Published : 16 Jan 2024 07:34 PM
Last Updated : 16 Jan 2024 07:34 PM

செங்கோட்டை முழக்கங்கள்  57 - ‘இளைய இந்தியாவின் இதயத் துடிப்பைக் கேட்போம்’ | 2003

அடல் பிகாரி வாஜ்பாய் - சிறந்த கவிஞர்; நல்ல பேச்சாளர்; மிகச்சிறந்த நாடாளுமன்ற வாதி; கண்ணியமான அரசியல் தலைவர்; பொறுப்பு மிக்க இந்தியப் பிரதமர். தன்னலம் சிறிதுமின்றி பொது வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்ட, வாஜ்பாய் ஆற்றிய இறுதி சுதந்திர தின உரை இது.

பாகிஸ்தான் உடன் நல்லுறவு, அன்னிய செலாவணி இருப்பு, விண்வெளி சாதனை, வீடு கட்டும் திட்டம், இளைஞர் சக்தி, ஊழல் எதிர்ப்பு, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்களையும் தொட்டுச் செல்கிறார். சுதந்திர இந்தியாவின் ஆகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய், 2003 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நிகழ்த்திய உரை இதோ:

அன்பார்ந்த நாட்டு மக்களே.. இந்த, புனிதமான சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில் நாம் செங்கோட்டையில் கூடுகிறோம்; நாம் மிகவும் நேசிக்கும் மூவண்ணக் கொடியை ஏற்றுகிறோம். மூவண்ணக் கொடி - நமது விடுதலை, நமது சுய மரியாதை, நமது தியாகங்களின் குறியீடு ஆகும். முந்தைய தலைமுறைகளை சேர்ந்த மக்கள் நிச்சயம் நினைவு கூருவார்கள் - தாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, ஒரு குழுவாக சேர்ந்து, கையில் தேசியக்கொடி ஏந்தியவாறு, கிராம நகரத் தெருக்களில் 'விஜயி விஷ்வா திரங்கா ப்யாரா, ஜண்டா ஊஞ்ச்சா ரஹே ஹமாரா!' (நாம் மிகவும் நேசிக்கும் மூவண்ணக் கொடி உயரே பறக்கட்டும்!) என்று பாடிக் கொண்டு செல்வார்கள்.

நமது விடுதலைப் போராட்டத் தலைவர்கள், போராளிகள், தியாகிகளுக்கு தலை வணங்குகிறோம். முப்படை வீரர்கள், பாதுகாப்புப் பணியினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், நமது எல்லையைப் பாதுகாப்பதில் தமது இன்னுயிரை ஈந்த துணிச்சல் மிக்க வீரர்களை இன்று நாம் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். இந்த ஆண்டு சுதந்திர தினம், நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை என்கிற நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளது. போதுமான மழைப்பொழிவு இல்லாத பகுதிகளிலும் மழை பெய்யும் என்று நம்புகிறோம்.

கடந்த ஆண்டு வறட்சியை சந்தித்தோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம்மால் இயன்ற அளவில் முழுவதுமாக உதவி புரிந்தோம். போதுமான உணவுப் பொருட்களை அங்கே அனுப்பி வைத்தோம். எங்கும் பசிக் கொடுமை இல்லை என்பதை உறுதி செய்தோம். கால்நடைகளையும் நன்கு கவனித்தோம். தமது கடின உழைப்பால் நாட்டின் தானியக் கிடங்குகளை நிரப்பிய விவசாயிகளுக்குப் பாராட்டுகள்.

ஆலைத் தொழிலாளர்கள், திறன் வாய்ந்த மேலாளர்கள், உலகின் கவனத்தை ஈர்த்த தொலைநோக்குப் பார்வை கொண்ட வர்த்தகர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள். இன்று உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக நாம் வளர்ந்து இருக்கிறோம். விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், அன்புக்குரிய குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

அயல்நாடுகளில் வாழும் அத்தனை இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள். உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதில் இவர்கள் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். இவர்களை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். நமது இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துகிறோம். நாம் அனைவரும் இத்தாயின் குழந்தைகள். நமது மதம், சாதி, மண்டலம், மொழி எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே. நமது ஒற்றுமையே நமது பலம்.

நமது ஒற்றுமையின் அடிநாதமாய் இருக்கும் பன்முகத் தன்மையில் நாம் மகிழ்கிறோம். எந்தச் சூழலிலும் என்ன விலை கொடுத்தும் தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு, குலையாமல் பாதுகாப்போம். இதுதான் சுதந்திர நாளின் மிக முக்கிய செய்தி.

