Published : 18 Jan 2024 04:39 PM
Last Updated : 18 Jan 2024 04:39 PM

செங்கோட்டை முழக்கங்கள் 59 - ‘காந்தி கண்ட கனவு தேசம்’ | 2005

இந்திய பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதில் அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் காட்டிய உண்மையான அக்கறை பாராட்டத்தக்கதாய், மெச்சத் தகுந்ததாய் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்த நரசிம்மராவ், தங்க நாற்கரச் சாலை, அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்‌ஷா அபியான்) ஆகியவற்றை வடிவமைத்த வாஜ்பாய் வரிசையில் பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் வெளிப்படுத்திய சிந்தனைகள் செயல்படுத்திய திட்டங்கள் அபாரமானவை. இவற்றைத் தனக்கே உரித்தான மென்மையான குரலில் தெளிவாகக் கூறுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.

2005 ஆகஸ்ட் 15 - டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ: எனது அன்பான நாட்டு மக்களே, சகோதர சகோதரிகளே, அன்பார்ந்த குழந்தைகளே.. இன்று, மீண்டும் ஒரு மகிழ்ச்சியான குதூகலமான நாள். சுதந்திரதின நாளைக் கொண்டாட நாம் அனைவரும் கூடி இருக்கிறோம். இந்தப் புனிதமான தருணத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு பண்டித ஜவஹர்லால் நேரு மகத்தான இந்த மூவண்ணக் கொடியைச் சிறப்பு மிக்க இந்த இடத்திலிருந்து ஏற்றி வைத்தார்; அந்நிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான இந்தியர்களின் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றினார்.

அடுத்த ஆண்டு, முதல் சுதந்திரப் போரின் 150 ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்க இருக்கிறோம். இந்த கொண்டாட்டங்களின் வாயிலாக, நமது சுதந்திரத்திற்கு அடித்தளமிட்ட அந்த மகத்தான போராட்டத்தின் விடுதலை வீரர்களை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். 1857-ல் இதே வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் இருந்துதான் பகதூர் ஷா ஜஃபர் சுதந்திரத்துக்கான போரை அறிவித்தார். ஜான்சி ராணி லட்சுமி பாய், பேஷ்வா நானா ஷாஹிப், தாந்தியா தோபே (Tantia Tope) மற்றும் லக்னோவின் பேகம் ஹஸ்ரத் மகல் ஆகியோர் எழுப்பிய போர்க்குரல் - 'தில்லி சலோ'. இந்தக் குரலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேலும் தீரத்துடன் வலிமையுடன் புதுப்பித்தார். 1947 இல் இந்தக் குறிக்கோள் நிறைவேறியது. இன்று நாம் இந்த தியாகங்களை நினைவு கூரும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். மேலும் அவர்களின் எழுச்சி மற்றும் தன்னம்பிக்கையில் இருந்து, இன்றைய சவால்களை எதிர்கொள்ளப் பயன்படும் பல நல்ல குணநலன்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்.

விடுதலைப் போராட்டத்தின் வெற்றியைப் பெருமையுடன் கொண்டாடுகிற நாள் இது. உலகின் எந்த பகுதியில் வசித்தாலும் இந்தியர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான குதூகலமான நாள். நமது துணிச்சல் மிக்க வீரர்களை பாதுகாப்பு படையினரை நினைவு கூரும் நாள் இது. அவர்களின் துணிச்சல், மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். தேசத்தின் சேவையில் தொடர்ந்து விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

75 ஆண்டுகளுக்கு முன்பு தண்டி யாத்திரையை தொடங்கிய போது மகாத்மா காந்திஜி, விடுதலை குறித்து இதையே தான் கனவு கண்டார். அந்தப் போராட்டத்தின் வழியே, உலகம் அதற்கு முன் கண்டிராத மிகவும் சக்தி வாய்ந்த மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தார். இன்று நாம் மீண்டும் ஒருமுறை தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தியாகம், மன உறுதி மற்றும் சுதந்திர தேசம் குறித்த அவரது கனவுகளை நினைவு கூர்கிறோம். அவரது கனவுகளை நிறைவேற்றுவதில் நாம் எந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதை நாம் பிரதிபலிக்க வேண்டும். (We need to reflect how far we have been successful in fulfilling his dreams.)

சுதந்திர இந்தியாவைப் பற்றிய மகாத்மா காந்தியின் கனவு என்னவாக இருந்தது? அவர் கூறினார்: "ஏழையிலும் ஏழையாக இருக்கிறவர்கள், இந்த நாடு இந்த தேசம் தம்முடையது என்று உணர வேண்டும்; இந்த நாடு அவர்களுக்கானது; இதன் கட்டுமானத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது; இத்தகைய இந்தியாவுக்காக நான் உழைப்பேன். மக்களுக்கு இடையே உயர்ந்த வகுப்பு தாழ்ந்த வகுப்பு என்று எதுவும் இல்லாத இந்தியா அது. எல்லா சமுதாயங்களும் நட்புடன் ஒற்றுமையாய் வாழ்கிற இந்தியா அது. ஆண்களைப் போலவே பெண்களும் சம உரிமை கொண்ட இந்தியா அது."

அவர் மேலும் கூறினார்: "நான் கனவு காணும் சுயராஜ்யம், ஏழை மக்களின் சுயராஜ்யம். ஏழைகளிலும் ஏழையாக இருக்கும் மக்கள், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதை உறுதி செய்யாத வரை, சுயராஜ்யம் என்பது முழுமை பெறாது என்று சொல்வதில் எனக்குச் சிறிதளவும் தயக்கம் இல்லை."

