Published : 17 Jan 2024 05:45 PM
Last Updated : 17 Jan 2024 05:45 PM

கிராமியக் கலைகளை மேடையேற்றிய கே.ஏ.குணசேகரனுக்கு நினைவு மண்டபம் அமைக்குமா அரசு?

தமிழரின் மரபுமாறாத தொம்மாங்கு இசைக்குரலை விரும்பி கலைஞர்களும் கல்வியாளர்களும் கே.ஏ.ஜி. என வாஞ்சையோடு அழைக்கப்பட்டவர் கலைமாமணி டாக்டர் கே.ஏ.குணசேகரன். அவரது 9-வது நினைவு தினம் இன்று. இசைக்கலை, நிகழ்த்துக்கலை, நாடகக்கலை, ஆய்வுக்கலை என நான்கு கலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்த ஒரேயொரு ஆளுமை கே.ஏ.ஜி. எனில், அது மிகையில்லை. அதனினும் இயக்கத்தத்துவக் கொள்கைச் சார்போடு, இயங்கிய கலைக் கல்வியாளர் கே.ஏ.ஜி. ஒருவரே என்பது இன்றும் எண்ணத்தக்க உண்மையாகும். பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம், திராவிட இயக்கம் இவைகளின் பொதுத்தளத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மாபெரும் கலையியல் ஆளுமை கே.ஏ.ஜி. ஆவார். அந்த இடத்தில் இன்றுவரை வேறுயாரும் உருவாகி நிலைகொள்ளவில்லை என்பது தமிழ்நாட்டு, நாட்டுப்புறக் கலையியல் வரலாறு சொல்லும் செய்தியாகும்.

இவ்வாறான நோக்குநிலையில், நாட்டுப்புறப்பாட்டு ஆட்டம், இசைக்கருவிகள் மேடையேற்றம், நாடகம், நாடக இயக்கம், நாடகம் நடித்தல், திரைப்படம், இசைப்பாட்டுப்பாடி நடித்தல் தமிழ் மரபுக் கலைகளைப் பயிற்றுவித்தல் ஆய்வு நூல்கள் படைத்தல் என்பவற்றோடு, தமிழகத்தில் முதன்முதலாக நாட்டுப்புற ஆட்டக் கலை பண்பாட்டை, ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர். ‘சாவு’க்கு அடிக்கப்பட்டு வந்த பறையிசைக் கலையை உரிய ஆட்ட அடவுச் சீரமைப்போடு முதன்முதலில் மேடையேற்றிய வரலாற்றுப் பெருமை கே.ஏ.ஜி.யைச் சாரும். அதேபோல கரகாட்டக் கலைஞர்களின் உடை சீரமைப்பை உருவாக்கி மேடைக் கலையாக்கினார் கே.ஏ.ஜி.

வயலோரங்களில் தேங்கிக் கிடந்த நாட்டுப்புற இசையையும், இசைக் கலைஞர்களையும் தமிழ்நாடெங்கும் மதிப்போடு உலவச் செய்த மேடைக் கலையறிஞர். ஒதுக்கப்பட்ட வயலோர நாட்டுப்புற இசைக்கருவிகளை மரபுத்தன்மை மாறாமல் மேடைகளில் ஒலிக்கச் செய்வதர். அவ்வாறே தன்னானே இசைக் கலைஞர்களை மேடைகளில் உயர்த்தி மதிப்புறு கலைஞர்களாக்கியவர். சடங்குகளில், திருவிழாக்களில் நடந்த ஆட்டங்களை அதன் தன்மை மாறாமல் ஆனால் எல்லோரும் மதிக்கும் மாண்புறு நிகழ்த்துக் கலைகளாக உலகில் பரப்பியவர். தன்னானே கலைக்குழுவை உருவாக்கியவர். உலக நாடுகள் எங்கும் மரபுக்கலைகளைக் கொண்டு சேர்த்தவர் கே.ஏ.ஜி, என்பதை தமிழக நாட்டுப்புறக்கலை இலக்கிய வரலாறு பதிவு செய்யும். தமிழினத்தின் மரபுக் கலைப் பண்பாட்டை பரப்பிய பணி இவருடையது.

