Last Updated : 21 Dec, 2017 11:42 AM

 

Published : 21 Dec 2017 11:42 AM
Last Updated : 21 Dec 2017 11:42 AM

வாழ்க்கை அழைக்கிறது 05: அண்ணனுக்குத் தம்பியானேன்!

பாட்டால் புரட்சிக்குப் பாதை போட்டவர்களும் உண்டு. புரட்சியின் பாதையில் முட்களைப் பரப்பியவர்களும் உண்டு.

பிரான்ஸில் புரட்சி அழைத்தபோது, மத அங்கியைக் கழற்றி எறிந்து புரட்சியாளர்களுடன் கலந்துகொண்ட காபிரியல் பெரியும் உண்டு. கவிஞர் கண்ண தாசன் திருநீற்றை அழித்ததும் உண்டு; அணிந்ததும் உண்டு. சிந்தனைகள் மாற முடியாதவை அல்ல.

- இப்படியெல்லாம் எனக்குச் சில சமாதானங்கள் தேவைப்பட்டன. ஒரு வழியாகக் குழப்பம் தீர்ந்து, ‘ஆத்மா என்றொரு தெருப் பாடகன்’ புத்தகத்துக்குக் கலைஞரின் அணிந்துரையை பெறுவது எப்படி என்று யோசித்தேன்.

‘‘கலைஞரின் அணிந்துரையுடன் வாருங்கள்’’ என்று சொன்ன பதிப்பாளரை அதன் பிறகு நான் பார்க்கவே முடியவில்லை. அந்த சமயம் ‘அடை யாறு மாணவர் நகலகம்’ உரிமையாளர் ஆனா ரூனா எனக்குக் கை கொடுத்தார்.

 1993 மே 31-ம் நாள். முரசொலி அலுவலகத்துக்குக் கலைஞரைச் சந்திக்கச் சென்றேன்.

‘‘கலைஞரிடம் விவரம் சொல்லியிருக்கிறேன், போய்ப் பாருங்கள்’’ என்று கலைஞரின் அறைக்கு அனுப்பினார் சின்னக்குத்தூசி. 

கலைஞரின் அறைக்குள் மந்திரமூர்த்தி நின்றார். விவரம் கேட்டார். ஒரு துண்டுக் காகிதத்தில் ‘இளவேனில், எழுத்தாளர்’ என்று எழுதிக் கொடுத்தேன். கலைஞரிடம் அதைக் கொண்டு சென்றார் மந்திரமூர்த்தி. வெளியே வந்தவர் ‘‘உள்ளே போகலாம்...’’ என்றார். போனேன்.

‘‘உட்காருங்கள்’’ என்றார் கலைஞர்.

உட்கார்ந்தபடியே, ‘‘தமிழ்நாட்டில் உங்களைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவன்’’ என்றேன்.

‘‘தெரியும். ‘திரும்பிப் பார்’ என்று ‘கார்க்கி’ பத்திரிகையில் என் எழுத்துக்களால் என்னையே அடித்தவர்!’’ சிரித்துக்கொண்டே சொன்னார் கலைஞர்.

பிறகு, ‘‘நீங்களும் உங்கள் நண்பர் அமைச்சர் காளிமுத்துவும் சேர்ந்து ‘வீர வணக்கம்’ என்று ஒரு திரைப்படம் தொடங்கினீர்களே, அது என்னவாயிற்று?’’ என்றார்.

‘‘காளிமுத்துவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மனக்கசப்பு. பலமுறை போலீஸ் விசாரணை. எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். காளிமுத்துவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால், அந்தப் படத்துக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டோம்!’’ என்றேன்.

‘‘சரி, இப்போது என்ன சேதி?’’ என்றவரின் முன்னால் ‘ஆத்மா’வை வைத்தபடியே ‘‘இந்தப் புத்தகம் நான் பழகிப் படித்த மனிதர்களின் உண்மைக் கதைகள். இந்த மக்கள் ஏழையாக இருந்தார்கள். வறுமைத் தீயில் கருகினர். ஆனால், சத்திய புத்திரர்களாக நிமிர்ந்து நின்றார்கள். அவர்களின் வாழ்க்கைச் சித்திரம்தான் இந்தப் புத்தகம். இதற்கு நீங்கள் அணிந்துரை வழங்க வேண்டும்!’’ 

‘‘இரண்டு நாட்கள் கழித்து... அதாவது ஜூன் மூன்றாம் தேதி தரலாமா?’’

‘‘ஜூன் மூன்றாம் தேதி உங்கள் பிறந்த நாள். எழுத நேரம் இருக்காது. பத்து நாட்கள் கழித்து வருகிறேன்!’’ என்றேன்.

