Last Updated : 12 Oct, 2023 12:32 PM

 

Published : 12 Oct 2023 12:32 PM
Last Updated : 12 Oct 2023 12:32 PM

Bigg Boss 7 Analysis 6: ‘தகுதி’ குறித்த பிரதீப்பின் பேச்சும், வெடித்துச் சிதறிய நிக்சனும் 

இந்த சீசன் தொடங்கியதிலிருந்து ‘நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்ல’ என்று பூப்பாதையிலேயே பயணித்து வந்த நிக்சனையே வெறுப்பேற்றி சிங்கப் பாதையை தேர்ந்தெடுக்க வைத்து கர்ஜிக்க வைத்த பெருமை பிரதீப்பையே சாரும்.

பிக்பாஸ் 7 சீசனின் 10வது நாளில் மக்களை அதிகம் மகிழ்த்தவர்கள் யார் என்ற போட்டியில் அனைவரும் தங்கள் பராக்கிரமங்களை ஒவ்வொருவராக முன்வந்து சொல்லிக் கொண்டிருந்தனர். தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கூல் சுரேஷ் பேசி முடித்ததும் தொடர்ந்து வந்த நிக்சன், தான் எப்படி மக்களை ‘என்டர்டெய்ன்’ செய்தேன் என்பதை போட்டியாளர்கள் முன் விவரித்தார். தன்னுடைய நகைச்சுவைத் திறன் மூலம் போட்டியாளர்களை சிரிக்கவைத்தகாகவும், அதை பார்த்து ஆடியன்ஸும் சிரித்திருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் பேசினார்.

நிக்சன் பேசிக் கொண்டிருந்தபோதே இடையில் புகுந்த பிரதீப், ‘உன் பெயரே மற்றவர்கள் மனதில் பதியவில்லை. கூல் சுரேஷ் உன்னை ‘நெல்சன்’ என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பிறகெப்படி நீ மக்கள் மனதில் இடம்பெற்றிருப்பாய்?’ என்று கேட்டார். உடனடியாக அதற்கு பதிலளித்த நிக்சன், “உங்களைக் கூடத்தான் கமல் சாரே ‘பிரவீன்’ என்று கூப்பிட்டார் என்று கவுன்ட்டர் கொடுத்து அப்ளாஸ் வாங்கினார்.

அடுத்ததாக பேச வந்த பிரதீப், தன் கையில் இருக்கும் துண்டை ஆட்டியே வீட்டில் உள்ளவர்களை வெறுப்பேற்றியிருக்கிறேன் என்று பெருமிதத்துடன் சொன்னார். இடைமறித்து கேள்விகேட்ட நிக்சனிடம், ‘நீ என்னை கேள்விகேட்க தகுதியே இல்ல.. உட்காரு” என்று ஆஃப் செய்தார். இதிலிருந்து தொடங்கியது இன்றைக்கான பஞ்சாயத்து. பிக் பாஸ் பஸ்ஸரை அடிக்கும்வரை இருவருக்குமான வாக்குவாதம் நீண்டுகொண்டே சென்றது.

போட்டியில் யார் வெற்றியாளர் என்பதை வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க சொன்னதும், “பிரதீப் செய்றது சரியோ தவறோ மக்கள் அவர் செய்வதை எதிர்பார்ப்பார்கள்” என்று ஜோவிகா தன்னுடைய கருத்தைச் சொன்னார். உடனே எழுந்த பூர்ணிமா தன்னுடைய கருத்தை சொல்ல முற்பட்டபோது, ‘ஜோவிகா சொன்னது சரிதான்’ என்று குறுக்கே புகுந்து சொல்லி அவரை உட்காரச் செய்தார். இன்னொரு தருணத்தில் மீண்டும் பேச வந்த பூர்ணிமாவை தடுத்து கூல் சுரேஷை பேசச் செய்தார். பூர்ணிமா மீது பிக் பாஸுக்கு அப்படி என்ன கோபமா? இதனை போட்டி முடிந்ததும் ’பிஸ் பாஸ் உடன் எனக்கு சண்டை’ என்று சொல்லி கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

நிக்சன் - பிரதீப் இடையிலான ‘தகுதி’ தொடர்பான பிரச்சினை முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முந்தைய நாள் தன்னிடம் மன்னிப்புக் கேட்ட மாயா விஷயத்தில் தன்னுடைய ‘ஸ்ட்ராட்டஜி’யை எல்லாம் கைவிட்டு பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட பிரதீப் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதைப் போல மீண்டும் தன் பழைய அவதாரத்துக்கே திரும்பியிருந்தார். தன்னுடைய பேச்சு நிக்சனின் சுயமரியாதையை கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கும் என்ற உணர்வு கூட இல்லாமல் தான் பேசியதை நியாயப்படுத்திக் கொண்டே இருந்தார் பிரதீப். நிக்சனும் விடாமல் பிரதீப் உடைய ‘ஸ்ட்ராட்டஜி’யை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்தார்.

தகுதி குறித்து பிரதீப் பேசியது பூனை போல யாரிடமும் எந்த வம்புக்கும் போகாமல் இருந்து வந்த நிக்சனை உசுப்பி விட்டது. யாரை எங்கு தொட்டால் கன்டென்ட் கொடுக்கலாம் என்று நன்றாக ‘ஸ்டடி’ செய்துவிட்டு வந்தவர் போல பிரதீப்பின் செயல்பாடுகள் தொடர்ந்து அமைந்துள்ளன. சண்டை போட்டு டயர்டு ஆகி ஒதுங்கிச் சென்று அமர்ந்தாலும் கூட நிக்சனை விடாமல் பின்னே சென்று வம்பிழுத்துக் கொண்டே இருந்தார் பிரதீப். பதில் பேசாமல் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்திருந்த நிக்சனுக்கு அடக்கி வைத்த கோபம் கண்ணீராக பொங்கி வெளியே வந்தது. குழந்தை தேம்பித் தேம்பி அழ, அவரை மணி சந்திரா அருகில் அமர்ந்து ஆறுதல் கூறி தேற்றினார்.

இந்த சீசனில் வழக்கமாக கன்டெண்ட் கொடுத்து புரோமோவில் இடம்பிடிக்கும் விஷ்ணு, மாயா, விசித்ரா போன்றோர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்க லிஸ்ட்டிலேயே இல்லாத நிக்சன் இன்று பிரதீப்பின் புண்ணியத்தால் வெடித்துச் சிதறியதைக் கண்டு பிக்பாஸே ஒருகணம் ஜெர்க் ஆகியிருப்பார்.

முந்தைய அத்தியாயம்: மாயாவின் மன்னிப்பும்... ஸ்ட்ராட்டஜியை கைவிட்ட பிரதீப்பின் பெருந்தன்மையும்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x