மகாத்மாவின் இந்த கனவுக்கு நெருங்கியாவது வந்திருக்கிறோமா? கடந்த ஓராண்டாக, காந்தி கனவு கண்ட இந்தியாவைக் கட்டமைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளோம். நமது அரசாங்கத்தின் தேசிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் இலக்கும் இதுவேதான். கடந்த ஆண்டு இதே நாளில் செங்கோட்டையில் இருந்து கூறினேன் - 'இன்று நான் புதிதாகத் தருகிற உறுதிமொழி ஏதுமில்லை; ஏற்கனவே தந்த உறுதி மொழியைக் காப்பாற்ற இருக்கிறேன்'. உறுதிமொழிகளைக் காப்பாற்றும் விதமாக, பல முக்கிய நடவடிக்கைகள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். நமது நாட்டின் வளர்ச்சிக்கு இது பெரிதும் பங்களிக்கும். இந்த முடிவுகளை எடுக்கும் போது, நமது சிந்தனையில் கவனத்தில் இருந்ததெல்லாம் - 'ஆம் ஆத்மி'! (சாமானிய மனிதன்) தொடர்ந்து விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக அரசு முயற்சித்து வருகிற போது, இந்த வளர்ச்சியின் பயன்கள் நியாயமாக சமுதாயத்தின் எல்லா பிரிவுகளையும் சென்று சேர வேண்டும் என்பதையும் முயற்சிக்கிறோம். நமது தொலைநோக்குப் பார்வையில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; சாமானிய மனிதனின் வாழ்க்கையில் மேம்பாட்டைக் கொண்டு வரும் வளர்ச்சியும் உள்ளது.

தற்போது நமது நாடு முன் எப்போதும் இல்லாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டும் இதே அளவுக்கு இருக்கும். கடந்த காலத்தில் இவ்வாறு நிலையான உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை நம் நாடு கண்டதில்லை. அடுத்த 5 - 10 ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி வேகத்தை நாம் பராமரித்தால், வறுமையை அறியாமையை பசியை நோய்களை இந்த நாட்டில் இருந்து ஒழிப்பது சாத்தியம் என்று நம்புகிறேன். இது கனவு அல்ல; நமது காலத்திலேயே சாத்தியம் ஆகக்கூடிய ஒன்று.

நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை வளர்ந்து வரும் சக்தியாகவே பார்க்கிறது. இந்தியா எவ்வாறு விரைந்து பொருளாதார வளர்ச்சி பெறுகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் பார்க்கிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சி, சுதந்திரமான ஜனநாயகம் என்கிற கட்டுக்குள் சாத்தியமாகி இருக்கிறது. நமது நாடு - பல கலாச்சார, பல சமய, பல மொழி, பல இன தேசம் ஆகும். உலகில் எங்கும், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டு ஜனநாயக கட்டமைப்புக்குள் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு உழைக்கும் வேறொரு உதாரணம் இல்லவே இல்லை. இதனால் தான் உலகின் மொத்த கவனமும் நம் மீது குவிந்துள்ளது. நம் அனைவரின் கூட்டு கடின உழைப்பின் விளைவால், உலகத் தளத்தில் இந்தியா தனக்கென ஓர் இடம் பிடித்துள்ளது; நாடுகளின் மத்தியில் நமது நிலை குறித்து நாம் பெருமையாக உணரலாம்.

சகோதர சகோதரிகளே.. இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது; இந்த எதிர்காலம் சாத்தியமாகவும் இருக்கிறது என்று நம்புகிறேன். இதனை சாதிக்க + விரைந்த பொருளாதார வளர்ச்சியிலேயே, சமூகநீதியை உறுதி செய்வதிலேயே நமது கவனம், குவிந்து இருக்க வேண்டும். இந்த இரண்டு கால்களால் நடப்பதன் மூலமே வளர்ச்சியின் பயன்கள் சமுதாயத்தின் எல்லா பிரிவுகளுக்கும் சென்று சேர்வதை நம்மால் உறுதி செய்ய முடியும்.

கடந்த ஆண்டு இதே நாளில் தேச மக்களுக்கு உரையாற்றிய போது, நமது வளர்ச்சி குறிப்பாக ஏழு துறைகளை, ஏழு சூத்திரங்களை சார்ந்துள்ளது என்றேன். இந்த ஏழு துறைகள் - விவசாயம் நீர்ப்பாசனம் கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு மற்றும் நகர்க் கட்டுமானம். இன்று நாம் இந்த ஏழு துறைகளில் அடைந்த வளர்ச்சியை மீள்பார்வை (review)இடலாம்.

நான் மிகவும் வலியுறுத்துவது - விவசாயம். நமது நாட்டின் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு - விவசாயிகள். இவர்களின் தளராத உழைப்பின் விளைவாக நமது நாட்டில் இப்போது உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை. இதற்காக ஒட்டுமொத்த நாடும் இவர்களுக்கு நன்றியாய் உள்ளது.

