Published : 25 Jan 2018 12:32 PM
Last Updated : 25 Jan 2018 12:32 PM

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியை வெர்ஜினியா வுல்ஃப் பிறந்த தினம்: டூடுல் சிறப்பு செய்த கூகுள்

உலகின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான அடெலின் வெர்ஜினியா வுல்ஃப் பிறந்த தினமான இன்று அவரது பணியை பாராட்டி அவரது படத்தை கூகுளின் தேடுபொறி மேலே (டூடுல்) வெளியிட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் முன்னணி நவீன இலக்கியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் வெர்ஜினியா வுல்ஃப். இன்று நாவல் வடிவங்களில் பயன்படுத்தப்படும் நனவோடை உத்திகளைக் கையாண்டவர்களில் ஒரு முன்னோடி அவர். லண்டனில் உள்ள கென்சிங்டன் நகரத்தில் வளமான ஒரு குடும்பத்தில் பிறந்தார்,

அவரது குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே கற்கும் நிலை ஏற்பட்டது, பெரும்பாலும் ஆங்கில செவ்விலக்கியங்கள் மற்றும் விக்டோரியன் இலக்கியங்கள் ஆகியவற்றைக் கற்றார். வெர்ஜீனியா வுல்ஃப் 1900த்தில் தொழில்ரீதியாக தனது எழுத்துப் பணியை மேற்கொண்டார்.

கல்விபெற்ற காலத்தைத் தொடர்ந்து ​​வுல்ஃப் லண்டன் லிட்ரரி சொஸைட்டியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால் வீட்டிலேயே ப்ளூம்ஸ்பரி குழு தொடங்கப்பட்டது. அதில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். அங்கு இலக்கிய விவாதங்களில் தன்னை முழுமையைக ஈடுபடுத்திக்கொண்ட வெர்ஜினியா ப்ளூம்ஸ்பரி குழுவிலும் செல்வாக்குமிக்கவராக இருந்தார்.

அவர் கிங்ஸ் கல்லூரியில் பெண்கள் பிரிவில் பணியாற்றினார். பெண்களுக்கான உயர்கல்வி சார்ந்த ஆரம்பகால சீர்த்திருத்தங்களைச் செய்தவர் என்ற வகையிலும் அறியப்படுகிறார்.

அவரது முதல் நாவல் தி வாயேஜ் அவுட் 1915ல் வெளியானது. அவரது கணவரோடு இணைந்து தொடங்கிய ஹோகார்த் பிரஸ் எனும் பதிப்பகத்திலேயே அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு அவர் எழுதிய படைப்புகள் பலவும் அவருக்கு மேலும் மேலும் புகழைச் சேர்த்தன. அவற்றில் மிசஸ் டாலோவே (1925), டு த லைட்ஹவுஸ் (1927). மற்றும் ஓர்லேண்டோ (1928) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களையும் கட்டுரைகளாக இவர் வெளியிட்டார். அது 'ஏ ரூம் ஆப் ஒன்'ஸ் வோன்' எனும் பெயரில் நூலாகவும் வெளிவந்தது. இந்நூலில் இவர் முன்வைத்த முக்கியமான கருத்து, ஒரு பெண்ணுக்கு பணமும் அவள் எழுதுவதற்கென்று ஒரு தனியறையும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

தன் வாழ்நாளில் அனுபவித்த உணர நேர்ந்த கருத்துக்களை மற்றவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதிக்கொண்டே இருந்த வுல்ஃப் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையான மன நோய்களால் அவதிப்பட்டதும் நடந்தது. இதனால் ஒரு கட்டத்தில் அது உடலை மிகவும் வருத்தும்நிலைக்குத் தள்ளப்பட 1941ல் தனது 59 வயதில் அவர் மறைந்தார்.

''ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை. ஒரு பெண்ணாக எனக்கென்று ஒரு நாடு வேண்டாம்; ஒரு பெண்ணாக இந்த உலகமே என் நாடு'' என்ற அவரது கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

1970களில் உருவான பெண்ணியம் சார்ந்த விமர்சனக் களத்தில் வுல்ஃப் விட்டுச்சென்ற கருத்துக்களே முக்கியமான அங்கம் வகித்தது. அவரது பணிகள் யாவும் சமகால பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருந்ததால் அவரது கருத்துக்கள் உலகமெங்கும் பரவியது.

வெர்ஜினியா வுல்ஃப்பின் படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் உலகின் பல மொழி மக்களும் அவரது கருததுக்களை படித்தறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x