

ஆதி திராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தாட்கோ மூலம் பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் தொழில் முனைவோர் திட்டம் குறித்தும் கடன்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்தும் நேற்று பார்த்தோம். இளைஞர்களுக்கான தாட்கோ சுய வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.சக்திவேல்.
# தொழில் முனைவோர் திட்டம்போல தாட்கோவில் வேறு சுய வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளதா?
ஆம். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் (SEPY) உள்ளது. படித்த ஆதி திராவிட இளைஞர்கள் சொந்தமாக தொழில் செய்ய இந்த திட்டத்தில் கடனுதவி அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தொழில்கள்தான் என்றில்லாமல் இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த எந்த தொழிலிலும் ஈடுபடலாம். தொழில் முனைவோர் திட்டம்போல இதிலும் வங்கிக் கடனுதவி, மானியம் வழங்கப்படுகிறது.
# SEPY திட்டத்தின் கீழ் கடனுதவி பெற கல்வித் தகுதி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?
கல்வித் தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், வயது வரம்பு உண்டு. SEPY திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வோர் 18 வயது முடிந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். அதேபோல, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் திட்டத்தில் குறிப்பிட்டபடியே இதிலும் விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைக்கவேண்டும்.
# SEPY திட்டத்தில் போக்குவரத்து வாகன தொழில் மேற்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறதா?
வழங்கப்படுகிறது. இதைப் பெற ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். அவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இதற்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது ரூ.2.25 லட்சம் - இதில் எது குறைவோ, அது மானியமாக வழங்கப்படும். மானியம் நீங்கலாக மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.
# SEPY திட்டத்தில் கடனுதவி எந்த வங்கியில் வழங்கப்படுகிறது?
அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தொழில் முனைவோர் மற்றும் SEPY திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. வங்கிக் கடனை பொறுத்து அவற்றை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது. மானியம் தவிர்த்து, எஞ்சியுள்ள வங்கிக் கடனை சம்பந்தப்பட்டோர் திருப்பிச் செலுத்த வேண்டும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)