Published : 18 Dec 2023 04:50 PM
Last Updated : 18 Dec 2023 04:50 PM

செங்கோட்டை முழக்கங்கள் 54 - ‘இளைஞர்களின் நூற்றாண்டு’ | 2000 

இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், தமது உரைகளில் நேர்மறைச் செய்திகளை மட்டுமே தருவது என்பதில் குறியாக இருந்தார். இரண்டு நூற்றாண்டுகளின் சந்திப்பில் பிரதமராக இருந்த வாஜ்பாய் ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கதவைத் தட்டுகிறது என்று நம்பிக்கை ஊட்டினார்.

15 ஆகஸ்ட் 2000 டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் வாஜ்பாய் ஆற்றிய சுதந்திர தின உரை இதோ: இந்த சுதந்திர தின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் எங்கே இருந்தாலும் - இமயமலைச் சிகரங்களில், இந்தியப் பெருங்கடலின் கரைகளில், ராஜஸ்தான் பாலைவன மணலில், வடகிழக்கு பசுமைக் காடுகளில் எங்கிருந்தாலும் எனது வாழ்த்துகள் உங்கள் அனைவரையும் வந்து சேரட்டும். இன்று ரக்க்ஷா பந்தன் திருவிழாவும் கூட. நட்பின் சக்தி, ஒரு மெல்லிய கையால் நெய்யப்பட்ட நூலையும் கூட தகர்க்க முடியாத உறவாக மாற்றும் வல்லமை கொண்டது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், உங்கள் அனைவருக்கும், குறிப்பாக எனது சகோதரிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

இது, புதிய நூற்றாண்டின் முதல் சுதந்திர தினம். கடந்து சென்ற நூற்றாண்டை திரும்பி பார்க்கும் போது தோன்றுகிறது - புதிய நூற்றாண்டின் சவால்களை வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ள நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நமது சுதந்திரம் என்றென்றும் நிலைக்க வேண்டும். நமது தேசத்தைப் பாதுகாக்கத் தீர்மானித்ததை மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். புனிதமான நினைவுகளுக்கான நாள் இது. நம்மை உள்நோக்கிப் பார்த்துக் கொள்கிற ஒரு தருணம். நாம் அறிந்த மற்றும் அறியாத தியாகிகளுக்கு நமது மனமார்ந்த நன்றிகளைப் படைக்கிறோம். இவர்களின் தியாகம் பற்றிய நினைவு நமது நெஞ்சில் எப்போதும் வாழும். அவர்கள் செய்த தியாகங்கள் நம்மை வழிநடத்தும்.

குறிப்பாக இன்று மகாத்மா காந்தியை நினைவு கொள்கிறோம். அவர், விடுதலைப் போராட்டத்தின் முன்னணித் தலைவர் மட்டுமல்ல; இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர்களில் அவர் ஒருவர்.இந்த மகிழ்ச்சியான நாளில் உலக நாடுகளில் உள்ள அத்தனை மக்களுக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். 21-ம் நூற்றாண்டு, அமைதி சகோதரத்துவம் ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உலகம் முழுமைக்கும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகிறோம்.

உலக நாடுகளில் வாழும் லட்சக் கணக்கான அயல்நாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மக்களுக்கு நமது நல்வாழ்த்துகள். அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் இந்தியாவுடன் உணர்ச்சிகர உறவு கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் வெற்றி பெற வளமாக வாழ வாழ்த்துகிறோம்.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்கள் மறுவரையறை செய்யப்பட்டு புதிதாக மூன்று மாநிலங்கள் இந்திய வரைபடத்தில் இடம் பிடித்துள்ளன. இந்த மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள். புதிய மாநிலங்களான சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஜார்கண்ட் ஆகிய விரைவில் இந்திய ஒன்றியத்தில் தனக்கென ஓர் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த மூன்று மாநிலங்களை உருவாக்கி, நாம் கொடுத்த உறுதி மொழியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு வளர்ச்சிக்காக நாம் இணைந்து பாடுபட்டு பிரகாசமான வெற்றி உதாரணங்களாக இவை வளர வேண்டும்.