சகோதரிகளே சகோதரர்களே.. தொடர்ந்து ஆறாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து உங்களுடன் உரையாடுகிறேன். உங்களின் பாசம் மற்றும் ஆதரவால் மட்டுமே இது சாத்தியம் ஆயிற்று. விடுதலைப் போராட்டத்தின்போது நாம் கண்ட கனவு - மகத்தான தேசமாக இந்தியா - இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஓரளவுக்கு இந்தக் கனவு நிறைவேறி உள்ளது. ஆனாலும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது.

இன்னல்கள் எல்லாம் இருந்த போதும், பல சவால்களை இந்த 65 ஆண்டுகளில் எதிர்கொண்ட போதும், உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. தேசத்தின் பாதுகாப்பு மிக முக்கியமானது. தனது பாதுகாப்புக்கு, பிற நாடுகளை இந்தியா சார்ந்து இருக்க முடியாது. ஆகையால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசு செய்த முதல் காரியம் - இந்தியாவை, சுயசார்பு கொண்ட அணு ஆயுத நாடாகச் செய்தல்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக, எழுந்து வரும் உலகின் பொருளாதார சக்தியாக, நவீன தேசம் மற்றும் பழமையான நாகரிகத்தின் சந்திப்பாக, சமாதான கோட்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வலுவான தேசமாக இந்தியாவை உலகம் அங்கீகரித்து இருக்கிறது.

சகோதரிகளே சகோதரர்களே .. நமது அண்டை நாடுகள் அனைவரோடும் நட்பு மற்றும் ஒத்துழைப்புடன் நல்லுறவைப் பேணுவதே நமது கொள்கை. எல்லா சச்சரவுகளையும் சமாதானமாகத் தீர்க்க முடியும் என்று நாம் நம்புகிறோம். பாகிஸ்தானுடன் இயல்பான உறவுக்காக அடிக்கடி நாம் எடுத்து வரும் முயற்சிகள், நமது பலவீனத்தின் குறியீடு அல்ல; மாறாக, அமைதியின் மீது நாம் கொண்டுள்ள உறுதியின் வெளிப்பாடு.

சமீப மாதங்களில், பாகிஸ்தானுடன் உறவை இயல்பாக்குவதில் முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் (அவர்களின்) பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கின்றன. எல்லை தாண்டி பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிறுத்துகிறார்களா என்பதில் இருந்து அண்டை நாட்டின் நேர்மையை நாம் சோதித்துப் பார்த்துக் கொள்ள முடியும். இந்திய எதிர்ப்பு பார்வையை பாகிஸ்தான் கைவிடும் என்று நம்புகிறோம். இருநாட்டு மக்களும் அமைதியாய் வாழ விரும்புகிறார்கள்.

நமது பாகிஸ்தான் நண்பர்களுக்கு நான் (தொடர்ந்து) சொல்லி வருகிறேன் - 50 ஆண்டு காலத்தை சண்டையில் செலவிட்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டும்? நாம் இருவரும், வறுமைக்கு எதிராக, வேலையின்மைக்கு எதிராக, பின்தங்கிய நிலைமைக்கு எதிராகப் போரிட வேண்டும்.

நமது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பொருளாதாரத் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். நமக்கு இடையில் 2,000 கிலோ மீட்டர் நீள இருக்கிற போது, மூன்றாவது நாட்டின் வழியே வணிகம் செய்வது அறிவுடைமை அல்ல. (When we share a two thousand kilometer long border, it makes no sense for us to trade via a third country.)

மக்கள் இங்கும் அங்கும் சென்று வரட்டும். மேலும் மேலும் மக்கள் பிரதிநிதிகள் அடுத்த நாட்டுக்கு வருகை புரியட்டும். இருநாட்டு கலாச்சார உறவுகளை விரிவாக்குவோம். நம்மைப் பிரிக்கும் சுவர்களில், புதிய கதவுகள், புதிய ஜன்னல்கள், புதிய வெளிச்சப் பாதைகளைத் திறப்போம்.

