ரஜினி அரசியல் 6 - ஆரிய மாயை, திராவிட மாயை, ஆன்மிக மாயை!

ரஜினி அரசியல் 6 - ஆரிய மாயை, திராவிட மாயை, ஆன்மிக மாயை!
Updated on
3 min read

ரஜினி கொளுத்திப் போடும் வார்த்தைகளில் மீண்டும், மீண்டும் குழப்பத்தையும், சந்தேக, குதர்க்க, எகத்தாள வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரின் எதிர்வினையாளர்கள்.

இந்த முறை உதிர்க்கப்பட்ட முக்கியமான பஞ்ச் ஆன்மீக அரசியல் செய்வேன்! என்பதாகும். அதைப் புரிந்துகொள்ள முடியாமல் மீடியா கேட்ட கேள்விக்கு, 'ஆன்மிக அரசியல் என்பது நியாயமான, தர்மமான அரசியல்' என்று அதே சூட்டில் சுருக்கமாக தெரிவித்திருக்கிறார் ரஜினி.

என்றாலும் இதன் அர்த்தம் நம் மக்களுக்கு புரிபடுவது சிக்கலாகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட அரசியல் தலைகளுக்கும், அறிவு ஜீவிகளுக்கும் கூட புரிதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அடுத்தடுத்து வந்த ஒவ்வொருவரின் அனர்த்த வெளிப்பாடுகள் காட்டுகிறது. எல்லோருமே கோனார் நோட்ஸ் வைத்து பொழிப்புரை பகிராத குறைதான்.

''இது காந்தியம் முன்னெடுக்கும் அரசியலே. ஆன்மிகம் என்பது வேறு, மதம் என்பது வேறு. மதம் சார்ந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நேசிப்பவர்கள். ஆனால், ஆன்மிகம் அரசியலை விட்டு வேறுபட்டு இருக்கிறது. உலகத்தில் உள்ள அனைவரையும் அன்பினால், அரவணைத்துக் கொள்வதுதான் ஆன்மிகம். அந்த ஆன்மிகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். எனவே, ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. தவறுகளுக்கு, குற்றங்களுக்கு இடம் கிடையாது. ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த், காந்திய வழியில் தடம் பதிக்கிறார் என்றுதான் பொருள்!'' என்கிறார் ரஜினியின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ள தமிழருவி மணியன்.

''ரஜினி ஆன்மிக அரசியல் என்பதன் மூலம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது சாதியவாதிகளோடு, மதவாதிகளோடு கைகோக்கப் போவதில்லை. அதே சமயம் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேரப் போவதில்லை. பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்கு துணை போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாகத் தெரிய வருகிறது. அதன் மூலம் கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அணிதிரட்ட விரும்புகிறார். அவருடைய 'ஆன்மிக அரசியல்' மத வாதத்திலிருந்து வேறுபட்டது, விலகி நிற்கக்கூடியது. அதை எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்!'' என்று இதற்கு அர்த்தம் தேட முயல்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

இவர்கள் எல்லாம் இப்படிக் கூறினாலும், குழம்பினாலும் தப்பில்லை. ஆனால் ரசிகர்களே இந்த விஷயத்தில் ரொம்பவும் குழப்பமடைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

''ஆன்மிக அரசியல் என்று சொன்னது கூட பிரச்சினையில்லை. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் புதுக்கட்சி கண்டு, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 4 வருஷம் நாங்கள் அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? இடையில் மக்களவைத் தேர்தலுக்கு என்ன செய்வது. அதற்குள் தமிழ்நாட்டில் ஆட்சி கவிழ்ந்து மக்களவைத் தேர்தலுடனே சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால் என்ன செய்வது? அரசியல் குளத்தில் கட்சி ஆரம்பித்த பின்புதான் குதிக்கப் போகிறோம். அது வரை அந்த அரசியல்ங்கிற குளத்தில் நீங்கள் குதிக்க வேண்டாம். நீந்த வேண்டாம். அதில் குதித்தவர்கள் நீந்தட்டும். அந்த அரசியல் குளத்தில் நீந்துபவர்கள் பேசும் பேச்சுக்கும், செயலுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். கமெண்ட் கூட அடிக்க வேண்டாம். மீடியாவிடம் பேச வேண்டாம். நான் உட்பட இதே நிபந்தனைதான் என்கிறார். இது எந்த மாதிரியான அரசியல். இவர் சொல்வது போல் நடந்தால் அரசியல் நடத்த முடியுமா?'' என நான் சந்தித்த ரசிகர்கள் பலரும் சந்தேகத்தை கொட்டித் தீர்த்தார்கள்.

ஒரு சிலர் இன்னொரு உச்சத்திற்குப் போய் ரஜினியின் குரலுக்கு எதிர்வாதம் கொடுத்த அரசியல்வாதிகளைப் போலவே, ''2.0, காலா படத்தை ஓட வைப்பதற்காகத்தான் இந்த திட்டமோ. பிறகு கட்சிக்கு கதம், கதம் சொல்லி விடுவாரோ?'' என்று கூட சில ரசிகர்கள் கேட்டார்கள்.

