Last Updated : 16 Nov, 2017 09:44 AM

 

Published : 16 Nov 2017 09:44 AM
Last Updated : 16 Nov 2017 09:44 AM

வாழ்க்கை அழைக்கிறது 01: புலமைச் செருக்கு!

னிதன் கண்ட மாபெரும் அதிசயம், புரியப் புரிய விரியும் புதிர் - இறைவன்தான்.

புகலற்ற மனிதர்க்கு வேறு என்ன கதி? ‘இறைவன் மிகப் பெரிய வன்!’

கவிஞன்? கலைஞன்?

படைப்பாளி என்கிற முறையில் சில கவிஞர்களும் கலைஞர்களும் இறைவனுக்கு நிகராகவே மதிக்கப்பட்டி ருக்கிறார்கள்.

‘பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என்பேர் இறைவன்!’ - என்று கவிஞர் கண்ணதாசனைப் போல் இறைவனின் இடத்தில் தம்மை வைத்து அழகு பார்க்கச் சிலர் தகுதி சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

இசையால் இறைவனை அடைவதற்கும், இழுத்துப் போட்டுக் கொள்வதற்கும் முடியும் என்பது ஆன்மிகப் பெரியவர்களும் ஒப்புக்கொண்ட நம்பிக்கை.

காதல் தேவதைக்கு அழைப்பு

கிரேக்க இதிகாசப் புனைவுகளில் ஒரு காட்சி. பிக்மேலியன் ஒரு சிற்பி. திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அழகி ஒருத்திக் காக அலைகிறான். பார்த்த பெண்களுக்கெல்லாம் ஏதோ ஒரு குறை. இறைவன் படைப்பில் இத்தனை கோளாறா? சலிப்புறுகிறான். காதல் தேவதையை அழைக்கிறான். அவள் வருகிறாள். ‘‘என்ன வேண்டும்?’’ என்று கேட்கிறாள்.

பிக்மேலியன் சொல்கிறான்: ‘‘நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நான் தேடும் அழகி எங்கும் தென்படவில்லை. ஒன்று செய். நான் ஒரு பெண் ணைச் சிலையாக வடிக்கிறேன். அதற்கு உயிர் கொடு. எனக்கொரு மனைவி கிடைப்பாள்; பூமிக்கொரு அழகி கிடைப்பாள்; இறைவனின் இயலாமை மறைந்துவிடும்!’’

இதுதான் வித்வத் கர்வம். இதுதான் புலமைச் செருக்கு. இது இருந்தால்தான் அவன் கவிஞன்; கலைஞன். அவனால்தான் பாரதி சொல்வது போல் பாட்டுத்திறத்தால் இவ்வையத்தை பாலித்திட முடியும்.

நானறிந்த இருவர்

படைப்பில் மாத்திரம் இல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் புலமைச் செருக்குடன் நிமிர்ந்து நின்ற இருவரை நான் அறிவேன். ஒருவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இன்னொருவர் சொக்கலிங்க பாகவதர்.

புரட்சிக் கவிஞருக்கு ஓர் இயக்கம் பின்புலமாக இருந்ததால், அவர் இருந்தபோதும், மறைந்த பிறகும் வேந்தர்தான். சொக்கலிங்க பாகவதரோ, தனி மனிதராய், வறுமையோடும் வாழ்க்கையோடும் கட்டிப்புரண்டவர்.

பாலுமகேந்திரா வின் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ ஆகிய படங்களில் நடித்த அதே சொக்கலிங்க பாகவதர் என்றால் உங்களுக்கெல்லாம் சட்டென்று புரியும்.

‘‘சொக்கலிங்க பாகவர் என்றால் சும்மாவா!’’- என்று பாகவதரின் பாட்டைக் கேட்டுக் கிறங்கிப் போனவர்கள், அவரை பாராட்டி மகிழ்ந்தது எனக்குத் தெரியும். அவரிடம் இசை பயின்று புகழ்பெற்ற பல கலைஞர்கள் உண்டு.

நான் அவரைப் பார்த்தபோது அவருடைய ஆதிமூலம் எதுவும் எனக்குத் தெரியாது. தினமும் கூடப் பார்த்திருக்கிறேன். என் நண்பர் சாமிநாதனின் தந்தை என்று மட்டுமே தெரியும்.

