Last Updated : 11 Nov, 2023 01:17 PM

 

Published : 11 Nov 2023 01:17 PM
Last Updated : 11 Nov 2023 01:17 PM

Bigg Boss 7 Analysis | முகத்திரைகளை அம்பலப்படுத்திய நீதிமன்ற டாஸ்க்

ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா தலைமையில் ஓரணியும், இந்த பக்கம் பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து எலியும் பூனைகளுமாக இருந்து வருவது தெரிந்ததே.

வைல்டு கார்டு என்ட்ரியான அர்ச்சனாவுக்கு முதல் ஒருவாரம் சோதனைக் காலமாக இருந்தாலும், பிரதீப்பின் வெளியேற்றத்துக்குப் பிறகு மாயா குரூப்புக்கு எதிராக சாட்டையை சுழற்றி வருகிறார். இந்த வாரம் தொடர்ந்து பின்னடவை சந்தித்து வரும் மாயா குரூப்புக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தியிருக்கிறது பிக் பாஸ் கொடுத்த நீதிமன்ற டாஸ்க்.

பிரதீப்பின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வீட்டுக்குள் கிளம்பிய விவாதங்களும் அவற்றை ஒட்டிய கூச்சல் குழப்பங்களும் கடந்த ஓரிரு நாட்களாக சற்றே தணியத் தொடங்கியது. ஆனால் விடுவாரா பிக்பாஸ். நீதிமன்ற டாஸ்க் ஒன்றை கொடுத்து அதில் போட்டியாளர்கள் ஒருவர் பிராது கொடுத்து வாதாடலாம் என்று கூறினார். தங்களுக்கு வேண்டிய நீதிபதியையும் போட்டியாளர்கள் நியமித்துக் கொள்ளலாம்.

முதல் வழக்கு விஷ்ணுவுடையது. பூர்ணிமா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். பிரதீப் பூர்ணிமாவின் உடல் குறித்து கூறிய ஒரு கருத்துக்கு மாயா சிரித்தார் என்றும் மாயா அப்படி நடந்து கொண்டடு குறித்து பூர்ணிமா தன்னிடம் முறையிட்டதையும் விஷ்ணு தனது வாதமாக எடுத்துவைத்தார். தான் அவ்வாறு நடக்கவில்லை என்பதை மாயா நிரூபித்து, விஷ்ணுவும் அதனை ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த செயல்பட்ட ரவீனா பூர்ணிமாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். ஆனால் குறுக்கே புகுந்த பிக்பாஸ், மாறி மாறி வாதங்களை எடுத்து வைப்பதற்கு இது ஒரு டிபேட் ஷோ அல்ல என்று கூறியதும், மீண்டும் வழக்கு தோண்டப்பட்டு (?) தீர்ப்பை மாற்றிக் கூறினார் ரவீனா. பூர்ணிமா, மாயா இருவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்த டாஸ்க்கில் பிக்பாஸே மூக்கை நுழைத்தது விநோதமாக இருந்தது. எப்படியோ, ‘பூர்ணிமாவை எக்ஸ்போஸ் செய்யவேண்டும்’ என்று கூறிய விஷ்ணுவின் நோக்கம் இந்த வழக்கின் மூலம் நிறைவேறிவிட்டது.

இந்த தீர்ப்புக்குப் பிறகு தனக்கு எதிராக பிக்பாஸ் சதி செய்வதாக முறையிட்டுக் கொண்டிருந்தார் பூர்ணிமா. தன்னுடைய வழக்கு குறித்து கன்ஃபெசன் அறைக்கு சென்றபோது அவர் இதனை பிக்பாஸிடமே கேட்டார். ஆனால் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. அடுத்த வழக்கு பூர்ணிமாவுடையது. ஷாப்பிங் டாஸ்க்கில் பொருட்களை எடுக்க சமையலில் ஏபிசிடி கூட தெரியாத அர்ச்சனாவை விசித்ரா அனுப்பியது தான் அவரது வழக்கு. இந்த வழக்கிலும் பூர்ணிமாவுக்கு தோல்வியே கிட்டியது. திட்டமிட்டு அர்ச்சனாவை அனுப்பவில்லை.. வாக்கெடுப்பின் அடிப்படையில்தான் அனுப்பினோம் என்ற ஸ்மால் பாஸ் வீட்டாரின் வாதத்தின் அடிப்படையில் இதில் விசித்ராவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டு வழக்குகளில் கோட்டை விட்ட விரக்தியில் 40ஆம் நாள் மாயாவும், பூர்ணிமாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மாயா ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். நம் மீதும் நிறைய தவறு இருக்கிறது. ஆனால் வார இறுதியில் கமல் சார் வந்து கழுவி ஊற்றும்போது, மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்றார். இது போன்ற சம்பவங்கள் முந்தைய சீசனில் அதிகம் நடந்திருக்கிறது. ஒருவேளை அதை பார்த்து மாயா இதனை ஒரு ஸ்ட்ராட்டஜியாக கூட நினைத்திருக்கலாம். ஆனால் கடந்த சீசனிலேயே அதனை கடுமையாக கண்டித்த கமல், இந்த வார இறுதியில் என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும்.