நாகூரில் இருந்து வந்த இரண்டு வயது பெண் குழந்தை நூர் மீது இந்த நாட்டு மக்கள் செலுத்திய அன்பு ஒரு செய்தியைச் சொல்கிறது; பாகிஸ்தானில் உள்ள நமது நண்பர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு நாடுகளின் சுதந்திர தின தருணத்தில், இந்தியாவுடன் சேர்ந்து சமாதான பாதையில் நடந்து வருமாறு பாகிஸ்தானை அழைக்கிறேன். இந்தச் சாலையில் மேடுகள் உள்ளன. கண்ணிவெடிகளும் உள்ளன. ஆனாலும் நாம் இந்தப் பாதையில் நடக்கத் தொடங்கும் போது, இந்தத் தடைகள் தாமாக பாதையை விட்டு விலகும்.

சில மாதங்களுக்கு முன்பு நான் ஸ்ரீநகர் சென்று இருந்தேன். இந்த மாதக் கடைசியில் மீண்டும் அங்கு செல்கிறேன். அங்கே சூழல் மாறி வருகிறது. இதே செங்கோட்டை வளாகத்தில் இருந்து கடந்த ஆண்டு, காஷ்மீர் மாநிலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தேன். அப்போது யாரும் நம்பவில்லை. ஆனால் நாம் நமது உறுமொழியை நிறைவேற்றி உள்ளோம்.

அங்கே நடந்துள்ள சுதந்திரமான தேர்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காஷ்மீர் மக்கள் நிராகரிக்கின்றனர் என்கிற உண்மையை வெளிப்படுத்தியது. ஜம்மு காஷ்மீர் லடாக் மக்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு அமைதி தேவைப்படுகிறது. அவர்கள் தமது வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்புவதைக் காண விரும்புகிறார்கள். காஷ்மீர் பற்றி பேசுகிற சிலர் சுய நிர்ணய உரிமை கேட்கிறார்கள்; இரண்டாவது முறையாக இந்தியாவை மதரீதியாக உடைக்க விரும்புகிறார்கள். இவர்கள் வெற்றி பெற அனுமதிக்க முடியாது.

இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கஷ்மீர் சென்று வந்துள்ளனர். அமர்நாத் யாத்திரைக்கு பெரும் எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகிறார்கள். இன்று, இந்தியாவின் வெவ்வேறு பாகங்களிலிருந்து சுமார் 6,000 மாணவர்கள் கஷ்மீரில் படிக்கிறார்கள். அடுத்த வாரம் இந்த மாநிலத்தில் மொபைல் டெலிபோன் சேவை தொடங்க இருக்கிறோம். முடிச்சுகள் நிறைந்த ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும். இந்த திசையில் மேலும் முயற்சிகளை முன்னெடுப்போம். அங்கிருந்து விரட்டப்பட்ட மக்கள் மீண்டும் அவர்களது இல்லங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சமீப ஆண்டுகளில் இந்தியா கண்ட வளர்ச்சி எனக்கு புதிய நம்பிக்கையைத் வந்துள்ளது. வெளியில் கடன் வாங்கிப் பழக்கப்பட்ட இந்தியா இப்போது, பிறருக்குக் கடன் வழங்கத் தொடங்கி இருக்கிறது. நிரந்தரமாக அன்னிய செலாவணி பற்றாக்குறையை சந்தித்த இந்தியா இன்று சுமார் 100 பில்லியன் டாலர் அன்னியச் செலவணி கையிருப்பு வைத்துள்ளது.

அத்தியாவசிய பொருள்களின் விலை கட்டுக்குள் உள்ளது. சந்தையில் எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை. வறுமை குறைந்து வருகிறது. இன்னும் விரைவாக வறுமையை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். தொலைபேசி அல்லது எரிவாயு இணைப்புக்கு காத்திருக்க வேண்டியது இல்லை. மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்தில் இருந்து ஒன்றரை கோடியாக உயர்ந்துள்ளது. வரும் ஆண்டில் மேலும் ஒன்றரை கோடி பேர் இணைவார்கள்.

நமது சாலைகளின் மோசமான நிலைமை குறித்து நாம் அறிவோம். சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகும் சுமார் 2 லட்சம் கிராமங்கள் முறையான சாலை இணைப்பு இல்லாமல் உள்ளன. இவற்றை நல்ல சாலைகளால் இணைப்பதற்காக, முதன்முறையாக மத்திய அரசு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana) தொடங்கியுள்ளது.

