!' என்றே அவர் விளக்கங்களை அளித்தார்.

''நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதுதான் பிரச்சினை என்றால், அதற்கு ரசிகர்கள் அதிருப்தி காட்ட வேண்டுமென்றால் சில வகுப்புவாத சக்திகள் கூட்டு சேர்ந்து ஒரு மாநாடு நடந்து 15 நாள் கழித்து இதைச் செய்ய வேண்டியதில்லை. மதவாத அமைப்புகள் எதையும் உடனுக்குடனே செய்யக்கூடியவை. ரஜினி ரசிர்களையும் கூட அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. எதையும் உடனுக்குடன் துடிப்புடன் செய்துவிடுவார்கள். மாநாட்டில் கவிதை வாசித்ததற்கு கண்டனம் தெரிவித்த (ஜெ.வுக்கு எதிரான வாசகங்கள் உள்ள) வால்போஸ்டர் கூட அவர்கள் ஒட்டியதல்ல என்பதுதான் எங்கள் அபிப்ராயம்.

எப்படியென்றால் ரஜினி ரசிகர்களாக இருந்தால் தமிழ்நாடு முழுக்க ஒரு நேரத்தில் போஸ்டர் அச்சடித்து ஒட்டியிருப்பார்கள். கவிதை வாசிக்கப்பட்ட மறுநாளே இது நடந்து முடிந்திருக்கும். அது நடந்து ஒரு வாரம் கழித்து ஒவ்வொரு மாவட்டமாக ஆற அமரத்தான் செய்திருக்கிறார்கள் என்றால் இது யாருடைய வேலையாக இருக்கும்? எனவே இதை ரஜினி ரசிகர்கள் செய்திருக்கவே முடியாது.

உதாரணமாக கோவையில் அபு என்ற ரஜினி ரசிகர் ஒட்டிய போஸ்டரில், 'தலைவா நீ ஆணையிடு. அதிமுகவை அழித்துக் காட்டுகிறோம்' என்று ஒரு வாசகம் உள்ளது. இந்த அபுவின் அப்பா ஏ.எம்.சையது முகம்மது போட்டி அதிமுக (நால்வர் அணி) காரர். அவர் மகன் ரஜினி ரசிகர் பெயரில் போஸ்டர் ஒட்டுவது மற்றவர்களுக்கு எப்படியோ எங்களுக்கு வேடிக்கையாக உள்ளது!'' என்றார் மலரவன்.

இந்த ஒரு சம்பவம் மற்றும் கட்சி நிர்வாகியின் வெளிப்பாடு என்பது அப்போது அதிமுக நிர்வாகிகள் கூட, அதுவும் தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு எதிராகவோ, ரஜினியை பெரிதுபடுத்தவோ அப்போது விரும்பவில்லை என்பது தெளிவாக உணர்த்தியது. அதிலும் ரஜினியை பற்றி உச்சரிக்கவே கூடாது என்பது எதிரணியில் கூட எழுதப்படாத கட்டளையாகவே இருந்து வந்திருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் இதை செய்திருக்கவே முடியாது என்று இதைப்பற்றி அதிமுகவினர் சொன்னதற்கு சரியாக ஒரு மாதம் கழித்துதான் கோவையில் அத்வானி வருகையின் போது தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டு வெடிகுண்டுக்கு பதறிப்போய் ஜெயலலிதா ஆட்சியை கண்டம் செய்து மேடையில் பேசின ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என்று அப்போது கொதித்த அதே ரஜினி, கோவை குண்டுவெடிப்புகளின் பெரும் கொடூர சம்பவத்தின் பின்னணியில் பல அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதன் அவல சூழலில், 'கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது!' என்று அரசியல் வாய்ஸ் கொடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த வாய்ஸ் ரஜினிக்கு எதிராக அவர் ரசிகர்களையே புறப்பட வைத்தது. அதை தன் அரசியலுக்கு பாஜகவும், அதிமுகவும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் செய்தது.  

- பேசித் தெளிவோம்!  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x