

‘இந்து தமிழ் திசை’ 10ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ‘யாதும் தமிழே’ கொண்டாட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. தங்கள் செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகத்தைச் செழுமைப்படுத்தி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆளுமைகளுக்கு இந்த விழாவில் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்த் திரு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆளுமைகளை கௌரவிப்பதில் ‘இந்து தமிழ் திசை' பெருமிதம் கொள்கிறது.
வைஜெயந்திமாலா பாலி - நாட்டியக் கலைஞர், நடிகர்: தேசத்தின் தலைசிறந்த கலைகளில் ஒன்றாகப் பரத நாட்டியம் புகழ்பெற்றுத் திகழ்வதற்குத் தென்னகமே காரணமாயிற்று. கடந்த மூன்று தசாப்தங்களாக, அக்கலையின் தெய்விகத்தையும், கலையழகையும், சேதாரம் இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில், ஆற்றல் குறையாத கலைஞர், பத்ம, டாக்டர். வைஜெயந்தி மாலா பாலி.
தஞ்சாவூர் பாணி பரத நாட்டியத்தின் தலைசிறந்த அடையாளம் அவர். உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் நாட்டியப் பரம்பரையில் வந்தவர்களான ‘தஞ்சை நால்வரின்’ நேரடிக் கலை வாரிசான, தஞ்சை கே.பி. கிட்டப்பாவைக் குருவாகப் பெற்றவர்.
வாட்டிகன் நகரத்தில், போப் ஆண்டவரின் முன்னால் நடனமாடி, அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டபோது வைஜெயந்தி மாலாவுக்கு ஐந்து வயது. அன்று தொடங்கி, ஐ.நா. பொதுச் சபை வரையிலும் வெளிப்பட்டு நின்றது அவரது அளப்பரிய கலைத்திறன். அது இந்த 90 வயதிலும் கலாக் ஷேத்ரா அரங்கில் அபிநயம் பிடிக்கும் அதிசயமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் சர்வதேச அடிலெய்டு கலை விழா, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமின் புகழ்பெற்ற ராயல் ஓபரா கலைத் திருவிழா, ஹாலந்து நாட்டின் ரோட்டர்டாம் இலையுதிர் காலக் கலைத் திருவிழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரக் கலைப் பெருவிழா தொடங்கி, அமெரிக்கா, கனடா, சோவியத் ரஷ்யா, மேற்கிந்தியத் தீவுகள், மத்தியக் கிழக்கு, தூரக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளின் சர்வதேசக் கலை விழாக்களுக்கு இந்தியா சார்பில் அழைக்கப்பட்ட பார் போற்றும் பரதக் கலைஞர்.
செழுமை குன்றாத பாரம்பரிய பரதக் கலையின் மீதான அவரது ஆர்வம், ‘நாட்டியாலயா’ நடனப் பள்ளியாக மலர்ந்தது. தனது மாணவ, மாணவியருக்குப் பயிற்றுவித்ததோடு, பரதக் கலை ரசிகர்களுக்காக அவர் எழுதி, வடிவமைத்து, இயக்கி, அரங்கேற்றிய நாட்டிய நாடகங்கள் நமது கலாச்சார வலிமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
பாரம்பரிய பரதக் கலையைக் கற்பவர்கள் பயிற்சி செய்வதற்கும், நிகழ்த்துவதற்கும் நாட்டிய இசையை எல்.பி. ரெக்கார்டுகளாகத் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்த வைஜெயந்தி மாலா பாலி, பரத நாட்டியத்துக்காகவே உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்தவர்.
அவர் பெற்ற பரதக் கலையின் ஒளி, ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ திரைப்படத்தின் வழியாகத் திரை வெளிக்குக் கொண்டுவந்ததைத் தேசம் அறியும். தமிழ்த் திரையுலகிலும் அதன் பின்னர் இந்திப் படவுலகிலும் அவர் படைத்த சாதனைகள், அவருக்கு முன்னும் பின்னும் எந்தத் தென்னிந்திய நட்சத்திரமும் சாதிக்க முடியாதவை. அரசியல் அரங்கிலும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணி ஆற்றிய பெருமை அவருக்கு உண்டு.
