Published : 03 Jan 2018 04:22 PM
Last Updated : 03 Jan 2018 04:22 PM

ரஜினி அரசியல்: 5 - ‘சூப்பர் ஸ்டாராக’ நானிருந்தால்!

கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் 'முதல்வராக இருந்தால், பிரதமராக நானிருந்தால், மேயராக இருந்தால்...!' என வரும் பேட்டிக் கட்டுரைகளை மூன்று கல்லூரி மாணவ- மாணவிகளை பேட்டி எடுத்து கட்டுரையாக எழுதி அனுப்பிவிட்டேன். அவை தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்களில் அச்சிலும் வந்தன. அதேபோல 'ரஜினியாக நானிருந்தால்' என்ற தலைப்புக்கும் ஒரு கல்லூரியை அணுகி அங்குள்ள மாணவ மாணவிகளைப் பேட்டி கண்டேன்.

அந்த மாணவ- மாணவிகள் தன்னை ரஜினியாக கற்பிதம் கொண்டு கேலி, கிண்டல், ஏளனத் தன்மையுடனே கொட்டித் தீர்த்திருந்தார்கள்.

உதாரணமாக, 'இந்த வயசுல சின்னப் பொண்ணுகளை கதாநாயகியா போட்டு நடிக்க மாட்டேன். அதிலம் ஐஸ்வர்யாராய் கூட நடிக்க ஆசைப்பட மாட்டேன்!', 'இனிமே கதாநாயகனாக நடிக்க மாட்டேன். நடிச்சாலும் தாத்தா வேஷத்துலதான் நடிப்பேன்!', 'அரசியலில் இப்படியெல்லாம் வாய்ஸ் கொடுக்க மாட்டேன். கொடுத்து விட்டு இமயமலைக்கு ஓடிப்போய்விட மாட்டேன்!' இப்படியே அவை நீண்டன. இவர்கள் கொடுத்த பேட்டிகளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்து என் அலுவலகத்திற்கு அனுப்பியும் விட்டேன்.

ஆனால் அந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படவில்லை.

மாறாக தொலைபேசியில் அழைத்தார் அப்போது எனக்கு துணை ஆசிரியராக இருந்தவர். அவரும் தற்போது மிகப் பிரபலமாகியிருக்கும் பத்திரிகையாளர், எழுத்தாளர்தான்.

'என்ன ஐயா. ரஜினி எவ்வளவு பெரிய சக்தி. அவரைப் பற்றி மாணவ-மாணவிகளிடம் ஆக்கபூர்வமான பேட்டி எடுத்து அனுப்புவீங்கன்னு பார்த்தா இப்படி அனுப்பியிருக்கீங்களே. சரியா?' எனக் கேட்டார்.

நான் அவரின் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. 'மாணவர்கள் எல்லோருமே இப்படித்தான் பேசறாங்க. யாருக்குமே ஆக்கபூர்வமா ரஜினியை பற்றி சொல்லத் தெரியலை. அதுதான்!' என்ற போது, அவர், 'அவங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அவங்களை நம்மதான் மோட்டிவேட் செய்யணும். ரஜினியை கிண்டலடிக்கிறது இந்த கட்டுரையோட நோக்கமல்ல. இன்னைக்கும் தமிழ் சினிமாவுல அவர்தான் சூப்பர் ஸ்டார். சினிமாதான் பெரிய ஊடகம். அதில் வரும் கருத்துப் பரிமாற்றமே பெரிய சக்தி. இன்றைக்கும் கோடானு கோடி ஜனங்க ரசிக்கிற ஒரே நடிகரா, சூப்பர் ஸ்டாரா இருக்கும்போது, அவர் தான் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், சமுதாயத்தை மாற்றக்கூடிய அளவில் ஏதாவது நினைத்தால் என்னவெல்லாம் செய்யலாம். அதை மாணவர்கள் மூலமா கொண்டு வாங்க. அதை மற்றவர்களும் புரிஞ்சுக்கணும். ரஜினி கூட அதைப் படிச்சு அறிஞ்சு தன் திரைப்படத்தில் அதைக் கொண்டு வரணும்!' என்றெல்லாம் குறிப்பிட்டார்.