சுதந்திரம் பெற்ற முதல் 50 ஆண்டுகளில் 550 கி.மீ. நீளத்துக்கு மட்டுமே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டன. அதாவது ஓர் ஆண்டுக்கு 11 கி.மீ. மட்டுமே! இன்று 24,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைத்திருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு பதினோரு கிலோமீட்டர். ரூ. 54,000 கோடிக்கான தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் வேகமாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் ஒவ்வொரு நாளும் மூன்று லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 6 லட்சமாக உயரும்.

கணினித் துறையில் லட்சக்கணக்கான இளைய இந்தியர்கள் கவர்ச்சிகரமான பணிகளைப் பெற்று வருகிறார்கள். தமது நகரங்களில் அமர்ந்தவாறே வெவ்வேறு நாடுகளின் மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் அலுவலகங்களில் தமது சேவையை வழங்கி வருகிறார்கள். மென்பொருள் ஏற்றுமதி ரூ.8,000 கோடியில் இருந்து 50,000 கோடியாக உயர்ந்து உள்ளது.

அறிவியல் துறையில் உயரப் பறக்க நம் நாடு தயாராக உள்ளது. 2008 வாக்கில் தனது சொந்த விண்கலனை இந்தியா நிலவுக்கு அனுப்பும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதற்கு சந்திரயான் 1 என்று பெயர் இடப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் இதன் தொடர்புடைய துறைகளில் கடன் தொகையை அதிகரித்து இருக்கிறோம். வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறோம். விவசாயத்தில் புதிய முயற்சிகளை ஊக்குவிக்க, வேளாண் துறையில் முதலீடுகளை அதிகரிக்க, விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்ய தேசிய விவசாயிகள் ஆணையம் National Kisan Commission விரைவில் நிறுவ இருக்கிறோம்.

கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த பசுமைப் புரட்சி மற்றும் வெள்ளை புரட்சி - இந்திய வேளாண் துறையை வலுப்படுத்தி இருக்கிறது. இப்போது இந்தியாவுக்கு மற்றொரு புதிய புரட்சி - உணவுச் சங்கிலி புரட்சி Food Chain Revolution தேவைப்படுகிறது. 2010க்குள் இந்திய விவசாயினுடைய சராசரி வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதே இதன் லட்சியம். இந்தப் புரட்சியின் மிக முக்கிய பாகம் - ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட உணவுப் பொருட்கள் காய்கறிகள் பழங்கள் வீணாவதைத் தடுத்தலாகும்.

விவசாயிகள் கடன் அட்டை பெற்ற வெற்றியின் அடிப்படையில், கைவினைஞர்கள் நெசவாளர்கள் மற்றும் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்க தீர்மானித்து உள்ளோம். இவர்களுக்கு வழங்கப்படும் கடன்களின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதமாக குறைக்கப்படும். இவர்களின் நலனுக்காக இவர்களும் பங்கு கொள்ளும் காப்பீட்டு திட்டம் (contributory insurance scheme) விரைவில் தொடங்கப்படும்.

அந்த்யோதயா அன்ன யோஜனா - உணவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் ஒன்றரை கோடி வறிய குடும்பங்களுக்கு, 35 கிலோ உணவுப் பொருட்கள் - கோதுமை ஒரு கிலோ ரூ.2க்கும் அரிசி ஒரு கிலோ ரூ.3க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இத்தனை குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது இல்லை. உலகிலேயே மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு திட்டம் Food Security scheme இதுதான்.

சர்வ சிக்க்ஷா அபியான் அனைவருக்கும் கல்வி திட்டம் காரணமாக, இன்று நாட்டில் எந்தக் குழந்தைக்கும், குறிப்பாக எந்தப் பெண் குழந்தைக்கும் தொடக்கக் கல்வி மறுக்கப்படாது என்பதை உறுதி செய்துள்ளோம். இந்தத் திட்டத்தை திறன்பட செயல்படுத்த இந்த ஆண்டிலேயே புதிதாக இரண்டரை லட்சம் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

சில மாநிலங்களில் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை நாடு முழுதும் செயல்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். பின்னர் இது பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவுபடுத்தப்படும். அட்சய பாத்திரம் என்று இந்த தேசிய திட்டம் அழைக்கப்படும். இதனைத் திறன்பட செயல்படுத்த உதவுமாறு தன்னார்வ நிறுவனங்கள் மத அமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோரை வேண்டுகிறேன்.