முன்னர் குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சி, சமுதாயத்தில் ஒவ்வொரு தனிநபரையும் முழுமையாக சென்று அடையவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கிராமப் பகுதிகளில் இது இன்னமும் உண்மையாகும். விவசாயத்தின் வளர்ச்சி தேவைப்படும் வேகத்தில் இல்லை. இன்றைக்கும் நமது மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள். நமது பொருளாதார வளர்ச்சி நடவடிக்கையில் பங்களிப்பாளராக இருக்க ஒவ்வொரு விவசாயிக்கும் உரிமை உள்ளது. ஆகவேதான் விவசாயிகளுடன் நாம் ஒரு புதிய 'ஒப்பந்தம்' (deal) குறித்துப் பேசுகிறோம். விவசாய கடன் தொகையை அதிகரித்தல் / மேம்படுத்தல், முதலீட்டு வாய்ப்புகளை, சேமிப்பு வசதிகளை அதிகரித்தல் மூலமாக விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். காய்கறி பழ வியாபாரத்தைப் பெருக்க தேசியத் தோட்டக்கலை இயக்கம் (National Horticulture Mission) தொடங்கி விவசாயத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2007 வாக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் அறிவியல் மையம் (Krishi Vigyan Kendra) இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதன் மூலம் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் பயன்கள் கிராமத்து சகோதரர்களைச் சென்று அடையும். நமது நாட்டின் மிகப் பெரும்பாலான பகுதிகள் இன்றும் மழையை நம்பியே உள்ளன. வறண்ட நிலப் பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முழு கவனம் செலுத்துவோம். இந்த நோக்கத்துக்காக 'தேசிய மழைபெறும் பகுதி ஆணையம்' (National Rainfed Area Authority) நிறுவுதல் குறித்து பரிசீலித்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் விவசாய வளர்ச்சி வேகம் பெறும்; புதிய பசுமைப் புரட்சி உருவாகும் என்று நம்புகிறோம். இதை சாதிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லாமல் கிராமப்புறப் பகுதிகள் வளர்ச்சி அடைய சாத்தியமில்லை. கிராமப் பகுதிகளில் அடிப்படைக் கட்டுமானங்களை மேம்படுத்த, 'பாரத் நிர்மாண்' எனும் கனவுத் திட்டத்தை யோசித்துள்ளோம். பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ், பாசன வசதி இல்லாத ஒரு கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மலைப்பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, பிற பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்படும். இரண்டரை கோடி இல்லங்களுக்கு மின் இணைப்பு தரப்படும். இதன் மூலம் நாடு முழுதும் மின் வசதி பெறும்.

கிராமங்களில் 60 லட்சத்துக்கு மேலாக வீடுகள் கட்டப்படும். பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாத 74,000 குடியிருப்புகளுக்கு இந்த வசதி செய்து தரப்படும். ஒவ்வொரு கிராமமும் குறைந்தது ஒரு தொலைபேசி இணைப்பையாவது கொண்டிருக்கும். பாரத் நிர்மாண் திட்டம், நமது கிராமப் பகுதிகளில் விரைந்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.

நமது பொருளாதாரத் திட்டங்கள் அனைத்திலும், சாமானியரின் குறிப்பாக கிராமப்புறத்தில் இருப்போரின் பங்கேற்பை உறுதி செய்வதே நமது கொள்கை. எல்லா திட்டங்களும் அவர்களுக்கானவை என்பதை அவர்கள் உணர வேண்டும். இவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் முறையான வழிமுறையாக பஞ்சாயத்து அமைப்பு முறை இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் குறித்து கனவு கண்டார். இன்று மாவட்ட, தாசில், கிராம பஞ்சாயத்துகளுக்கு செயல் புரிய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது மட்டுமல்ல சமூக நீதி வழங்குவதிலும் பஞ்சாயத்துகளுக்கு நமது சாசனம் பொறுப்பு வழங்கி உள்ளது. திட்டத்தைத் திறமையாக செயல்படுத்தும் மாபெரும் பொறுப்பை சுமக்கிற தனித்தன்மை வாய்ந்த வாய்ப்பை பாரத் நிர்மாண் திட்டம் பஞ்சாயத்துகளுக்கு வழங்குகிறது.

நாம் கிராமப் பகுதிகளுக்கு மட்டும் அல்ல; நகரப் பகுதி பொருளாதார நிலைமைக்கும் முக்கியத்துவம் தருகிறோம். இன்று நமது மக்களில் மூன்றில் ஒரு பங்கு நகரங்களில் வசிக்கிறார்கள். வேகமாக நடைபெறும் நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வாழும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நமது பண்பாட்டின் சமுதாயத்தின் அடித்தளங்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து நதிக்கரை நகரங்களில் நிறுவப்பட்டது. நகர திட்டமிடல் குறித்து உலகத்துக்கு நாம் கற்றுத் தந்தோம். ஆனாலும் இன்று, பல வகைகளில் நகரவாசிகளின் அடிப்படைத் தேவைகளை கூட நமது பெருநகரங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நகரப் பகுதிகளில் முதலீடு செய்வதற்காக 'தேசிய நகர புதுப்பிப்பு இயக்கம்' National Urban Renewal Mission தொடங்கப் பட்டுள்ளது.

நமது மக்கள் தொகையில் பெரும் பங்கு - இளைஞர்கள். இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க, இவர்களின் கல்வி சுகாதாரத்தில் முதலீடு செய்தல் வேண்டும். இதன் மூலம் நமது மக்கள் தொகை நமது மிகப்பெரிய சொத்தாக மாறும்.

நமது வளர்ச்சி நடவடிக்கையின் பயன்களை பெறுவதற்கு, சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவும் கல்வி அறிவு பெற்று இருத்தல் அவசியம். அனைவருக்கும் கல்வி இயக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம், தொடக்கக் கல்வியில் பொதுமையை உறுதி செய்ய முயற்சிக்கிறோம். பெண் குழந்தையின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். கல்வியை மகிழ்ச்சி நிறைந்ததாய் ஆர்வம் மிக்கதாய் அர்த்தம் உள்ளதாய்ச் செய்ய வேண்டும். இதனால் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசையை சிறுவர்கள் வளர்த்துக் கொள்வார்கள். ( We need to make education joyful, interesting and meaningful so that children develop a desire to go to school.) முதல் தலைமுறை மாணவர்க்கான கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்த குழந்தைக்கும் தொடக்கக்கல்வி மறுக்கப்பட மாட்டாது என்பதை உறுதி செய்வதில் நாம் தீர்மானமாக உள்ளோம். விரைவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். இதனை சாதிப்பதற்கு வளங்கள் (resources) ஒரு பற்றாக்குறையாக இருக்காது. இதேபோன்று, மாற்றுத்திறன் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதிலும் உறுதியாக உள்ளோம்.

