Published : 20 Jan 2018 08:27 PM
Last Updated : 20 Jan 2018 08:27 PM

ரஜினி அரசியல்: 13-ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறாரா?

‘’என் கடமைகளை நான் ஒழுங்காக செய்ய வேண்டும். யாரையும் துன்புறுத்தாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், எந்த ஆசைகளையும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம். எனக்கு மிகவும் பிடித்த வாசகம் 'Happiness begins when ambition ends'. ஆக, அபிலாஷைகள் குறையக்குறைய, நிம்மதி, சந்தோஷம் அதிகமாகிறது. வாழ்க்கை ஒரு புத்தகம். அதன் முதல் சில பக்கங்களும், இறுதியில் சில பக்கங்களும் காணாமல் போயிருக்கின்றன. அவற்றைத் தேடுவதுதான் வாழ்க்கை. அதாவது நாம் எங்கிருந்து வந்தோம்; எங்கே போகப் போகிறோம் என்று நமக்கு தெரியாது. அதை அறிய முயல்வதுதான் வாழ்க்கை, ஃபிலாசஃபி, தத்துவம். அதை அறிய முயல்பவன்தான் தத்துவ ஞானி, ஃபிலாசபர். காணாமல் போன பக்கங்களைப் பற்றி கவலைப்படாமல், கிடைக்கிற பக்கங்களை மட்டுமே படிப்பவன் மனிதன், சாதாரண, சராசரி மனிதன்’’ என்றார் ரஜினி.

நீங்கள் சொல்லும் நிம்மதி உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா?

ஓ. பர்ஃபெக்டா இருக்கு.

இன்றைய சமூகத்தில் வன்முறை அதிகரிக்க, சினிமாவும் ஒரு காரணம். உங்கள் படங்களில் வன்முறை அதிகமாக உண்டு. வன்முறை கூடாது என்று சொல்லும் ரஜினிகாந்த் மறைமுகமாய் சமுதாயத்தின் வன்முறைக்கு காரணமாகிறாரே?

சினிமா என் தொழில். வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நான் என்னுடைய உணர்ச்சிகளை, கொள்கைகளை சொல்ல, அடுத்தவர்கள் எடுக்கும் சினிமாவை பயன்படுத்திக்கொள்வது நியாயமில்லையே. நான் நினைப்பதை செயல்படுத்தணும்னா துறவியா இமாலயத்திற்குத்தான் போயாகணும். படங்களில் வன்முறை இருப்பது உண்மைதான் ஆனால் அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடவில்லையே. வன்முறையின் முடிவில் நடப்பது நல்லவைதானே.

இது இப்படி என்றால் 1989-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு பேட்டி:

ஆர்.எம்.வீரப்பனுடன் நெருக்கம் பாராட்டுகிறீர்கள். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவியைப் போய் ரகசியமாக சந்திக்கிறீர்கள். கருணாநிதி பிறந்தநாளன்று முதல்வர் நிவாரண நிதி கொடுக்கிறீர்கள். எல்லா கட்சிகளுக்கும் நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா?

கருணாநிதி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்றதும், நிதி வழங்கறதும் என் கடமை. ஆர்.எம்.வீ படங்களில் அவர் அமைச்சராக இருந்தப்பவும் நடிக்கிறேன். இப்பவும் நடிக்கிறேன். அது தொழில். ஜெயலலிதாவை நான் பார்த்ததா சொல்றது பொய் சார். அவங்களை நான் பார்க்கவே இல்லை!.

தமிழ்நாடு உங்கள் கனவுகளை பல மடங்கு நிறைவேற்றியிருக்கிறது. இந்த நாட்டுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?

ஆண்டவன் தமிழ் ரசிகர்கள் வடிவத்தில் தமிழ் மக்கள் வடிவத்தில் வந்து என் மேல் அன்பையும், செல்வத்தையும் பொழிஞ்சு என்னை இவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கார்னு நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு சோஷியல் சர்வீஸ் மாதிரி என்னால் முடிஞ்சதை செய்வேன். அதைப் பத்தி யோசிச்சுட்டிருக்கேன். ஆனால் நான் என்ன செஞ்சாலும் அரசியல் மூலமா இருக்காது.

