Published : 10 Dec 2017 09:31 AM
Last Updated : 10 Dec 2017 09:31 AM

காலத்தின் வாசனை: தெருவில் இருந்து மறைந்தவர்கள்

வீட்டில் காணாமல் போனவர்களைத் தெருவில் தேடலாம். ஆனால் தெருவிலிருந்தே காணாமல் போனவர்களை எங்கே என்று தேடுவது?

இப்போதெல்லாம் உப்பு வண்டிக்காரரை தெருவில் பார்க்கவே முடியவில்லை. அவர் காணாமலே போய்விட்டார். கவனித்தீர்களா? கடைகளில்தான் அழகான பாக்கெட்டுகளில் உப்பு கிடைக்கிறதே. இனிமேல் அவரெல்லாம் எதற்கு?

ஆனால் உப்பு வண்டிக்காரர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்று சொல்லிக்கொள்ளவே ஆசை. உப்பு வண்டியை ஒற்றை ஆளாக இழுத்து வருவார் அவர். ஏதோ அவரே கடலுக்குள் மூழ்கி அள்ளிக்கொண்டு வருவது மாதிரி!

தயிர், மோர் விற்கிற பெண்மணியும் காணோம். அவள் விற்கிற மோருக்கென்று தனிவாசனை. சுவரில் அவள் தீற்றிப்போகும் கோடுகள் - மோர்க்கணக்கு!

காலை 11 மணிக்கு வெறிச்சோடி கிடக்கும், தெருவின் மோனத்தைக் கலைத்தபடி ஒலிக்கும் ‘கிளி ஜோ...ஸீயம்’ என்ற குரல் இப்போதெல்லாம் கேட்பதில்லை. சமீபத்தில் எங்கள் தெருவில் அத்திப்பூத்தாற்போல் வந்த கிளிஜோசியக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்

“தோ இந்தக் கூண்டில் இருக்கிற ராகினியும், பத்மினியும் சீட்டு எடுத்துக் குடுத்தே பழக்கப்பட்டது. தொறந்து வெளியே பறக்கவிட்டாலும் என்கிட்டேயே வந்துரும்! அதுங்கமாதிரிதான் நானும். எனக்கு வேற வேலை தெரியாது! அப்பாவுக்கு குடுத்த சத்தியத்தை மீற முடியாதுங்க ஐயா... வேற வேலைக்கு போவப்புடாது. இது பரம்பரைத் தொழில் ஸாமி. விட்ற முடியுமா?!”

ஆமோதிப்பது மாதிரி கிளிகள் கீ...கீ...என்று கத்தின!

பல வருஷங்களுக்கு முன்னால் கவிஞர் நா. விச்வநாதன் எனக்காகவே எழுதிய ஜோசியக்கிளி கவிதை நினைவுக்கு வருகிறது.

‘நடைபாதைக் கிளிகளிடம்/ சேதி கேட்டு நிற்கும் சோகத்தில்/ முனகல் வாய்ப்பாடு/ மறந்து போகாது கோபாலா!/ திறந்து விடு கூண்டை/ அவை பறந்து போகும் உனக்கான/ சேதிகளைச் சொல்லிவிட்டு!’

“இதற்கு அர்த்தமென்ன?” என்று கேட்டேன். “அட போடா, ஆபீஸ் குமாஸ்தா!” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி போய்விட்டான். தெருவில் தான் கண்ட சாதாரண மனித ஜீவன்களைப் பார்த்து வசன கவிதைச் சித்திரத்தை தீட்டுவான் பாரதி.

‘பாம்புப்பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா? இது சக்தியின் லீலை பொருந்தாத பொருள்களை பொருந்தவைத்து அதிலே இசை உண்டாக்குதல்! தொம்பைப்பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன. ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான். இவை எல்லா உயிரிலும் சக்தி விளையாடுகிறது.’

குடுகுடுப்பைக்காரர் பாடிக்கொண்டு போவதை புதிய கோணாங்கி என்ற பாடலாக வடித்துவிடுவான் பாரதி.

தெருவில்தான் எத்தனைவிதமான பிச்சைக்காரர்கள்! அன்னக்காவடி, ராப்பிச்சைக்காரர்! ஒருநாள் பாரதி தன் வீட்டு மொட்டை மாடியிலே உலாவுகிறான். இரவு வேளை தெருவிலே ராப்பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி பாடிக்கொண்டு போகிறாள். ‘மாயக்காரன் அம்மா - கண்ணன்/ மோசக்காரன் அம்மா.’ மனசுக்குள் பாஞ்சாலி சபதம் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதிக்கு ராப்பிச்சைக்காரியிடம் ராகம் கிடைத்து விடுகிறது. பாடல் வரியொன்று பீறிட்டுக் கிளம்புகிறது.

‘காய் உருட்டலானார் - சூது/ களி தொடங்கலானார்/ மாயமுள்ள சகுனி - பின்னும்/ வார்த்தை சொல்லுகின்றான்…’

பாடி முடித்த பாரதி செல்லம்மாளைக் கூப்பிட்டு ராப்பிச்சைக்காரப் பெண்ணின் வயிறு நிறைய சாப்பாடுபோட்டு அனுப்பிவைக் கிறான்!

அம்மி கொத்துகிறவர், ஈயம் பூசுகிறவர், குடை ரிப்பேர்காரர், சாணை பிடிக்கிறவர் - இவர்களுக்கெல்லாம் தொழிலுக்கேற்ற பிரத்யேக குரல் தொனிகள் இருக்கின்றன. குச்சி ஐஸ் விற்கிறவர், பலூன்விற்கிறவர், ஜவ்வுமிட்டாய்க்காரர் (மீந்த ஜவ்வில் வாட்சும் மோதிரமுமாய் கட்டிவிடுவதை மறக்க முடியுமா?).

கூடை நிறைய வெள்ளை முறுக்கு விற்றுக்கொண்டு வரும் பாட்டி... அதன் பாம்படம் தொங்கும் பெரிய காதுகள்...முறுக்குத்தான் என்ன ருசி! ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க தெருவில் உடம்பில் சாட்டையால் சுளீர் சுளீர் என்று அடித்துக்கொண்டு கையிலும் வயிற்றிலும் வரிவரியாய் ரத்தக் கோடுகளுடன் வந்து காசு கேட்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? நம் கண்களில் ரத்தம் வரும்! ஒரு நாள் தாங்க முடியாமல் கேட்டேவிட்டேன்.

“ஏய்! நிறுத்துப்பா! காசு கொடுத்துவிடுகிறேன்! வயிற்றில் இப்படி ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக்கொள்கிறாயே ஏன்?” புகையிலை காவி ஏறிய தொங்கு மீசை துடிக்க அந்த மனிதர் சொன்னார்:

“வயித்துக்குத்தான் ஸாமி!”

தஞ்சாவூர்க்கவிராயர். தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x