Last Updated : 02 Dec, 2023 01:01 PM

 

Published : 02 Dec 2023 01:01 PM
Last Updated : 02 Dec 2023 01:01 PM

Bigg Boss 7 Analysis: வார இறுதிக்கு கன்டென்ட் தந்த விஷ்ணு vs அர்ச்சனா வார்த்தைப் போர்!

நிக்சனின் கேப்டன்சி வாரத்தில் பெரிய அளவில் பஞ்சாயத்துகள் எதுவுமின்றி சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில், கடந்த இரண்டு நாட்களாக அனல் பறக்கிறது. காரணம் விஷ்ணு - அர்ச்சனா இடையிலான வாக்குவாதம். வார இறுதியில் கமல் பேசுவதற்கு கன்டென்ட்டே இல்லாமல் இருந்த நிலையில், கடைசி இரண்டு நாளில் இருவரும் கன்டென்ட்டை வாரி வழங்கினர்.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் பிக்பாஸ் டீமை குறைகூறிய நிக்சனுக்கு வித்தியாச வித்தியாசமாக டாஸ்க்குகள் வழங்கப்பட்டன. காலை நேரத்தில் கொடுக்கப்படும் ஆக்டிவிட்டியில் ஒரு சூப்பர்பவர் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, முதலில் வந்த விஷ்ணு, அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார். ஆனால் அவர் ‘அஞ்சலி பாப்பா’ என்று குறிப்பிடுவது அர்ச்சனாவைத்தான் என்பது அர்ச்சனா உட்பட அனைவருக்குமே புரிந்தது. இங்கிருந்துதான் இருவருக்குமே புகைச்சல் தொடங்கியது. அதுமட்டுமின்றி தன் பேச்சின் இடையே ‘பொளீர் பொளீர்’ என்று வார்த்தையால் அடிப்பேன் என்று விஷ்ணு கூறியது அர்ச்சனாவுக்கு கடும் கோபத்தை கிளப்பிவிட்டது.

ஸ்மால் பாஸ் வீடே இரண்டாகும் அளவுக்கு இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். சுற்றிநின்ற யாரும் பேச்சுக்கு கூட இருவரையும் தடுக்கவரவில்லை. இந்த சண்டையில் யாராவது ஒருவர் சற்று வாயை மூடியிருந்தாலே சண்டை அப்போதே முடிந்திருக்கும். ஆனால் இருவருமே கடுமையான சொற்களை பயன்படுத்தி மாறி மாறி பேசிக் கொண்டிருந்ததால் வளர்ந்து கொண்டே சென்றது. சமாதானப்படுத்த வந்த விசித்ராவையும் கூட அர்ச்சனா சட்டை செய்யவில்லை. மாறாக ‘உங்களுக்கு நடக்கும்போது நீங்க வேறுமாதிரி பேசுவீங்க” என்று எகிறினார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஹரிஷ் கல்யாண் கொடுத்த ஸ்டாரை எப்படி பிரிப்பது என்று நடந்த பேச்சுவார்த்தையிலும் அர்ச்சனா - விஷ்ணுவுக்கு முட்டிக் கொண்டது. முன்பை விட மிக கடுமையான வார்த்தைகளை இருவரும் பயன்படுத்தினர். விஷ்ணு அர்ச்சனாவை ‘வேஸ்ட்’ என்று சொன்னதும், பதிலுக்கு அர்ச்சனா குப்பைக் கூடையை தூக்கிக் காட்டியதும் குழாயடி சண்டையே தோற்றுவிடும் அளவுக்கு இருந்தது.