இது எந்த அளவுக்கு சரி. அரசியல்வாதிகளானாலும், அறிவுஜீவிகளானாலும், ரசிகர்களானாலும் ஒரே நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருக்க, ரஜினி மட்டும் வேறொரு திசையில் பயணிக்கிறார் என்பதையே இது காட்டுவதாக என்னளவில் உணர்கிறேன்.

வேறொரு திசையில் என்பது ரஜினிக்கு சமகால அரசியல் தெரியாது என்பது அர்த்தமல்ல. ரஜினியின் அரசியல் சமகால அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை என்றுதான் இதை உணர முடிகிறது. அந்த தெரிவை ரஜினி உணர்ந்துதான் திட்டுமிட்டுப் பேசுகிறாரா, அல்லது உணராமலே பேசுகிறாரோ, ரஜினியின் இயல்பே இதுதானோ என்றும் அவர் அரசியலை இன்னமும் புரிந்த கொள்ள முடியவில்லை. அதற்காக அதில் ஊடுருவும் நுட்த்தை உரசிப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அதை முதலில் இங்கே விளக்கி விடுகிறேன்.

'ஆரிய மாயை' என்ற நூல் அண்ணாதுரை எழுதியது. இந்நூலில் பிராமணர்களையும், பிராமண அரசியலையும் கடுமையாக சாடுவதாக விமர்சனங்கள் எழுந்து வன்முறையை தூண்டுகிற நூல் என்பதற்காக சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு சிறைதண்டனை கூட அளிக்கப்பட்டது வரலாறு.

அதிலிருந்து புறப்பட்ட திராவிட நாடு, தனித்தமிழ்நாடு கோஷங்கள்தான் திமுகவை வளர்த்தெடுத்தது. ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தியது. திமுக, அதிமுக, தேமுதிக என திராவிடம் என்ற பெயர் இல்லாமல் கட்சிகள் இல்லை ஆளும் கட்சிகள் இல்லை என்ற நிலை 1969 முதல் இன்று வரை தொடர்கிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் தொடங்கி நேற்றைய ஜெயலலிதா வரை திராவிடக் கட்சிகளால் தமிழ்நாடு என்ன பாடுபட்டிருக்கிறது என உரசிப் பார்த்தும் பல நூல்கள் எழுதப்பட்டது. அதில் ஆர்யமாயைக்கு எதிர்வினையாக 'திராவிடமாயை' என்ற தலைப்பில் கூட நூல்கள் வெளிவந்தன.

இன்றைக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் 2 ஆண்டுகளில் அது பொன்விழாவை கொண்டாட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய மாயையில் உழன்று கிடந்த தமிழகம், அடுத்ததாக 50 ஆண்டுகள் திராவிட மாயையில் அமிழ்ந்து கிடந்த மாநிலம் அடுத்தாக ஆன்மிக மாயையில் (கவனிக்க ரஜினியின் 2021ல் தேர்தல் அறிவிப்பு) திகழப்போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியானால் ஆரியத்தில், திராவிடத்தில் உழன்றதற்கு மாற்றாக மக்களை ஆன்மிக ரீதியில் கொண்டு போக, அல்லது ஆன்மிகத்தை விரும்பும் பெருவாரி மக்களை தன்னகத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் ரஜினி என்றே எண்ணத்தோன்றுகிறது.

சரி ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன வித்தியாசம்?

கொஞ்சம் மூளையை கசக்கிப் பாருங்கள். ரஜினி பேசிய பேச்சிலேயே அதற்கான அர்த்தம் ஆழமாகப் புலப்படும். ஆரியம் சாதி, மத பேதங்களுடன் வேற்றுமைகளை கற்பித்து நகர்ந்தது. அதை உடைத்து பிராமண, சத்திரிய, வைஷ்யர்களை தாண்டி, திராவிடம் சூத்திரனையும் அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது. இருந்தாலும் சமூக நீதியும், சமத்துவமும் இங்கே நடைபயில ஆரம்பித்து விட்டதா? இல்லையே!

பெரிய பதவிகள் அரசாங்க பதவிகள் அடைந்தவர்கள் பெரும்பாலும் அவர்கள் எந்த சாதிசமயத்தைச் சார்ந்தவர்களானாலும் புதிய ஷத்திரியர்களாகவும், புதிய பிராமணர்களாகவுமே உருவெடுத்துள்ளார்கள். அவர்களால் அடிமட்டத்தில் உள்ளவர்கள் நொறுக்கப்படுவதே இந்த ஆட்சி அதிகாரங்களால் நடந்து வந்துள்ளது. எந்த இடத்திலும், 'வாடின பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்!' என்ற வள்ளலாரின் கருணையுடனும், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் நானொன்றியேன் பராபரமே!' என்ற தாயுமானவரின் பரிவுடனும் ஒருவரும் ஆட்சி செய்யவில்லை என்பதை உணர்த்த வருகிறார். அப்படிப்பட்ட ஆன்மிக அரசியலையே சாதி கடந்து, மதம் கடந்து தான் நிலைநாட்ட இருப்பதாக, அதைச் சொல்லிலும், செயலிலும் கூட உணர்த்துகிறார் என்றே தோன்றுகிறது.

எப்படி?

பேசித் தெளிவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in