தொடக்கக் கல்வியோடு கூட, உயர் கல்விலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். எழுந்து வரும் அறிவு சக்தியாக இந்தியாவை உலகம் பார்க்கிறது என்றால், அதற்குக் காரணம் நமது பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள். விரைந்த பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில், இந்த நிறுவனங்களின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும்; இதுபோன்று மேலும் பல நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். கொல்கத்தா, மும்பை, சென்னை பல்கலைக்கழகங்களின் (இந்த) 150-வது ஆண்டில், கல்விப் பணியில் உச்சத்தைத் தொடத் தீர்மானிப்போம்.

ஒரு தனி நபர் எவ்வளவுதான் படித்து இருந்தாலும், மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த, ஆரோக்கியமாக இருத்தல் அவசியம் ஆகும். தேசிய கிராம சுகாதார இயக்கம் (National Rural Health Mission) மூலமாக ஒவ்வொரு கிராமத்திலும் மிகச்சிறந்த ஆரம்ப சுகாதார வசதிகள் வழங்குவோம். மிகச்சிறந்த ஆரம்ப சுகாதார வசதி வழங்குவதன் மூலம், இளைய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரம் மேம்படும்; இதன் விளைவாக நமது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையும் என்று நம்புகிறோம்.

கடந்த 50 ஆண்டுகளில், நமது நாட்டை பாதித்த பல நோய்களை ஒழித்து விட்டோம்; கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். 25 மாநிலங்களில் தொழுநோய் ஒழிக்கப்பட்டு விட்டது. போலியோ காசநோய் இரண்டும் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. எய்ட்ஸ் இப்போது தேசிய அளவில் பிரச்சினையாக உருவாகி வருகிறது; இதனை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாபெரும் மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. நியாயமான விலையில் சாமானியர்களுக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வோம்.

நான் முன்னரே சொன்னது போல, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, இதனால் எத்தனை குடும்பங்கள் வளமை பெற்றன என்பதுவே முன்னேற்றத்தில் உண்மையான சோதனையாகும். (The true test of development is the number of people who have secured employment and the number of families who have prospered as a result.) நாட்டில் பரவலாக வேலையின்மை நிலவுகிற வரை, உண்மையில் நாம் சுதந்திரமானவர்கள் என்று கோரவே முடியாது. இதனை மனதில் கொண்டு தான் இந்திரா காந்தி 'வறுமையை ஒழிப்போம்' என்று இந்த நாட்டுக்கு ஒரு இலக்கை நிர்ணயித்தார். இன்று நாம் வறுமையை ஒழிக்க வேண்டும் எனில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். (Rozgar Badhao) கிராமப் பகுதிகள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வேலை வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிற வகையில், வேலை வாய்ப்பு உறுதி (திட்டம்) இருத்தல் அவசியம். இந்த இலக்கை மனதில் கொண்டு தான் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இந்திய மக்களின் வாழ்க்கையில் இந்தச் சட்டம் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறோம். கதர் கிராம தொழில் ஆணையத்தையும் புனரமைக்கிறோம்; இதன் வழியே சிறு தொழில், கிராம தொழில்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

பொருளாதார வளர்ச்சி தொய்வுறாமல் இருப்பதை உறுதி செய்ய, வலுவான உட்கட்டமைப்பு இருத்தல் அவசியம். பொருளாதார வளர்ச்சி என்பது உட்கட்டமைப்புடன் பிணைந்தது. சாலைகள் ரயில்வே மின்சாரம் ஆகிய உட்கட்டமைப்பின் மிக முக்கிய மூலங்கள். நமது ரயில்வேயை மேம்படுத்த, ரயிலை நவீனப்படுத்துதல் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதனால் உலகின் மிகச்சிறந்த ரயில்வே கிளையில் ஒன்றாக நாம் வருவோம். டெல்லி - கொல்கத்தா, டெல்லி - மும்பை இடையே (தனியே) அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் (dedicated freight corridor) ரூ.25,000 கோடி முதலீட்டில் ஏற்படுத்தப்படுகிறது.

நமது தேசிய நெடுஞ்சாலை வள்ர்ச்சிப் பணி வேகமாக நடந்து வருகிறது. கூடுதலாக முப்பதாயிரம் கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலையில் பணிகளைத் தொடங்கியுள்ளோம். விரைவில் தங்க நாற்கரச்சாலை, ஆறு வழிகளைக் கொண்டதாய் இருக்கும். விமானப் போக்குவரத்திலும் அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள் நவீனப் படுத்தப்படுகின்றன; பல புதிய துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மின்சாரப் பற்றாக்குறை, இன்னமும் ஒரு மிகப்பெரிய அசவுகரியமாகவே இருந்து வருகிறது. மின்சாரம், பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கிய உள்ளீடாகும். மின் உற்பத்தியை விரைந்து அதிகரித்து, மின்தடையை முற்றிலுமாக ஒழிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு இந்தத் துறையில் இன்னும் மிக அதிக முதலீடு தேவை. நான் அடிக்கடி சொல்லி வருகிறேன் - சமுதாயத்தின் மிக வறிய பிரிவினர் தவிர்த்து, பிறருக்கு இலவசம் மின்சாரம் வழங்குதல், மின் கழகங்களின் நிதி நிலையை மோசமாக்கி விடும். பெட்ரோலிய பொருட்களை போலவே மின்சாரத்துக்கும் நியாயமான விலை கொடுப்பதற்கு நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். (We need to get used to paying a reasonable price for electricity just as we do for petroleum products.) இதன் மூலம், சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான தரத்தில் மின் சப்ளை தருவதை நம்மால் உறுதி செய்ய முடியும். என்னுடைய அமெரிக்கப் பயணத்தில், நமது அணுசக்தி திட்ட வளர்ச்சியில் தடையாக இருந்த சிலவற்றை என்னால் குறைக்க முடிந்தது. அடுத்த 10 ஆண்டுகளில், தெர்மல் (கரி) மற்றும் ஹைட்ரோ (தண்ணீர்) மின் உற்பத்தி துறைகளில் 1,50,000 மெகா வாட் திறன் கூட்டப்படும்; மேலும் 40,000 மெ.வா. மின்சாரம் அணுசக்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும்.