புதிய நூற்றாண்டு - இளைஞர்களின் நூற்றாண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் இந்தியாவும் இப்போது இளைய தேசமாக உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 25 சதவீதம் பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த இளைய ஆண்கள் பெண்கள் - முந்தைய தலைமுறையை விட அதிக லட்சியம், அதிக விழிப்புணர்வு, அதிக சுறுசுறுப்பு மிக்கவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பெரிதாக சிந்திப்பது மட்டுமல்ல; தங்கள் கனவுகளை நினைவாக்கக் கடுமையாக உழைப்பவர்களும் கூட. இந்திய இளைஞர்களிடம் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தமக்கும் தாய் நாட்டுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் (முனைந்துள்ள) இளம் ஆண்கள் பெண்களுக்கு முழு ஆதரவு தருவது நமது பொறுப்பு ஆகும்.

அன்பான நாட்டு மக்களே.. இந்த செங்கோட்டை தளத்திலிருந்து உங்களிடம் கடந்த ஆண்டு நான் உரையாடிய போது நமது நாடு ஒரு அசாதாரண சூழலில் இருந்தது. மக்களவை கலைக்கப்பட்டது; (மீண்டும்) புதிதாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் கார்கில் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஓர் ஆண்டு கழித்து நாட்டில் ஜனநாயகம் மேலும் வலிமை அடைந்தது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்தது. உலகத் தலைநகரங்களில் நமது குரல் கவனமாக கேட்கப்படுகிறது. இந்தியா வளர்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி நடை போடுகிறது.

எதிரிப்படைகளை விரட்டி அனுப்பிய துணிச்சல் மிக்க நமது வீரர்கள், விமானப் படையினர் போன்று எல்லா பாதகங்களுக்கு எதிராகவும் வெற்றி பெற மனஉறுதி கொண்ட இந்தியா இது. கார்கில் மற்றும் பிற போர்களின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு எப்போதும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

இந்தியாவுக்கு எதிராக, அறிவிக்கப்படாத போர் மூலம் எதையும் பெறலாம் என்று பாகிஸ்தான் நினைத்தால், அது தனக்குத்தானே மிக மோசமாக ஏமாற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தியாவின் பிரிக்கப்பட முடியாத ஓர் அங்கம் காஷ்மீர். இனியும் இப்படித்தான் இருக்கும். கடிகாரத்தை பின்பக்கமாய் சுழற்ற (கடந்த காலத்தைத் திருப்பிக் கொண்டு வர) இயலாது என்பதை நமது அண்டை நாட்டார் உணர வேண்டும். பாடலாசிரியர் சாகிர் லூதியான்வி எழுதிய இந்த வரிகளை மனதில் கொள்ளுமாறு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மற்றும் மக்களை அறிவுறுத்துகிறேன்:
அந்தக் காலம் போய்விட்டது அந்த யுகம் போய்விட்டது இரு தேசங்கள் என்பது முழக்கமாக இருந்தபோதே, பிரிவினையை நோக்கமாய்க் கொண்ட அந்த மக்கள் போய்விட்டார்கள்! இன்று - எல்லா இந்தியரும் ஒன்று. இந்தியா இதை அறியும் உலகம் இதனை அறியும்.

மதத்தின் பெயராலோ வாளின் வலிமையாலோ எல்லைகளை மாற்றி அமைப்பதை 21-ம் நூற்றாண்டு அனுமதிக்கவில்லை. இந்த யுகம் - பிரச்சினைகளை தீர்ப்பதற்கானது; சண்டைகளை வளர்ப்பதற்கானது அல்ல. லடாக், ஜம்மு காஷ்மீர் மக்கள் வன்முறையில் ரத்தம் சிந்துதலில் நொந்து போய் உள்ளனர். அவர்கள் அமைதிக்காக ஏங்குகிறார்கள். ஜம்மு காஷ்மீரின் காயமற்ற பகுதி மீது சகோதரத்துவம் என்கிற களிம்பை பூச விரும்புகிறோம். அதனால்தான் சமீபத்தில் சொன்னேன் - மனித சட்டங்களுக்கு உட்பட்டு நாம், காஷ்மீர் காயத்துக்கு மருந்து பூச வேண்டும். தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, அமைதி வழிமுறையை மீண்டும் தொடங்க, யார் தடம் புரள வைத்தார்கள் என்பதை உலகம் அறியும். இந்த முயற்சிகளை முறியடித்தவர்கள் யார் என்பதையும் உலகம் அறியும்.

