Published : 01 Jan 2018 08:03 PM
Last Updated : 01 Jan 2018 08:03 PM

ரஜினி அரசியல்: 3 - அது சமுத்திரம் என்றால் இது சுனாமி!

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

சாதிகள் குறித்த விவாதம் அதில் பேசுபொருளாக இருந்தது. பேசியவர்கள் அனைவருமே சாதிகளை ஒழித்தே தீர வேண்டும் என்பதை கொடும் ஆயுதம் ஏந்தாத குறையாக கசந்து பேசித் தீர்த்தார்கள். அப்படிப் பேசுவதுதானே நியதி, நீதி, தர்மம்? கவிஞர் சிதம்பரநாதன் இதில் ஒரு படி மேலே போயிருந்தார்.

'சாதி கொசுக்களை விட மோசமானது. கொசுக்களை எந்த மருந்து அடித்துக் கொல்வது என்று எடுத்தாலும், அப்போதைக்கு அந்த மருந்துக்கு கொசுக்கள் செத்ததுபோல் பாவ்லா காட்டும். சில நாட்களில் பார்த்தால் அந்தக் கொசு மருந்தையே உட்கொண்டு அந்த கொசுக்கள் உயிர் வாழ ஆரம்பித்துவிடும். தன் வீரியத்தையும் அந்த மருந்தின் மூலமே பெருக்கிக் கொள்ளும். அது போன்றதுதான் சாதி. சட்ட திட்டங்கள், விதிமுறைகள் கடுமையாக சாதிக்கெதிராக கொண்டுவரப்பட்டாலும், அப்போதைக்கு அந்த சட்ட திட்டங்களுக்கு பயந்தது மாதிரி சாதி நடிக்கும். ஒடுங்கினதுபோல் பாவ்லா காட்டும். பிறகு பார்த்தால் அந்த சட்ட திட்டங்களையே சாப்பிட்டு உயிர் வாழ ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் இங்கே சாதிகளின் வளர்ச்சி இருக்கிறது!' என வேதனை ததும்பினார்.

கடைசியாகத்தான் பேசினார் ஜெயகாந்தன். எழுத்திலும், பேச்சிலும், சிந்தனையிலும் ஆளுமை மிக்க அவர் எப்போதுமே மற்றவரிலிருந்து மாறுபட்டுத்தான் சிந்திப்பார். ஒளிவு மறைவின்றி அதைப் பேசவும் செய்வார். அப்படித்தான் அன்றைக்கும் ஆரம்பித்தார்.

'இங்கே சாதிகள் கூடாது என்கிறார்கள். சாதிகளை பகிஷ்கரியுங்கள் என்கிறார்கள். என்னைக் கேட்டால் சாதிகள் வேண்டும் என்பேன். சாதிகளால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த சாதிகள்தான் மக்களிடம் எந்த நிலையிலும் போர்க்குணத்தை எதிர்கொள்ளலையும் மனித குலத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனிதகுலப் போராட்டத்தை விவரிக்கும்போதுதான் இலக்கிய உலகம் வாழ்கிறது. அதுவே வரலாறாகவும், எதிர்கால சந்ததிக்கான புதிய வரலாறு படைப்பதற்கான கருவியாகவும், புதிய சிந்தனைக்கான வழித்தோன்றலாகவும் காண்கிறேன். சாதிகள் இல்லாவிட்டால் நானே இப்படியான மக்கள் இலக்கியங்களை கொடுத்திருக்க முடியுமா என்றும் யோசிக்கிறேன். நிச்சயம் கொடுத்திருக்க முடியாது. அதுதான், அதற்கு எதிராக புறப்பட்ட போர்க் குணமும், தீரமும்தான் என் எழுத்துக்கு மேன்மையைக் கொடுத்திருக்கிறது!'

இப்படியாக ஜெயகாந்தனின் பேச்சு நீள, மேடையில் இருந்தவர்களுக்கும், அரங்கில் நிறைந்திருந்தவர்களுக்கும் கூட குழப்பமோ, குழப்பம். ஆனால், ஜெயகாந்தனை தெரிந்தவர்களுக்குத்தான் புரியும். எந்த இடத்திலும் சாதிகளின் ஆதரவாளர் அல்லர் ஜெயகாந்தன் என்பது. வாழ்க்கையைப் படிப்பதற்கு, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு, வாழ்க்கையைப் பற்றி புரிந்துகொள்வதற்கு, வாழ்க்கையில் போர்க்குணம் நிரம்பித் ததும்புவதற்கு சாதிகளும், அதற்கெதிரான போராட்டங்களும் கூட ஒரு வகையில் உதவி புரிகின்றன என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.