அந்த காலகட்டத்தில் அவர் சொன்னது பெரிசாக படவேயில்லை. ரஜினியை முன்வைத்து இந்த சமுதாயத்தில் எதுவுமே செய்ய முடியாது. அவர் மூலம் தமிழ் சினிமா வர்த்தகம் நடக்கிறது. அதைப் புரிந்து அவரும் நடிக்கிறார். அந்த வர்த்தகத்திலிருந்து மாறி வந்து சமுதாயத்திற்கு நல்லது செய்வார். செய்ய முடியும் என்பதை நம்பவே என் மனம் மறுத்தது. என்றாலும் எனக்கு உத்தரவிட்டவர் சீனியர் அல்லவா? அவர் சொன்ன மாதிரியே திரும்ப அதே கல்லூரிக்குச் சென்று மாணவர்களைப் பேட்டி கண்டேன். அனுப்பினேன். அதுவும் நக்கல், நையாண்டித் தனத்துடனே அமைந்திருந்தது.

'இல்லே இதுவும் சரியா வரலை. அபத்தமா இருக்கு. உங்களுக்குள்ளேயே ரஜினி என்கிற மனிதர் இப்படிச் செய்வதற்குப் பதிலா இப்படி செஞ்சிருக்கலாமேன்னு சிந்திக்கிற அளவுக்கு அவரைப் பற்றி (ரஜினியை) பற்றிய நல் அபிப்ராயம் இல்லைன்னு நினைக்கிறேன்!' என்றார்.

அவர் அப்படி சொன்னவுடனே ஒப்புக்கொண்டேன். அன்றைக்கு (20 வருடம் முன்பு) நானே ரஜினியின் நடிப்பையும் கேலியாகவும், கிண்டலடிக்கும் பார்வையிலான மன நிலையில்தான் இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் என் பட்டறை பணிக்கால நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் பட்டறையில் என்னுடன் பணிபுரிந்தவர் என்றாலும் பல்வேறு வார பத்திரிகைகளுக்கு சிரிப்புத் துணுக்கு, தகவல் துணுக்கு, வாசகர் கடிதங்கள், வாசகர் கேள்விகள் என எழுதிக் கொண்டிருந்தவர். அவர் எழுதுவது அச்சில் வருவதைப் பார்த்துதான் வானொலியில் மட்டுமே கதைகள் எழுதிக் கொண்டிருந்த நான் பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தேன். அப்படிப்பட்ட அந்த நண்பர் தீவிர சினிமா பிரியர். அதிலும் ரஜினி படங்கள் என்றால் விடவே மாட்டார். எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்வார். அன்றைக்கு டீக்கடையில் டீ சாப்பிடும்போது அன்றுதான் பார்த்து வந்த ரஜினி படத்தை பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். தவிர அன்று பார்த்த படத்தை மட்டும் 6 முறைக்கு மேல் பார்த்துவிட்டதாக பெருமை பொங்கிட சொன்னார். எனக்கோ சரி கடுப்பு.

'எப்படி ஒரு பத்திரிகை விமர்சகராக, தீவிர இலக்கிய வாசிப்பாளராக இருந்து கொண்டு பத்தாம் பசலித்தனமான ரஜினியின் படங்களை ரசிக்கிறீர்கள். அதிலும் அந்த படங்களை ஆறேழு தடவை பார்க்கிறீர்கள்' என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்.

அவர் என்னை விட இளையவர்தான். ரொம்ப பொறுமையாக இருந்தார். நான் உணர்ச்சி கொந்தளித்த பிறகு பேசினார். 'நீங்க ரஜினி படங்களே பார்க்க மாட்டீங்களா?' எனக் கேட்டார். 'பார்த்திருக்கிறேன். அதற்காக இப்படி வெறித்தனமாக பார்த்ததில்லை!' என்றேன்.

