பாரதி யார்? - மீசைக் கவிஞனைப் பற்றிய மேடை நாடகம்

பாரதி யார்? - மீசைக் கவிஞனைப் பற்றிய மேடை நாடகம்
Updated on
1 min read

“பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்பதை உண்மையாக்கும் விதமாய் இன்றுவரை மக்கள் மனதில், வீழாமல் நிற்கிறார் பாரதி. பாரதியாரின் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும், மூத்த தலைமுறைக்கு பழைய நினைவுகளை கொடுக்கவும் காத்திருக்கிறார்கள் ’பாரதி யார்?’ நாடகக் குழுவினர்.

வீணைக் கலைஞர், இயக்குநர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்ட மறைந்த எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கும் நாடகம் “பாரதி யார்?”. இந்த நாடகத்தில் பாரதியாக சொற்பொழிவாளர் ரமணன் நடிக்கிறார்.

எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் 1954-ம் ஆண்டு வெளியான “அந்த நாள்” திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். அத்திரைப்படம் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கத்தில் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அதில், சிவாஜி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார் ரமணன்.

’பாரதி யார்?’நாடகம் குறித்து ’தி இந்து’ (தமிழ்) இணையதளத்துக்கு ரமணன் அளித்த பேட்டியில், அவர் கூறியது:

“எஸ்.பி.எஸ்.ராமன் மற்றும் அவர் குடும்பத்தினருடன் பாரதியார் குறித்த உரையாடலின்போது தோன்றியது “பாரதி யார்?” நாடகத்திற்கான சிந்தனை. பாரதியாரைப் பற்றி தெரிந்தவர்-தெரியாதவர் என அனைவரையும் கவரும் விதத்தில் இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது.

பாரதியார் பன்முக ஆற்றல் கொண்டவர். 38 வயதில் இறந்தாலும், 300 பேருக்கான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். தேச பக்தி, தெய்வ பக்தி, பெண் விடுதலைச் சிந்தனை, சமூக சீர்திருத்தம், அறிவியலும் ஆன்மிகமும் கலந்த பார்வை இவை அனைத்தையும் உள்ளடக்கியவர் பாரதியார்.

இந்த நாடகத்தை எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியிருக்கிறார், அவரது மனைவி தர்மா, செல்லம்மாவாக நடித்திருக்கிறார். அவரது மகன் பரத்வாஜ் ராமன் இசையமைத்திருக்கிறார்.

கர்நாடக சங்கீத வித்வான் விஜய் சிவா, கிரி டிரேடர்ஸ் ரங்கநாதன், ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கிருத்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர். நாடகத்தின் வசனத்தை நான் எழுதியுள்ளேன்.

நாடகம் வரும் டிசம்பர் 9ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, தியாகராயா நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் அரங்கேற்றப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in