இப்போது காமராஜர் அரங்கம் இருக்கும் இடத்துக்கு எதிர்ப்புறம் அப்போது பெரிய மார்க்கெட் ஒன்று இருந்தது. அங்கு சாமிநாதனின் தந்தை மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு, அரை ஞாண் கயிறு, ரிப்பன், சோப்பு, சீப்பு, வாசனைத்தூள் போன்ற ஒப்பனைப் பொருட்களை விற்று, கிடைத்த பணத்தில் குடும்பத்தைச் சுமந்துகொண்டிருந்தார்.

chokalinga1 சொக்கலிங்க பாகவதர்

வீட்டில் அமர்ந்து பேசும்போதும், அட்டகாசமாய் சிரிக்கும்போதும், அடடா, கோட்டைக்கு வெளியே தான் சந்தித்த களங்களையும் வென்றொழித்த வீரர்களையும் பற்றிய விவரணையில் பெருமிதம்கொள்ளும் பேரரசனைப் போல் என்ன மிடுக்கு. ‘வீழ்வேன் என நினைத்தாயோ’ என்று வறுமையை எட்டி உதைக்கும் மதர்ப்பென்ன மதர்ப்பு. வியப்பாக இருக்கும்!

தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் பத்தடி நீளமும் எட்டடி அகலமும் கொண்ட பழைய ஓட்டு வீட்டில் அவருடைய குடும்பம் போராடிக் கொண்டிருந்தது. நண்பர் சாமிநாதனைப் பார்க்க நானும், கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் கே.பி.அறிவானந்தமும் அங்கே போவோம். கலை, இலக்கியம் பற்றி மூவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.

நண்பர் சாமிநாதன், நடராஜ் - சகுந்தலா நாட்டியாலயாவின் இசையமைப்பாளர். சாமிநாதன் எப்போதும் எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்துவார். இசை பற்றி, அதன் பரிமாணம் பற்றி, தேச தேசங்களில் அதன் வித விதமான நிறங்கள் குறித்து தீவிரமாய் வேடிக்கையாய்த் தன் அனுபவங்களையும் கருத்துகளையும் மாரியாய்ப் பொழிவார். சின்ன வயதிலேயே பெரும் சாதனையாளர்களுக்கெல்லாம் உத்தரவிடும் அளவுக்கு சாமிநாதன் ஒரு மேதையாய் இருந் தார்.

அவருடைய தந்தையைப் பற்றி எனக்கொன்றும் பெரிதாக அபிப்பிராயம் இல்லை. மஞ்சள் குங்குமம் தாலிக் கயிறு... இவைதான் அவரு டைய உலகம். இப்படித்தான் அவரை நான் புரிந்துகொண்டிருந்தேன்.

சொக்கலிங்க பாகவதர் தேனாம்பேட்டை மார்க்கெட்டில் மஞ்சள் குங்குமம் விற்றுக்கொண்டிருப்பதை பார்த்துவிட்ட ஓர் இசைக் கலைஞர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார். மெல்லிசை மன்னரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சொக்கலிங்க பாகவதரைப் பார்க்க உடனே புறப்பட்டு வந்துவிட்டார்.

ஒரு தட்டில் புடவை, வேட்டி சட்டை. பழங்கள் கொஞ்சம் பணம் வைத்து எடுத்துக் கொண்டுவந்த மெல்லிசை மன்னர், சாமிநாதனின் அம்மாவிடம் அவற்றை எல்லாம் கொடுத்துவிட்டு, ‘எதுவும் பேசவேண்டாம்’ என்று ஜாடை காட்டினார். அதை வங்கிக் கொண்டு அம்மா உள்ளே போனார். அதன் பிறகு வெளித் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சொக்கலிங்க பாகவதருக்கு முன் குனிந்து வணங்கி ‘‘அண்ணே...’’ என்று மெல்லிய குரலில் அழைத்தார்.

விழித்தெழுந்த சொக்கலிங்க பாகவதர் ‘‘என்ன விஸ்வா!’’ என்று வரவேற்றார். உட்கார் என்று கண்களால் உத்தரவிட்டார். அவருக்கு அருகில் எம்.எஸ்.வி. பவ்யமாய் அமர்ந்தார்.

‘‘என்ன விஷயம்?’’ பாகவதர் கேட்டார்.