'நீங்க பார்த்த ரஜினி படங்கள் சில சொல்லுங்கள்!'என்றார்.

'பதினாறு வயதினிலே, அவர்கள், பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கியோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி...!' என சொல்ல ஆரம்பிக்க அவர் இடைமறித்தார்.

'நீங்க கதை உள்ள, அர்த்தமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கிறீங்க. நான் அப்படியில்ல. ஒரு ஜாலிக்காக பார்க்கிறேன். எத்தனையோ கடன் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, கம்பெனி பிரச்சினைன்னு அழுந்திக் கிடக்கிற நான் சினிமா தியேட்டருக்குள்ள நுழைஞ்சு படம் பார்க்க உட்கார்ந்தா ரஜினி படம் மட்டும்தான் ரெண்டரை மணி நேரம் போறது தெரியாம ஜாலியா போகுது. லாஜிக் இடிக்கிற விஷயங்களை ஒதுக்கி வச்சுட்டு என்டர்டையின்மென்ட் மட்டுமே நோக்கமா வச்சு அந்த படங்களைப் பாருங்க. நம்ம கஷ்டமெல்லாம் பறந்து போகும். அதுதான் என்னை அவர் படத்துல ஈர்க்குது. மற்றபடி நான் எந்த இடத்திலும் ரஜினி ரசிகர் அல்ல!' என்றார் அழுத்தமாக.

பிறகு, 'இப்ப பேச்சுக்கு சொல்றேன். 'பாட்ஷா' படம் நான் சொன்ன கண்ணோட்டத்துல இப்ப போய் பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும். அது மட்டுமில்ல, அதை தொடர்ந்து பார்த்தாலும் சலிக்காது!' என்றார்.

நான் அப்படிப் போகவில்லை. என்றாலும் அந்த நண்பரின் வாதம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள வைத்தது. நாடகக் கலைஞருக்கும், திரைப்படக் கலைஞருக்கும் உள்ள வேறுபாடுகளை, அவர் தம் கஷ்ட நஷ்டங்களை பற்றி அண்ணாதுரை பெரிய அளவில் சொல்லியிருக்கிறார்.

அதில், 'எத்தனையோ துன்ப துயரங்களை அனுபவிக்கும் மனித மனம் ஓரிடத்தில் ஆசுவாசம் கொள்ள ஏங்குகிறது. தனக்கான துன்பங்களை, துன்பம் கொடுப்பவர்களை ஏதாவது செய்து ஒடுக்க முடியாதா? என ஏக்கமாக ஏங்குகிறது. இந்த இடத்தில் மூன்று மணி நேரம் சினிமாவுக்கு காசு கொடுத்து வரும் சினிமா ரசிகன், அங்கேயும் துன்ப துயரங்களும், ஒப்பாரிக் கூக்குரல்களும் ஒலித்தால் தாங்குவானா? அவனின் மனதுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டியதாக சினிமா அமைய வேண்டும்!' என்கிற ரீதியில் அவர் சொல்லி சென்றிருப்பார். அதைத்தான் நண்பரும் சொல்கிறார். சமூகத்தில் ரணப்பட்டு நிற்கும் மனிதனுக்கு ஒத்தடம் கொடுக்கும் வேலையை ரஜினி படம் செய்கிறதா? என்ற கேள்வி மட்டும் எனக்குள்ளேயே இருந்தது.

இது ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும், சராசரியான சினிமா ரசிகர்களுக்குமான இடைவெளியை துல்லியமாக எனக்கு உணர வைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ரஜினிக்குள்ளேயே புகுந்து பார்க்கும் நிலையை மற்றொரு சம்பவம் ஏற்படுத்தியது.