கே.ஏ.ஜி.யின் நாட்டுப்புற இசை மேடைகளில் 1990களில் அவர் பாடிய “அம்மா பாவாட சட்டை கிழிஞ்சு போச்சுதே….”, “ஆக்காட்டி ஆக்காட்டி….”, “முக்காமொழம் நெல்லுப் பயிரு முப்பது கஜம் தண்ணிக் கெணறு….”, “ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு…..”, “வந்தனமுன்னா வந்தனம், வந்த சனங்கள்ளலாம் குந்தனம்…..”, “மனுசங்கடா…. நாங்க மனுசங்கடா….”, போன்ற சில பாடல்களைப் பாடி, கைத்தட்டல்களும் பேரும் புகழும் பெறாத தமிழ்நாட்டு, நாட்டுப்புற இசைக் கலைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு நாட்டுப்புற இசைக் கலைகளுக்கான முத்திரையாகவும் நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கான வித்தாகவும் விளங்கிய மாபெரும் நாட்டுப்புற இசைக்கலை மேதை கே.ஏ.ஜி.

பொதுவுடைமை இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பொது மக்கள் அமைத்த மேடைகள், தமிழ்ச் சங்கங்கள் அமைத்த மேடைகள், உலக நாடுகளின் மேடைகள், உலகச் செம்மொழி மாநாடு, சென்னை சங்கமம், அரசின் விழிப்புணர்வு இயக்க மேடைகள் என எல்லா மேடைகளுக்கும் தன் பாடல்களால் பொலிவும் வலிவும் விழிப்புணர்வும் புரட்சியுணர்வும் ஊட்டியவர் கே.ஏ.ஜி.இத்தனை மேடைகளிலும் கே.ஏ.ஜி.யால் வளர்க்கப்பட்ட இசைக்கலையும் நிகழ்த்துக்கலைகளும் இசைக் கலைஞர்களும் பரிணமித்த மேடை என்றால் அது சென்னை சங்கம மேடையாகும். சென்னை சங்கம மேடைகளுக்கு நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கித் தந்த வரலாற்றுச் சிறப்பு கே.ஏ.ஜிக்கு உண்டு.

விடுதலைப் போராட்டத்தில் தமிழினம் காக்க தன் உயிரையே ஈந்த வீரமங்கை குயிலி வாழ்ந்த சிவகங்கை மண்ணில் நம் கலைகள் சமூக மாற்றத்திற்கானவை என சாதியத்தீட்டு விலக்கிட எழுச்சிப்பாடல்களால் பறைசாற்றி நின்றவர் கே.ஏ.ஜி.சாவுப்பறையை கையிலெடுத்து போர்ப்பறையாக மேடையேற்றி இன்று கொண்டாடும் கலையாக தமிழ் மண்ணிற்கு வழங்கிச் சென்றிருக்கிறார் என்பதை தமிழ்க்கலை வரலாறு முத்திரையாக்கிக் கொள்ளவேண்டும்.

தென்மாவட்டத்தின் கிராமியப் பாட்டுக் கலைஞர்களையும், ஆட்டக் கலைஞர்களையும், இசைக்கலைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழகத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.
தான் பிறந்த மாவட்டத்தில் முதன்முதலாக மரபுக்கலை பண்பாட்டுப் பயிற்சிக்களம் உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் அவர் கால்பயணிக்காத மேடையில்லை என்பதை கே.ஏ.ஜி. என உச்சரிப்போர் மறுப்பதற்கில்லை.ஆயிரக்கணக்கான மேடைகளில் தன் தெம்மாங்குக் குரலால் திக்கெட்டும் பாடிச்சென்றவர். அவரது தன்னனே குழுப்பாடகர்களே இன்று சென்னைச் சங்கமத்தில் தமிழ் மரபுக் கலைப்பண்பாட்டுத் திருவிழாவிற்குத் தங்களை தவறாது அணியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் எனில் மிகையில்லை.