‘‘மிகவும் நன்றி’’ என்றார் கலைஞர். 

‘கலைஞரை எவ்வளவு எளிதாகப் பார்த்துவிட்டேன்... மனங்கொள்ளா மகிழ்ச்சியுடன் வெளியே வந்தேன்!’

காத்திருந்த கலைஞர்

பத்து நாட்கள் கழித்து தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் சைதை கிட்டு என் வீட்டுக்கு வந்து ‘‘தலைவர் அழைத்து வரச் சொன்னார்’’ என்றார். கலைஞரின் வீட்டுக்குச் சென்றோம்.

என்னால் நம்ப முடியவில்லை. கலைஞர் எனக்காகக் காத்திருந்தார், ஒரு புத்தகத் தீவுக்குள்.

‘‘பல்பொடி விற்கிறவன், ராணுவ உடையில் பிச்சை எடுக்கிறவன், வெட்டியான், வீட்டைக் காக்கும் காவல்காரன்... இவர்களைப் பற்றியெல்லாம் என்னதான் எழுதிவிடப் போகிறீர்கள் என்கிற எண்ணத்துடன் படித்தேன். ஆனால், உணர்ச்சி மிகுந்த வரலாற்றை உயிர்த் துடிப்போடு எழுதியிருக்கிறீர்கள். உண்மையிலேயே அற்புதமான எழுத்து...’’ பாராட்டியவாறே அணிந்துரையை என்னிடம் தந்தார் கலைஞர். வெளியே வந்து நடந்துகொண்டே அணிந்துரையைப் படித்தேன்.

‘இளவேனில் - இனிமையும் குளிர்ச்சியும் நிறைந்த பெயர். ஆனால், இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளரோ, சுழன்றடிக்கும் சூறைக் காற்றாய், பூமியையே உருமாற்றவல்ல புயலோடு சேர்ந்த பெருவெள்ளமாய் எனக்குத் தோன்றுகிறார். நூலின் முதல் பாகத்தைப் படிக்கத் தொடங்கியவுடன், வெள்ளத்தில் வீழ்ந்த பொருள் அந்த வெள்ளத்தோடு போவதுபோல், முழு நூலையும் படித்து முடித்த பிறகே இன்பப் பெருமூச்சுடன் அணிந்துரை எழுதுவதற்குக் கரையில் ஒதுங்கினேன்...’

கலைஞரின் அணிந்துரை நீண்டு தொடர்ந்தது. எனக்குச் சிறகு முளைத்தது. அடையாறுக்குப் பறந்தேன். கலைஞரின் அணிந்துரையைப் படித்து மகிழ்ந்த ஆனா ரூனா, ‘‘கலைஞரின் அணிந்துரைக்காக எத்தனை நாள் அலைந்தாலும் தவறில்லை. உங்கள் அலைச்சல் வீணாகவில்லை...’’ என்றார்.

‘‘நீங்கள் சொன்னைதைப் போல கலைஞர் அணிந்துரைக்காக என்னை அலைய வைக்கவில்லை, எனக்காக ஆள் அனுப்பிக் காத்திருந்தார். நம்ப முடிகிறதா உங்களால்..?’’என்றேன்.

பரவசம் கொண்ட ஆனா ரூனா, ‘‘புத்தக வெளியீட்டு விழாவையும் கலைஞர் தலைமையில் நடத்தலாமா?’’ என்றார்.

‘‘இது பேராசை...’’ என்றேன்.

ஆனால், அதுவும் சாத்தியமானது. கலைஞர் இசைந்தார். அறிவாலயம் கலைஞர் அரங்கில் வெளியீட்டு விழா நடந்தது. முதல் பிரதியை ஆனா ரூனா பத்தாயிரம் கொடுத்து வாங்கிக்கொண்டார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் செந்தில்நாதன் ஆகியோர் திறனாய்வு வழங்கினார்கள். விழாவுக்கு நான் பெரிதும் எதிர்பார்த்த என் நண்பர் காளிமுத்து வரவில்லை.

மேடையில் வாசித்தார்

‘‘அப்படி என்ன இருக்கிறது அந்த அணிந்துரையில் என்று உங்களுக்கு ஓர் ஆர்வம் ஏற்படலாம். அதை மேலும் வளர்க்காமல் இங்கே உங்கள் முன்னிலையில் நானே ஒரு முறை அதைத் திரும்பப் படிப்பதுதான் தம்பி இளவேனிலுக்கு மக்கள் மன்றத்தில் நான் வழங்குகிற வாழ்த்துப் பத்திரம் என்று அதை இங்கே படிக்கிறேன்!’’ என்கிற அறிவிப்புடன் தனது அணிந்துரையை முழுமையாக மேடையில் படித்தார் கலைஞர்.