ஒருபுறம், பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளதாகப் பாகிஸ்தான் கூறுகிறது. மறுபுறம், வன்முறை, கொலைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும் அமைதிப் பேச்சுக்கான முன்னெடுப்புகளும் ஒன்றாய்ப் பயணிக்க முடியாது. வறுமை பயங்கரவாதம் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தைக் கடுமையாக கையாளும் திறனை, இந்தியாவின் விருப்பத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. ஒரு மகத்தான தேசத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும். நம்மைப் போன்று மிகத் தொன்மையான மிகப் பெரிய இத்தனை மக்கள் கொண்ட பன்முக வளமை கொண்ட வேறொரு நாடு; ஜனநாயகம் ஒற்றுமை கலாச்சாரம்.. இவற்றைப் பேணிக் காத்து, நவநாகரிக, வளமிக்க நாடாக விரைந்து முன்னேறும் வேறொரு நாடு - உலகில் இல்லை. நமது முயற்சியில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளோம். நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவும் இந்த வெற்றிக்குப் பங்களித்து உள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியா இரண்டு பெரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது - பாதுகாப்பு, முன்னேற்றம். இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. பாதுகாப்பு இல்லாமல் வளர்ச்சி இருக்க முடியாது; வளர்ச்சி இல்லாமல் நமது பாதுகாப்பு முழுமை அடையாது.

நாட்டின் முன் உள்ள பொருளாதார சவால்களை சந்திக்க வைராக்கியத்துடன் முயல வேண்டும். நமது முன்னேற்ற செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும்; விரைவுபடுத்த வேண்டும். இந்தியத் தாயின் புதல்வர் யாரும் உணவு வீடு வேலை மருத்துவ வசதி இல்லாமல் வருந்தக் கூடாது. மண்டல சமூக சமமின்மையை நீக்க வேண்டும். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களை முன்னேற்ற செயல்பாடுகளில் சம பங்குதாரர் ஆக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்தப் பத்தாண்டை வளர்ச்சிக்கான பத்தாண்டாக மாற்ற உறுதி கொள்வோம். இந்த இலக்கை எட்டுவதற்கு, அடுத்த 10 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை சாதிக்க வேண்டும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற நமது பொருளாதாரத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. நமது நிர்வாகம் நீதித்துறை கல்வி மற்றும் பிற துறைகளையும் சீர்திருத்த வேண்டி உள்ளது. சீர்திருத்தம் - காலத்தின் தேவை. கடந்த 50 ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறிவிட்டது; இந்தியாவும் தான். உலகம் முழுவதும், அரசியல் பொருளாதாரத் துறைகளில் நீண்டகால மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சீர்திருத்தம் என்றால், தவிர்க்கப்பட முடியாத மாற்றத்தை வளர்ச்சித் திசைக்குத் திருப்புவது; வளர்ச்சி என்றால், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது.

உதாரணத்துக்கு, எரிசக்தித் துறையில் மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் சீர்திருத்தங்களைப் பார்க்கலாம். இதன் மூலம் மின்வாரியங்கள் சந்தித்து வரும் இழப்புகள் குறையும்; மின்சாரத் திருட்டு தடுக்கப்படும்; உற்பத்தி, அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இதேபோன்று டெலிகாம் துறையில் நாம் செயல்படுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் குறைந்த விலையில் தொலைபேசிகள் கைப்பேசிகள் இணைய சேவைகள் நாடு முழுதும் கிடைக்கும்.

நமது பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி அச்சப்பட வேண்டாம்; கலவரப்பட வேண்டாம். எனக்கு நினைவு இருக்கிறது - பசுமைப் புரட்சியின் போது கூட சிலர் இவ்வாறு அச்சங்களை வெளிப்படுத்தினர். இந்த அச்சங்கள், அடிப்படை அற்றவை என்பது பின்னர் நிரூபணம் ஆனது.