1998-2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் இருண்ட காலம் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் பல தமிழ்த் திரையரங்குகள் மூடுவிழா கண்டது. அப்படி மூடுவிழா காணும் திரையரங்குகள் ஷாப்பிங் மால்களாகவும், திருமண மண்டபங்களாகவும் உருவம் மாற ஆரம்பித்தது. எல்லோரும் சின்னத்திரைப் பக்கம் போய்விட்டார்கள். சினிமாவையும் திருட்டு விசிடியில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே சினிமாவிற்கு மட்டுமல்ல, அதை திரையிடும் திரையரங்குகளுக்கும் எதிர்காலம் இல்லை என்ற அவநம்பிக்கை சினிமா துறையினரிடம் வலுவாக ஏற்பட்டிருந்த காலம் அது.

இந்த நேரத்தில் கோவையில் மட்டும் ஸ்ரீபதி, மணியம், கீதாலயா, முருகன் என தொடங்கி பல புகழ்பெற்ற திரையரங்கங்கள் மூடப்பட்டு வந்தது. அதையொட்டி, திரையரங்கங்களுக்கு என்ன ஆச்சு? என்கிற கேள்வியுடன் ஒரு கட்டுரை தயாரிக்க, கோவையில் பிரபலமாக இருக்கும் காம்ப்ளக்ஸ் தியேட்டர் மானேஜரை அணுகினேன். அவர் திரையரங்க பொறுப்பில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர்.

அவர் திரையரங்க தொழில் நடத்துவதில் சமகாலத்தில் நடக்கும் சிக்கல்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்தார். அதில் ஒன்றாக தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கிட் கொடுக்கும் ஹீரோக்கள் நம்மிடம் இல்லை என்பதையும் எடுத்துச் சொன்னார். அதாவது எம்ஜிஆர் -சிவாஜி கணேசன் நடித்த காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றார்.

'அப்போது எம்ஜிஆர்- சிவாஜி படம் என்றால் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரமாண்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். பாடல் கேசட் வெளியிட்டவுடனே அந்த படம் சில்வர் ஜூபிளியா, கோல்டன் ஜூபிளியான்னு சொல்லி விடலாம். அதே ஹிட் கமல்-ரஜினி கொடுத்து வந்தாங்க. அதை ரஜினி கடைசி வரை தக்கவைத்து வந்தார். அவர் படம் பூஜை போட்ட நாளிலேயே பட விநியோகஸ்தர்கள் வாங்கிவிடும் சூழல் இருந்தது. அந்த அளவுக்கு அவர் படம் லாபகரமாகவே இருந்தது. கமல் படம் கூட சில சமயங்களில் ஏமாற்றி விடும். அஜித், விஜய் என்ட்ரி இப்போதுதான் நடக்கிறது. அவை படம் பேசப்பட்டால் மட்டும் ஓடும் நிலை உள்ளது. என்றாலும் இன்றைக்கு தமிழ் சினிமாவில் எப்படி பந்தயம் கட்டினாலும் ஜெயிக்கிற குதிரை ரஜினி மட்டுமே. அவரும் இப்போது நான்கு வருடமாக படங்கள் நடிக்காமல் உள்ளார். அப்படியே நடித்தாலும் ஓரிரு வருடத்திற்கு ஒரு படம் என்றே தருகிறார். இதனால்தான் திரையரங்குகள் பெட்டியை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது!' என விவரித்தார்.

எனக்கு அவர் சொன்னதில் பல விஷயங்கள் உடன்பாடு என்றாலும், ரஜினி விஷயத்தில் சிரிப்பு வந்து விட்டது. 'இது என்ன சார். ரஜினி என்கிற ஒற்றை மனிதரால் இத்தனை திரையரங்குகளின் தலைவிதியை தீர்மானிக்க முடியுமா? அவரே சினிமாவில் ஒதுங்கிக் கொண்டு விட்டது போல் தெரிகிறார். அதிலும் திமுக-தமாகாவுக்கு வாய்ஸ் கொடுத்ததன் மூலம் அரசியல் சாயம் வேறு பூசிக் கொண்டார். அதனால் அவரால் படம் ஓடுகிறது. அவர் நடிக்காததால் துவண்டு நிற்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!' என்றேன்.