பேராசிரியர் வே.வசந்திதேவி - கல்விச் செயற்பாட்டாளர், பெண்ணுரிமைப் போராளி: கல்விச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, சமூக நீதி, மனித உரிமை ஆகிய பல தளங்களில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர் பேராசிரியர் வே.வசந்திதேவி.
1938இல் திண்டுக்கல்லில் பிறந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும் சென்னையின் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவருமான வி.சர்க்கரை (செட்டியார்) வசந்திதேவியின் தாய்வழித் தாத்தா.
இவருடைய பெற்றோர் மதம் கடந்து திருமணம் செய்துகொண்டவர்கள். பன்மைத்துவம் மிக்க குடும்பச் சூழல் இளம் வயதிலேயே அவருக்கு முற்போக்கு, சமத்துவச் சிந்தனைகளை விதைத்திருந்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், பிலிப்பைன்ஸ் நாட்டில் முனைவர் பட்டமும் பெற்றார். வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக 1988இல் நியமிக்கப்பட்டார்.
1992 முதல் 1998வரை நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் செயல்பட்டார். அப்போது மகளிரியல் என்னும் புதிய துறையை நிறுவி, பாலினப் பாகுபாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதோடு, மதச்சார்பின்மை, மனித உரிமைகள் போன்றவற்றையும் பாடத்திட்டத்துக்குள் கொண்டுவந்தார்.
2002இலிருந்து 2005வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டார். மக்கள் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு மகளிர் ஆணையத்துக்கு வலுவூட்டி, அதை எளிய மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றினார்.
வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பணியிடத்தில் பாலியல் சீண்டல் போன்றவற்றை மட்டுமல்லாமல் சாதி, பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதற்கும் முக்கியத்துவம் அளித்தார்.
தற்போது தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். வறுமை, சாதிய ஒடுக்குமுறை, பாலினப் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான கருவியாகக் கல்வியைக் கருதும் செயற்பாட்டாளர் வசந்திதேவி. அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கல்வித் துறைச் சீர்திருத்தங்களை வலியுறுத்தித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது, கூட்டங்களில் பேசுவது, போராட்டங்களில் பங்கேற்பது என இந்த 84 வயதிலும் தீவிரமாக இயங்கிவருகிறார்.
சு.தியடோர் பாஸ்கரன் - திரைப்பட வரலாற்றாய்வாளர், சுற்றுச்சூழல் எழுத்தாளர்: ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் இடையறாது எழுதிவரும் சு.தியடோர் பாஸ்கரன், தமிழ்த் திரைப்பட வரலாற்றாய்வாளர், காட்டுயிர்-சுற்றுச்சூழல் சார்ந்த தமிழ் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். தியடோர் பாஸ்கரன், 1940 ஏப்ரல் 1 அன்று தாராபுரத்தில் பிறந்தார்.
1960இல், சென்னை கிறித்துவக் கல்லூரியில், வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பாஸ்கரன், தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். 1964இல் இந்திய அஞ்சல் துறையில் சேர்ந்த பாஸ்கரன், தமிழ்நாட்டின் தலைமை அஞ்சல் அதிகாரியாக ஓய்வுபெற்றார். 1960களின் இறுதியில், திரைப்பட வரலாறு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு தனித் துறையாகப் பரிணமித்திராத சுற்றுச்சூழல் எழுத்து சார்ந்தும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
1969 ஜனவரி மாதம், திருச்சிக்கு அருகே உள்ள தேவராயன் ஏரியில் பறவை நோக்குதலுக்குச் சென்ற அனுபவம் பற்றி ‘தி இந்து’வில் பாஸ்கரன் எழுதிய கட்டுரை, அவரது எழுத்துப் பயணத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் எழுத்துக்கான ஒரு புதிய வரலாற்றையும் தொடங்கிவைத்தது.
திரைப்படங்கள் பற்றியும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதிவந்த பாஸ்கரன், 1974இல் புனே தேசியத் திரைப்பட ஆவணக்காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆனார். விடுதலைப் போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
1981இல் வெளிவந்த ‘The Message Bearers: The Nationalist Politics and the Entertainment Media in South India, 1880-1945’ என்கிற முன்னோடி நூலைத் தொடர்ந்து, The Eye of the Serpent (1996), History through the Lens (2009) என பாஸ்கரன் எழுதிய நூல்கள் தமிழ்த் திரைப்பட ஆய்வுக்கு முதன்மைப் பங்களிப்புகள். 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இந்தியத் திரைப்படங்கள் பற்றிக் கற்பித்தார்.