பொருளாதார சீர்திருத்தம் பற்றிய நமது பார்வை நமது சொந்த கருத்துரு (concept) அடிப்படையில் அமைந்தது. மத்தியிலும் வெவ்வேறு மாநிலங்களிலும் அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வழிகளில் பொருளாதார சீர்திருத்த திட்டங்களைப் பின்பற்றியுள்ளன. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக ஒருமித்த கருத்தை உருவாக்க நமது விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிவுகளை அழைக்கிறேன்.

இது தொடர்பாக, எல்லா மத்திய தொழிலாளர் சங்கங்களுக்கும் எனது சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த சங்கங்களின் தலைவர்களை சந்தித்தேன். ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் திட்டமிட்டு இருந்த தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றனர். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில், நமது தொழிலாளர்களின் நலன் முழுவதுமாக கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த ஆண்டு, நமது பொருளாதார, சமூக முன்னேற்றத்தை விரைவுபடுத்த, இதன் பயன்கள் பெரும்பான்மை மக்களைச் சென்று சேர, பல பெரிய முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுக்க இருக்கிறது. வேகமாக வளரும் மக்கள் தொகை இருந்தாலும் நமக்கு உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை உறுதி செய்த நமது விவசாயிகளைப் பாராட்டுகிறேன். இன்று உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை; உண்மையில் இவற்றை சேமித்து வைக்கும் வசதியில்தான் பற்றாக்குறை இருக்கிறது.

சுதந்திரம் பெற்றதில் இருந்து முதன் முறையாக தேசிய வேளாண் கொள்கை வடிவமைத்து இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் வேளாண் உற்பத்தி 4 சதவீதம் அதிகரிப்பதை இந்தக் கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது. வேளாண் துறையில் குறைந்து வரும் முதலீடுகளை அதிகரிக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுதந்திர இந்தியாவின் முதன் முறையாக, கிராமப்புற சாலைகளுக்காக நன்கு பரிசீலிக்கப்பட்ட கால வரம்புக்கு உட்பட்ட திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது முற்றிலும் 100 சதவீதம் மத்திய அரசின் திட்டம். 'பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டம்', அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமமும் நல்ல சாலை வசதி பெறும். அடுத்த ஏழு ஆண்டுகளில், 500-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் அனைத்தும் நல்ல சாலைகளால் இணைக்கப்படும். இந்த திட்டத்துக்காக முதல் ஆண்டில் மத்திய அரசு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இவ்வாண்டு காந்தி ஜெயந்தி அன்று இந்த திட்டம் தொடங்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் - ஒரு கனவுத் திட்டம். டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னையை இணைக்கும் நான்கு வழி தங்க நாற்கரச் சாலை 2003 வாக்கில் தயாராகி விடும். வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு சாலைத்தொடர், 2007 வாக்கில் தயாராகி விடும்.

கதர் கிராமத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. பொருளாதார சீர்திருத்தத்தின் பலன்கள் இவர்களைச் சென்று அடைய வேண்டும். இந்த மாதம் 30-ம் தேதி சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்களின் தேசிய மாநாடு நடைபெற இருக்கிறது. அங்கே பல முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தியா தகவல் தொழில் நுட்பத்தில் வலுவான சக்தியாக உயர்ந்து இருக்கிறது. 2008 வாக்கில், மென்பொருள் ஏற்றுமதியில் மட்டும் ரூபாய் 2 லட்சம் கோடி அளவுக்கு நமது வணிகம் இருக்கும் இன்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத்தின் பலன்கள் சாமானியர்களைச் சென்று சேர, கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. வரும் காலத்தில் இன்னும் பல நல்ல முடிவுகளை எடுக்கும். எத்தனை விரைவில் இயலுமோ அத்தனை குறுகிய காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பள்ளியிலும் கணினி வசதி இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்வோம்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு குடிசையும் தூய குடிநீர் பெறுவதை உறுதி செய்வோம். இந்தத் திட்டத்துக்காக இவ்வாண்டு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இது (திட்டம்) தீவிரமாக செயல் படுத்தப் படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, ஒருங்கிணைந்த தேசிய சுகாதாரக் கொள்கை (Integrated National Health Policy) அறிவிக்கப் படும். 'அனைவருக்கும் சுகாதாரம்'
(Health for all) என்பதே இதன் இலக்கு. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆரம்ப சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்வதே இந்தக் கொள்கை.