நீங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்த உங்களுடைய இன்னொரு பக்கத்தைப் பற்றி, உங்களுடைய மைனஸ் பாய்ண்ட் பற்றி சொல்லுங்களேன்?

என்ன, முன்னாலெல்லாம் ரொம்ப கோபம் வரும். இப்போ வர்றதில்லை. யாராவது கோபப்பட்டா கை நீட்டி அடிச்சிடுவேன். இப்போ எல்லாம் அடங்கிடுச்சு. சுவிட்ச் ஆப் பண்ணின பிறகு சுத்திகிட்டிருக்கிற ஃபேன் மாதிரி வாழ்க்கை ஓடிட்டிருக்கு. தண்ணி அடிக்கிறதை மட்டும் நிறுத்த முடியலை. ஆனா குறைச்சிருக்கேன்.

கருணாநிதியைப் பாராட்டும் ரஜினி ஜெயலலிதாவைப் பாராட்டியதே இல்லையா? என்று எல்லோருக்கும் கேள்வி எழலாம். ஏன் இல்லை. இதோ ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு திரைத்துறையினர் நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சிக்கு முதல்வர் வருவதற்கு முன்பே கமல், சரிகா வந்து இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர். மனைவி லதாவோ அரங்கில் நுழைகிறார். கமலை நெருங்குகிறார். லதாவைப் பார்த்த கமல் எழுந்து தன் இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு, அடுத்த இருக்கையில் அமர்ந்து கொள்ள இடம் இல்லாததால் ரஜினி மெல்ல பின்வரிசைக்குப் போகிறார். உடனே சரிகாவும் எழுந்து பின்வரிசைக்கு செல்ல, லதாவும் அவரைத் தொடர்ந்து செல்ல அந்த இருக்கைகளில் ரஜினியும், கமலும் அருகருகே அமர்ந்து கொள்கின்றனர்.

உடனே ஆட்டோகிராப் கேட்டு ரஜினியை ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். முதலில் தயங்கிய ரஜினி, பின்னர் பலர் வற்புறுத்த, எல்லோருக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கிறார். கையோடு ஆட்டோகிராப் புத்தகத்தை கமலிடமும் கொடுத்து அவரிடமும் ஆட்டோகிராப் வாங்கிக் கொடுக்கிறார். அதனால் ரஜினியிடம் ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கு போனஸாக கமலின் ஆட்டோகிராப் கையெழுத்தும் கிடைக்கிறது. பின்னர் ரஜினியும், கமலும் சீரியஸாக ஏதோ பேசிக் கொள்கின்றனர். சற்று நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்து விடுகிறார். ரஜினிக்கு அருகில் அவருக்கான ஸ்பெஷல் சோபா போடப்படுகிறது. முதல்வர் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ளும்போதெல்லாம் அந்த விழா நடக்கும் அரங்கத்தினுள் இந்த ஸ்பெஷல் சோபா கொண்டு வந்து போடப்படுவது வழக்கமாக இருந்தது.

ரஜினி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு வணக்கம் சொல்ல, பதில் வணக்கம் தெரிவிக்கிறார் முதல்வர். அதன்பின்னர் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. விழாவில் எல்லாக் கலைஞர்களும் பேசிய பின்னர் ரஜினி பேச அழைக்கப்படுகிறார். ரஜினியின் பேச்சு அப்போது முக்கியத்துவமாய் கருதப்பட்டதாலோ என்னவோ, அதற்கு முன்னர் பேசிய கமல் தனது பேச்சை வெகுசீக்கிரமாகவே முடித்துக் கொண்டார். ரஜினி பேச எழுந்த போது, முதல்வர் உட்பட அனைவரின் முகங்களிலும் ஆர்வம் பிரகாசிக்கிறது. குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அமைதி பூண்ட அரங்கில் ரஜினியின் பேச்சு ஒலிக்கிறது.