அவ்வாறே கே.ஏ.ஜியின் கலை வார்ப்பாக உருவாகி தன்னானே குரலாக தெம்மாங்குப் பாடகி சின்னப்பொன்னு இன்று தமிழ்நாட்டில் புகழ்பெற்று நிற்கிறார். ‘தப்பாட்டம்’ என்றாலே ‘தஞ்சாவூர் ராஜேந்திரன் குழு’ என்ற பெயர்விளங்கும் வகையில் கோயில் சடங்குகளிலும் சங்கடங்களோடு ஆடிய கால்களை பார்வையாளரின் உயர்ந்த மேடைகளில் ‘தப்பாட்டக்கலை’ என பறையடித்துச் சென்று உலக நாடுகளிலும் தமிழ்நாட்டின் ‘மரபுக்கலை’ என கொண்டாட வைத்துள்ளார் என்பதை சென்னை சங்கமம் கலைப்பண்பாட்டுத் திருவிழா சாட்சி சொல்லி நிற்கிறது. நாற்றங்காலில் பாடிநின்ற கொல்லங்குடி கருப்பாயி எனும் கிராமியக் குரலை பல்கலைக்கழக மேடைகளில் இசைத்திட முன்னின்ற கலை ஆய்வாளர்.தன்னானே குழுவின் சேர்ந்திசைக் குரலால் தம் இனத்தின் இசைவளம் காணப் புறப்பட்டுள்ள தன்னானே பாடகர் ஜெயமூர்த்தி கே.ஏ.ஜி.யின் மேடைப் பாடகராக வலம் வருகிறார்.

நாட்டுப்புறவியல், சேரிப்புறவியல் மானிடவியல், நாட்டுப்புறக் கலையியல், நாட்டுப்புற இசையியல், நாடகவியல், சமூக நாடகவியல், தலித் அரங்கியல், அரங்கக் கலையியல், நாடகப் பனுவல் ஆக்கம், நாடக மேடை ஆக்கம், நாடக இயக்கம், நாடக இசை ஆக்கம், மேடை இசைப் பாடல் ஆக்கம். புதுத்தடம் கவிதை, ஓடு, படி சிறுகதை, சங்க இலக்கிய உரையாக்கம் 20ஆம் நூற்றாண்டின் முதல் தலித் ன்வரலாற்று படைப்பு எனத் தமிழின் பன்முக ஆளுமையாக மிளிர்ந்து இத்துறைகளின் பொருண்மைகளில் முப்பத்து நான்கு (34) நூல்களைத் தமிழ் ஆய்வுலகுக்கும், தமிழ் சமூகத்துக்குமாகப் படைத்தளித்த பேராளுமைப் பேராசிரியர் கலைமாமணி டாக்டர் கே.ஏ. குணசேகரன்.

தன் கலையியல் ஆளுமைகளால் தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுச்சேரி கலைமாமணி விருது, தமிழ்க் கலைச்செம்மல் விருது (கனடா) மக்கள் கலைக் காவல் விருது, தமிழ் இசைக் குரிசில் விருது, நாட்டுப்புற அரங்கக் கலை ஆளுமை விருது (அமெரிக்கா), சிறந்த நூலாசிரியர் விருது எனப் பல்வேறு விருதுகளோடு; தன்னானே பாடல்கள், மண்ணில் பாடல்கள், மனுசங்கடா பாடல்கள் என இசைத்தட்டு, திரைப்பட நடிப்பாளுமைப் பங்கெடுப்பு என கே.ஏ.ஜி.யின் வாழ்வியல் பங்களிப்பு தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டு வரலாற்றில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