அடுத்த வழக்கு தினேஷ் உடையது. சீசனின் ஆரம்பத்தில் துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருந்த நிக்சன், மாயாவிடம் மாஸ்க் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு மாயா, அருகில் நின்ற பூர்ணிமாவிடம், தன்னுடைய உள்ளாடையை பெட்டியில் இருந்து எடுத்து காட்டியதாக தினேஷ் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் ப்ராவோ நீதிபதியாக செயல்பட்டார். இந்த வழக்கு குறித்து பேசிக் கொண்டிருந்தபோதே விஷ்ணு ஒன்று சொல்ல அதனை ஜோவிகா தடுக்க இருவருக்கும் கடும் வாக்குவாதம் முட்டிக் கொண்டது. பிரதீப் சென்றபிறகு விஷ்ணுவின் நடவடிக்கையில் பயங்கர மாற்றம் தெரிகிறது. வார இறுதிகளில் ஆடியன்ஸின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு தனது கேமை ஆடிவருகிறார் என்று தோன்றுகிறது. யாரை எதிர்க்கவேண்டும் யாருக்கு துணை நிற்கவேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். வழக்கமாக கத்திப் பேசும் ஜோவிகா இந்த முறை அடக்கி வாசித்தார். வாக்கு வாதத்தின் முடிவில் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவரை, மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினர்.

இந்த வழக்கில் மாயா எடுத்துவைத்த வாதம் அபத்தமானது. உள்ளாடை குறித்து தான் ஜோக் ஆக கூறியதாகவும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார். இதே விஷயத்தை வேறொருவர் செய்திருந்தால் மாயாவின் ரியாக்சன் இப்படித்தான் இருந்திருக்குமா? இதே போன்ற ஒரு கிண்டலை உங்களுக்கு மற்றவர்கள் செய்யும்போது சீரியஸாக எடுத்துக் கொள்ளும் நீங்கள், அதை நீங்கள் செய்யும்போது ஜோக் என்கிறீர்கள் என்று சரியான வாதத்தை முன்வைத்தார் தினேஷ். இந்த வழக்கிலும் மாயா அண்ட் பூர்ணிமா தோற்றது. டாஸ்க் முடிந்து வெளியே போகும்போது, தீர்ப்பு வழங்கிய ப்ராவோவிடம் வம்பிழுத்தார் பூர்ணிமா. 18+ ஜோக் அடிக்க கூடாது என்று இங்கு ரூல் எதுவும் இல்லை என்று ஆக்ரோஷமாக கூறினார். இதே வாதம் மற்றவர்களுக்கும் பொருந்தும் என்பதை அவர் யோசிக்கவில்லை. இதே காரணத்தை சொல்லித்தானே கடந்த வாரம் இவர்கள் உரிமைக் குரல் எழுப்பினார்கள்.

அடுத்தபடியாக, மணியால் ரவீனாவின் ஆட்டம் பாதிக்கப்படுகிறது என்று கூறிய நிக்சன், தற்போது ஐஷுவின் ஆட்டத்துக்கு இடையூறாக இருக்கிறார் என்பது மணியின் வழக்கு. இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த போது, நிக்சனுக்கு எதிராக மாயா சாட்சி சொல்லவந்தது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். இந்த வழக்கில் மணிக்கு வெற்றி கிடைத்தது. இப்படியாக இந்த கோர்ட் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

இந்த நீதிமன்ற டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரது முகத்திரையை அம்பலத்தி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். தான் செய்யும்போது ஒரு நிலைபாடும், அதையே அடுத்தவர்கள் செய்யும்போது ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியது இந்த டாஸ்க்கில் நன்றாகவே வெளிப்பட்டது. போட்டியாளர்கள் லேசாக சமாதானம் ஆவதற்கான சமிக்ஞைகள் தெரிந்ததும் வார இறுதிக்கு இரு நாட்களுக்கு முன்பு சரியான நேரத்தில் இப்படி ஒரு டாஸ்க்கை இறக்கியதுதான் பிக்பாஸின் ‘ஸ்ட்ராட்டஜி’.

முந்தைய அத்தியாயம்: சலங்கை கட்டி ஆடும் மாயா குரூப்... சளைக்காமல் திருப்பி அடிக்கும் அர்ச்சனா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x