வளர்ச்சி பெறாத மாநிலங்களில் மக்கள் நல்ல மருத்துவ வசதி இன்று எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆகையால் பிரதம மந்திரி சுகாதார பாதுகாப்பு திட்டம் Pradhan Mantri Swasthya Suraksha Yojana மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் பின்தங்கிய நிலையில் உள்ள மாநிலங்களில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ளது போல நவீன வசதிகளுடன் 6 புதிய மருத்துவமனைகள் நிறுவப்படும்.

நண்பர்களே, நமது நாட்டை வறட்சி மற்றும் வெள்ளத்தின் பிடியிலிருந்து மீட்கும் விதமாக ஆறுகளை இணைக்கும் திட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது என்று, பல பத்தாண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது. இப்போது நாம் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இரண்டு நதி நீர் இணைப்பு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டங்களுக்குத் தேவையான வளங்களைப் பெற முனைவோம்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில், வீடு கட்டும் பணி வேகம் எடுத்துள்ளது. இன்று போல குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் எப்போதுமே கிடைத்ததில்லை. வீடு கட்டும் துறையில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டி உள்ளது. சுற்றுலா துறையில் இந்தியாவுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. சரித்திர புகழ் பெற்ற இந்த செங்கோட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். 350 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தக் கோட்டையை முழுவதுமாக புனரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். எனக்கு முன்னால் ஓர் அழகிய பூங்கா இங்கே வருவதை என்னால் காண முடிகிறது. எல்லாரும் பயன் பெறும் விதமாக அதற்கு 'ஆகஸ்ட் 15 பூங்கா' என்று பெயரிடலாம். இதனை ஓர் உதாரணமாகக் கொண்டு நீங்களும் உங்கள் கிராமம் அல்லது நகரில் இத்தகைய அழகிய திட்டங்களை முன்னெடுக்கலாம்.

நமது புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கையின் மிக முக்கிய குறிக்கோள் இதுதான்: உலகப் போட்டிக்கு எதிராக நின்று வெற்றி பெறுவது மட்டுமல்ல; ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது கருணை, அக்கறை காட்டுவதும் ஆகும். சமீபத்து இயற்கைப் பேரிடர்களில் உயிரிழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

சகோதரிகளே சகோதரர்களே .. இன்று இளைய இந்தியர்களின் கைகளால் ஓர் ஒளிமயமான எதிர்காலம் எழுதப்பட்டு வருகிறது. பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட ஒரு பழமை வாய்ந்த தேசம் மீண்டும் ஓர் இளைய தேசமாக உருவெடுத்து புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது.

இன்று, 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், 60 கோடி பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள். இன்றைய தலைமுறை, கடந்த காலத்தின் எந்தத் தலைமுறையை விடவும் அதிகம் படித்தவர்கள்; கடந்த காலத்தின் எந்த தலைமுறையை விடவும் மேலான குறிக்கோள் உடையவர்கள். இந்த போட்டி யுகத்தில், உலகில் யாருக்கும் நாம் பின்தங்கியவர்கள் அல்ல என்கிற சிந்தனை கொண்ட தலைமுறை இது.

இன்று நமது இளைஞர்களுக்கு உலகம் முழுதும் கதவுகள் திறந்து இருக்கின்றன. வரும் ஆண்டுகளில், வரும் பத்தாண்டுகளில் இந்த வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகையால் இப்போது இருந்தே அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய துறைகளில் நமது இளைஞர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

நான் எல்லாரையும் வேண்டுகிறேன் - இந்த இளைய இந்தியாவின் இதயத் துடிப்பைக் கூர்ந்து கேட்போம்; இளைய இந்தியாவின் கனவுகளைப் புரிந்து கொள்வோம்; இயன்ற வழிகளில் எல்லாம் இளைய இந்தியாவை ஊக்குவிப்போம்; இந்த இளைய இந்தியாவுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவோம் . (I appeal to all, that we listen to the hearbeats of this Young India; that we understand the dreams of this Young India; that we encourage this Young India in every way possible; and, that we give proper guidance to this Young India.)

நாட்டு மக்களே.. இன்று, என்ன நமது சமுதாயத்தில் அமைதி நிலவச் செய்து, சகோதரப் பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டிய முக்கியமான தேவை இருக்கிறது. வளர்ச்சிக்கு - அமைதி, நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை. மதம் சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் இந்த சமுதாயத்தை பிரிக்க விரும்புவோர், நமது நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்.