‘‘இந்த நூலிலே தம்பி இளவேனில் பேச முடியாதவர்களுக்காகப் பேசுகிறார். அழ முடியாதவர்களுக்காக ஆவேசத்துடன் எச்சரிக்கிறார். தீமைகளுக்கு தீப்பந்தம் ஏந்துகிறார். இந்த தீயை எந்த அதிகாரத்தாலும் அனைத்துவிட முடியாது.

இந்த அருமையான நூலை எழுதியிருக்கும் இளவேனில் ‘முரசொலி’ அலுவலகத்துக்கு என்னைத் தேடி வந்தார். எப்படி? சிகரெட்டும் புகையுமாக. ‘ஆஸ்ட்ரே இருக்கிறதா?’ என்று வேறு கேட்டார். நான் சொன்ன பிறகு சிகரெட்டை வெளியே போட்டுவிட்டு வந்தார்.

இளவேனிலைப் பார்த்தால் எழுத்தாளர் என்று நம்புவது சிரமம். இங்கே பல எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். நம்முடைய வில்வத்தைப் பார்த்தால் எழுத்தாளர்தான் என்று மின்னலடிக்கும். 

அப்படியொரு ஜபர்தஸ்துடன் இருப்பார். ஜவஹரைப் பார்த்தால் தெரியாது. இவர் ஓர் எழுத்தாளர் என்று சொன்னால்தான் தெரியும். இளவேனில் அப்படித்தான் இருப்பார். அவர் எழுத்தைப் படித்துப் பார்த்தால் பிரமிக்க வைப்பார்.

தம்பி இளவேனிலுக்கு இன்று நான் தருகிற அறிவுரை இதுதான். இனிமேல் ‘ஆஸ்ட்ரே’ பக்கமே திரும்பக்கூடாது. அதற்காக சிகரெட் பிடித்துவிட்டுக் கீழே போட்டுவிடலாமா என்று கேட்கக் கூடாது. பிடிக்கவே கூடாது. இதை நான் இளவேனிலுக்கு மாத்திரம் சொல்லவில்லை. வில்வத்துக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். ஏனென்றால் பல எழுத்தாளர்களை, படைப்பாளிகளை நாம் இழந் திருக்கிறோம்!’’

கலைஞரின் பாராட்டிலும் பாசத்திலும் சொக்கிப் போன நான் அன்று இரவே சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டொழித்தேன்.

கோபம் பறந்தது

அன்று முதல் கலைஞரின் அன்பு தம்பியானேன். இரவு 2 மணி வரையில்கூடப் பேசுவோம். ஓய்விருந்தால் மகாபலிபுரம் அழைத்து செல்வார். கலைஞரின் ‘உளியின் ஓசை’ திரைக்கதை உருவான போது, இந்தத் திரைப்படத்தை இயக்குங்கள் என்றார். இயக்கினேன். 

அப்படப்பிடிப்பின்போது சில நேரங்களில் கலைஞருடன் விவாதிக்க நேரம் இல்லாததால் என் விருப்பப்படி காட்சியமைத்துப் படமாக்கிவிடுவேன். அப்போது கலைஞரின் கோபம் இயக்குநர் இராம நாரயணன் மீது விழும். அவர் ‘ ‘கலைஞர் மிகவும் கோபமாக இருக்கிறார் அவரிடம் உடனே பேசுங்கள்’’ என்று தொலைபேசியில் பதறுவார்.

விடிவதற்குள் கலைஞரைப் போய் பார்த்தேன். அவர் எதற்காக கோபித்துக் கொண்டாரோ, அதைப் பற்றிப் பேசாமல் சமாதானத்தின் புதிய பரிமாணத்தைக் காட்டுவார்.

1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது ‘‘தேர்தலில் போட்டியிடுங்களேன்...’’ என்றார்.

‘‘நன்றி. ஆனால், எனக்கு இன்றைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை’’ என்றேன்.

அருகில் இருந்த ஆற்காடு வீராசாமி ‘‘அண்ணே நீங்க சொன்னாக் கூட வேண்டாம் என்கிறாரே..’’ என்று சொல்லிவிட்டு கலைஞரின் முகத்தைப் பார்த்தார்.

கலைஞர் சொன்னார்: ‘‘வளர்ந்த இடம் அப்படி. சிந்தனின் வளர்ப்பல்லவா!’’

- அழைக்கும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x