Last Updated : 21 Nov, 2017 09:56 AM

 

Published : 21 Nov 2017 09:56 AM
Last Updated : 21 Nov 2017 09:56 AM

மனிதக் கொல்லிகளாகும் பூச்சிக்கொல்லிகள்

பூ

ச்சிக்கொல்லிகள், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை. முறையாகக் கையாளாவிட்டால், பூச்சிக்கொல்லி தெளிப்பவர்களையும் பலிவாங்கிவிடுகின்றன. சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில் மிதைல் புரோமைடு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய விவசாயிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நெமடோட் என்ற பூச்சிகளை அழிக்க இந்தப் பூச்சிக்கொல்லிகளை வியாபாரிகள் விற்றுள்ளனர்.

பூச்சிக்கொல்லி அடித்த விவசாயிகள் இறப்பது தொடர்ந்த தால் உயர் நிலை விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ். கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையிலான அந்தக் குழு, விவசாயிகளைப் பலி வாங்கிய யவத்மால், நாகபுரி, அகோலா, அமராவதி மாவட்டங்களுக்கு நேரில் சென்று விசாரித்து அறிக்கை அளித்துள்ளது.

விவசாயிகள், பூச்சிக்கொல்லிகளை வேளாண் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட விகிதாச்சாரங்களில் கலந்து பயன்படுத்தாமல், பூச்சிக்கொல்லி வியாபாரிகள் கூறிய ஆலோசனைகளின்படி அடர்த்தி அதிகமாக இருக்கும் படி கலந்து பயன்படுத்தியுள்ளனர். வியாபாரிகளும் அரசு அங்கீகரித்த பூச்சிக்கொல்லிகளை மட்டும் விற்காமல், சந்தை யில் தாங்களாகவே சில மூலப் பொருட்களைக் கொண்டு, கூட்டுப் பொருட்களாக பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்து விற்றுள்ளனர். மேலும், பெரிய பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் விற்ற விலை அதிகமாக இருந்ததால், குறைந்த விலைக்குக் கிடைப்பதை வாங்கியுள்ளனர் விவசாயிகள்.

பூச்சிக்கொல்லிகளை அடிக்கும்போது மேலுடை மீது ஏப்ரன் போன்ற மேலாடையும் முகமூடியையும் கையுறைகளையும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். நீண்ட நேரம் தொடர்ச்சி யாக மருந்தடிக்கக் கூடாது. நடுநடுவே நல்ல காற்றையும் சுவாசிக்க வேண்டும். வெயில் ஏறும்போது பூச்சிக்கொல்லி அடிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளைக் கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான்களைக் கொண்டு தாங்களே அடித்தபோதுதான் பலர் உயிரிழந்துள்ளனர். அந்தக் கூட்டு மருந்திலிருந்த ரசாயனத்தின் நச்சுத்தன்மை குறித்து அவர்களுக்குப் போதிய புரிதல் இல்லை. வியாபாரிகளும் மேம்போக்காகச் சில வழிமுறைகளை மட்டும் சொன்னார்களே தவிர, இவை கடுமையான நச்சுத்தன்மை உள்ளவை என்று எச்சரிக்கத் தவறினர். பூச்சிக்கொல்லி அடித்த விவசாயிகளில் சிலர் பசி மேலிட கையைச் சரியாகக் கழுவாமல் சாப்பிட்டுள்ளனர். உடல் நலக்குறைவாக இருந்த சிலர் அதைத் தெரிவிக்காமலேயே பூச்சிக்கொல்லிகளைக் கையாண்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் காட்டும் அதே அலட்சியத்தை தமிழகத்திலும் காண முடிகிறது. தமிழகத்திலும் அந்த நிலை ஏற்படாதிருக்க வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பாதுகாப்பாக பூச்சிக்கொல்லிகளைக் கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளையும் வலியுறுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது முகத்தை மறைக்கும் முகமூடிக் கவசம், உடை மீது படாமல் இருக்க ஏப்ரன் என்ற மேலாடை, கைகளில் நஞ்சு தோய்ந்து நகக்கண் வழியாக உடலில் சேராதிருக்கக் கையுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். இந்த சாதனங்கள் மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை யும் உள்ளூரில் விற்கும் வியாபாரிகளின் கிடங்குகளையும் அதிகாரிகள் அவ்வப்போது சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளோ, ரசாயனக் கூட்டுகளோ பிடிபட்டால் கடுமையாக அபராதம் விதிப்பதுடன் சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும். முக்கியமாக, ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக இயற்கையான, வேம்பு கலந்த பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x