விரைந்த பொருளாதார வளர்ச்சி என்பது நமது நாட்டின் தொலைநோக்கு பார்வையின் ஒரு முகப்பாக இருந்தாலும், சமூக நீதி மற்றும் சம வளர்ச்சி என்பது மற்றொரு முகப்பு ஆகும். விரைந்த பொருளாதார வளர்ச்சியை மீண்டும் நிலை நிறுத்தினோம் என்பது கடந்த ஆண்டு தேசத்துக்கு நாம் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பு எனலாம். சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது. நாடு முழுதும் அமைதி சமாதானம் சமூக நல்லிணக்க சூழல் நிலவுகிறது. இதை மிக முக்கிய சாதனையாக நாம் கருதுகிறோம்.

நமது நாட்டில் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் பல இடர்களை சந்தித்து வருகின்றனர். இவர்களில் பலர் பல நூற்றாண்டுகளாக பாகுபாட்டை சந்தித்து வருகின்றனர். இவர்களையும் நமது பொருளாதார வளர்ச்சி நடவடிக்கையில் பங்குதாரர்கள் ஆக்க வேண்டியது மிக அவசியம். இவர்களின் கல்வி சுகாதார மற்றும் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த நாம் உறுதி கொண்டுள்ளோம். இவர்களின் பொருளாதார சமூகநிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அரசு பணியில் இட ஒதுக்கீடு செய்ய ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இனி அரசுத் துறைக்கு வெளியிலும், வேலைவாய்ப்பு மற்றும் சம வாய்ப்புகளை அதிகரிப்பதே நமது முயற்சியாக இருக்கும்.

நமது ஆதிவாசி சகோதரர்கள்,பல நூற்றாண்டுகளாக காடுகளுக்கு அருகே உள்ள நிலங்களில் பயிர் செய்து வருகிறார்கள். இந்த நிலத்தின் மீது அவர்களுக்கு உரிமை இல்லை. அதனால், தாம் வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்று எப்போதும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். 150 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சியில் இவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இதனைச் சரி செய்யும் விதமாக, காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு உதவுகிற, அதேசமயம் நமது இயற்கைப் பண்பாட்டை உறுதி செய்யும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வர இருக்கிறோம்.

நமது சாசனம் எல்லா மதங்களுக்கும் சமநிலை வழங்கி உள்ளது. நமது குடியரசில் எல்லா மதங்களும் பாதுகாப்பாக உள்ளன. நமது சிறுபான்மையினர் பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக தமது அன்றாட நடவடிக்கைகளைச் செய்து வர வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இதுவும் நமது குறிக்கோள். ஆகவே நாம் பொடா (POTA) சட்டத்தை ரத்து செய்து விட்டோம். இதன் விளைவாக சமுதாயத்தில் பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். சிறுபான்மையினரின் சமூகப் பொருளாதார நிலை குறித்து ஓர் ஆணையத்தின் மூலம் அறிக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இது முதன்முறையாக நடைபெறுகிறது. இவர்களின் தகுதி நிலையை மேம்படுத்துவதற்கு இந்த அறிக்கை அடிப்படையாக இருக்கும். சிறுபான்மையினருக்கான 15 அம்ச திட்டத்தைப் புனரமைப்போம். புதிய 15 அம்ச திட்டம், குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதாய் இருக்கும்.

கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள், இவர்கள் பெரும்பாலோர் சிறுபான்மையினர், திறன்மேம்பாட்டுக்காக சிறப்பு வளர்ச்சி திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். இவர்களின் வருமானத்தைப் பெருக்க இது உதவும்.

தொழில் வளர்ச்சி - உழைக்கும் வர்க்கத்தின் வியர்வையில் விளைந்தது. இவ்வாண்டு மே மாதத்தில் தொழில் வளர்ச்சி 10 சதவீதத்துக்கு மேலாக உள்ளது. இந்த அற்புதமான விளைவுக்கு நமது தொழிலாளர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். தொழிலாளர்களின் குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும். இவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையம் வழங்க முடியும் என்று நம்புகிறோம். இதனால் இன்னல் காலத்தில் இவர்கள் பாதுகாப்பு இல்லாததை உணர வேண்டியதில்லை. ஆனாலும் தொழிலாளர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். தொழிற்சாலைகளில் கம்பெனிகளில் எங்கே வேலை செய்தாலும், நிர்வாகத்துடன் இணைந்து வேலை செய்ய வேண்டும்; இதனால் நிறுவனத்தின் லாபம் பெருகும், இதனால் இவர்களும் (தொழிலாளர்களும்) பலன் பெறுவார்கள். (Wherever they may be working, in factories or in firms, they should work in cooperation with the management so that profitability of enterprises increases and they also benefit from this.)

நமது வீட்டுக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கும் பெண்கள்தாம் முதுகெலும்பு. இவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்; இவர்களை முழு அதிகாரம் கொண்டவராய் ஆக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைத் தடுக்க, அவர்களின் சொத்துரிமையைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மகளிர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வோம்.

நமது இளைஞர்களும் விளையாட்டு வீரர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் தில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1982-க்குப் பிறகு முதன் முறையாக, நடத்துவதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுப்போம்.