கே.ஏ.ஜியின் ‘பலியாடுகள்’ என்னும் நாடகமானது ஓராண்டில் நூற்றுக்காணக்கான மேடையேற்றம் கண்டது என்பதும் இவரின் இசைக்குரல், தமிழகம், அயல் நாடுகள் என ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒலித்தது; தமிழகம், அயல் கலை நினைவலைகளைத் திசையெட்டும்’ சுமந்து கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கே.ஏ.ஜியின் தன்னானே மேடையில் இசைத்த பாடல்களைப் பாடாத நாட்டுப்புறப் பாடகர்களே இன்று இல்லை எனலாம். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மலையின மக்கள் ஆய்வு மையத்தில் தன் கல்வி – ஆய்வுப் பணியைத் தொடங்கிய கே.ஏ.ஜி. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமியின் நிழ்கலைப் பள்ளியின் தலைவராகவும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் முதன்மையராகவும் (Dean) சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் தன் செம்மாந்த பணியை செய்திருக்கிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட நூல் அணிந்துரைகள் பன்னாட்டுச் சொற்பொழிவுகள் என அவரது ஆய்வுச் சிந்தனைகள் ஆய்வுலகல் எண்ணிப் பார்க்கப்படுகின்றன. 2010-ல் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப்பாடலான பாடலில் ‘அதுவே’ என்ற தேற்றேகாரச் சொல்லை ஏற்றேகாரச் சொல்லாக மாற்றி அத்தனைக் கலைஞர்களின் கூட்டு இசை மலர்வில் அந்தப் பாடலின் உயிர்ப்புக்கே உயிர்ப்பு தந்தவர் கே.ஏ.ஜி. எனலாம். சிவகங்கை மாவட்டம் சாலையூர் இளையான்குடியிலுள்ள பள்ளிக்கூடத்தில் பாட்டு மாணவனாக நின்று தமிழ் வணக்கப் பாடல் பாடிய கே.ஏ.ஜி. கல்லூரிப் பருவம் தொடங்கிய போதே அவரது கணீரெனும் மண்வாசனை மாறாத இசைக்குரலைப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரவேற்றனர். இயக்க மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்கள் நள்ளிரவுகளிலும் முழங்கி ஒலித்தன. பொதுவுடைமை இயக்கத்தில் மலர்ந்து, சமூகத்தின் பொதுத் தளத்தில் வளர்ந்து, தலித் இயக்கத்தில் மிளிர்ந்து, திராவிட இயக்க மேடைகளில் ஒளிர்ந்தவர் என்பது அவருக்கே உரிய பன்மைத்துவத் தனித்துவ பண்பாகும்.

கிராமியக் கலைகளின் ஆட்ட அடவுகளை கள ஆய்வு செய்த நாட்டுப்புற முதல் கலை ஆய்வுறிஞர் டாக்டர் கே.ஏ. குணசேகரன். நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரே மேடையில் அணிப்படுத்திய கலை இயக்குநராக பயிற்சியளித்த கே.ஏ.ஜியின் நாட்டுப்புற கலை அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டிய முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கலைமாமணி விருதளித்து தமிழ் கலைக்கு மரியாதை செய்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தமிழ்க் கலை ஆளுமையான கலைமாமணி டாக்டர் கே.ஏ. குணசேகரனின் வரலாற்றுப் பங்களிப்பபை உலகறியச் செய்யும் வகையிலும் அவருக்கு முந்தைய, பிந்தைய, இன்றைய கலைஞர்களால் மேடையேற்றப்பட்ட கலைக் கருவிகளை ஆவணப்படுத்திக் காட்சிப்படுத்தும் விதமாகவும், கீழடி அருங்காட்சியகம் போல, பொருநை அருங்காட்சியகம் போல, “தமிழக நாட்டுப்புறக் கலையறிஞர் கலைமாமணி டாக்டர் கே.ஏ. குணசேகரன் நினைவு மணிமண்டபம்”. “நாட்டுப்புறக் கலை அருங்காட்சியகம்” ஒன்றை அவர் பிறந்த மாவட்டமான சிவகங்கை மண்ணில் அமைத்திட வேண்டுமெனத் தமிழ்நட்டுக் கலை அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள் அனைவர் சார்பிலும் தமிழக அரசிடம் வேண்டிக் கோருகிறோம்.

- டாக்டர் கே.ஏ.ஜோதிராணி, இணைப் பேராசிரியர், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி | தொடர்புக்கு: jothirani.ka@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x