சமீபத்தில், வேகமாகப் பரவும் எச்ஐவி எய்ட்ஸ் நோய் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் சமூகத்தில் எல்லாப் பிரிவினரும் பங்கு கொள்ளுமாறு அழைக்கிறேன். (தீய) பழக்கங்கள் ஏதும் இருப்பின், அதனை மாற்றிக் கொண்டாலே இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி.. அதற்கு உரித்தான முக்கியத்துவம் பெறும்.

ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறுவதை உறுதி செய்வதே இந்தியாவின் எதிர்காலத்துக்கான பெருமதிப்பு மிக்க முதலீடு ஆகும். 2010 வாக்கில், ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் எட்டாம் வகுப்பு வரை (கட்டாயம்) கல்வி பெறும். இந்த இலக்கை எட்டுவதற்காக Sarva Shiksha Abhiyan (எல்லாருக்கும் கல்வி இயக்கம்) தொடங்கி இருக்கிறோம். பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு கல்வி இலவசம் ஆக்கி இருக்கிறோம். எல்லா வறிய குடும்பங்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிவில் தொழில்நுட்பம் தான் பொருளாதார வளர்ச்சியின் பிரதான இயந்திரம். பொருளாதார வளர்ச்சிக்கான ஒவ்வொரு வண்டியிலும் இந்த இயந்திரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றுகிற விதத்தில் கல்விக்கும் தொழிலுக்கும் உள்ள இடைவெளி (gap between academia and industry) குறைவதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. ஒளிமயமான எதிர்காலம் இந்தியாவின் கதவுகளைத் தட்டுகிறது. ஆனாலும், நமது தேச ஒற்றுமை சமய சார்பின்மை சமூக நல்லிணக்கம் மற்றும் ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பு முறை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு (நல்ல) எதிர்காலம் அமையும்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. மிகப் பெரிய அளவில் பூகோள வேற்றுமைகள் (geographical diversities) மொழி வேற்றுமைகள், சமய வேற்றுமைகள், கலாச்சார பண்பாட்டு வேற்றுமைகள் கொண்டுள்ளோம். இத்தனை வேறுபாடுகள் இருந்தும் அல்லது இத்தனை வேற்றுமைகள் இருப்பதனால், இந்தியா எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறது. (Despite these diversities or perhaps because of them, India has always remained united.)

நாம் - ஒன்றில் பல; பலதில் ஒன்று. (We are one in many, and many in one) இன்றல்ல; பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த அதிசயத்தை இந்தியா வெற்றிகரமாகத் தக்க வைத்து இருப்பதைக் கண்டு மொத்த உலகமும் வியந்து போகிறது. உலக நாடுகளுக்கு இது மேஜிக் ஆக இருக்கலாம்; ஆனால் இந்தியர்களுக்கு - இதுதான் வாழ்க்கை! (This may be magic for the rest of the world; but, for Indians, it is life itself.)

சகிப்புத்தன்மை இன்மையும் வெறுப்பும் இந்தியாவின் சுதந்திரமான கலாசாரத்தில் இருந்ததே இல்லை. கற்பனையாக எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் என்று எல்லா நம்பிக்கைகளின், எல்லா சாதிகளின் மக்களையும் வேண்டுகிறேன். ( I appeal to people of all faiths and castes not to create imaginary enemies) தன்னைத் தானே ரணமாக்கும் வாளைப் பயன்படுத்தும் பாதையில் செல்லாதீர்கள் என்று வேண்டுகிறேன்.

சமீபத்தில் சில இடங்களில் விரும்பத் தகாத சில சம்பவங்கள் சமூக அமைதியை நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தி உள்ளது. சமூக பாகுபாடு அல்லது வன்முறையைத் தூண்டும் அல்லது பரப்பும் எந்த அமைப்பின் நடவடிக்கைகளையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது.