சுற்றுச்சூழல் சார்ந்து முதன்மையாக ஆங்கிலத்தில் எழுதிவந்த பாஸ்கரன், 2002ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழல், உயிர்ப்பன்மை, காட்டுயிர், பறவைகள், வளர்ப்பு நாய்கள் எனப் பல்வேறு விஷயங்கள் சார்ந்து தமிழிலும் தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினார். தமிழ் சுற்றுச்சூழல் எழுத்துக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாஸ்கரனின் சுற்றுச்சூழல் நூல்கள் அனைத்தும், ‘கையிலிருக்கும் பூமி’ (2018) என்கிற பெருந்தொகுப்பாக உருவாகியிருக்கின்றன.
மொழிபெயர்ப்பு, கலைச்சொற்களின் உருவாக்கம், வழக்கிலிருந்து மறைந்துபோன சொற்களை மீட்டெடுத்தது எனச் சுற்றுச்சூழலுக்குப் பாஸ்கரனின் பங்களிப்புகள் அளப்பரியவை. பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்று ஆண்டுகள் (1998-2001) பணியாற்றினார்; இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF-India) இந்திய அறங்காவலராகச் செயல்பட்டிருக்கிறார்.
மு.சுயம்புலிங்கம் - கரிசல் வட்டார எழுத்தாளர்: மு.சுயம்புலிங்கம், 1944இல் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியான வேப்பலோடை கிராமத்தில் பிறந்தவர். 70களில் எழுதத் தொடங்கியவர். ‘தாமரை’ இதழில் இவரது முதல் படைப்பு வெளிவந்தது. பிழைப்பு தேடிய சென்னைவாசத்தில் எழுத்தாளர்கள் தி.க.சிவசங்கரன், ‘சிகரம்’ செந்தில்நாதன், ‘கார்க்கி’ இளவேனில், சுப்ரமண்யராஜு ஆகியோரின் நட்பு, இலக்கியத்துக்குள் சுயம்புலிங்கத்தை இழுத்துவிட்டது.
மு.சுயம்புலிங்கத்தின் மொழி, வட்டார வழக்கிலானது. கரிசல் நிலத்தில் ஈரம் பிடித்த சொற்கள் அவை. கவிதைக்கெனப் பிரத்யேகச் சொற்களை அவர் தேடிச் செல்லவில்லை. சுதந்திரக் கனவுகள் நொறுங்கிப்போன, நெருக்கடி நிலைக்குப் பிறகான கரிசல் நிலத்தைத் தன் மொழியின் மூலம் காட்சிப்படுத்தியவர் சுயம்புலிங்கம். கரிசல் நிலத்தின் வறுமைதான் சுயம்புலிங்கத்தின் உரத்த குரலாக அவரது கவிதையிலும் கதையிலும் வெளிப்படுகிறது.
சோளக்கதிர்களைத் திருடிப் பிடிபடும் பெண், ‘வானத்தை மிதிப்பதுபோலக் காலைத் தூக்கிக் கிடக்கிறாள்’ என்கிறது ஒரு கவிதை. கரிசல் நிலத்தின் பஞ்சத்தைப் போக்க அரசு என்ன செய்தது என சுயம்பு கேள்வியும் எழுப்புகிறார். சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்குத் தீர்க்கமான அரசியல் பார்வை உண்டு. தண்ணீரால் வயிறு ஊதிப்போன அடிமாட்டைத் தமிழ்ச் சமுதாயம் என்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் ஒரு தொண்டையில் பேச வேண்டும் என்கிறார்.
தமிழில் சுயம்புலிங்கம் அளவுக்குப் பாட்டாளி வர்க்கக் குரலைப் பதிவுசெய்த கவிஞன் இல்லை எனலாம். ‘நாங்கள் தொள்ளாளிகள்/பீ மணக்கும் கிராமங்களில்/ வறுமை எரிக்கும் குடிசைகளில்/... முடங்கிப் போனோம்’ என்கிறார். பஞ்சம் பிழைக்க வந்த சென்னை நகர வாழ்க்கையையும் பதிவுசெய்துள்ளார்.