இந்தியா - ஒரு பல்சமய நாடு. (India is a multi-religious nation.) நம்பிக்கையின் அடிப்படையில் யாருக்கும் அநீதி இழைப்பதோ யாரையும் பிரித்துப் பார்ப்பதோ நமது இயல்புக்கு, நமது கலாசாரத்துக்கு எதிரானது. நாம் எப்போதும் சிறுபான்மையின் நன்மை மீது அக்கறை கொள்ள வேண்டும்; அவர்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு நல்ல நேர்மறை விளைவுகள் கிடைத்து வருகின்றன. துப்பாக்கி ஏந்திய கரங்கள் இப்போது அந்த மண்டலத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்ள விரும்புகின்றன. இவர்களை வரவேற்க அரசு தயாராக இருக்கிறது.

நண்பர்களே... பட்டியல் சாதியினர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைத்து சகோதர உறவுகளையும் இந்த அமைப்பு முறையில் ஒரு பங்குதாரராகச் செய்து, அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்க வேண்டியது - இந்த சமூகத்தின் பொறுப்பு; இந்த அரசின் பொறுப்பு; நம் அனைவரின் பொறுப்பு. சமூகப் பொருளாதார நீதி இவர்களைச் சென்று சேர்ந்து இருப்பதை உறுதி செய்தல் - சாசனம் கூறும் கடமை மட்டுமல்ல; இது நமது நெறிமுறைகளின் பாற்பட்ட கடப்பாடுமாகும்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முறையாக செயல்படுத்துவதில் எழுந்த சிக்கல்களை நீக்கி விட்டோம். நமது சமுதாயத்தில் தீண்டாமை குறைந்து வருகிறது. ஆனாலும் இந்த கறையை நாம் முற்றிலுமாக நீக்க வேண்டும். ஆதிவாசிகளின் முன்னேற்றத்திற்காக புதிய அமைச்சரகம் ஏற்படுத்தி உள்ளோம். இவர்களுக்காகத் தனியே ஒரு ஆணையத்தையும் நிறுவி உள்ளோம். 50 ஆண்டுகளில் முதன்முறையாக பழங்குடியினர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது; நூற்றுக்கும் மேற்பட்ட புதிய சமூகங்கள் இப்பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

நண்பர்களே.. இதுவரையிலான நமது அனுபவத்துக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் - நமது கொள்கைகளை, முடிவுகளை செயல்படுத்தும் நமது அரசு நிர்வாக முறையில் மேலும் அதிக பொறுப்புணர்வைக் கொண்டு வருதல் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. அரசு அலுவலகங்களில், சரியான முறையான பணியைச் செய்து முடிப்பதில் கூட தாமதம் நிலவுகிறது. தாமதம் - ஊழலை பிறப்பிக்கிறது.

அனைத்து மட்டத்திலும் ஊழலுக்கு எதிராக போரிட எனது அரசு தயாராக இருக்கிறது. பல பத்தாண்டுகளாக நிலுவையில் இருக்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தீர்மானித்து இருக்கிறோம். சில நபர்களிடமிருந்து எதிர்ப்பு இருந்த போதும், தனிப்பட்ட முறையில் நான், விசாரணை வளையத்துக்குள் பிரதமரையும் கொண்டு வந்துள்ளேன். ஆகையால் உங்களின் பிரதமர் எதுவும் தவறு செய்தால் அவர் மீதும் குற்றச்சாட்டு பதியலாம். பொருளாதார குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சகோதரிகளே சகோதரர்களே .. தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு முன் முயற்சிக்கப்பட்ட எல்லா கூட்டணி அரசுகளும் தோல்வி அடைந்தன. நாம் வெற்றி பெற்றுள்ளோம். இன்று மக்கள் மத்தியில் முன்னேற்றத்துக்கான பசி இருக்கிறது. தமது வாழ்க்கை நிலையை மேம்படுத்த உறுதி கொண்ட, அதற்கான திறன் படைத்த நிலையான அரசை அவர்கள் விரும்புகிறார்கள். இன்றைய நமது அரசியலில் ஒருபுறம் இணைந்து செயல்படுவதற்கான போக்கு அதிகரித்து வருகிறது; ஆனால் மறுபுறம் சீரற்ற ஒழுங்கற்ற காட்சியும் தெரிகிறது.