‘‘பார்க்க வேண்டும் போலிருந்தது ’’

‘‘பார்த்தாகிவிட்டது, அப்புறம்?’’

‘‘நீங்கள் போய் மார்க்கெட்டில் நிற்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.’’

‘‘நினைத்துப் பார்க்காதே!’’

மெல்லிசை மன்னர் தயங்கித் தயங் கிச் சொன்னார்: ‘‘தம்பி சாமிநாதனை எனக்கு உதவியாளராக அனுப்புங்கள். மாதம் ஒரு பாத்தாயிரம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்கிறேன்!’’

மெல்லிசை மன்னர் சொல்லி முடிப்பதற்குள் பாகவதர் வெடித்துவிட்டார் ‘‘என்ன எகத்தாளம் இது. என் மகனை உனக்கு உதவியாளராக அனுப்பவேண்டுமா? என் மகனுக்கு உதவியாளராக இருக்க உனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசித்திருந்தால் இப்படி வக்கனை பேச வந்திருப்பாயா?’’

‘‘கோபமாக இருக்கிறீர்கள். நான் அப்புறம் வருகிறேன் அண்ணே!’’

மெல்லிசை மன்னர் வணங்கிவிட்டு வீதிக்கு நடந்தார். மலைத்தும் திகைத் தும் போன நானும் அறிவானந்தமும் அங்கிருந்து வெளியேறினோம்.

நான் பழுத்த மரம்...

மறுநாள் சாமிநாதன் வீட்டுக்குப் போனபோது, சாமிநாதனுக்கு ஆர்மோனியம் வாசிப்பவர், பாவதரிடம் உரிமையோடு சண்டை போட்டார்.

‘‘விஸ்வதான் அண்ணனிடம் நீங்கள் அப்படிப் பேசி இருக்கக்கூடாது!’’

‘‘வேறு எப்படி பேசியிருக்க வேண்டும்? கற்றுக்கொடு. கேட்டுக்கொள் கிறேன். ’’

‘‘சரி. அதை விடுங்கள். எல்.வி.பிரசாத், ஏவி.எம்.செட்டியார், நாகிரெட்டியார்... அவர்களைப் போய் நீங்கள் ஏன் பார்க்கக் கூடாது? நிச்சயம் உங் கள் திறமை அவர்களை மகிழ் விக்கும்.’’

‘‘திருப்பதியில் பிச்சை எடுக்கிறவன், ராமர், அனுமன் வேஷம் போட்டு ஆடுகிற மாதிரி செட்டியாருக்கும் ரெட்டியாருக்கும் முன்னால் நான் ஆடி னால் அவர்களுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். என்ன திமிரடா உனக்கு? பழுத்த மரத்தை நோக்கி எங்கெங்கிருந்தோ பறவைகள் வருகின்றன. வேடந்தாங்கலைத் தேடி நாடு கடந்து கடல் கடந்து நாரைகள் வருகின்றன. பார்க்கிறாய்தானே! பசி இருந்தால் பறவைகள்தான் மரத்தைத் தேடிப் போகவேண்டும். தேவை இருந்தால் நாரைகள்தான் வேடந்தாங்கலைத் நாடிப் போகவேண்டும். பழமரம் பறவைகளைத் தேடிப் போகக் கூடாது. வேடந்தாங்கல் நாடு நாடாய் அலையக் கூடாது. நான் பழுத்த மரம். வேடந்தாங்கல். உனக்குத் தெரியுமில்லையா, எப்படி என்னிடம் துணிந்து இப்படி சொல்கிறாய்?’’

பாகவதரின் கண்களில் ஈரம் கசிந்தது. ‘‘நாம் கலைஞர்களாய் பிறந்ததே தப்பு அண்ணே’’ ஆர்மோனியக் கலை ஞர் தலையில் அடித்துக் கொண்டு புறப்பட்டார்.

புலமைச் செருக்கு என்பது வசீகரமான குதிரைதான். அதன் மீது சவாரி செய்யும் கலைஞன் உலகை வென்றுவிடலாம். ஆனால் அந்தக் குதிரை கலைஞன் மீது சவாரி செய்தால்...

‘‘என்ன பெரிய கலை... வித்வத்துவம்... புலமை...’’ என்று காரி உமிழ்ந்துவிட்டு நிழலுக்குள் மறைந்துவிட்டார் சொக்கலிங்க பாகவதர்.

- அழைக்கும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x