மின்சார விளக்குகள் பூத்துக் குலுங்கும் பரபரப்பான நகரத்தில் கவிஞனின் மனம் பிளாட்பாரவாசிகளிடமும், பேப்பர் பொறுக்குபவர்களிடமும் சிநேகம் கொள்கிறது. தங்கள் மேலே விழுந்துகொண்டிருக்கும் நகரமயமாக்கலை, உலகமயமாக்கலை, மழையை, வெயிலை பாலிதீன் கொட்டகைகளுக்குள் இருந்து அவர்கள் எப்படித் தாங்கிக்கொள்கிறார்கள் எனச் சொல்கிறார் சுயம்பு.
ஒரு கவிதையில் ‘போராட்டமே வாழ்க்கை/விலங்கை நொறுக்கு/ நாம் மனிதர்கள்’ என்கிறார். இன்னொரு கவிதையில் ‘எதுவும் கிடைக்காதபோது/களிமண் உருண்டையை வாயில் போட்டு/தண்ணீர் குடிக்கிறோம்/ஜீரணமாகிவிடுகிறது/எங்களுக்கு ஒரு குறையும் இல்லை/நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்’ எனச் சொல்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வறுமை செய்யப்போகும் புரட்சியின் முரசொலியாக இவரது கவிதைகள் இருக்கின்றன. ‘நாட்டுப்பூக்கள்’ (கல்குதிரை தொகுப்பு), ‘ஊர் கூட்டம்’, ‘நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்’, ஒரு பனங்காட்டுக் கிராமம்’, ‘நீர்மாலை’ ஆகிய புத்தகங்கள் சுயம்புலிங்கத்தின படைப்புகள்.
என்.கலைச்செல்வி - அறிவியலாளர்: அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) பொது இயக்குநர் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளர். பெண்களுக்கும் அறிவியல் ஆய்வுகளுக்கும் தொலைவு அதிகம் எனப் பெரும்பான்மை மக்கள் இன்றைக்கும் நம்பிக்கொண்டிருக்கும்போது இந்திய அறிவியல், தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் பெண் பொது இயக்குநராகப் பொறுப்பேற்றவர் டாக்டர் என். கலைச்செல்வி.
சி.எஸ்.ஐ.ஆர்-ன் 80 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் இவர். இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இந்தியா முழுவதும் 38 ஆய்வகங்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் 4,500 விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்.
சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநராகப் பொறுப்பேற்பதற்கு முன் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார். அந்தப் பதவியை வகித்த முதல் பெண்ணும் இவரே.
டாக்டர் என். கலைச்செல்வி, 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று பிறந்தார். திருநெல்வேலி அரசு கலைக் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டத்தையும் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., ஆய்வுப் பட்டத்தை நிறைவுசெய்தார்.
மின்வேதி ஆற்றல் குறித்து 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்த அனுபவம் மிக்கவர். இவரது ஆராய்ச்சிகள் எதிர்காலத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வலுப்படுத்த உதவுபவை. மின்வேதித் துறையில் மேம்பட்ட, காலத்துக்கேற்ற கட்டமைப்புகளை உருவாக்க இவருடைய ஆய்வுகள் முக்கியப் பங்கு வகிப்பவை.
மின் வாகனக் கட்டமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட புராஜெக்ட்டுக்கு 10 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், டாக்டர் கலைச்செல்வியின் ஆராய்ச்சிகள் அதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இதுவரை 135க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். ஆறு ஆய்வுகளுக்குக் காப்புரிமம் பெற்றுள்ளார். இவரது வழிகாட்டுதலின்கீழ் 12 ஆய்வு மாணவர்கள் பி.எச்.டி பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கிராமத்தில் பிறந்து அரசுக் கல்லூரிகளில் பயின்ற முனைவர் கலைச்செல்வி, திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த நிலைக்கும் உயரலாம் என்பதை நிரூபித்துள்ளார். அறிவியல் ஆராய்ச்சிகளில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாகவும் விளங்குகிறார்.