மறுநாள், பாத்ரூம் கிளீனிங் தொடர்பாக விஷ்ணு மீது சில புகார்களை அர்ச்சனா, வீட்டின் இந்த வார தலைவர் நிக்சனிடம் கூற, அதை பக்கத்திலிருந்து அரைகுறையாக கெட்ட பூர்ணிமா, அப்படியே விஷ்ணுவிடம் வந்து ஒப்புவித்தார். சும்மாவே சிலம்பம் எடுத்து ஆடும் விஷ்ணு இதை பிடித்துக் கொண்டு விட்டார். உடனடியாக நிக்சனை கையோடு அழைத்துச் சென்று பாத்ரூமை காட்டி தன்னுடைய வேலையில் குறைகள் இல்லை என்பதை நிரூபிக்க முயன்றார். ஏற்கனவே வாராவாரம் கமலிடம் டோஸ் வாங்கிக் கொண்டிருக்கும் பூர்ணிமாவுக்கு இது கடுப்பை கிளப்பியிருக்க வேண்டும்.

உடனடியாக விஷ்ணுவிடம் சென்று, தான் ‘ஃப்ரெண்ட்லி’ ஆக சொன்னதை எதற்காக நிக்சனிடம் சென்று கேட்டீர்கள் என்று கடுமையான கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருந்தார். இது குறித்து விஜய் வர்மாவிடம் பூர்ணிமா புலம்பியதை விஷ்ணு ரசிக்கவில்லை. தனியாக அழைத்து இனிமே நாம பேசிக் கொள்ளவேண்டாம் என்று ‘பிரேக்-அப்’ செய்தார்.

இந்த சண்டையில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றும்விதமாக ஷாப்பிங் டாஸ்க்கில் தோற்றவர்களில் ஆறு பேர் இரண்டு இரண்டு பேராக சேர்த்து கயிறால் கட்டப்படுவார்கள் என்று அறிவித்தார் பிக்பாஸ். அதற்கான நபர்களின் பெயரையும் அவரே சொன்னார். அர்ச்சனா - விஷ்ணு, மாயா -மணி, கூல் சுரேஷ் - விசித்ரா என யாரெல்லாம் பஞ்சும் நெருப்புமாக இருக்கிறார்களோ அவர்களையே தேர்ந்தெடுத்தார். அவரது எண்ணம் பலிக்கவும் செய்தது.

கயிறை கட்டும்போது விஷ்ணுவிடம் நல்லவிதமாக பேச முயற்சித்த அர்ச்சனாவை வேண்டுமென்றே ‘நீங்க கம்முன்னு இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல’ என்று சீண்டினார். கயிறை யாராவது கழட்டினால் கட்டப்படும் நபர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக உயரும் என்று ஒரு புதிய கன்டென்ட்டை பிக்பாஸ் கொடுக்க, அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் கயிறை கழட்டினார் மாயா. அவரை அடுத்து அர்ச்சனாவும் கயிறை கழட்டி வீசினார். இதனால் மாயா - மணியுடன் தினேஷும், விஷ்ணு - அர்ச்சனாவுடன் பூர்ணிமாவும் சேர்த்து கட்டப்பட்டனர்.

இதில் அமைதியாக இருந்த அர்ச்சனாவிடம் மீண்டும் தேவையில்லாமல் பேசி வம்பிழுத்தார் விஷ்ணு. ஹிரோயின்னு சொல்லிட்டு வில்லி மாதிரி நடந்துக்குற என்று விஷ்ணு சொன்னதும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதைப் போல கடும் ஆக்ரோஷமானார் அர்ச்சனா. வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அங்கு வந்த ரவீனா, இருவரிடமும் ‘சண்டை போடுங்க.. ஃப்ரெண்ட்ஸா எல்லாம் ஆகிடாதீங்க’ என்று சொன்னது அர்ச்சனாவை மேலும் டென்ஷன் ஆக்கியது. இந்த களேபரம் நடந்து கொண்டிருக்கும்போது மாயா, மணி, தினேஷ் மூவரும் அங்கு வந்து சேர்களை போட்டு அமர்ந்து படம் பார்ப்பது போல செய்தது அநாகரீகம். வழக்கமாக நியாயமான விஷயங்களை முன்வைக்கும் தினேஷும் கூட இதை செய்தது சரியல்ல.