நான் உணர்ச்சி பொங்கி தொடர்ந்து என்னவெல்லாமோ பேசினேன். பொறுமையாக கேட்டு விட்டு அவர் சொன்னார்:

'இன்னைக்கு தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்காங்க. எல்லோரும் ஏதாவது ஒரு படம் பூஜை போட்டுட்டுத்தான் இருக்காங்க. அதில் பாதி பேரோட படம் பெட்டிக்குள்ளேயே தூங்கிடுது. பல படங்கள் முழுசா எடுத்தும் முடிக்காம பாதியிலயே கிடக்கு. எதுக்குமே தியேட்டர்காரங்க, பட விநியோகஸ்தர்கள் படம் முடிச்சு பிரிவ்யூ ஷோ பார்க்காம படத்தை புக் பண்றதில்லை. அட்வான்ஸ் தொகை கூட கொடுக்கிறதில்லை. ஆனா, ரஜினியோட படத்துக்கு மட்டும் விதிவிலக்கு. அவர் படம் டைட்டிலே வைக்காம பூஜை போட்டாலும் சரி, டைட்டில் மட்டும் வச்சுட்டு பூஜை போடாட்டியும் சரி. உடனே பெட்டியில பணத்தைக் கட்டீட்டு தயாரிப்பாளரை நோக்கி படையெடுக்கிற ஆயிரக்கணக்கான விநியோகஸ்தர்களை நாங்க பார்க்கிறோம்.

இப்ப பேச்சுக்கு உங்களுக்காக ஒண்ணு சொல்றேன். இன்னைக்கு மூணு நாலு வருஷமா ரஜினி படமே பண்ணலை. பண்ணவும் மாட்டேங்கிறார். இந்த நேரத்துல அவர் இப்ப ஒரு படம் நடிக்கப் போறேன்னு அறிவிப்பு செய்யட்டும். படம் டைட்டில் கூட வைக்காம, பூஜை கூட போடாம, அந்த படத்தோட கோவை மண்டல உரிமையை உங்க பேருக்குன்னு ரஜினியே சொல்லட்டும். அப்புறம் பாருங்க. இந்த ஜோல்னா பை, பேனா, பேடு எல்லாம் உங்க கையில இருக்காது. இருக்கவும் விட மாட்டாங்க. உங்களைத் தேடிட்டு எத்தனை கார்கள் உங்க வீட்டு வாசல்ல நிற்குதுன்னு பாருங்க. அதுல வர்றவங்க எத்தனை கோடிகளை எத்தனை சூட்கேஸ்கள்ல அடுக்கிட்டு, 'எனக்கு இந்த ஏரியா கொடுங்க!'ன்னு கெஞ்சறாங்க பாருங்க. ஒத்தை பைசா இல்லாம, நீங்க ஒத்தை வார்த்தை உதிர்க்காம, ரஜினி உதிர்த்த ஒற்றை வார்த்தையிலயே பிரபலம் ஆயிடுவீங்க. ஓவர் நைட்ல கோடீஸ்வரராகவும் ஆயிடுவீங்க. அதுதான்ங்க ரஜினி!' என்றார்.

நான் நெளிந்தேன். அப்படி நடக்குமா? யோசித்தேன். சிந்திக்கவும் ஆரம்பித்தேன். ரஜினியின் ஒற்றைச் சொல்லுக்கு அத்தனை ஆற்றலா? அந்த ஆற்றலை கொடுத்த மக்கள் சக்தி எது? எப்படி அது அவருக்கானதாக ஆனது? எனக்குள் ரஜினியை இருத்தி ஆராய்வதை விட்டு, விட்டு ரஜினிக்குள் என்னை மூழ்க வைத்து ஆராய ஆரம்பித்தேன்.

- பேசித் தெளிவொம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x