வளர்ச்சிக்கான இந்த புதிய அத்தியாயத்தில், நாட்டின் எல்லா பகுதிகளும் சீரான வேகத்தில் முன்னேற வேண்டும் என்பதை நாம் அறிந்து உள்ளோம். முன்னேற்றத்துக்கான தேடலில் நாட்டின் எந்த ஒரு மண்டலமும் பிறமண்டலங்களை விட பின்தங்கி இருப்பது ஏற்க முடியாதது. அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் பின்தங்கிய மண்டலங்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுவதை உறுதி செய்ய எல்லாம் முயற்சிகளும் எடுப்போம். வேலைக்கு உணவு திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஆகியவற்றில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நமது எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்துவோம். இந்த பகுதிகளில் அடுத்த 3-4 ஆண்டுகளில் சாலைகள் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டுமான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வோம்.

நமது ஆறுகள் நாட்டின் உயிர் ரேகைகள். இவை நமது பண்டைய நாகரிகத்தின் அடித்தளங்கள். இன்று எல்லா இடங்களிலும் தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. 21ஆம் நூற்றாண்டில் தண்ணீர் மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருக்கும்; இதன் பற்றாக்குறை எல்லா இடங்களிலும் உணரப்படும். தண்ணீர் வீணாவதை தடுக்க அதை மிகவும் திறமையான முறையில் உபயோகிக்க ஒரு தேசிய இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும். இது மிகவும் தேவையாக இருக்கிறது. (தண்ணீர் தொடர்பான) நீடித்த பிரச்சினைகளில் தீர்வு காண, கொடுக்கல் - வாங்கல் உணர்வுடன் பரஸ்பர புரிதல் உணர்வுடன் நாட்டின் எல்லா மாநிலங்களும் இணைந்து செயல்படுதல் அவசியம்; இதனால் ஒவ்வொருவரும் பயனடைவார்கள்.

நமது சுற்றுச்சூழலுக்கு நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுத்தம் தொடர்பாக ஒரு தேசிய இயக்கம் தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது; அப்போதுதான் நமது மாநகரங்கள் நகரங்கள் கிராமங்கள் சாலைகள் தெருக்கள் மற்றும் இல்லங்கள் நேர்த்தியாக, தூய்மையாக இருக்கும். காந்திஜி இந்த அம்சத்தை தனது ஆசிரமத்தில் மிகவும் வலியுறுத்தினார். நமது ஆறுகளையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். நமது காடுகளையும் இயற்கை வளங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். நாம் சுற்றுச்சூழலின் பாதுகாவலர்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; இதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பது நமது பொறுப்பாகும்.

சமீப காலத்தில் நாட்டின் பல பகுதிகள் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளன; அங்குள்ள மக்களுக்கு உடைமைகளுக்கு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. டிசம்பரில் சுனாமி, ஜனவரியில் பனிப்பொழிவு, ஜூலையில் வெள்ளம்! இந்தப் பேரிடர்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மொத்த நாடும் அனுதாபம் தெரிவிக்கிறது. சுனாமி பாதிப்பின் போது செய்ததைப் போல, வெள்ளத்தையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்று நம்புகிறேன். முன் எப்போதும் இல்லாத அளவு வெள்ளத்தால் மும்பை மாநகரம் பெரும் சேதத்துக்கு உள்ளானது; பலர் உயிரிழந்தனர்.

இதுபோன்ற இன்னல் தருணங்களில், கடுமையாக பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மும்பை மாநகர மக்கள் பொறுமையை, உறுதியான துணிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்; இதனால் தான் மும்பை, பிற மாநகரங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. மும்பை மாநகரம் மகாராஷ்டிரா குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் வழங்குவோம் என்று உறுதி கூறுகிறேன். இத்தகைய பேரிடர்களை திறன்பட சமாளிக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்திருக்கிறோம். இதன் மூலமாக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வரும் காலத்தில் இயற்கை பேரிடர்களை இன்னும் நல்ல முறையில் எதிர்கொள்வோம் என்று நம்புகிறோம்.

இன்னமும் கூட நமது நாட்டில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் அமைதி நிலவவில்லை. இங்கு வாழும் மக்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு பலியாகின்றனர். எங்கெல்லாம் நிலைமை மிக மோசமாகிறதோ (அங்கெல்லாம்) ஆயுதப் படைகளின் உதவியை நாடுகிறோம். எங்கெல்லாம் அவர்களின் உதவியை நாடுகிறோமோ அங்கெல்லாம் அவர்கள் பொறுமையை விடாமுயற்சியை வெளிப்படுத்துகின்றனர். இவர்களில் பலர் தமது இன்னுயிரை ஈந்துள்ளனர். தேசப்பணியில் தமது இன்னுயிரை ஈந்த வீரர்களின் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டம் Prime Minister's Scholarship Scheme தொடங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிக் கல்விக்காக 5,000 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

ஆனாலும் சில சமயங்களில் விபத்துக்கள் நேரத்தான் செய்கின்றன. இதனை மனதில் கொண்டு, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டப் பிரிவுகளை (to look into the provisions of Armed Forces Special Powers Act) ஆராய அரசு ஒரு குழு அமைத்து உள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை விவரமாக ஆய்வு செய்யப்படுகிறது; இதன் மீது தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்; இதனால் இந்த சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்கள் இருக்காது.

நமது ஜம்மு காஷ்மீர் கொள்கையின் விளைவாக, இந்த மாநிலம் மீண்டும் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு வந்துள்ளது. இந்த மாநிலத்துக்கு இயன்ற வழிகளில் எல்லாம் உதவி செய்து அங்குள்ள மக்கள் அமைதியாய் ஒற்றுமையாய் வாழ வழி செய்வது நமது மனிதாபிமானக் கடமையாகும். பயங்கரவாதிகள் எப்போதுமே காஷ்மீர் மக்களுக்கு நண்பர்களாக இருந்தது இல்லை. அவர்கள் தங்களது பயங்கரவாத தாக்குதல்களைத் தொடரும் வரை, நமது ஆயுதப்படைகளும் விழிப்புடன் இருந்து தகுந்த பதிலடி தருவார்கள். இந்தச் சண்டையில் சில சமயங்களில் சாமானிய குடிமக்களும் பாதிக்கப்படலாம்.