''இது ஆண்கள் உலகம். ஆண் என்றாலே ஆணவம் நிறைந்தவன்னு அர்த்தம். அதனாலதான் ஆண் என்றே சொல்கிறோம். இதுல ஒரு பெண்மணி போராடி எதிர்ப்புகளை சமாளிச்சு இந்த அளவுக்கு உயர்ந்திருக்காங்கன்னா அது புரட்சியில்லையா? புரட்சித்தலைவிங்கிற பேர் அவரைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும்? இந்த மாதிரி ஒருவர் நம்ம வீடான சினிமாவிலிருந்து போயிருக்கிறது நமக்கு எல்லாம் பெருமை இல்லையா?'' என்று பஞ்ச் இன்ட்ரோ கொடுத்த ரஜினி அடுத்ததாக சீரியஸ் பேச்சுக்கு தாவுகிறார்.

''என்னைப் பற்றி இப்போ பலவிஷயங்கள் பலவிதமா பேசப்படுது. எல்லோருக்கும் ஒண்ணு தெரியும். நான் யாருக்கும் பயப்படறவன் இல்ல. உண்மை. மனசாட்சி, ஆண்டவன். இதுக்குத்தான் பயப்படுவேன். போயஸ் கார்டன்ல எனக்கு ஏராளமான பிரச்சினை, தொந்தரவுன்னு எல்லாம் பேப்பர்ல செய்தியா வருது. சத்தியமா சொல்றேன். எனக்கு அங்கே எந்த பிராப்ளத்தையும் யாரும் தர்றதில்லை. பத்திரிகைகாரங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். நீங்க அறுபது சதவீதம் உண்மையை வச்சுட்டு, அதுக்கு மேலே கொஞ்சம் அப்படி, இப்படி வேண்ணா சேர்த்தி எழுதிக்குங்க. ஆனா ஒரு சதவீதம் கூட உண்மையில்லாத ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டு அதை நூறு சதவீதம் உண்மைன்னு சொன்னா, அது நூறு சதவீதம் பொய்னு ஆகுது. உண்மை ஒரு நெருப்பு மாதிரி. அதை யாராலயும் அழிக்க முடியாது. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. உலகத்துல எனக்கு விரோதிகள் யாரும் இல்லை. ஒருத்தரை தவிர. அந்த விரோதி நானேதான். நான் அரசியலுக்கு வரப்போறேன்னு கொஞ்ச நாளா செய்திகள். கமல், விஜயகாந்த், பிரபு இவங்களையெல்லாம் விட்டுடறாங்க. என்னைப் புடிச்சிக்கிறாங்க. நிம்மதியா இருக்கிற என்னை டென்ஷன் பண்றாங்க. என்னடா இவன் ரொம்ப சுலபமா கொண்டையில தாழம்பூ, கூடையில குஷ்புன்னு பாடிட்டு லட்ச, லட்சமா சம்பாதிச்சுட்டு போயிடறானேன்னு பொறாமையில அந்த மாதிரி பண்றாங்க!'' என்றார்.

ஒரு கட்டத்தில், ''நான் சொல்றேன்னு இங்கே உள்ளவங்க யாரும் தப்பா எடுத்துக்கக்கூடாது. ரொம்ப அதிகமா தப்பு பண்றவங்களை ஆண்டவன் அரசியல்ல போட்டுடறான். எனக்கு அரசியல்ல வர விருப்பம் இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. சஞ்சய்காந்திதான் பிரதமர் ஆவார்னு நினைச்சோம். ராஜீவ் காந்தி வந்தார். அரசியலை விட்டே ஒதுங்கி நினைச்ச நரசிம்மராவ் பிரதமர் ஆக வேண்டியதாப் போச்சு. நேத்து நான் பஸ் கண்டக்டர். இன்று சூப்பர் ஸ்டார். நாளை என்னவோ. ஆனா, அதே நேரம் ஆண்டவா என்னை எந்தச் சூழ்நிலையிலும் அரசியல்ல விட்டுடாதேன்னுதான் நான் வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்துட்டா நிம்மதி போயிடும். அதிகாரத்துக்கு வந்துதான் நல்லது செய்யணும்னு இல்லை. அதுக்கு வராமலே நல்லது செய்ய முடியும். அரசியல்ங்கிறது புலிவாலை புடிச்ச மாதிரிதான். அதை விட்டுட்டா நமக்குத்தான் ஆபத்து. முதல்வர் அவர்களே. உங்களுக்கு எதிரா புலி இல்லை. பல புலிகள் இருக்கு. நீங்க எச்சரிக்கையா இருக்கணும்!''.

பேசித் தெளிவோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x