Last Updated : 15 Jul, 2014 09:31 AM

 

Published : 15 Jul 2014 09:31 AM
Last Updated : 15 Jul 2014 09:31 AM

வழக்கறிஞர் தொழிலுக்கு தாட்கோ நிதியுதவி

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவிகள் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.

#மகளிர் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு தாட்கோ மூலம் நிதி அளிக்கப்படுகிறதா?

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் சீருடையை தைக்க மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டுறவு சங்கங்கள் சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் தலா ரூ.13,900 வீதம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதில் தாட்கோ மானியம் ரூ.4,170.

#வழக்கறிஞர்கள் தொழில் தொடங்க தாட்கோ மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறதா?

வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவராக, 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இத்தகுதியுள்ள இளம் சட்டப் பட்டதாரிகள் தொழில் தொடங்க அலுவலக வாடகை, முன்பணம், மேஜை, நாற்காலி, அலமாரி, சட்டப்புத்தகச் செலவுகளுக்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

#வழக்கறிஞர் தவிர, வேறு என்ன தொழில்கள் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது?

பட்டயக் கணக்கர், செலவுக் கணக்கர் (சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்) முடித்த ஆதிதிராவிடப் பிரிவினருக்கும் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. அலுவலகம் அமைக்க, துறை சார்ந்த புத்தகங்கள் வாங்க ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி 2013-14ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 25 முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். இந்திய பட்டயக் கணக்கர், செலவுக் கணக்கர் நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும்.

#அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?

ஆம். மத்திய அரசின் இந்திய குடிமைப்பணி தேர்வு (சிவில் சர்வீசஸ்) 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் முதன்மை தேர்வு (Main Exam) எழுதும் ஆதிதிராவிட இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

#வழக்கறிஞர், இளம் சட்டப் பட்டதாரிகள் தொழில் தொடங்க ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படுகிறதா?

ஆம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. படித்து முடித்த அனைவரும் நிபந்தனைக்கு உட்பட்டு தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என நிர்ணயம் எதுவும் இல்லை. இது இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கும் பொருந்தும்.

#இந்த நிதியுதவிகள் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

மேற்கண்ட நிதியுதவிகள் பெற அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிதியுதவி சென்னை தாட்கோ அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x