இதை சொல்வதற்காக சாதிகளை உருவாக்குதில் அக்கறை காட்டுகிறார் என்று கொள்ள முடியாதல்லவா? அது போலத்தான் ரஜினியையும், அவர் அரசியலையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் எடுத்த எடுப்பில் நாம் சுந்தர ராமசாமியையும், லா.ச.ராவையும், தனுஷ்கோடி ராமசாமியையும், ஜோடிகுரூஸ் எழுதிய நூல்களையும் படித்துப் புரிந்துகொள்ள முடியுமா? வாண்டு மாமா, முல்லைத் தங்கராசன் ஆரம்பித்து ராஜேஷ்குமார். ராஜேந்திரகுமார், தமிழ்வாணன் என பயணம் செய்துதானே அறிவுப்பூர்வமான அடுத்த கட்ட வாசிப்புக்குள் நுழைய முடிகிறது.

அப்படி நம்மை வாசிக்க வைக்க சில நூல்களும், அதன் நூலாசிரியர்களும் உதவுவது போலவே இந்த அரசியலை எளிமையாகப் புரிந்துகொள்ள, எந்த அரசியல் தேவை, எந்த அரசியல் கூடாது என்பதற்கான பாலபாடத்தை எம்ஜிஆர் தொடங்கி வைத்த அரசியலின் மையப்புள்ளி வளரும் இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துச் செல்கிறது.

ஆகப்பெரும்பான்மை மக்களுக்கு எது பிடித்தமானதாக இருக்கிறதோ, அதன் வழியிலேயே கல்வியும் அமைந்து, அதில் உள்ள சாதக பாதகங்களை அனுபவித்தால் பாதகம் நீக்கி சாதகம் ஏற்றுக்கொள்ளும் உலகு என்பதே சரியான பார்வை.

எம்ஜிஆர் அரசியல் அப்படித்தான் 1970களில் அன்றைய தலைமுறையினருக்கு அரசியல் பால பாடத்தை நடத்தியது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக அண்ணா ஒரு கிராமத்திற்கு செல்கிறார். அங்கே அவரின் காரை கிராமத்தவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். அண்ணா இறங்குகிறார்.

மக்களிடம் பேச எத்தனிக்கிறார். அப்போது கூட்டத்தில் வந்த சிறுவன் ஒருவன் அண்ணாவை சுற்றி எங்கெங்கோ பார்வையை ஓடிவிடுகிறான். காரை எட்டி எட்டி பார்க்கிறான். அண்ணா கேட்கிறார், 'தம்பி என்ன தேடுகிறாய்?' என்று.

'எம்ஜிஆர் வரவில்லையா?' என்று கேட்கிறான் சிறுவன். 'இல்லை' என்கிறார் அண்ணா. அடுத்து அந்த சிறுவன் அண்ணாவைப் பார்த்துக் கேட்டான். 'நீங்க எம்ஜிஆர் கட்சியா?' என்று. அண்ணா உள்ளூர எழுந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்ன வார்த்தை 'இல்லையே தம்பி!'.

இதை விட இன்னொரு சம்பவம். எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்ஜிஆர். எம்ஜிஆர் உயிருடன் திரும்ப வேண்டுமே என்பதற்காக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என பிரார்த்தனைகளை கட்டுக்கடங்காமல் செய்தனர் மக்கள். குணமாகி கட்டுடன் அண்ணாவை சந்திக்க வந்த எம்ஜிஆர், 'நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் பேச முடியாதே!' என அண்ணாவிடம் வருத்தம் தெரிவிக்கிறார். அதற்கு அண்ணா சொன்ன பதில். 'நீ பேசாவிட்டால் என்ன? ஒரு சுற்று உன் முகத்தை மக்களிடம் காட்டிவிட்டு வந்தால் போதும். அந்த ராசியே அத்தனை தொகுதிகளிலும் நமக்கு வெற்றியை கொடுத்து விடும்!'. இப்படிப்பட்ட எம்ஜிஆர் கதைகளை அவர்தம் விசுவாசிகள் நிறைய பேர் கேட்டிருப்பார்கள்.

