

எ
னது ராஜசபைக்குள்ளே என்ன இது, சலசலப்பு? எனது இன்னிசை மண்டபத்துக்குள் யாரங்கே விம்முவது?
நான் பாட்டு மழையில் குளிக்கும்போது, யாருடைய கண்ணீர் என் முகத்தில் விழுந்தது?
ஒரு சங்கீத சர்வாதிகாரியின் ஆணைக்குக் கட்டுப்பட்டதுபோல், அமைதியில் உறைந்த இரவில் ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெரு, கொஞ்சம் தள்ளி இருக்கும் ‘கானாபாக் தெரு’ (இசைப் பூங்கா வீதி) இவற்றின் அருகே சில வீதிகளில் ஆடலும் பாடலும் இசையும் தாளமும் கலந்த மோகன அலைகள் சில அழுக்குகளையும், துயரங்களையும், சுகமாகக் கழுவிச் செல்லும்.
ஜானி ஜான்கான் வீதியில்தான் ‘தாய்நாடு’ வார இதழின் அலுவலகம். என் எழுத்தும் உறக்கமும் அங்கேதான். அருகே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீட்டின் மாடியில் இருந்து பாட்டும் இசையும் தாளமும் ரசனையும் பொங்கிப் பிரவகித்து இரவை ஆசிர்வதிக்கும். அது ஒரு தனி சாம்ராஜ்யம்!
‘தாய்நாடு’ அலுவலகத்தில் முதல் நாள் உறங்கியபோது, மெலிதான இசை வந்து என்னை உசுப்பியது. எழுந்து மாடிக்குப் போனேன். பக்கத்துவீட்டு ஜன்னல் திறந்திருந்தது. எங்கள் மாடியின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்து ஜன்னல் வழியே அந்த வீட்டின் விசாலமான கூடத்தைப் பார்த்தேன். அலங்கார விளக்குகளின் பிரகாசத்தில் மயக்கும் அழகுடன் ஒரு பெண் உட்கார்ந்தபடியே கைகளை அசைத்தும் கால்களால் தாளமிட்டவாறும் அபிநயம் புரிந்துகொண்டிருந்தாள். அவளுக்கு வலமும் இடமும் இரு பெண்கள் அந்த அழகியின் பிரதிமைகளாய்...
‘மொகல் ஏ ஆஸம்’ திரைப்படத்தில் மதுபாலா (அனார்கலி) திலீப்குமாருக்கு (சலீம்) முன் பாடும் காட்சி நினைவுக்கு வந்தது.
ஒரு வித்தியாசம், இங்கே பல சலீம்கள் அமர்ந்திருந்தார்கள். பாட்டுக்கும் அபிநயத்துக்கும் தில்ரூபா, சாரங்கி, தாகிரா, தபேலா என இசைக் கருவிகள் மெருகேற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வோர் இரவிலும் இந்த இசையும் நடனமும் என்னை மாடிக்கு இழுக்கும். இருட்டில் அமர்ந்து ஜன்னல் வழியே உருதுப் பாடல்களையும் உருகும் இசையையும் ஒளிரும் அழகையும் ரசித்து மகிழ்வேன்.
அந்த அழகியின் பெயர் நஷ்ரீன் என்றும், ஜெமினியின் தயாரிப்பான ‘பைகாம்’ என்னும் இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டேன்.
மெல்ல மெல்ல நஷ்ரீனும் நானும் நண்பர்கள் ஆனோம். பிறகு நஷ்ரீன் எனக்கு அக்கா ஆனார். நான் அவருக்குத் தம்பி ஆனேன்.
ஒருநாள் ‘‘இங்கே என்ன வேலை செய்கிறாய்?” என்று கேட்டாள் நஷ்ரீன்.
‘‘நான் இங்கிருந்து வரும் ‘தாய்நாடு’ பத்திரிகையின் பொறுப்பாளர்” என்றேன்.
‘‘இந்த சின்ன வயசிலா?”
‘‘தாயை நேசிப்பதற்கு மீசை முளைக்க வேண்டுமா?’’ என்று எங்கோ நான் படித்ததைச் சட்டென்று சொன்னேன்.
‘‘நல்லா பேசுறியே... என்ன நீ எழுதுவே?’’
‘‘எனக்கு ஏற்படும் வலியை!”