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் கூறியது போல, சமூகநீதி இல்லாமல் இந்த சுதந்திரம் முழுமை அடையாது. புதிய நூற்றாண்டில் இந்தியாவுக்கு இன்னும் அதிக சமூகநீதி தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமையை (Samajik Samarasata) மேம்படுத்தும் சமூகநீதி (Samajik Nyay) தேவைப்படுகிறது.
பட்டியலின, பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, இடஒதுக்கீட்டுக் கொள்கை, சமூகநீதியை உறுதி செய்கிற முக்கியமான ஒன்று. ( The policy of reservations is one of the important guarantors of social justice for Scheduled Castes, Scheduled Tribes, and Other Backwars Classes.) சில காலமாக இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் மீதம் (தொய்வு) (backlog in reservations) இருந்து வருகிறது. சமீபத்தில் சாசனத்தில் திருத்தம் செய்தோம்; இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டோம்.

பெண்கள் - நமது சமூக அமைப்பு முறை மற்றும் கலாசாரத்தின் முதுகெலும்பு. பெண்கள் கல்வி, பொருளாதார வளமை, அரசியல் அதிகாரம், சமூகத்தில் இன்னமும் பெரிய பங்கு பெற்றால் மட்டுமே இந்தியாவின் எதிர்காலம் பற்றிய நமது கனவு நிறைவேறும்.

நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாய் உறுதிமொழி தந்துள்ளோம். இந்தப் புரட்சிகர எண்ணத்தைச் செயல்படுத்த, விரைவில் கருத்தொற்றுமை ஏற்படச் செய்ய வேண்டும். 'ரிசர்வ்' இடங்களில் வென்று பஞ்சாயத்துகளில் நகர சபைகளில் உறுப்பினர்களாக தலைவர்களாக பொறுப்பேற்றுள்ள பல பெண்களை சந்திக்கும் வாய்ப்புகள் பல எனக்குக் கிட்டியது. தங்களது செயல்பாடுகளின் மூலம் இவர்கள், நிர்வாகத்திலும் ஜனநாயக நடைமுறையிலும், தான் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் முன்னேற்றத்தில், இந்த தேசத்தின் வாழ்க்கையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. பல்வேறு தடைகளால் இங்கே, வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தடைகளை நீக்கி முன்னேற்றத்துக்கான நடைமுறைகளை விரைவுபடுத்த பிரதம மந்திரி அலுவலகத்தில் ஒரு சிறப்புப் பிரிவு (special cell) உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பு பிரிவு உன்னிப்பாகக் கண்காணிக்கும். இந்த மண்டலத்தில் உள்ள மக்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் நிலைமை மேம்பட்டு வருகிறது.

வன்முறையைத் தூண்டுகிற தீவிரவாத இயக்கங்கள், வடகிழக்கு மண்டலத்தின் விரைந்த வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக இருப்பது வருத்தம் தருகிறது. இந்த பயனற்ற, ஆபத்தான பாதையை விட்டு விலகி வருமாறு இந்த அமைப்புகளின் தலைவர்களை பின்தொடர்வோரை (followers) வேண்டிக் கொள்கிறேன். தற்போது, இந்த மண்டலத்தில் உள்ள சில அமைப்புகளுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. இந்த முயற்சிகள் பயன் தரும், வடகிழக்குப் பகுதியில் அமைதியும் வளர்ச்சியும் நிலை நாட்டப் படும் என்று நம்புகிறேன்.

இந்தியா - மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். ஒவ்வொரு இந்தியரின் வீட்டுக்கும் வளர்ச்சியின் பயன்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிகாரப் பரவலில் நாம் உறுதி கொண்டுள்ளோம். மாநிலங்களுக்கு இன்னும் அதிக நிதி, நிர்வாக அதிகாரங்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம். இந்த அதிகாரப் பரவலாக்கல் மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளும் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறோம். இதன் மூலம் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அதிக திறன் பெறும். இந்த திசையில் நாம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உயர் மட்டத்தில் ஊழலுக்கு எதிரான நமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவோம். நிர்வாகத்திலும் பொது வாழ்விலும் தூய்மை இல்லையேல் நாட்டு முன்னேற்றத்தில் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியைப் பெற முடியாது.