ஆக, இதன் மூலம் அண்ணா இருந்த காலத்திலேயே திமுகவை வெல்ல வைத்தது எம்ஜிஆர் சினிமா மாயைதான் என்பதை உணர்ந்து கொள்கிறோம். அன்று எம்ஜிஆர் தொடங்கி வைத்த சினிமா மாயை கமல்-ரஜினி, அஜித்-விஜய் வரை மாறாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமா மோகம் தமிழகத்தில் இன்றும் மாறாமல் இருப்பது இந்த சமூகத்திற்கு வேதனை அளிக்கிறதா? மகிழ்ச்சியை தருகிறதா? என்பதெல்லாம் இங்கே விவாதிப்பதில் அர்த்தமில்லை. ஆனால் எம்ஜிஆர் காலத்திய சினிமாவும், அவரின் அரசியல் ஈடுபாடும், கட்சி நடவடிக்கைகளும், சினிமாவிற்குள்ளும், சினிமாவிற்கு வெளியேயும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுதந்திர வேட்கையினால் உருவாகி நேர்மைத்திறத்துடன் அரசாண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களையே அசைத்து நிர்மூலமாக்கி, சினிமா நாயகர்களை அதில் முன்னிலைப்படுத்தியது. அரியணையிலும் அமர வைத்தது.

எம்ஜிஆர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து காட்டியதன் விளைவு, திடீர் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் என்டிஆர் எதிர்க்கட்சியே இல்லாத அளவு பெரும் வாகை சூடினார். அதன் தொடர்ச்சியாகவே சிவாஜி கணேசன் முதற்கொண்டு (தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி தொடங்கும் முன்பு காங்கிரஸில் இருந்தார்) பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சீமான் வரை கட்சி தொடங்கினார்கள்.

இந்த சினிமாக்காரர்களின் அரசியல் என்பது அவர்களை நேசிப்பவர்களுக்கான அரசியல் அறிவாக மாறியது. ஆனால் பெரும்பான்மை மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்களை கவரக்கூடிய ஈர்ப்பு சக்தி இவர்களிடம் இல்லாததாலேயே தேர்தல் அரசியல் என்ற அளவில் தோல்விகளை கண்டது.

அதே சமயம் பெண்களானாலும், ஆண்களானாலும் பெரும்பான்மையாய் விரும்புவது, பொழுது போக்குவது சினிமா என்கிற அகண்ட திரையில் என்பதால் அதில் எம்ஜிஆரை போல் அரசியல் பேசும் நிலை யாருக்கும் இல்லாது போனது. குறிப்பாக எம்ஜிஆருக்குப் பின் இருந்த ஆகப்பெரும் நடிக சக்திகளான ரஜினியும், கமலும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை பெயரளவுக்கு சினிமாவில் வசனங்களாக உச்சரித்து விட்டு, வாழ்க்கை வெளியில் நழுவிச்செல்லும் போக்கையே கையாண்டனர்.

இதன் பின்னணியில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் சக்திகள் அரசியல் கோலோச்சிக் கொண்டிருந்த சூழலில் அவர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகளை இவர்கள் என்னனென்ன வகையில் சந்தித்தார்களோ, அதன் எதிரொலியாக தங்களுக்கெனவே உருவான ரசிகர் மன்றங்களை கூட கலைத்தார்கள். கமல் அதை ரத்ததான, உடல்தான, சமூக நல இயக்கமாக அறிவிக்க, ரஜினியே ரசிகர் மன்றங்களை ஆரம்பத்தில் பதிவு செய்தததோடு கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டார். என்றாலும் பதிவு செய்யப்படாமலே மாவட்டங்கள் தோறும் அவர் பெயரில் ரசிகர் மன்றங்கள் உருவாவதை கண்டு கொள்ளாமலே இருந்தார்.