‘‘உனக்கு வலிச்சா, அதை எழுதுறதுக்கு ஒரு பத்திரிகையா?’’
‘‘அப்படி இல்லே, ஒரு நல்ல நாவலைப் படிக்கும்போது அழுகை வருதே, அது நமக்கு ஏற்படும் சொந்த வலியாலா?
நமக்கு அறிமுகமில்லாத யாரோ ஒருவருக்காக அழுகிறோம், எழுத்தாளர்களும் அப்படித்தான்!’’
‘‘நீ அபூர்வமான பையன்தான். உனக்குச் சம்பளம் தரும் முதலாளி யாரு?’’
‘‘கரந்தை சண்முகவடிவேல்!’’
‘‘ம்... ஊருக்காக அழுகிறவர்களும், துடிக்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அப்படி இல்லை. எனக்காக அழுறதுக்கே நேரம் இல்லை...’’
‘‘நீங்க ஏன் அழணும்? உங்களுக்கென்ன குறைச்சல்? அழகாக இருக்கிறீர்கள்.. அற்புதமாய் பாடுகிறீர்கள். உங்கள் சிரிப்பே உலகத்தை ரட்சிக்கிற மாதிரி இருக்கு!’’
‘‘என் சிரிப்பா? அது எனக்குத் தொழில் தம்பி. என் சிரிப்பு உலகத்தை ரட்சிக்கிறதா? எரிக்கிறதா?
நான் சிரிக்கும்போதெல்லாம் எனக்குள் ரத்தம் கசிவதை நீ பார்த்தது இல்லை?’’
நஷ்ரீன் சிரித்தாள். அது நெருப்பாக சுட்டது.
ஒரு நாள் காலையில் காண்டேகரைப் படித்துக்கொண்டே மாடியில் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தேன். தற்செயலாக ஜன்னல் பக்கம் பார்த்தேன். நஷ்ரீன் குளித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் கூடத்தைக் கடந்து சென்றாள். பட்டென்று நெஞ்சு நின்று இயங்கியது. அவளுடைய மார்பகங்களில் ஒன்று... அது எங்கே? ஏன் இல்லை..?
மாலை 6 மணியிருக்கும், மாடிக்கு வந்தேன்.
ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நஷ்ரீன் நின்றாள் அவளைப் பார்த்ததும் சங்கோஜத்துடன் திரும்பினேன்.
‘‘இங்கே வாடா...’’ என்று என்னை அவள் அழைத்தாள். நான் அருகே சென்றேன். நான் தலைகுனிந்து நின்றேன்.
‘‘காலையில் நான் குளித்துவிட்டு போகும்போது என்னைப் பார்த்தாய்தானே?’’
ஆம் என்பதற்கு அடையாளமாக தலையசைத்தேன்.
‘‘உனக்கு என்ன தோன்றியது?"
‘‘எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!’’
‘‘அந்த அதிர்ச்சி இன்னும்கூட எனக்கே மறையவில்லை. அந்த ரவுடிகள் என் மார்பை அறுத்தெரிந்து அவமானப்படுத்திய அந்த நாள், அந்த வேதனை பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகும் இப்பவும் வலிக்கிறது!” ‘‘உங்களை எதற்காக அப்படி அவமானப்படுத்தினார்கள்?’’
‘‘அந்த ரவுடிகளுக்கு நான் பதில் சொல்லாததால்...’’
‘‘அவர்கள் என்ன கேட்டார்கள்?’’
‘‘நீ இந்துவா? முஸ்லிமா என்று கேட்டுக் குடைந்தார்கள்!’’
‘‘உங்களை அடித்தவர்கள் இந்துக்களா? முஸ்லிம்களா?’’
‘‘இருவரும்தான். ‘இந்துதானே’ என்று முஸ்லிம்கள் அடித்தார்கள். ‘முஸ்லிம்தானே’ என்று இந்துக்கள் அடித்தார்கள்!’’
‘‘இது நடந்தது மதராஸிலா?’’
‘‘டெல்லியில்... சுதந்திர இந்தியாவில்!’’
நஷ்ரீனைத் தேடிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ‘‘அப்புறம் பேசலாம்...’’ என்றாள்.
சிரிப்பதற்குத் தயாராக வேண்டுமே அவள்!
- அழைக்கும்...