

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிக் கடனில் தமிழக அரசால் வழங்கப்படும் மானியம், ஊக்குவிப்பு சலுகைகள் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் க.ராசு.
#மூலதன மானியத்தில் அதிகபட்ச மானியம் எவ்வளவு?
அனைத்து குறு, சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களில் அமைக்கப்படும் தளவாட இயந்திர மதிப்பில் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம்வரை முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மகளிர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் தொழில் முனைவோராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 5 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
#மானியம் பெறத் தகுதியில்லாத தொழில் என எதுவும் உள்ளதா?
ஆம். குறு, சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களில் மானியம் பெறத் தகுதியில்லாத தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. சாராய வடிப்பு தொழில்கள், சர்க்கரை ஆலை மொலாசஸ் (கரும்புக் கழிவு), பிரித்தெடுக்கப்பட்ட எரிசாராயம் இவற்றை மூலப்பொருளாக கொண்டு மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள், கனிமச் சுரங்கம் மற்றும் கனிமம் வெட்டி எடுக்கும் நிறுவனம், புகையிலை சார்ந்த தொழில்கள், அனைத்து வகை மர அறுவை ஆலை, சிமென்ட் ஆலை, அலுமினியம் உருக்காலை, கால்சியம் கார்பைடு, இறைச்சி நிறுவனங்கள், பட்டாசு தொழில், கோழிப் பண்ணைகள் மற்றும் அரசால் அவ்வப்போது அறிவிக்கக்கூடிய தொழில்களுக்கு மானியம், ஊக்குவிப்பு மானியம் வழங்கப்படுவதில்லை.
#மானியம் பெறத் தகுதியான நிறுவனங்கள் எவை?
தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமைக்கப்படும் குறு, சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களான மின் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், தோல் மற்றும் தோல் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணம் தயாரிப்பு நிறுவனம், மாசுக் கட்டுப்பாடு உபகரணம், விளையாட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் தொழில்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
#குறு, சிறு, நடுத்தர தொழிலில் இடம்பெறும் சேவை நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா?
இல்லை. உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மட்டும் குறு, சிறு, நடுத்தர தொழில் கொள்கை 2006-ன்படி மானியம் வழங்கப்படுகிறது. சி.டி.ஸ்கேன், ஜெராக்ஸ், கணினி பழுதுபார்த்தல் போன்ற சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
(மீண்டும் நாளை சந்திப்போம்)