விஜயகாந்தோ தான் செல்லும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாம் ரசிகர் மன்றங்களை உருவாக்கினார். அவரின் விசுவாசிகளை வைத்து அவற்றை உருவாக்க வைத்தார். அந்த திட்டமிடல் தொலைநோக்கு அரசியல் பார்வையிலேயே இருந்தது. இந்த உருவாக்கம் ஏனைய அரசியல்வாதிகளுக்குக் கூட தெரியாமலே ஆழம் மிகுந்த நதியில் உள்நீச்சல் போலவே நகர்ந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகால உழைப்பு, அதன் மூலமான ரசிகர்கள் சேகரம், ரசிகர் மன்றங்களின் சேகரம். திரட்சியாக திரண்ட - திரட்சியாக திட்டமிட்டு திரட்டப்பட்ட ரசிகர் மன்றங்களை, எம்ஜிஆர் பார்முலாவில் அரசியல் கட்சியை டிக்ளரேஷன் செய்தார். அதில் உள்ள, ரசிகர்களை அரசியல் தொண்டர்களாகவே மாற்றினார்.

ஆனால் அப்போதைய அவருக்கான சக்தி கூட ரஜினி மன்றங்களை ஒப்பிடும்போது மலையளவு, மடுவளவுக்கானதாகவே தோற்றப்பிழை கண்டது. அதன் வெளி வேறு தொலைவிலும் நின்றது.

என்னுடன் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், அழகிரி போன்றோருடன் பழகியவனாக்கும் நான் என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் அந்தப் பத்திரிகையாளர், ரஜினியை பற்றி நான் பேசும்போதெல்லாம் அடிக்கடி சலிப்பு தட்ட ஒன்றை சொல்லுவார். 'ரஜினியை எதுக்கு பேசறீங்க. அவரோட அரசியல் எல்லாம் 1996லேயே முடிஞ்சுடுச்சு. அவர் இனி அரசியலுக்கு வந்தா தேற மாட்டார். டெபாசிட் கூட கிடைக்காது!'

இந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் பல தடவை வாக்குவாதம் வந்திருக்கிறது. ''நான் ரஜினி ரசிகன் அல்ல, இவ்வளவு ஏன் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் மீது கூட நான் ஈர்ப்பு கொண்டதில்லை. என்றாலும் மக்கள் எந்த அளவு ஒருவரை நேசிக்கிறார்கள், அவர்களையே எண்ணி பிதற்றுகிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதுவே ஒரு கட்டத்தில் அவர்களை அரசியலிலும் வெற்றி வாகை சூடவும் வைத்துள்ளது. அப்படித்தான் ரஜினியையும் பார்க்கிறேன். அவர் அரசியலில் ஜெயிப்பாரா, தோற்பாரா என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் அதிகம் பேர் நேசிக்கும் நடிகராக அவர் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் கட்சி ஆரம்பிப்பதும், தேர்தலில் வெல்வதும் தோற்பதும் காலத்தின் கையிலேயே இருக்கிறது. அதில் பாசிட்டிவ் தன்மையே இன்னமும் புலப்படுகிறது!'' என்றெல்லாம் விவாதிப்பேன்.

ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரையே அப்படி சொல்லுபவர் விஜயகாந்தை எப்படிப் பார்த்திருப்பார். ''விஜயகாந்த் கட்சி, அரசியல் எல்லாம் சும்மாங்க. அவர் கட்சி ஆரம்பிச்சு, தேர்தலில் நின்னா ஒரு சீட்டுல டெபாசிட் கூட வாங்க மாட்டார்!'' என்றே சொன்னார். அதுவே விஜயகாந்த் மதுரையில் கட்சி ஆரம்பித்து, முதல் அரசியல் கட்சி மாநாட்டையும் கொடி அறிமுகத்தையும் செய்த போது கொஞ்சம் உணர்வு பொங்கிப் போனார். அந்த மாநாட்டின் லட்சோப லட்ச ஜனக்கூட்டத்தில் இருந்த அவரை தொலைபேசியில் அழைத்து, 'கூட்டம் எப்படி?' என்று கேட்டேன்.

'பயங்கரம்' என்றார்.

'5 லட்சம் பேர் இருப்பாங்களா?' திரும்பக் கேட்டேன்.

'அதுக்கும் மேலேயே இருக்கும். சமுத்திரம் போல் இருக்கிறது!' என உணர்ச்சி பொங்க பதிலளித்தார். அத்துடன் அவரை நான் விட்டிருக்கலாம்.

'ரஜினி கட்சி ஆரம்பித்தால் எப்படியிருக்கும்?' என்றேன்.

'இது சமுத்திரம் என்றால் அது சுனாமி போல் இருக்கும்!' என்றார்.

- பேசித் தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x