நான் முன்பே சொல்லி இருக்கிறேன், இப்போது மீண்டும் சொல்கிறேன்: பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையே இல்லை. பேச்சுவார்த்தையில் ஆர்வமுள்ள யாருக்காகவும் நமது கதவு எப்போதும் திறந்தே இருக்கும். ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியான கண்ணியமான வாழ்க்கை நடத்த, ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சினைகள் குறித்து பேச விவாதிக்க அனைவரையும் அழைக்கிறேன். வன்முறை தொடருமானால், நமது பதிலும் கடுமையாகவே இருக்கும். தனது மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு சில தடைகள் விதித்திருப்பதை நான் அறிவேன். ஆனாலும் அரை மனது நடவடிக்கைகளால் போதுமான வெற்றி காண இயலாது. ஒட்டுமொத்த பயங்கரவாத கட்டுமானமும் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியது அவசியம்.

பயங்கரவாத, தீவிரவாத பின்னணியில், வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. ஜனநாயக நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறோம். ஆனாலும் ஒரு ஜனநாயக அரசு, மக்களின் உண்மையான பிரச்சினைகளையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் திறன் கொண்டதாய் இருத்தல் வேண்டும். இன்று நமது பாதுகாப்புச் சூழல் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. பயங்கரவாதம், மத வன்முறை, பெண்கள் மீதான வன்கொடுமை, தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளைச் சுரண்டல் ஆகியன உள்ளன. பயங்கரவாத வன்முறையைக் கட்டுப்படுத்தும் மிகச் சவாலான பணியில் நமது பாதுகாப்பு படைகள் பாராட்டத்தக்க வகையில் செயல்படுகின்றனர்.

பயங்கரவாதம் என்பது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பதிலடி தர வேண்டிய சவாலாகும். ஆனாலும் இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முயல்வதும் அவசியமாகும். பல சமயங்களில் பயங்கரவாதம், பொருளாதார வளர்ச்சியில்மையில்தான் வேரூன்றுகிறது. பயங்கரவாத பிரச்சினையைக் கையாள்வது அத்தனை எளிதல்ல. ஆனாலும் சமூகம் அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட பல பரிமாணங்களிலும் ஒருங்கிணைந்த முறையில் இதனைத் தீர்க்க முயல்வதன் மூலம், இதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் நாடாக இருக்கிறது. இதன் வெற்றி அண்டை நாடுகளின் வெற்றியுடன் பிணைந்துள்ளது. நமது குடிமக்களின் வளமை மற்றும் மகிழ்ச்சியே எப்போதும் நமது இலக்காக உள்ளது. சில சமயங்களில் இதில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், நமது அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். அமைதி மற்றும் ஒற்றுமைக்கான நமது தேடலில் ஓரளவு வெற்றி தென்படுகிறது. தெற்காசியாவின் பல பிரச்சினைகள் பொதுவானவை; இவற்றில் வறுமை, கல்லாமை மிகவும் பரவி உள்ளன.

பாகிஸ்தானுடன் விரிவான பேச்சு வார்த்தை நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதன் விளைவாக, ஸ்ரீநகர் - முஸபராபாத் நெடுஞ்சாலை திறந்து விடப்பட்டுள்ளது. இது இந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்தத் தடத்தில் மீண்டும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கி இருக்கிறோம். இந்த நடவடிக்கை பரவலாக வரவேற்கப்படுகிறது. பிற மாநிலங்களிலும் பல முறைகளை இணைக்கும் தடங்களைத் திறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது நிறைவேறுமானால், நமது பொருளாதாரத்தை பாதிக்கும் மிக முக்கிய தடை (constraint) நீங்கும்.

வறுமை, வேலையின்மை மற்றும் நோய்கள் விடுக்கும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள நமது தெற்கு ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று உண்மையாக நம்புகிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட முடியுமானால், நமது (இரு) நாடுகளும் வளம் பெற, பல வாய்ப்புகள் கிட்டும். இதனை நம்மால் நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஆப்கானிஸ்தான் நாட்டுடன் நமக்கு வரலாற்றுத் தொடர்புகள், உறவுகள் இருந்துள்ளன. ஆப்கானிஸ்தான் வளமாக வலிமையாகத் திகழ வேண்டும் என்று விரும்புகிறோம். சில நாட்களில் நான் ஆப்கானிஸ்தான் செல்ல இருக்கிறேன். இயன்ற வகைகளில் எல்லாம் ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தந்து வலிமையாக்க முயற்சிப்போம்.

நமது மிகப்பெரிய அண்டை நாடு சீனா. நம்முடன் பல நூற்றாண்டு உறவு உள்ளது. இதன் மூலம் நாம் நிறைய கற்றுள்ளோம்; பெற்றுள்ளோம். நம் இரு நாடுகளுக்கும் பயன் தரும் வகையில் சீனாவுடன் வர்த்தக கலாச்சார உறவுகளை ஆழப்படுத்த நம் விருப்பமாய், தயாராய் உள்ளோம். ஏப்ரல் மாதத்தில் நம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை மேலும் நெருக்கமான உறவுக்கு வழிவகுத்து உள்ளது.

இலங்கை, மொரிசியஸ், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் மியான்மர் மக்களை வாழ்த்துகிறேன். இந்த மண்டலத்தில் வளர்ச்சி, வளமை மற்றும் அமைதியை மேம்படுத்த இணைந்து செயல்பட இந்தியா மிகுந்த நேர்மையுடன் விருப்பத்துடன் உள்ளது என்று உறுதி கூறுகிறேன்.

