Last Updated : 03 Jul, 2014 10:00 AM

 

Published : 03 Jul 2014 10:00 AM
Last Updated : 03 Jul 2014 10:00 AM

NEEDS திட்டம்: சந்தேகங்களும் விளக்கங்களும்

# NEEDS திட்டத்தில் கூட்டாக (partners) சேர்ந்து தொழில் தொடங்க கடனுதவி பெற முடியுமா?

பெறலாம். கல்வி, வயது உள்ளிட்ட தகுதிகளை அனைத்து பங்குதாரர்களும் பெற்றிருப்பின் அவர்கள் தகுதியானவர்களாவர். எனினும், தொழில் முனைவோருக்கான பயிற்சியை இதர பங்குதாரர்கள் பரிந்துரை செய்யும் ஒருவருக்கு மட்டுமே வழங்க இயலும்.

# கல்வி, வயது வரம்பு உள்ளிட்டவை நீங்கலாக வேறு ஏதேனும் நிபந்தனைகள் உள்ளனவா?

ஆம். புதிதாக தொழில் தொடங்குவதற்கு மட்டும் கடனுதவி அளிக்கப்படும். அதுபோல் முதல் தலைமுறை தொழில் தொடங்குபவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் இதர திட்டத்தில் ஏற்கெனவே பயன்பெற்றிருந்தால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்களாவர். மேலும், வங்கிக் கடனை முறையாக செலுத்தாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாவர்.

# திட்ட மதிப்பீடு குறித்து விளக்கமாக சொல்ல முடியுமா?

ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீடு வழங்கலாம். அதில் கட்டிடத்தின் மதிப்பு 25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சர்வீஸ் ஸ்டேஷன் போன்ற சேவை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் மதிப்பு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதத்திற்கு குறையாமல் இருப்பதும் அவசியமாகும்.

# கடனுதவி பெற்று தொழில் தொடங்குவோரின் பங்குத்தொகை மொத்த முதலீட்டில் எவ்வளவு இருக்க வேண்டும்?

பொதுப் பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற மொத்த முதலீட்டில் 10 சதவீதம் பங்குத்தொகை இருக்க வேண்டும். அதுபோல் மகளிர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்ற சிறப்பு பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மொத்த முதலீட்டில் 5 சதவீதம் பங்குத்தொகை இருக்க வேண்டும்.

# கடனுதவியில் மானியம் உள்ளதா?

திட்ட முதலீட்டில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வாங்கும் கடனுதவியில் 25 சதவீதம் நீங்கலாக மீதமுள்ள தொகையை திருப்பிச் செலுத்தினால் போதும். அதுபோல் திருப்பிச் செலுத்தும் தொகை வட்டியில் 3 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

# வங்கிக் கடனுதவியை திருப்பிச் செலுத்த கால அளவு உள்ளதா?

வங்கி மூலம் வழங்கப்படும் கடனுதவியை பொறுத்து கால நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசமாகும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வணிக வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்.

# இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பத்தை எங்கு பெறுவது?

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டியவை குறித்தும் மாவட்ட தொழில் மையத்தில் விளக்கம் அளிக்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x