நமது மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் அரசுகள் இருக்கின்றன. இவர்களுடன் மத்திய அரசு ஒத்துழைப்பான உறவு கொண்டுள்ளது. தத்துவார்த்த வேறுபாடு காரணமாக அரசியல் பாகுபாடுகள் பார்க்கப் படுவதை நாம் ஏற்கவில்லை. மகளிர் அதிகாரத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தில் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது ஒரு தேசத்தின் தீர்மானமாக உருவெடுத்துள்ளது. இன்று நமது பஞ்சாயத்துகளில் நகராட்சி அமைப்புகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களின் நல்ல பணிக்காக இவர்களை நான் வாழ்த்துகிறேன்.

ஆனாலும், நாடாளுமன்றத்தில் ஒத்த கருத்து இல்லாமையால், மகளிர் ஒதுக்கீட்டு மசோதா அதன் மெய்யான வடிவத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது ஒரு புதிய வடிவம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 33 சதவீத இடங்களை இரு உறுப்பினர் இடங்களாக்கி, இவற்றில் ஒருவர் பெண் உறுப்பினராக இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இது நடைமுறைக்கு ஒத்துவருகிற தீர்வு. பெண்களின் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருக்கிற அனைவரும் இதனை ஒரு நேர்மறை ஏற்பாடாகக் கருத வேண்டும். கருத்து ஒற்றுமை சாத்தியமாகிற வேறு ஏதேனும் யோசனை இருந்தால், அதுவும் செயல்படுத்தப்பட வேண்டும். நீண்ட காலமாகக் காத்திருக்கும் நமது சகோதரிகள் நமது இலக்கை அடைவதில் மேலும் தாமதம் இருக்கக் கூடாது.

அன்பார்ந்த நாட்டு மக்களே... வறுமை வேலையின்மை போதிய வளர்ச்சியின்மை ஆகிய சாபங்களில் இருந்து இந்தியா விடுதலை பெற முடியும். இது ஒன்றும் பகல் கனவல்ல. இதனைக் கொண்டு வர முடியும். உலகின் பல நாடுகள் இதனைச் செய்து காட்டியுள்ளன. சற்றே பின்னோக்கிப் பாருங்கள். பல கடுமையான நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி இருக்கிறது. இன்று மறுமலர்ச்சி யுகம் தோன்றியுள்ள போது, யாருடைய மனதிலும் ஏன் சந்தேகம் இருக்க வேண்டும்? இன்று தேவைப்படுவது எல்லாம் இதுதான்: நாம் அனைவரும் ஒன்றாக நடக்க வேண்டும்; நாம் அனைவரும் ஒழுங்குடன் செயல்பட வேண்டும்; நாம் ஒரு புதிய, பணி கலாச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்; நாம் ஒரு நீண்ட கால கருத்துருவோடு பணியாற்ற வேண்டும்.

பழமையான மகத்தான இந்த தேசம் திறனையும் கடின உழைப்பையும் ஒன்று சேர்க்கும் போது, தனது பொது நோக்குக்காக தன்னால் இயன்ற அளவுக்குப் பாடுபடும் போது, தனக்கான ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் அது மிக நிச்சயம் வெற்றி பெறும். சும்மா 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கவிதை எழுதினேன்; அதிலிருந்து சில வரிகளை உங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்:

நாம் அனைவரும் இணைந்து நடை போட வேண்டும்;
தடைகள் வரும், வரட்டும்;
கரு மேகங்கள் சூழ்ந்து வரும், வரட்டும்;
நமது கால்களுக்கு கீழே நிலம் புகைத்தாலும், நமது தலைக்கு மேலே தீப்பிழம்புகள் தோன்றினாலும், புன்னகையுடன் தீயைப் பற்ற வைப்போம் - நமது கைகளாலே - எரிய விடுவோம்; ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றாய் முன்னோக்கி நடப்போம்.
இன்பத்தில் துன்பத்தில் சூறாவளியில் எண்ணற்ற என்றும் மடியா தியாகங்களில், அவமானங்களில் வெகுமதிகளில்.. வலியிலும் கூட...
தலை நிமிர்ந்து, பெருமையால் விம்மிய நெஞ்சங்களுடன்.. பாடுபடுவோம்! நாம் இணைந்து முன்னோக்கி நடைபோடுவோம்!

நன்றி. சகோதரிகளே சகோதரர்களே அன்பார்ந்த குழந்தைகளே... என்னுடன் சேர்ந்து வணங்குங்கள்; கூறுங்கள் - ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடருவோம்...)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 56 - ‘பள்ளிகளில் குடி தண்ணீர்!’| 2002

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x