எனது அமெரிக்க விஜயம் அந்த நாட்டுடன் உறவு மேம்படுத்த மிகப் பெரிய நடவடிக்கையாக இருந்துள்ளது. நமது பொருளாதார தொழில்நுட்ப உறவுகளை ஆழப்படுத்துவதன் மூலம், நமது பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும். கூடவே, இரண்டு ஜனநாயக நாடுகளும் இணைந்து உலகில் ஜனநாயகம் வலுப்பெற இணைந்து பணியாற்றலாம். இன்னல் சமயங்களில் நமக்கு உதவிய ரஷ்யா, நமது பழைய நண்பர். ரஷ்யாவுடன் நமது நட்பு உறவுகளை ஆழப்படுத்துவோம்.

கிழக்கே உள்ள நாடுகளோடும் நமது உறவுகளை ஆழப்படுத்த விரும்புகிறோம். இந்த மண்டலத்தில் நமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த மிக முக்கிய நடவடிக்கை - சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொண்ட வணிக ஒப்பந்தம். எதிர்காலத்தில் இது போன்று மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்வோம்.

இந்த சமயத்தில், வெளிநாட்டில் வாழும் இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அபாரமானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். தமக்கும் தமது குழந்தைகளுக்கு மட்டுமே வளமையைத் தேடி அவர்கள் தொலைதூரத்துக்குச் செல்லவில்லை; இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வையை மாற்றுவதிலும் அவர்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கிறார்கள். நம் மக்கள் ஆற்றல் திறமை கடின உழைப்பு மற்றும் அமைதியை விரும்பும் குணம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். உலகம் இன்று இந்தியாவை மிகப்பெரும் அறிவு சக்தியாகப் பார்க்கிறது. நமது நாட்டுக்கு உள்ளேயும், நமது விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியாளர்கள் மற்றும் அறிஞர்கள் நமது நாட்டின் சாதனைகளில் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்காகவும் நாம் பெருமைப்படுகிறோம்.

நிறைவாக, அரசாங்கத்தை நிர்வகிப்பத்தில் உள்ள மிகப்பெரும் சவால் - வளர்ச்சித் திட்டங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதுதான். நாம் செலவு செய்யும் தொகைகள், வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பது குடிமக்களுக்கு (வெளிப்படையாய்) தெரிவது போல் இருப்பதை உறுதி செய்வோம். மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பஞ்சாயத்துகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இந்த விளைவுகளை நாம் சாதிக்க வேண்டும் என்றால், அரசு செயல்படும் விதத்தில், மாற்றம் வேண்டும். (If we have to achieve results, there is a need to change the manner in which governments function.)

நமது அரசில் அல்லது நமது சமூகத்தில் ஊழலுக்கு அல்லது எதேச்சாதிகார நடவடிக்கைக்கு இடமே இல்லை. எதற்காகவும் இதனை நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். அரசு சேவகர்கள், பொதுச் சேவை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்; மக்களுக்கு பதில் கூறக் கடமைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். அரசுகள் மேலும் வெளிப்படைத் தன்மையுடன், பொறுப்பேற்க கடமைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இந்தத் திசையில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் உரிமைச் சட்டம், மிக முக்கியமான நகர்வு ஆகும்.

இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறுகிறது. உலகம் முழுதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் நம்மை நோக்குகிறது. நமது வாழ்நாளுக்குள் வறுமை, அறியாமை, நோய்களை முற்றிலுமாக அகற்றுவது சாத்தியமே. அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இது சாத்தியமாகி இருக்கிறது.

ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும், ஒரு புதிய வரலாற்றை உருவாக்குகிற நேரம் வரும். இத்தகைய ஒரு யுகத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம். உலகத் தளத்தில் நமக்கு உரித்தானதை எடுத்துக் கொண்டு மிகச் சரியாக நாம் செயல்பட வேண்டும் என்று உலகம் விரும்புகிறது. நமது வளர்ச்சிக்கு வெளியில் இருந்து தடைகள் இல்லை. ஏதும் தடைகள் இருந்தால் அவை உள்நாட்டிலேயே உள்ளன.

இந்த நேரத்தை, இந்த வாய்ப்பை நாம் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். நமது நாட்டை வளமானதாக மாற்ற நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர், உலகில் உள்ள மிகச் சிறந்தவர்களுக்கு இணையாக நாமும் மிகச் சிறந்தவர்கள் என்கிற தன்னம்பிக்கை நமக்கு வேண்டும். நமது அரசியல் முறையும் தலைமையும், துணிச்சல் அறிவுடைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்த வேண்டும். இந்த தருணத்தை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி இந்தியாவை உண்மையிலேயே மகத்தான தேசமாக உருவாக்க வேண்டும்.

நாம் ஒரே தேசமாக, நமது பன்முகத் தன்மையால் வலுவடைந்து, தோளோடு தோள் சேர்த்து, புதிய இந்தியாவை கட்டமைக்க ஒன்றிணைவோம். அரசுக்கு மக்களுக்கும் இடையே எந்தத் தடைகளும் இல்லாத இந்தியாவாக இருக்கட்டும். ஒவ்வோர் இந்தியரும் பெருமிதத்துடன் நான் இந்தியன் என்று பிரகடனப்படுத்தும் இந்தியாவாக இருக்கட்டும். இத்தகைய தேசத்தை கட்டமைக்க நாம் ஒன்றிணைந்து உழைப்போம். அன்பார்ந்த குழந்தைகளே.. என்னுடன் சேர்ந்து கூறுங்கள்... ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடரும்)

> முநதைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 58 - ‘நீர்வள மேலாண்மையின் சவால்களை உணர வேண்டும்’ | 2004

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x