நமது நாட்டின் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்று - தங்களுக்குள் கூட்டு முயற்சியால் தீர்த்துக் கொள்ள முடிகிற பிரச்சினைகளைக் கூட அரசுதான் தீர்த்து வைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். என்ன இருந்தாலும் அரசிடம் ஓரளவுக்கே வளங்கள் (resources) இருக்கின்றன. மேலும், மக்களின் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளைத் தருவது இல்லை என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு மக்கள் தொகைக் கட்டுப்பாடு, இயற்கைப் பேரிடரைக் கையாளுதல், தண்ணீர் அல்லது மின்சாரத்தை சேமித்தல், பொது இடங்களை தூய்மையாக அழகாக வைத்திருத்தல்... இவையெல்லாம், நமது மக்கள் உற்சாகமாய் பங்கேற்று முறையாக ஈடுபட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே.. 21-ம் நூற்றாண்டின் முதல் சுதந்திர நாளில், பெருமை மிக்க நமது கடந்த காலத்தில் இருந்து உற்சாகம் பெறுவோம். ஆனால், கடந்த காலப் பெருமைகளில், கடந்த காலப் பிரச்சினைகளில் தேங்கி விட வேண்டாம். நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன் - எதிர்காலத்தின் சவால்களில் வாய்ப்புகளில் நமது கவனத்தைத் திருப்புவோம்.

வாருங்கள் - எதிர்காலத்தை நோக்குவோம். வளமான, சுயசார்பு கொண்ட, தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்குவோம். உண்மையில் நாம் ஏற்கனவே இந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டோம். இந்த திசையில் மேலும் முன்னேறிச் செல்வோம். வெற்றிகரமான நாடுகளின் பட்டியலில் நம்மை ஏற்கனவே (உலக மக்கள்) பார்க்கத் தொடங்கி விட்டனர். இனி நாம் நிற்கத் தேவையில்லை. உண்மையில் நமது பயணத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

மகிழ்ச்சியான வளமான இந்தியாவை உருவாக்கப் பங்களிக்குமாறு விவசாயிகளை தொழிலாளர்களை கைவினைஞர்களை பணியாளர்களை இளைஞர்களை... குடிமக்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இந்திய தொழிலதிபர்கள் (சர்வதேச) போட்டியில் (சந்தையில்) யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை வெளிக்காட்ட, அவர்களின் நிபுணத்துவம் மற்றும் செயல்திறன் (எனும்) கொடியை மேலேற்ற வேண்டுமாய்த் தொழில் முனைவோரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாபெரும் பணியில் முழுமையாய்ப் பங்களிக்குமாறு அயல்வாழ் இந்தியர்களை வேண்டுகிறேன்.

தமது நாடும் தாங்களும் பிரகாசமான நற்பெயரைப் பெற்றிடும் வகையில் அறிவில், அறிவியலில் புதிய உயரங்களை எட்ட நமது விஞ்ஞானிகளை பொறியாளர்களைத் தூண்டுகிறேன். (வேண்டுகிறேன்) சர்வதேச விளையாட்டு அரங்குகளில் நமது மூவண்ணக் கொடியை வெற்றி மேடைக்குக் கொண்டு செல்லுமாறு இந்தியாவின் விளையாட்டு வீரர்களை வேண்டுகிறேன். அடுத்த மாதம் சிட்னியில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற இருக்கும் நமது அணிக்கு ஒட்டுமொத்த தேசத்தின் நல்வாழ்த்துகள்!

வாருங்கள் - Parishrami Bharat (உற்சாக உழைப்பு இந்தியா) Parakrami Bharat (பராக்கிரமம் / சாதனை புரியும் இந்தியா) Vijayi Bharat (வெற்றி காணும் இந்தியா) உருவாக்க நாம் அனைவரும் நம் ஆற்றல் முழுதையும் அளிப்போம். எல்லாக் காலங்களிலும் நமது கோட்பாடு இதுதான்: சேர்ந்து நடப்போம்;
ஒரே குரலில் பேசுவோம்; நமது இதயங்கள் சேர்ந்து இயங்கட்டும்.

Let us walk together;Let us speak in one voice;
Let our hearts beat together. அதாவது, ஒவ்வொருவரையும் அரவணைத்துக் கொண்டு, எல்லாரும் இணைந்து, ஒற்றுமையாய் முன்னேறுவோம். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக ஆக்குவோம். இதுவே நமது உறுதி. இதுவே நமது வேட்கை. நன்றி. ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x