எல்லாம் ஒட்டுமொத்த அழுத்த, கயிறை மீண்டும் வீசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் அர்ச்சனா. இனிமேல அழமாட்டேன்னு என்று சவால் விட்ட அவர், வெளியே வந்து கட்டுப்படுத்த முடியாமல் அழுதது, பரிதாபமாக இருந்தது. மீண்டும் வந்து விஷ்ணு சமாதானப்படுத்த முயன்றபோதும் அவரிடம் எடுபடவில்லை. இந்த வாரம் விசித்ராவின் மாற்றம் கவனிக்க வேண்டியது. அர்ச்சனா வீட்டுக்கு வந்த முதல் வாரத்தில் மாயா குரூப்பிடம் இருந்து அவருக்கு பாதுகாப்பாக இருந்த விசித்ரா தற்போது தலைகீழாக நடந்து கொண்டிருப்பது விநோதம். மருந்துக்கு கூட அவர் சமாதானம் செய்யவோ, சண்டையை தடுக்கவோ முன்வரவில்லை. மாறாக ‘அர்ச்சனா கேமரா பார்த்து நடிக்கிறா’ என்று விஷ்ணுவிடம் அவர் பேசியது ரசிக்கத்தக்கதாக இல்லை. எந்த சீசனிலும் இல்லாத வகையில், இந்த சீசனில்தான் போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே வாரம் ஒரு அவதாரம் எடுக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்தால் ஒருமாதிரியும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தால் வேறு மாதிரியும் நடப்பது அடிக்கடி நடக்கிறது.

விஷ்ணு - அர்ச்சனா, தினேஷ் - மாயா என யார் பக்கமும் பேசமுடியாமல், அல்லாடிக் கொண்டிருந்த நிக்சனை பார்த்துதான் பரிதாபமாக இருந்தது. உண்மையில் எபிசோடின் கடைசில் நடந்த சம்பவங்கள் மனதை கனமாக்கக்கூடியதாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் தனியாக ‘பிக்பாஸ் டைட்டில் விக்ரம்’ என்று தனக்குத்தானே விக்ரம் சொல்லிக் கொண்டதை டிவியில் பார்த்ததை விஷ்ணு, கூல் சுரேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். இதை வெளியில் இருந்து காதில் வாங்கிய விக்ரம், அதற்கு எதுவும் ரியாக்ட் செய்யாமல் தன் அருகில் அமர்ந்திருந்த அனன்யாவிடம் ‘என்னை எல்லாம் இவங்க ஒரு ஆளாவே மதிக்கிறதில்லை போல’ என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னதை பார்க்க பாவமாகத்தான் இருந்தது. விக்ரமின் மீது பரிதாபம் கொண்ட அனன்யா, அவருக்காக கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அந்த மூவரும் விக்ரம் மற்றும் அக்‌ஷ்யா குறித்து கிண்டலடித்துக் கொண்டே இருந்தனர்.

பார்க்கப் போனால் விக்ரம் ஒரு திறமையான போட்டியாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சீசன் தொடங்கிய இத்தனை நாட்களிலும் விக்ரம், அக்‌ஷ்யா உள்ளிட்டோர் இதுவரை மற்றவர்கள் குறித்து பின்னால் பேசியதோ, கன்டென்ட்க்காக அடுத்தவரை பலிகடா ஆக்கியதோ இல்லை. உண்மையில் மற்றவர்கள் அனைவரும் கன்டென்ட், கேம் பிளான் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த போது கூட அவர்கள் அவர்களாகவே கடைசி வரை இருந்தனர். அநேகமா இந்த சம்பவமே கூட விக்ரமுக்கான ஆதரவை வரும் நாட்களில் அவருக்கு வழங்கலாம். அதற்கேற்றபடி அவரும் ஆட்டத்தை புரிந்து கொண்டு சரியாக ஆட முயற்சிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x